TNPSC Thervupettagam

கீழவெண்மணி: பனி நிறம் கறுத்த ஒரு மார்கழி

December 24 , 2024 2 days 49 0

கீழவெண்மணி: பனி நிறம் கறுத்த ஒரு மார்கழி

  • மார்கழி பலருக்கும் பிடித்த ஒரு மாதம். பூக்களுக்கும் புற்களுக்கும்கூட பனியின் வெண்குடையை மார்கழி மகுடமாக்கி இருக்கும். எனினும் 1968களுக்குப் பின் காவிரிப்படுகையில் பிறந்தோருக்கு மாதங்களில் மார்கழியை ரசிக்க முடியவில்லை. கார்த்திகையில் சுடலை கொளுத்திய தீபத்தின் திரிநாக்குகள் அணையும் முன் மார்கழியில் கீழவெண்மணி தீக்குளித்தது.
  • டிசம்பர் 25 என்பது கொண்டாட்​டங்​களின் பேரின்பப் பெருவிழா​வாகப் பொதுப்புத்​தியில் விதைக்​கப்​பட்​டுள்ளது. ஆனால், கீழவெண்​மணியில் நிகழ்ந்த துயரத்தை நினைப்​பவர்​களால் இந்தத் தேதியில் கொண்டாட்ட மனநிலைக்குச் செல்லவே முடியாது.

கொடூரத்தின் உச்சம்:

  • 25.12.1968 இரவு 8 மணிக்கு மேல் கடலைக் கொடிகளுக்குத் தீ வைக்கப்​பட்டதுபோல் வெண்மணியில் குடிசைகள் கொளுத்​தப்​பட்டன. 20 பெண்கள், 19 பச்சிளம் குழந்தைகள், வயது முதிர்ந்த ஐவர் என 44 உயிர்​களைத் தீ பொசுக்​கியது. 11 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அவர்கள் ஆணா, பெண்ணா என்று கண்டு​பிடிக்க முடியாத அலங்கோலத்தைக் காட்டியது.
  • முன்னதாக அடிதடிகளால், அராஜகத்​தால், வெண்மணி பதற்றமாக இருந்தது. அந்த இரவில் வெண்மணிக்குள் நீலநிற போலீஸ் வாகனம் முதலில் வந்தது. தங்களைக் காக்க ஓர் ரட்சகன் வந்ததாகக் கருதி மக்கள் கூட்டம் தெருவில் திரண்டது. ஆயுதம் ஏந்திய ரௌடிகள் வேன், டிராக்​டர்​களி​லிருந்து குதித்​தனர். கூடியிருந்​தவர்கள் மீது துப்பாக்​கியால் சுட்டனர். பயந்து சிலர் துப்பாக்கிக் குண்டடிபட்டு வயல்களுக்கு ஓடினர். மற்றவர்கள் ஒரு குடிசைக்குள் முட்டி மோதிப் புகுந்​தனர். ரௌடிகள் அந்தக் குடிசையில் நெருப்பைப் பற்றவைத்​தனர். அணையாத் தீயாக அது எரிய நெருப்பில் சிலர் பெட்ரோல் ஊற்றினர். கொளுந்​து​விட்ட நெருப்பு ஜுவாலைகளி​லிருந்து ஒரு தாய் பச்சிளம் சிசுவைக் காப்பாற்ற வெளியே தூக்கி வீசினார். ஒரு ரௌடி அந்தக் குழந்​தையின் உடலை அரிவாளால் சிதைத்து மீண்டும் சிதைக்குள் எறிந்​தான். எரிந்த பிரேதங்​களில் பல ஒன்றோடு ஒன்றாகக் கட்டிப்​பிடித்​திருந்தன. கருகிக் கட்டை​யாகிய ஒரு தாயின் பிடியில் தனயனின் உடலும் சேர்ந்​திருந்தது.
  • இரவு 8 மணிக்கு வைக்கப்பட்ட தீ அதிகாலை வரை எரிந்தது. ரௌடிகள் இதர 28 குடிசைகளின் கூரையையும் பொசுக்​கினர். 9 கி.மீ. தொலைவில் இருந்த போலீஸ் நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்தது. நெருப்பே களைத்​துப்போய்க் கண்மூடும் வேளையில் மறுநாள் காலை 9 மணிக்குத் தீ அணைப்பு வண்டி வந்தது. வயல்களில் தேடுகையில் விழுந்​துகிடந்தோர் உடல்களைத் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்​திருந்தன.
  • அடக்குமுறை உச்சத்தில் இருந்த பகுதி​களில் வெண்மணியும் ஒன்று. உழைப்​பாளிகள் கால்நடைகள்போல் விற்கப்​பட்​டனர். அவர்கள் உழைப்பின் ஒவ்வொரு குருதிச் சொட்டும் ஆண்டைகளின் வீடுகளை மாளிகைகள் ஆக்கின. ஆடைகளைப் பட்டுப் பீதாம்​பர​மாக்கின. வயல்களில் பொன்னை விளைவித்​தனர். அவர்களின் உடலை வைரங்​களால் ஒளிவீச வைத்தனர். மறுபுறம் இவற்றை நிர்மாணித்​தவர்களோ பன்றிகள் உழலும் சகதியில் கிடந்​தனர். ஆயிரம் பொத்தல்​களோடு அவர்களின் ஆடைகள் உருக்​குலைந்​திருந்தன. ஒட்டிய வயிற்றோடு புழுக்​களைப் போல் ஊர்ந்த உழைப்​பாளி​களின் வாழ்க்கையை, சுயமரி​யாதையை மீட்டு அவர்களைச் சமத்து​வப்​படுத்த இடதுசா​ரிகள் சங்கம் தொடங்கி இருந்​தனர். மறுபுறம் நெல் உற்பத்​தி​யாளர் சங்கத்தினர் இதை எதிர்த்து மஞ்சள்கொடி ஏற்றினர்.

