TNPSC Thervupettagam

குடிமைப் பணிகள்: முன்னேறட்டும் தமிழகம்

August 13 , 2023 342 days 244 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குடிமைப் பணிகளுக்குத் தேர்வாவது குறைந்துவருவது குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடிமைப் பணித் தேர்வுகள் தொடர்பான ஆர்வத்தை இளைஞர்களிடம் அதிகரிக்க வேண்டிய தேவையை முதல்வரின் கவலை பிரதிபலிக்கிறது.
  • 2014இல் குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகளில், இந்திய அளவில் 1,126 பேர் வெற்றிபெற்றிருந்தனர்; இதில் 10.5% (119 பேர்) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எனினும், 2016இல் 10%, 2017இல் 7%, 2019இல் 6.69%, 2020இல் 5%, 2021இல் 3% எனத் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்துவந்தது.
  • எழுத்துத் தேர்வுகளில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் தமிழர்களின் எண்ணிக்கையும் குறைந்துவருவதைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. 2023இல் வெளியிடப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற சென்னைப் பெண் ஜீஜீ, இந்திய அளவில் 107ஆம் இடத்தையே பெற்றிருந்தார் என்பதிலிருந்து தமிழக மாணவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளில் பெருமளவில் பின்தங்கியிருப்பதை உணர முடியும்.
  • 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சிபெற்ற பலர் இந்திய அரசிலும் பிற மாநில அரசுகளிலும் முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துவந்தனர். அதற்குப் பிறகு, இந்தப் போக்கு மாறிவருவதற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிக ஊதியம் ஈட்டித் தரும் தனியார் துறை வேலைவாய்ப்புகளின் பெருக்கத்தால், கடுமையான பயிற்சி தேவைப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் மீது தமிழக இளைஞர்கள் ஆர்வம் இழந்துவருவதாகக் கூறப்படுகிறது.
  • பிற மாநிலங்களைச் சேர்ந்த குடிமைப் பணி அதிகாரிகள் தமிழ்நாட்டின் நிர்வாகப் பதவிகளைப் பெறுவதைப் போலவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பிற மாநில அரசுகளின் பதவிகளைப் பெறுவதில் சமநிலை பேணப்பட வேண்டும். இந்திய அரசின் நிர்வாகப் பணிகளில் தமிழர்கள் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும். இவை இரண்டிலும் தமிழ்நாடு பின்தங்குவது நீண்டகால நோக்கில் மாநிலத்தின் நலன்களைப் பாதிக்கும்.
  • ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயார்செய்யும் 1,000 பேருக்கு, 10 மாதங்களுக்கு ரூ.7,500 மாதாந்திர உதவித்தொகையும் தொடக்கநிலைத் தேர்வுகளில் வெற்றிபெற்றோருக்கு ரூ.25,000 நிதி உதவியும் அளிக்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2022இல் தொடங்கிவைத்தார்.
  • அதோடு, தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 5,000 இளைஞர்களுக்குக் குடிமைப் பணித் தேர்வுகளுக்கும் தேசிய அளவிலான பணிகளுக்கான பிற போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இதுபோன்ற முயற்சிகளால் வரும் ஆண்டுகளில் குடிமைப் பணிகளுக்குத் தேர்வாகும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இவை மட்டும் போதாது.
  • இன்றைய சூழலில், மாணவர்கள் மனப்பாடக் கல்வியை விடுத்து அனைத்துப் பாடங்களிலும் அடிப்படை அறிவைப் பெறவைப்பதற்கான சீர்திருத்தங்கள் அவசியம். குடிமைப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சியின் தரமும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் தரமும் தேசிய அளவிலான போட்டிக்கு உகந்ததாக இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு விழிப்புணர்வும் ஊக்கமும் அளிக்கும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நன்றி: தி இந்து (13 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்