TNPSC Thervupettagam
August 8 , 2019 1982 days 1463 0
  • இந்த ஆண்டின் (2019) கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள்தொகை 147 கோடி. இதே அளவில் நமது நாட்டின் மக்கள் பெருக்கம் தொடர்ந்தால், 2027-ஆம் ஆண்டில் உலகின் மிகுந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடு எனும் இடத்தை இந்தியா அடையும்.  ஆனால், இது நமது மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. காரணம், மக்கள்தொகை பெருக்கத்தினால் ஒரு நாட்டுக்கு ஏற்படும் பல தாக்கங்கள் இன்றைய மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதைக் கூர்ந்து கவனிப்பது நமது அவசர கடமையாகியுள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சி

  • 1803-ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டின் பாதிரியாராகவும் தலைசிறந்த ஆய்வாளராகவும் இருந்த தாமஸ் ராபர்ட் மால்தூஸ், "மக்கள்தொகை வளர்ச்சி குறித்துக் கூறிய கருத்துகள் இன்று வரை உலகின் எல்லா மக்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.  உலகின் அனைத்துப் பகுதிகளும் மனிதனுக்குத் தேவையானவற்றை உருவாக்குவதை ிடவும், அதைக் கட்டுப்படுத்தி திணறடிக்கும் சக்தி கொண்டது மக்கள்தொகை பெருக்கம்' எனக் கூறினார்.  அந்தக் காலகட்டத்தில் உருவாகிய பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும், உலகின் எல்லா மக்களுக்கும் தேவையானவற்றை உருவாக்கும் தன்மை கொண்டதாக அனைத்து நாட்டினரும் பாராட்டினர். அது சமயம்தான், மால்தூஸ் இவ்வாறு கூறினார்.
  • அடுத்த இரண்டு நூற்றாண்டுகளிலும் உலக மக்கள்தொகை வெகுவாகப் பெருகியது.  உலக யுத்தம், பஞ்சங்கள், பல நோய் பாதிப்புகள் மக்கள் தொகையைக் குறைத்தாலும், பெருக்கத்தைவிட இவை குறைவானவையாகவே இருந்தன. ஐ.நா. சபையின் மக்கள்தொகைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை நம் எல்லோரையும் அதிர வைக்கிறது.  "இந்த நூற்றாண்டின் முடிவில், உலகின் தரைப் பகுதிகள் எல்லா மனிதர்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியாது' என்பதே அந்தக் கருத்து. இந்த அறிக்கையின்படி, 2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை 970 கோடி ஆகிவிடும். இது 2015-ஆம் ஆண்டில் இருந்த மக்கள்தொகையை விடவும் 70 கோடி அதிகம். இந்த நூற்றாண்டின் முடிவில், உலகின் மக்கள்தாகை 1,120 கோடியாக உயர்ந்து விடும் என்பதும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  காரணம், நாள் ஒன்றுக்கு இந்த பூமியில் இரண்டு லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
  • இந்த நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை குறைந்துள்ளது. அங்கு தற்போதைய மக்கள்தொகை 73 கோடியே 8 லட்சம். 2100-ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை, 64 கோடியே 60 லட்சமாகக் குறைந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கை

  • ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை, சீனாவை விஞ்சிவிடும். 
  • உலகின் மக்கள்தொகை வளர்ச்சியில் பாதித் தொகை ஒன்பது நாடுகளில்தான் உருவாகும் எனக் கூறப்படுகிறது; இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா, காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, உகாண்டா, அமெரிக்கா ஆகிய நாடுகளே அவை.  அமெரிக்காவின் மக்கள்தொகை பெருக்கத்துக்கான காரணம், அந்த நாட்டுக்குக் குடியேறும் மற்ற நாட்டின் மக்களே.
  • ஆய்வாளர் மால்தூஸ் கூறிய உணவுப் பற்றாக்குறை ஆப்பிரிக்க நாடுகளில் உண்மையாகி விடலாம்.  அங்கே உள்ள 28 நாடுகளில், மக்கள்தொகை 2050-ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு மடங்கு உயர்ந்து விடும் அபாயம் உள்ளது. மக்கள்தொகை உயர்வு மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் வருங்காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடும் உருவாகி உணவு உற்பத்தியைப் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • மேலை நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தரமான உணவு வகைகள் உண்ணாமல் தூக்கி எறியப்படுகின்றன என வோயி செனக் எனும் ஆய்வாளர் கூறுகிறார். இது அமெரிக்காவில் மிகவும் அதிகம் எனவும் கூறுகிறார் அவர்.  தங்களுக்கு பரிமாறப்படும் உணவை முழுவதும் உண்ணாமல், குப்பைக் கிடங்கில் போடுவது அந்த நாட்டில் சர்வ சாதாரணம். தேவையான உணவை எடுத்து உண்ணும் பழக்கமே அங்கே கிடையாது.
  • மால்தூஸ் உணவுப் பற்றாக்குறை பற்றி எழுதிய கட்டுரைக்குப் பிறகு 100 ஆண்டுகள் கழித்து, 1909-இல் "மனிதர்களின் உணவுத் தேவையை இயற்கையால் அளிக்க முடியாது' என்று தனது ஹிந்து ஸ்வராஜ் பத்திரிகையில் மகாத்மா காந்தி எழுதினார்.  மனிதனின் எண்ணங்கள் அதிக பேராசையைத் தூண்டும் தன்மை உடையவை எனவும், உணவுத் தேவை மனிதனின் தரமான வாழ்க்கைக்கு தேவையானதையும்விட அதிகமாக உருவாகி, நிறைய பொருள்களை உணவாக்கி கழிக்கப்படும் கலாசாரம் வளர்ந்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
  • இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என சுதந்திர இந்தியாவின் எல்லா அரசுகளும் முயற்சிக்கின்றன. ஓரளவு இந்த முயற்சிகள் வெற்றி அடைந்தாலும், தேவையான அளவுக்கு வெற்றி  பெறவில்லை.  தலைவர்களில் சிலர் இவற்றை எப்படிச் செய்வது எனப் புரியாமல் பேசி வருகின்றனர்.

உதாரணம்

  • உதாரணமாக, இந்த ஆண்டு மக்கள்தொகை தினத்தன்று (ஜூலை 11) மத்திய அமைச்சர் ஒருவர், நமது நாட்டின் அபரிமிதமான மக்கள்தொகை வளர்ச்சியைக் குறிப்பிட்டு, அதைத் தடுக்க ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோருக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறினார். இவரைப் போலவே, ஒரு யோகாசன குரு, ஒரு பெற்றோருக்கு பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை ரத்து செய்யப்பட வேண்டும்; மேலும், அரசின் எந்த திட்டத்தின் பலன்களும் அந்த குழந்தைக்குக் கிடைக்கக்  கூடாது எனவும் கூறியுள்ளார். இப்படிச் செய்தால் மூன்றாவது குழந்தையைப் பலர் பெற்றெடுக்க மாட்டார்கள் என்பது அவரது கருத்து. இது போன்ற கருத்துகள் நகைப்பிற்குரியவை மற்றும் பலன் ராதவை என்பது அனுபவம் நமக்குத் தரும் பாடம்.
  • 2000-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த தேசிய மக்கள்தொகை திட்டம் கவனிக்கத் தகுந்தது. அதன்படி ஒரு குடும்பத்தின் மகப்பேறு நிலைமைக்கு அரசு வழங்கும் திட்டங்கள் கவனிக்கத்தக்கவை. மக்களின் விருப்பப்படியும்,அவர்களது நன்குணர்ந்த செயல்பாட்டின்படியும் தான் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார அமைப்புகள் செயல்படும். குழந்தைப் பேறு மற்றும் குழந்தைகளைக் காப்பது போன்ற நடவடிக்கைகளில் எந்த அரசு மருத்துவமனைகளும் யாருக்கும் தயக்கம் காட்டக் கூடாது என்பது அரசின் விதிகள். இந்தக் கொள்கை மற்றும் நடைமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன.
  • கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதில் கவனிக்கத் தகுந்தது. "இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் எந்த குறிப்பிட்ட மக்களையும் சார்ந்தது அல்ல. மக்கள் தாங்களாகவே முன்வந்து அவர்களுக்கு விருப்பமான முறையில் குடும்பக் கட்டுப்பாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்' என அமைச்சர் கூறினார்.
  • ஒரு குடும்பத்தின் சுகாதாரம், நோயற்ற வாழ்வு, பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு ஆகியவற்றை நல்ல முறையில் அமைத்துத் தருவதுதான் அரசின் கடமை.  பெற்றோரின் வசதி, உடல் நலம் மற்றும் கல்வி ஆகியவற்றைப் பொருத்துத்தான், எத்தனை குழந்தைகளைப் பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு உருவாகும்.  ஏழை பெற்றோர் நிறைய குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பழக்கம் நமது கிராமப்புறங்களில் சர்வ சாதாரணம். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வது ஏழை மக்களின் வாழ்க்கையில் கடினம் என்பதை, நமது குடிசைவாழ் மக்கள் மற்றும் மலைப்புறங்களில் வசதியற்ற வாழ்க்கை வாழ்வோர் எடுத்துக்காட்டுகிறார்கள்.