சில முக்கிய நிகழ்வுகள்:

  • நாகை அருகில் பூந்தாழங்​குடியில் விவசாயத் தொழிலா​ளர்கள் ஏற்றிய செங்கொடிக் கம்பத்தை நெல் உற்பத்​தி​யாளர் சங்கத்​தினர் வெட்டினர். அதை விவசாயத் தொழிலா​ளிகள் தடுத்​தனர். மோதலில் ஒரு சப்-இன்ஸ்​பெக்டர் செங்கொடிச் சங்கத்தின் பக்கிரியைச் சுட்டுப் பிணமாக்​கி​னார். அப்போதுதான் திமுக ஆட்சிக்கு வந்திருந்தது. அவர்களின் முதல் துப்பாக்​கிச்​சூட்டில் கொலையுண்டது பக்கிரி​தான்.
  • 19.05.1968இல் கீவளுர் காவல் நிலையத்தில் கோபால் என்பவர் புகார் கொடுத்​தார். அவர் அணிந்​திருந்த சிவப்புத் துண்டைப் பண்ணை​யாரின் ஆட்கள் பிடுங்கிக் கொளுத்​தி​ய​தாகப் புகார். 03.12.1968இல் மாலை 4.30க்கு மளிகைக்​கடைக்கு வந்த அஞ்சம்மாள் என்பவரை ரௌடிகள் வெட்டினர். காரணம் அவர் அணிந்​திருந்த சிவப்பு ரவிக்கை​தான். அதைக் கிழித்து எரித்​தனர். அவரின் உடலில் தீப்புண்கள் ஏற்பட்டன. 04.12.1968 இரவு 7 மணிக்கு பெருங்​கடம்​பனூர் வீரப்பன் அணிந்த சிவப்புத் துண்டு பிடுங்கி பொசுக்​கப்​பட்டது.
  • இவற்றில் சில நிகழ்வுகள் கிழக்குத் தஞ்சை கோட்ட அமர்வு நீதிமன்றம் 30.11.1973இல் வழங்கிய தீர்ப்பில் குறிப்​பிடப்​பட்​டுள்ளன. “நாங்கள் இடதுசாரி கம்யூனிஸ்ட் கிசான் சங்கத்தைச் சேர்ந்​தவர்கள். எங்களை நெல் உற்பத்​தி​யாளர் சங்கத்தில் சேரும்படி நேரிலும் ஆள்மூல​மாகவும் வற்புறுத்தி ​வந்தனர். நாங்கள் அந்தச் சங்கத்தில் சேர மறுத்து​விட்​டோம்” என்பது இவ்வழக்கில் சில சாட்சிகளின் வாக்குமூலங்​களாகும்.
  • சென்னை உயர் நீதிமன்றம் 06.04.1976இல் இவ்வழக்கு குறித்து வழங்கிய தீர்ப்பும் குறிப்​பிடத்​தக்கது. இதில் நீதிப​திகள் வெங்கட்​ராமன், மகாராஜன் தீர்ப்பு வழங்கினர். “கடந்த பல ஆண்டு​களாகத் தஞ்சாவூரில் வசதியற்ற விவசா​யிகளுக்கும் (கிசான்) தஞ்சாவூரின் வசதி படைத்த பரம்பரை நிலப் பண்ணை​யார்​களுக்கும் இடையே கடுமையான வர்க்கப் போராட்டம் நடந்து​வரு​கிறது. இம்மாவட்​டத்தில் பொதுவாக, விவசாயத் தொழிலா​ளர்களாக இருக்கும் அரிசனங்கள் இடது கம்யூனிஸ்ட் ஆதரவுடன் விவசாயத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினர்.”
  • வெண்மணி நிகழ்​வானது பட்டியல் சாதி உழைப்​பாளிகள் வசித்த வீதியில் நடந்தது. உயிருடன் கொளுத்​தப்​பட்டோர் யாவரும் பட்டியல் சாதியினரே. கொளுத்​தி​ய​வர்​களில் அனைத்துக் கட்சிக்​காரர்​களும் இருந்​தனர். மாண்ட​வர்கள் அனைவரும் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்கிற ஒரே கட்சியின் சங்கத்தில் இருந்தோர் ஆவர். சாதி, கூலி, சுயமரியாதை எனப் பல பிரச்​சினைகள் இந்நிகழ்வின் காரணிகள் என வழக்கின் சாட்சி​யங்கள் பேசுகின்றன.

