- குடும்ப சேமிப்பு விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாதாளத்துக்குச் சென்று விட்டது என்ற செய்தி பலரை அதிரவைத்திருக்கிறது. 2008இல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியில் இருந்து நாம் தப்பிப் பிழைத்ததுகூட, நமது வலுவான சேமிப்பால் தான் என்கிற கருத்தும் உண்டு. குடும்ப சேமிப்பானது ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது; பெரும் தொழில் முதலீடுகளுக்கும் அரசின் முதலீடுகளுக்கும் பெரும் பங்காற்றுகிறது. தனிநபர்களின் நுகர்வு, ஓய்வு காலப் பாதுகாப்பு நிதி, சில்லறைச் செலவினங்களிலும் குடும்ப சேமிப்பு முக்கியப் பங்காற்றிவருகிறது. அப்படிப்பட்ட குடும்ப சேமிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது பெரும் கவலைக்குரியது.
படிப்படியான வீழ்ச்சி
- 1970-71 முதலே இந்தியர்களிடையே குடும்ப சேமிப்பு தொடர்ச்சியாகக் குறைந்துவருகிறது. உலகமயமாக்கலுக்குப் பின்னர் அது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 2008ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி, 2016ஆம் ஆண்டின் பணமதிப்பு நீக்கம் ஆகியவையும் இதற்குக் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. 1950-51இல், நாட்டின் மொத்த சேமிப்பில் 74.3%ஆக இருந்த குடும்ப சேமிப்பு, வலுவான - திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக 1970-71இல் 91% உச்சம் பெற்றது. அதன் பின்னர், படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
- 1990-91இல், 84.0%ஆகக் குறைந்தது. புதிய தாராளமய கொள்கைகளுக்குப் பிறகு, குடும்ப சேமிப்பு வேகமாகக் குறைந்துவிட்டது. அடுத்த 10 ஆண்டுகளில், 68.7%ஆக வீழ்ச்சியடைந்தது. 2015-16ல் 59%ஆகி, தற்போது 30.2% எனக் குறைந்து, மொத்தசேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியாகச் சுருங்கியுள்ளது. மொத்த உள்நாட்டு மதிப்பில் 5%ஆக 2023இல் குறைந்துள்ளது. இதனையே, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டது என்கிறோம்.
- குடும்ப சேமிப்பு குறைந்துள்ள இக்காலகட்டத்தில், மறுபுறம் குடும்ப ஆண்டு நிதிப் பொறுப்பு (Annual Financial liability) அதிகரித்துள்ளது. 2022இல் 3.8%ஆக இருந்த குடும்ப நிதிப் பொறுப்பு, 2023இல், 5.8%ஆக அதிகரித்துள்ளது. குடும்பங்களின் நுகர்வுத்தேவை அதிகரித்துள்ளது.
- கடன் பளு கூடியுள்ளது. கூடவே குடும்பங்களின் கடன் பளுவும், சுதந்திர இந்தியாவில் என்றும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2022 இல் 36.9%ஆக இருந்த குடும்பக்கடன்கள், 37.6%ஆக அதிகரித்துள்ளது. 2011-12 முதல் 2021 வரை, சராசரியான குடும்ப சேமிப்பு 10.7% என்ற தேக்கநிலையிலேயே உள்ளது. 2020-22இல் 7.2%ஆகவும் 2023இல் 5.1%ஆகவும் குறைந்துவிட்டது.
அரசு, தனியார் சேமிப்பின் வளர்ச்சி
- குடும்ப சேமிப்புகள் குறைந்துவரும் சூழலில், தனியார் பெருநிறுவனங்களின் சேமிப்புகளும் அரசின்சேமிப்புகளும் அதிகரித்துள்ளன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். 1950-51ஆம் ஆண்டு மொத்த சேமிப்பில் வெறும் 6.2%ஆக இருந்த தனியார் கார்ப்பரேட் சேமிப்பு, புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கத்துக்குப் பிறகு, 1990-91இல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
- அதாவது, 23.6% என அதிகரித்தது, தற்போது 36.7%ஆக உயர்ந்துள்ளது. இதே தாராளமயக் கொள்கைகளின் காரணமாக, நடுத்தர-உயர் நடுத்தர வர்க்கத்தின் வருவாய் பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம் அரசு செலுத்திவரும் வருங்கால வைப்பு நிதி விகிதம், ஓய்வுக்கால நிதி ஆகியவற்றின் அளவும் அதிகரித்து, அரசின் சேமிப்பும் அதிகரிக்கக் காரணமாக இருந்துள்ளது.
வீழ்ச்சிக்கான காரணம்
- குடும்ப சேமிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்குக் குடும்ப சேமிப்பு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் ஒருவகையில் முக்கியக் காரணம். குடும்ப சேமிப்புகளில் மூன்று உள்கூறுகள் உள்ளன: 1. ரொக்கப் பணமாகச் சேமித்தல்; 2. தங்கம், வெள்ளியாகச் சேமித்தல்; 3. நிதி சேமிப்பு. தாராளமய தாக்கத்தின் விளைவாக, மக்களுக்கு ரொக்கமாகவும் தங்கமாகவும் சேமிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, நிதிச் சேமிப்பாக, நிதிச் சொத்தாகச் சேமிக்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது.
