TNPSC Thervupettagam

குடும்பக் கற்பிதங்களை நோக்கிய கேள்வி

November 26 , 2023 367 days 211 0
  • ஒரு தனித்த நிலத்தின், மக்களின் பண்பாட்டைப் பொது அனுபவமாகத் தன் கதைகள் வழி மாற்றக் கூடிய திறம்கொண்ட எழுத்தாளர் பெருமாள்முருகன். கொங்கு வழக்கையும் அந்தப் பகுதி மக்களின் பச்சையான வாழ்க்கையையும், தீராக் காதலுடன் தொடர்ந்து எழுதி வருபவர் அவர். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய புனைவு எழுத்தைத் தாண்டியும் பெருமாள் முருகனின் பங்களிப்பு விரிவு கொண்டது.
  • பெருமாள்முருகனின் கட்டுரை மொழி, வசீகரிக்கும் ஆற்றல் கொண்டது. அவர் எடுத்துக் கொள்ளும் கட்டுரைப் பொருள்கள், சமூகக் குறுக்கீடு செய்யக்கூடிய உள்ளடக்கம் கொண்டவை. இவை அல்லாமல் தன் கதைகளில் விருப்பத்துடன் அவர் சூடிக்கொள்ளும் கொங்கு வட்டாரவழக்குகளை அகராதியாகத் தொகுத்துள்ளார். தி.அ.முத்துசாமிக் கோனாரின் ’கொங்குநாடு’ உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பாசிரியராக இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளார்.
  • சர்வதேச அளவில் கவனம்பெற்ற பல விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் பெருமாள் முருகனின் நாவல்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் தேசியப் புத்தக விருது, இங்கிலாந்தின் புக்கர் விருது உள்ளிட்டவை இதற்குச் சில உதாரணங்கள். இப்போது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஜேசிபி விருதின் இறுதிப் பட்டியலிலும் இதற்கு முன்பும் இவரது நாவல் இடம்பெற்றுள்ளது. இந்திய - ஆங்கில இலக்கியத்துக்காக அளிக்கப்படும் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்று இது.
  • இந்த ஆண்டுக்கான ஜேசிபி விருது, பெருமாள்முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘ஃபயர் பேர்டு’ (Fire Bird)க்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுமான வடிவமைப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜனனி கண்ணன் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • ‘ஆளண்டாப்பட்சி’ நாவலைக் கூட்டுக் குடும்பங்கள் தகர்ந்து தனிக் குடும்ப வாழ்க்கை முறையே பரவலாகிவரும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வாசித்துப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இதன் உள்ளடக்கம் இன்றைக்குப் பரவலாக இருக்கும் நம்பிக்கைக்கு நேர் எதிரானது. பெருமாள்முருகனின் கதைகள் நம்பிக்கைக்கு எதிரான, கறாரான யதார்த்தத்தை முன்வைப்பவை. அந்த விதத்தில் இந்த நாவலும் கூட்டுக் குடும்பத்தின் நிஜ முகத்தைச் சித்தரிக்கிறது.
  • இந்தக் கதை கொங்குப் பகுதியில் நிகழ்கிறது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெற்ற காலகட்டம்தான் இதன் காலம். ஆனால், பெருமாள்முருகனின் இந்தக் கதை நிலத்தையும் காலத்தையும் தாண்டித் தன் கைகளை நீட்டிப் பார்க்கிறது. புறவயமாக இந்த நாவல், கொங்குப் பகுதியின் வட்டார வழக்கை, சம்சாரிகளின் வாழ்க்கையைப் பிரியத்துடன் வெளிப்படுத்துகிறது; அகவயமாக சமூகக் கற்பிதங்களை நோக்கி ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.
  • தாய்-மகன், அண்ணன்-தம்பி எனப் பாசப் பிணைப்பு குறித்தெல்லாம் நமக்குச் சிறுவயதிலிருந்து சோற்றில் உப்புபோலச் சேர்த்து ஊட்டப்படுகிறது. ஆனால், அவை எந்தளவுக்குக் கற்பிதமானவை என்பதை வாழ்க்கையின் யதார்த்தம் துலங்கச் செய்யும். இதுவரை அண்டிய உறவுகளும் கொண்ட கொள்கையும் அல்ல நம் வாழ்க்கை என்பதைப் பிரித்தறியும் காலம், வாழ்க்கையின் கொடூரங்களுள் ஒன்று. இதை இந்த நாவலின் கதாபாத்திரம் வழி பெருமாள்முருகன் நமக்கு உணர்த்துகிறார்.
  • நிலத்தைக் கைப்பற்றி வாழும் ஆண்களின் ஆதிக் குணம், இந்த நாவலில் ஒரு பிரிவினைக்குக் காரணமாகிறது. அதில் பெண்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள் என்பதையும் பெருமாள்முருகன் சொல்லியிருக்கிறார். நிலமும் பணமும் பொன்னும்போல் ஆண்களைப் பொறுத்தவரை பெண்ணும் ஒரு உடைமைப் பொருள்தான் என்பதை பெருமாள்முருகன் இந்த நாவலில் மறைபொருளாகச் சொல்லியுள்ளார். அதனால், நிலப் பிரிவுக்குப் பிறகு பெண்ணை அடைதல் என்ற நிலைக்குச் சகோதரன் ஒருவன் தூண்டப்பெறுகிறான்.
  • இதில் பிரதான கதாபாத்திரமான முத்து, உருவாக்கப்பட்ட இந்தக் கற்பிதங்களிலிருந்து விலகித் தனக்கான வாழ்க்கையை நோக்கிப் பயணப்படுகிறான். இதை ஒரு குடும்பக் கதை என்பதைத் தாண்டி, ஒரு சமூக நிகழ்வாகப் பெரும் பரப்பில் பெருமாள்முருகனின் நாவல் விரித்துவைக்கிறது. பல்லாண்டுகளாக மனித சமூகம் பழக்கிவைத்திருக்கும் குடும்ப அமைப்பின் பாதக, சாதகங்களையும் இதன் வழி நாவல் சொல்கிறது. இந்த எல்லா அம்சங்கள் மூலமாகவும் புதிய விவாதத்துக்கான தொடக்கத்தை பெருமாள்முருகன் இந்த நாவல் வழி முன்வைக்கிறார் எனலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்