அரசின் அணுகுமுறை என்ன?

  • வெண்மணியின் நகர்வுகள் ஒரு கலவரம் நோக்கிப் போயின, உயிருக்கு ஆபத்து எனப் பாதுகாப்புக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மீனாட்​சிசுந்​தரம், முதலமைச்சர் அண்ணாவுக்கு 12.12.68இல் கடிதம் அனுப்​பி​னார். முன்னதாக, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன் உள்ளிட்டோர் மாவட்ட நிலைமையை நேரில் கண்ணுற்று முதலமைச்​சருக்குத் தெரியப்​படுத்​தினர். வெண்மணி குறித்து 27.12.68இல் லண்டன் மாநகரில் பத்திரி​கை​களில் செய்திவந்தது. அன்றுதான் தமிழக அமைச்​சர்கள் இருவர் வெண்மணிக்கு நேரில் சென்றனர்.

வெண்மணியின் பின்புலம் என்ன?

  • இந்தப் பின்னணியில் வெண்மணியின் பொதுவான வாழ்வியல், அரசியல் குறித்து அண்மையில் வெளியான ஓர் ஆய்வு நூல் படம்பிடிக்​கிறது. Agrarian Studies: Economic change in the lower Cauvery delta என்ற நூல் மதுரா சுவாமி​நாதன், சுர்ஜித், வி.கே.​ராமச்​சந்​திரன் ஆகியோரால் தொகுக்​கப்​பட்​டுள்ளது. வெண்மணியைச் சுற்றி​லுமான ஏழு கிராமங்கள், ஒருபோகம், இருபோகச் சாகுபடிகள், விவசாயத் தொழிலாளர் வேலை இழப்பு உள்ளிட்ட கள நிலவரம் தரவுகளோடு அதில் கூறப்​பட்​டுள்ளது. 1922-23இல் தொடங்கி, 2019 வரையிலான வெண்மணியின் வாழ்க்கை​முறையை இந்நூல் பேசுகிறது.
  • வெண்மணியின் அக்கினிக் குளியல் இச்சமூகத்தின் தீண்டாமை உள்ளிட்ட அழுக்​கு​களைக் கழுவி​விட்டதா என்பதைக் கவலையோடு இத்தருணத்தில் பரிசீலிக்க வேண்டும்.
  • டிசம்பர் 25: வெண்மணி நினைவு நாள்​

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்