முக்கியம்

  • ஏழைக் குடும்பங்களிலும், கிராமப்புற மக்கள் மத்தியிலும் பெண் குழந்தைகளைவிடவும் ஆண் குழந்தைகள் முக்கியம் என்ற எண்ணம் நிலவுகிறது.  ஒரு வீட்டில் ஆறு குழந்தைகள் ஏன் என்று கேட்டால்,  ஐந்து குழந்தைகள் பெண்களாகப் பிறந்ததால், அடுத்து நிச்சயம் ஓர் ஆண் குழந்தை தேவை என்பதால் இது நடந்தது என்ற விளக்கம் கிடைக்கிறது.
  • நமது கலாசாரத்தில் பெண் குழந்தைகள் திருமணமாகி, மணமகன் வீட்டுக்குச்  சென்று விடுவார்கள். நமது வாரிசாக ஆண் குழந்தைகள் இருக்க வேண்டாம் எனவும், வயதான பெற்றோர்களின் கடைசி காலகட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும் ஆண் குழந்தைகளால்தான் முடியும் என்று எண்ணுவது நமது  கலாசாரம்.  ஏழைக் குடும்பங்களில் ஆண் குழந்தைகள் உருவாகி, இளைஞர்களாக வளர்ந்து ஏதேனும் வேலைக்குச் சென்று, சம்பாதித்து குடும்பத்துக்கு வழங்குவது இயல்பு.  தந்தை ஒருவரின் ஊதியத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வது கடினம் என்ற நிலைமை இன்றும் நமது கிராமப்புறங்களில் நிலவும் நிலைமை.
  • இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு ஆராய்ந்தால், நமது நாட்டின் வாழ்க்கை முறையில் மிகவும் அதிக அளவில் குடும்பக் கட்டுப்பாடு என்ற நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது கடினம்.  நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, வறுமை ஒழியும் நிலைமையில் மக்களின் எண்ண ஓட்டங்களும் மாறி சுயமான விருப்பத்துடன் குடும்பக் கட்டுப்பாடு உருவாகும் என நம்ப முடியும்.
  • நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தரக் குடும்பங்களில் மிக அதிக அளவில், இரண்டு குழந்தைகளுடன் வாழும் பெற்றோர்கள் உள்ளனர். கணவனும், மனைவியும் பணியில் இருக்கும் நிலையில் மிக விருப்பத்துடன் ஒரு குழந்தையுடன் வாழும் குடும்பங்களையும் நாம் காண முடியும்.  மிக அதிக அளவில் பணம் ஈட்டிய தொழிலதிபர்கள் பலர் ஒன்று, இரண்டு குழந்தைகள் உள்ளவர்களாக இருப்பதை பல இடங்களிலும் காணலாம். ஆக, கால ஓட்டத்தில் நம் நாட்டிலும் குறைவான மக்கள்தொகை மக்களால் உருவாக்கப்படும் என நம்புவோம்.

நன்றி: தினமணி(08-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்