- பண்பாட்டு வளர்ச்சியையும் பழங்காலத்திய வரலாற்றையும் பற்றிய மிகப் பெரிய தேடல் இன்று தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. அதற்குக் காரணம் கீழடி. 2017 தொடங்கி கீழடியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது தொல்லியல் அகழாய்வு நடந்துவரும் இடம் அது மட்டும்தான்.
கீழடி
- கீழடியில் கிடைத்த கரித் துண்டுகளைக் கதிர்வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவை 2,600 ஆண்டுகள் பழமையானவை, அதாவது அவற்றின் வயது பொது ஆண்டுக்கு முன்பு 600 என்று அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியிருக்கிறது.
- இந்தப் பெருமை குறித்து எண்ணற்ற கட்டுரைகளும் நூல்களும் எழுதப்பட்டு விட்டன. அரசு அறிவிப்புகளும்கூட வெளிவந்துள்ளன. இந்தக் கட்டுரைகளும் அறிவிப்புகளும் தமிழ்நாட்டின் வரலாற்றில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகள் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வரை மட்டுமே இருந்ததாகவும் கீழடி அகழாய்வுகள் அதை 300 ஆண்டுகளுக்கு முன்னகர்த்தி இருப்பதாகவும் கூறுகின்றன.
- கீழடியில் முதலில் ஆய்வுகளை மேற்கொண்டபோது முழுமையாக அதை முடிக்காமல் சிறிது காலத்திலேயே அந்த ஆய்வுக்காக வெட்டப்பட்ட குழிகளை மூடிவிட்டார்கள். இதற்குள் கீழடியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள். குறிப்பாக, எழுத்தாளர் சு.வெங்கடேசன் எடுத்த முயற்சிகளால் மக்களிடம் கவனத்தையும் ஆதரவையும் கீழடி பெற்றது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த அகழாய்வை முறையாக நடத்த வேண்டும் என்றும், தொடங்கியவுடனேயே அந்த ஆய்வை நிறுத்தியது தவறு என்றும், அந்த ஆய்வு முழுமை பெறும் அளவுக்கு அதை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படியே அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
கீழடிக்கும் முந்தைய ஆய்வு
- தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான வரலாற்றுக் காலச் சான்று கிடைத்த அகழாய்வு நடந்த இடம் கீழடி அல்ல; கொற்கை. அதுமட்டுமில்லை, தமிழ்நாட்டிலேயே முதன்முதலாகத் தொல்லியல் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் கொற்கையும் ஒன்றாகும். அகழாய்வு நடத்தப்பட்ட ஆண்டு 1968-69. இன்று கீழடி அகழாய்வுக்கு என்னென்ன தடங்கல் ஏற்பட்டதோ அது அத்தனையுமே கொற்கை அகழாய்வின்போதும் நடந்திருக்கிறது.
- ஒரு பெரிய அகழாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. அகழாய்வுக்காகக் குழிகள் வெட்டப்பட்டன. பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டன. அந்தப் பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அந்தக் குழிகள் மூடப்பட்டன. ஆனால், தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அந்த ஆய்வு முழுமை பெறாமலேயே போய்விட்டது. காலப்போக்கில் நினைவிலிருந்தும் அது அகன்றுவிட்டது.
- 1876-லேயே முதன்முதலில் கால்டுவெல் கொற்கையில் அகழாய்வு நடத்தியிருக்கிறார். ‘இன்று சிற்றூராகத் திகழும் இவ்வூரே பண்டைய புகழ்வாய்ந்த கொற்கைத் துறைமுகம்’ என்று அவர்தான் முதன்முதலில் எடுத்துக் கூறினார். அவர் கொற்கையில் ஆய்வு நடத்தியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
- முதலாவதாக, ரோம் நாட்டைச் சேர்ந்த தாலமியும் பிளினியும் எழுதிய நூல்களில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொற்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, பாண்டியர்களின் தலைநகராக கொற்கை விளங்கியது என்றும், பாண்டியர்கள் ‘கொற்கைக் கோமான்’ என அழைக்கப்பட்டார்கள் என்றும் தமிழ் இலக்கியங்களும் சான்று காட்டுகின்றன.
2,800 ஆண்டுகள் பழமை
- கால்டுவெல்லுக்குக் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ்நாடு தொல்லியல் துறை 1968-69-ல் அகழாய்வுகளை நடத்தியது. இந்த ஆய்வுகள் பற்றிய தகவல்களை 1970 டிசம்பரிலேயே தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆண்டிதழான ‘தமிழகம்’ (டமிலிகா) இதழில் வெளியிடுகிறார்கள். மீண்டும் இந்தத் தகவல்கள் 2004-ல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகள் 1969 முதல் 1995 வரை’ (எக்ஸ்கவேஷன்ஸ் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சைட்ஸ் இன் தமிழ்நாடு 1969-1995) என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கீழடியில் கிடைத்த பொருட்கள் கதிர்வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை 2,600 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கொற்கையில் கிடைத்த பொருட்கள் 2,800 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு தொல்லியல் துறையின் வலைதளத்திலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ‘டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்’ நிறுவனம் கொற்கையிலிருந்து கிடைத்த கரித் துண்டுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அவை 2,800 ஆண்டுகள் பழமையானவை என்பதை உறுதிப்படுத்தியது. அதாவது, அவற்றின் காலம் பொது ஆண்டுக்கு முன்பு 785 என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் வரலாறு கீழடியைவிட 200 ஆண்டுகள் பழமை கூடியதாகும்.
- இன்று கீழடியில் கிடைப்பதைப் போல கொற்கையிலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அகழாய்வு நடந்த 1968-69 காலகட்டத்தில் இன்று இருப்பதுபோல சமூக வலைதளங்கள் இல்லை, தகவல் பரிமாற்ற வாய்ப்புகள் இல்லை.
- அந்த ஆய்வினுடைய சிறப்பை உணர்ந்து, அதற்காகப் போராடுவதற்கு யாரும் இல்லை. அதனால், மக்கள் ஆதரவும் கிடைக்கவில்லை. இன்று வரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய மறக்கடிக்கப்பட்ட வரலாறாக கொற்கை மறைந்துகிடக்கிறது. கீழடியைப் பற்றிப் பேச பலர் இன்று இருப்பதைப் போல கொற்கையை முன்னிறுத்த யாருமில்லை.
- கொற்கையில் 1968-69-ல் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வுகளின் இறுதியில், அது இன்னும் தொடர்ச்சியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய சிறப்பு மிக்க இடம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அங்கு இன்று வரை ஆய்வுசெய்யப்படவே இல்லை. கீழடி ஆய்வு தொடர்ந்து விரிவாக நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
- அதேவேளையில், கீழடியைப் போலவோ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ ஒரு மிக விரிவான அகழாய்வு கொற்கையிலும் நடத்தப்பட வேண்டும். கீழடியின் வெளிச்சத்தில் கொற்கையின் மீது கவிந்துள்ள இருட்டும் அகலட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25-02-2020)