- இந்தப் போக்கு, குடும்பச் சேமிப்புகளின் நிதிமயமாக்கல் (Financialisation) எனப்படுகிறது. 2000ஆம் ஆண்டுகளில் மொத்த குடும்ப சேமிப்பில், ரொக்கப் பண சேமிப்பு 67.3% இருந்தது. இது 2010-11இல் 53.2%ஆகக் குறைந்து, மீண்டும் சற்று அதிகரித்து 60%ஐ நெருங்கியது. இதே காலகட்டத்தில், தங்கம்-வெள்ளி சேமிப்பு, 2%இல் இருந்து 1%ஆக வீழ்ச்சியடைந்தது. நிதி சேமிப்பு 17% (2010-11) என்பதிலிருந்து 62.4% (2018-19) என அதிகரித்தது.
- நிதி சேமிப்பில் உள்ள இடர்பாடுகளின் காரணமாக, முதலீட்டுக்கான நிதி சேர்ப்பில் சிரமங்கள் எழுகின்றன. அதிக சிரமம் நிறைந்த, அதேவேளை கூடுதல் வருவாய் உள்ளதாக இருக்கும், சேமிப்பு முறையாக நிதி சேமிப்பு உள்ளது. வங்கிகளில் சேமிப்பதற்குப் பதிலாக, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் சேமிப்பது, கடன் பெறுவது ஆகியவை அதிகரித்துள்ளன.
- வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம், நாள்தோறும் அலைபேசி வழி நச்சரித்துக் கடன் வாங்குவதற்குத் தூண்டுதல் - அதன் வழியாகக் கடன் வலையில் சிக்க வைத்தல் ஆகியவற்றின் காரணமாக, நிதி சேமிப்பு குறைந்து, குடும்ப நிதிப் பொறுப்பு அதிகரித்திருக்கிறது.
தொடரும் வீழ்ச்சி
- கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் உண்மைக் கூலியில் அதிகரிப்பு நிகழவில்லை. பணவீக்கமும் தொடர்கிறது. ஜிஎஸ்டி வரி முறையும் விலைவாசியை உயர்த்தி சேமிப்புகளைக் குறைக்கிறது. மருத்துவச் செலவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. மருத்துவப் பணவீக்கம் 12% உயர்ந்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே இதுவே அதிக மருத்துவப் பணவீக்கம். கல்விக்கான தனிநபர் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. கல்விப் பணவீக்கம் 11% முதல் 12% வரை அதிகரித்துள்ளது.
- வருவாய்ப் பெருக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதன் காரணமாக, சிறுசேமிப்புகள் குறைந்துள்ளன. அதேவேளை, நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகள் பங்குச் சந்தைகளிலும் கடன் பத்திரங்களிலும் சகாய நிதி (Mutual funds) நிறுவனங்களிலும் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
- நாட்டின் ஒட்டுமொத்த தேசிய உற்பத்தி மதிப்புஉயர்ந்துவந்தபோதும், அது உற்பத்திக் காரணிகள் அனைத்துக்கும் உரிய அளவில் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வங்கிகளில், சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைந்துகொண்டே வருகின்றன.
- இதன் காரணமாக, வங்கிகளில் சேமிக்கும் பழக்கம் குறைந்து, தனியார் நிதி நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக்கடன் அளவு, நிதி தீர்மானம், வைப்பு நிதிக் காப்பீட்டுச் சட்டம் ஆகியவை வங்கிச் சேமிப்புகள் மீது அச்சத்தை உருவாக்கியுள்ளன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழியாக, நிதி நிறுவனங்களின் அதிகரித்துவரும் கடன் பெருக்கம், குடும்ப சேமிப்பு குறைவதற்குப் பெரும் பங்காற்றி உள்ளது.
- 1990 முதலே தாராளமயமாக்கல் கொள்கைகள் அமலில் இருந்தாலும், 2014க்குப் பிறகு ஒட்டுமொத்த,பேரியல் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் சந்தை சார்ந்ததாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக நுகர்வுக் கலாச்சாரம், ‘போலச்செய்தல்’ (Demonstration effect) ஆகிய செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை சேமிப்புகளைக் காவு கேட்கின்றன.
- குடும்ப சேமிப்புகள் குறைந்துவருவதன் விளைவாக, 2009-10இல் மொத்த தேசிய உற்பத்தியில்39.8%ஆக இருந்த முதலீடுகள், 2021-22இல், 31.4%ஆகக் குறைந்துள்ளன. நமக்குப் பாரம்பரிய சேமிப்புக் கலாச்சாரம் இருக்கலாம். நமது குடும்பசேமிப்பு முறையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து மாறிவரும் பொருளாதாரக் கட்டமைப்புக்கு அவை உட்பட்டதுதான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2023)