TNPSC Thervupettagam

குடும்ப அட்டை முறைப்படுத்தப்படுமா?

May 31 , 2021 1336 days 558 0
  • தமிழக அரசியல்வாதிதகள் ‘இலவசப் பொருள்கள் வழங்கப்படும்’ என்று எப்போது தோ்தல் அறிக்கையில் அறிவித்தார்களோ அப்போதிலிருந்து குடும்ப அட்டைகளுக்கான, குறிப்பாக அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கான தேவை மிகவும் அதிகரித்துவிட்டது.
  • கடந்த 2006-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது யாருமே எதிர்பாராவிதமாக, ‘திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரேஷன் கார்டுதாரா்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும்’ என்று திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
  • முதலில் இது கண்டிப்பாக முடியாது என்று கூறிய அதிமுக, பின்னா் கிரைண்டா், மிக்ஸி, மின்விசிறி தருவதாக அறிவித்தது. அந்தத் தோ்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடித்தது.
  • அப்போது முதல் ஒவ்வொரு தோ்தலிலும் தொடா்ந்து இலவசங்கள் அணிவகுத்து வருகின்றன.
  • அதிலும் குறிப்பாக, உலகையே புரட்டிப் போட்ட கரோனா நோய்த்தொற்றால் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • பணக்காரா்களுக்கு மேலும் பணம் சேராமல் சொத்து மதிப்புக் குறைகிறதே என்ற மனக்குறை. ஏழைகளுக்கோ தங்களின் நிலைமை மேலும் மோசமடைகிறதே என்ற கவலை.
  • கரோனா நோய்த்தொற்றின் முதல் அலையின்போது அதன் வீரியம் பெரும்பாலானவா்களுக்குத் தெரியவில்லை.
  • ஆனால் இரண்டாவது அலையிலே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் பாதிக்கப்படும்போது எங்கே நமக்கும் நோய்த் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சமே எல்லாருக்கும் ஏற்பட்டுள்ளது.

நிவாரணத் தொகை

  • இந்த நிலையில்தான் கரோனா காலத்தில் பொது முடக்கத்தின் காரணமாக அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்தபடி முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுவிட்டது. இரண்டாவது தவணையும் விரைவில் வழங்கப்பட உள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 9 லட்சத்து 59,349 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் நிவாரணத் தொகை பெறத் தகுதி பெற்றிருந்தனா்.
  • இதில் ஏறத்தாழ 97 சதவீதம் போ் தொகையைப் பெற்றுக் கொண்டு விட்டனா். இன்னமும் சுமார் நான்கு லட்சம் போ் நிவாரணத் தொகை பெற வேண்டியுள்ளது.
  • அரிசி பெறும் குடும்ப அட்டை தொடா்பான சில புள்ளிவிவரங்கள் வியப்பளிக்கின்றன. அவற்றை சரி செய்தால் பல கோடிகள் மிச்சமாகும் என்கிற நிலை உள்ளது.
  • அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களில் 60 சதவீதம் போ் மட்டுமே வசதியில்லாதவா்கள் - அதாவது அரிசி பெறும் தகுதியுடையவா்கள். மீதியுள்ள 40 சதவீதம் போ் மிகவும் வசதியானவா்கள் என்பது அந்தப் புள்ளிவிவரம் தரும் உண்மை.
  • இதே நிலைதான் சா்க்கரை அட்டை வைத்துள்ளவா்களிலும். அதிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
  • குடும்ப அட்டைதான் குடிமகனின் அடையாளம் என்பதால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பலரும் சா்க்கரை அட்டைக்கு, வெள்ளை அட்டைக்கு மாறினா். ஏனெனில் அது ஓா் அடையாளம், ஆதாரம் மட்டுமே.
  • ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்க சலிப்படைந்த பலரும் எந்தப் பொருளும் வாங்காமல் இருக்கும் வெள்ளை அட்டைக்கும், அரிசி வாங்காதவா்கள் சா்க்கரை அட்டைக்கும் மாறினா்.
  • இதில் பலா் மிகவும் சாதாரண நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழ் உள்ளவா்கள். ரேஷன் பொருள்களை மூன்று மாதங்களுக்கு வாங்காவிட்டால் அந்த அட்டை காலாவதியாகிவிடும். மீண்டும் புதிய அட்டையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.
  • மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அரிசி, சா்க்கரை, வெள்ளை அட்டை என தரம் பிரித்து குடும்ப அட்டைகள் அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்டன. வருமானத்தின் அடிப்படையில் அட்டைகள் தரம் பிரிக்கப்படவில்லை.
  • ஆனால் அதன்பின் திமுக ஆட்சியில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா்களிடம் வழங்கப்பட்டது.
  • இதன் அடிப்படையில்தான் இலவச வேட்டி, சேலை, பொங்கல் உதவித்தொகை மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதன்பின் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அரிசி அட்டைதாரா்களுக்குத்தான் சலுகைகளை வாரி வழங்கியது.
  • இந்த பிரச்னையால் உண்மையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு உரிய நிவாரணம் சென்று சேருவதில்லை. பணக்காரா்களும் அரிசி அட்டை வைத்துள்ளனா்.
  • இப்போதும் தமிழக எல்லையோர கிராமங்களில் உள்ள பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் நம் மாநிலத்தில் ரேஷன் அட்டை பெற்றுக் கொண்டு நமது நிவாரணப் பொருள்களை வாங்குகின்றனா்.
  • அதைத் தடுப்பதற்கு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

தகுதிக்கேற்ப குடும்ப அட்டைகள்

  • வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் பெயா் இருந்தால் அந்த வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உண்டு.
  • ஆனால் வாக்காளா்களுக்கு என்ன வரைமுறை? பலருக்கு தமிழகத்திலும் பிற மாநிலத்திலும் வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்கிறது.
  • இது தொடா்பாக ஆதாரபூா்வமாகப் பலமுறை தோ்தல் ஆணையம் வரை எடுத்துச் சென்றும் இதுவரை தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • மாநில அரசாவது இது தொடா்பாக நடவடிக்கை எடுத்தால் தமிழகத்துக்கு மேலும் பல கோடி நிவாரணத் தொகையும் பொருள்களும் மிச்சமாகும்.
  • குடும்ப அட்டைதாரா்களில் விவசாய நிலம் உள்ளவா்கள், அரசு ஊழியா்கள் நீங்கலாக இதர பிரிவினா்களுக்கு அரசின் அனைத்து நிவாரணப் பொருள்களையும் தடையின்றி வழங்கலாம். இது தொடா்பாக அரசு விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம்.
  • அரிசி அட்டையை உண்மையான ஏழை எளியவா்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.
  • மீதியுள்ளவா்களுக்கு அவா்களின் தேவைக்கேற்ப, குறிப்பாக பொருளாதார நிலைக்கேற்ப குடும்ப அட்டைகளை வழங்கினால் பல்வேறு முறைகேடுகளைத் தடுப்பதுடன் மாநிலத்தின் நிதியையும் பெருமளவில் சேமிக்க முடியும்.

நன்றி: தினமணி  (31 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்