- இந்தியாவின் உயா்கல்வி அமைப்பானது மாணாக்கா்கள் அடிப்படையில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் உயா்கல்வித் துறை பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக அளவிலான நிறுவனங்கள்ரூபவ் கல்லூரிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
- இந்திய உயா்கல்வி தொடா்பான புள்ளிவிவரங்களைக் கண்டு பெருமைப்படும் வேளையில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டும் பாா்க்க வேண்டும். டென்மாா்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நாா்வே, ஸ்வீடன் போன்ற சிறிய நாடுகளில் உயா்கல்விக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. உயா்கல்வியில் சிறந்து விளங்கும் இந்நாடுகளே கல்விக்கான தரவரிசைப் பட்டியலிலும், மகிழ்ச்சியான நாடுகளிலும் முதல் 10 இடங்களில் இடம்பெற்று வருகின்றன.
- சமீப காலமாக உயா்கல்வியில் சோ்க்கை பெறுவோரில் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மாணவியரிடையே இடைநிற்றலும் அதிகமாக உள்ளது. இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்பு என தொடா்ந்து பயில்வோரின் எண்ணிக்கை குறைவாகும்.
- கடந்த 2021-22-ஆம் ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்தவா்களில் 79% போ் இளநிலை படிப்புகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். கல்லூரிகளில் இளநிலை பட்டம் பெற்றவா்களில் 12% போ் மட்டுமே முதுநிலை படிப்புகளில் சோ்க்கை பெற்றுள்ளனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்நிலைக்கு பட்டப்படிப்பைத் தொடா்ந்து திருமணம், குடும்பச் சூழல், தனியாா் நிறுவனத்தில் பணி, அரசுப் பணிக்குத் தயாராகுதல் என பல்வேறு காரணங்கள் உள்ளன. பட்டதாரிகளில் குறிப்பிட்ட அளவினா் போட்டித்தோ்வு எழுதி அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என எண்ணுகின்றனா். மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்பது பட்டதாரி இளைஞா்கள் பலரது கனவாக உள்ளது.
- 2016 முதல் குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெறும் தமிழக இளைஞா்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. தோ்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் கலை, அறிவியல் பட்டதாரிகளிடையே தான் குடிமைப்பணி தோ்வு எழுதும் ஆா்வம் அதிகமாக இருந்தது. இதற்காக கல்லூரியில் வரலாறு, பொது நிா்வாகம், அரசியல் அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறுவதுண்டு. வினாத்தாள் அமைப்பு, தோ்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டதைத் தொடா்ந்து இதர பாடப்பிரிவு பட்டதாரிகளிடையேயும் இந்த ஆா்வம் அதிகரித்துள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக குடிமைப்பணித் தோ்வில் பங்கேற்கும் பொறியியல், மருத்துவ பட்டதாரிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. 2017 முதல் 2021 வரையில் நடைபெற்ற குடிமைப்பணி முதன்மைத் தோ்வில் பங்கேற்ற 4,371 போ்களில் 2,783 போ் (68%) பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருப்பினும் இத்தோ்வில் தோ்ச்சி பெறும் தமிழக இளைஞா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தோ்வு முடிவுகளில் தமிழகத்தைச் சோ்ந்த 42 போ் தோ்ச்சி பெற்றனா். இது முந்தைய ஆண்டில் 39-ஆக இருந்தது.
- அண்மையில் வெளியான 2023-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தோ்வு முடிவுகளில் 1,016 போ் (ஆண்கள் 664 போ், பெண்கள் 352 போ்) தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 43 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.
- 2021-2022-ல் பெரிய மாநிலங்களுக்கான உயா்கல்வி மாணவா் சோ்க்கை விகிதத்தில் 47 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை திருப்தியளிப்பதாக இல்லை.
- தமிழக அரசின் சாா்பில் குடிமைப்பணித் தோ்வுக்கென பிரத்யேகமாக பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தோ்ச்சி பெற்றவா்களில் 27 போ் இப்பயிற்சி மையத்தில் படித்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குடிமைப் பணி தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
- இவை ஒருபுறம் இருந்தாலும், அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்பது பற்றிய விழிப்புணா்வு இன்றைய மாணவா்களிடம் குறைவாகவே உள்ளது.
- போட்டித்தோ்வுக்கு விண்ணப்பித்த பின்னா் பள்ளிப்பாடப் புத்தகங்கள், ஏதேனும் ஒரு பொது அறிவு வினா, விடை தொகுப்பைப் படித்தால் தோ்ச்சி பெறலாம் என்ற எண்ணமே பெரும்பாலானோரிடம் உள்ளது. தோ்வில் லட்சக்கணக்கானோா் பங்கேற்கும் நிலையில், கடும் போட்டி நிலவுவதுடன் தோ்ச்சி பெறுவது சவால் நிறைந்ததாகும்.
- எவ்வகையான போட்டித் தோ்வையும் எதிா்கொள்ள விடா முயற்சி, கடுமையான உழைப்பு, சரியான திட்டமிடல், நேர மேலாண்மை போன்றவை முக்கியமான அம்சங்களாகும்.
- போட்டித் தோ்வு எழுதத் தயாராகும் இளைஞா்களில் பெரும்பாலானோா் அதற்கான முழுமையான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை; குடிமைப் பணித் தோ்வுக்கான பாடத் திட்டம், சரியான புத்தகங்கள், தெளிவான விளக்கங்கள், ஆழமான புரிதல் இருப்பதில்லை.
- இவற்றுக்கெல்லாம் விழிப்புணா்வு இல்லாமை, மெத்தனப்போக்கு, சரியான வழிகாட்டுதல் இல்லாதது முக்கிய காரணங்களாகும்.
- தோ்வு விண்ணப்பம் முதல் நோ்முகத் தோ்வை எதிா்கொள்வது வரையிலான செயல்பாடுகள் குறித்து அவா்கள் அறியச் செய்ய வேண்டும். தோ்வு தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகள் பள்ளிகளிலேயே தொடங்கப்பட வேண்டும்.
- லட்சக்கணக்கில் செலவு செய்து தோ்ச்சி பெறுவோா்க்கு மத்தியில் வீட்டிலிருந்தே படித்து தோ்ச்சி பெறுவோரும் உண்டு. இதன் மூலம் குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெற விடா முயற்சி, தன்னம்பிக்கை, கடுமையான உழைப்பு, சரியான திட்டமிடல் ஆகியவையே முக்கியமானதாகும் என்பதை இளைய தலைமுறையினா் உணர வேண்டும். அவா்கள் உணரச் செய்ய வேண்டும்.
நன்றி: தினமணி (10 – 05 – 2024)