கீழவெண்மணி: ஒரு விளக்கம்
- கீழவெண்மணி கொடூரம் குறித்து வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் எழுதிய கட்டுரையில், அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்துத் தவறான புரிதல் ஏற்படுத்தும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. கீழவெண்மணி கொடூரம் 1968 டிசம்பர் 25இல் நடந்தது. அப்போது முதலமைச்சராகப் பேரறிஞர் அண்ணா இருந்தார்.“கீவளூர் சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
- உண்மைக் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காரணமானவர்கள் அனைவரையும் அடக்கியே தீருவது என்று அரசு உறுதிபூண்டுள்ளது” என்று டிசம்பர் 26 அன்று பேட்டி அளித்தார். கீழவெண்மணி தொடர்பாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டன.
- அன்றைய தினமே மிராசுதார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டார்கள். புற்றுநோயின் தீவிர பாதிப்பில் இருந்ததால் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையிலும்கூட, 27ஆம் தேதியும் செய்தியாளர்களைச் சந்தித்தார் அண்ணா.
- “எனது துயரத்தையும் மனவேதனையையும் வெளியிட எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அங்கு நடந்துள்ளவை கோரமானவை. மிருகத்தனமானவை” என்று குறிப்பிட்டார். உடனடியாக அமைச்சர்கள் மு.கருணாநிதி, சத்தியவாணிமுத்து, செ.மாதவன், ஓ.பி.ராமன் ஆகியோர் கீழவெண்மணிக்குச் சென்றார்கள். ‘நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடுமை நடந்துவிட்டது’ என்று கீழவெண்மணியில் பேட்டி அளித்தார் கருணாநிதி.
- அனைவரும் இரவு 12 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்கள். அதுவரை தூங்காமல் இருந்த முதலமைச்சர் அண்ணா, அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நள்ளிரவு 1.30 மணிக்குச் செய்தியாளர்களையும் சந்தித்தார். மறுநாள் காலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கணபதியா பிள்ளை தலைமையில் ஆணையம் அமைத்தார்.
- திமுக ஆட்சி எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி நாடாளுமன்றத்தில் பேசினார். “அந்த நிமிடமே அண்ணா கண்ணீர் விட்டார். மறுநிமிடமே அந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தார். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கைவிட்டார்.
- அவர் உடல் நலமற்று இருந்ததால் அமைச்சர்களை உடனே வெண்மணிக்கு அனுப்பி நிலைமைகளை அறிந்துவரச் செய்தார்” என்று நாடாளுமன்றத்தில் பி.ஆர். பேசி இருக்கிறார். 1969 பிப்ரவரி 3இல் முதலமைச்சர் அண்ணா மறைந்தார். முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றார்.
- 1969 ஜனவரி 27, பிப்ரவரி 25, 28 ஆகிய நாள்களில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கீழவெண்மணி தொடர்பான விவாதம் நடைபெற்றது. 28.2.1969 அன்று விவாதங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசினார். மிராசுதார் கோபாலகிருஷ்ணனை ‘கொடும்பாவி’ என்றே அவர் குறிப்பிட்டார். 1969 ஜனவரி 10 அரசு, விவசாயிகள், பண்ணையார்கள் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளைத் திமுக அரசு ஏற்பாடு செய்தது.
- ஜனவரி 17 உடன்பாடு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. கணபதியா பிள்ளை ஆணையத்தின் அறிக்கையும் 1969 செப்டம்பரில் வெளியானது. இதனை திமுக அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டது. ஆணையம் நிர்ணயித்த கூலியையும் விவசாய அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் நியாயமான கூலிக்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 12 – 2024)