TNPSC Thervupettagam

குப்பையில் இருந்து மின்சாரம்: புதிய பேராபத்து

August 26 , 2023 504 days 318 0
  • உலகின் பல நாடுகளிலும் துரத்தியடிக்கப்பட்ட எரி உலைகள் இந்தியாவில் தலை தூக்குகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 57 எரிஉலைகளைத் தொடங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இவையெல்லாம் நம் ஊருக்கு வருவதற்கு முன் நாம் அறியவேண்டியவை என்ன? மக்கள் எதிர்கொள்ளும் பேராபத்துகள் என்ன?
  • டெல்லியில், ஓக்லா பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றாள். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளது நுரையீரலின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
  • தொடர்ந்து பல வருடங்களாக புகைபிடித்து வரும் ஒருவரின் நுரையீரலைப் போன்று அந்த நுரையீரல் இருந்ததாம். டெல்லி ஓக்லா பகுதியில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அருகே வாழும் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பல உடல்நலப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
  • தமிழ்நாட்டில் இது போன்ற 57 எரிஉலைகள் தொடங்குவதற்கு அரசு முடிவுசெய்துள்ளது. அதில் பாதி தொடங்கும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே வட சென்னையில் மணலி, கொடுங்கையூரில் மக்களின் வசிப்பிடத்திற்கு மிக அருகில், குப்பைகளை எரித்து அதன் சாம்பலில் நடைபாதைக் கற்கள் தயாரிக்கும் இரண்டு எரிஉலைகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.
  • இந்த இரண்டு எரிஉலைகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல்நலம், சூழலியல் சார்ந்த பல பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில்தான் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலைகளை கூடுதலாகத் தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

வெளியேறும் ஆபத்து

  • பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது சட்டப்படி குற்றம் என்கிறது பிளாஸ்டிக் திடக்கழிவு மேலாண்மை விதிகள். பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சு அமிலங்கள் சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக டையாக்சின், ஃபியூரான் போன்ற மாசுபடுத்திகள், மனிதர்களிடையே சக்திவாய்ந்த புற்றுநோய்க்கான காரணிகளாக இருக்கின்றன.

எரிஉலைகளின் வேலை என்ன?

  • இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், பல இடங்களில் தரம் பிரிக்காமல் கொடுக்கப்படும் திடக் கழிவை டன் கணக்கில் சேகரித்து, எரிஉலைகளில் எரித்து சாம்பலாக்குவதுதான். இதன் காரணமாக பிளாஸ்டிக் உற்பத்தியைத் தடுக்காமல் தொடர்ந்து நடைமுறைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும். மேலும் மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் போன்றவற்றைப் பொருள்படுத்தாமல், மின்சாரம் தயாரிக்கிறோம் என்கிற பெயரில் நச்சு வாயுக்கள் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படும்.

உண்மை நிலை

  • மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் சீரழிவைப் போன்ற முக்கியப் பிரச்சினைகள் இந்த எரி உலைகளால் ஏற்படுகின்றன. இதைத் தீவிரமாக ஆதரிக்கும் தனியார் எரிஉலை நிறுவனங்கள், நகராட்சி அமைப்புகள் என்ன சொல்கின்றன? குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கிறோம்; எரிபொருள் தயாரிக்கிறோம்; அதன் சாம்பலை வைத்து கட்டுமான பொருள்கள் தயாரிக்கின்றோம்; நச்சுக்காற்றை சுத்திகரித்து வெளியேற்றுகிறோம் என்று கூறும். கேட்க நன்றாக இருந்தாலும், களத்தில் செயல்பாடுகளோ நேர்மாறாக இருக்கின்றன.
  • தொண்ணூறுகளில் மேலை நாடுகள் குப்பையை எரிக்கும் எரிஉலைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றன. ஆனால் இன்று, ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் எரி உலைகளை மூடிவிட்டன. இதற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியக் காரணங்கள் சமூக பொருளாதாரமும் சூழலியல் சிக்கல்களுமே. இன்று இந்த நாடுகள் போலியான தீர்வு களிலிருந்து மீண்டு சரியான குப்பை மேலாண்மை உத்திகளைச் செயல்படுத்தி வருகின்றன.

பெரும் பிரச்சினைகள்

  • உலகில் இருக்கும் பல மின்சாரம் தயாரிக்கும் முறைகளில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த நடைமுறையில் தயாரிக்கப்படுவது, குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரமே. இது, வழக்கத்தைவிட செலவு மிகுந்த மின் தயாரிப்பு முறை. இதில் இருந்து கிடைக்கும் மின்சாரமோ மிக குறைந்த அளவுதான்.
  • அது மட்டுமல்லாமல், குப்பையை எரிக்கும் நடைமுறை பல மடங்கு நச்சுகளை வெளியேற்றக் கூடியது. உதாரணமாக, ஓர் அனல் மின்நிலையத்தில் இருந்து வரும் டையாக்சின்களை விட 28 மடங்கு அதிக டையாக்சின், குப்பையை எரிக்கும் எரிஉலைகளில் இருந்து வெளியேறுகிறது.
  • இது அங்கு வசிக்கும் மக்களை மட்டுமே பாதிக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக, மணலியில் இருக்கும் எரிஉலையில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பார்டிகுலேட் மாட்டர் எனப்படும் நுண்துகள்கள் போன்ற மாசுபடுத்திகள் காலநிலை மாற்றத்திற்குப் பெரும் காரணங்களாக இருக்கின்றன.
  • இதில் இருந்து வெளிவரும் டையாக்சின், ஃபியூரான்கள் காற்றில் மட்டுமல்லாமல், நீர்நிலைகளிலும் கலக்கும். மணலி எரிஉலையின் பக்கத்தில் சென்னை மக்களின் நீராதாரமான புழல் ஏரி இருப்பதை மறந்துவிடக் கூடாது.
  • எரிஉலைகளில் குப்பை எரிக்கப்பட்டவுடன் அது உண்மை அளவிலிருந்து 30 சதவீத சாம்பலாக மாறிவிடுகிறது. இந்த சாம்பல், நச்சு வாயுக்களில் டையாக்சின், ஈயம், காட்மியம், பாதரசம், நுண்துகள்கள் இருக்கின்றன. எஞ்சும் சாம்பல், அபாயகரமான குப்பையாக மாறி விடுகிறது. இதை மீண்டும் குப்பை மேடுகளில் போட்டாலும் சரி, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தினாலும் சரி. நச்சுத்தன்மையை உமிழ்ந்துகொண்டே தான் இருக்கும். உலகில் அதிக டையாக்சின், ஃபியூரான் உமிழும் ஆதாரங்களில் குப்பை எரிஉலைகள் முன்னிலையில் உள்ளன.

பிரச்சினையும் தீர்வும்

  • பொதுவாக எரிஉலைகள் குப்பையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பிளாஸ்டிக் குப்பையை. இப்படியிருக்கும் நிலையில் தமிழகம் உள்பட எந்த மாநிலமும் குப்பையை எரிக்கும் எரிஉலைகளை நிறுவினால், அது பிளாஸ்டிக் உற்பத்தி, பயன்பாட்டைக் குறைக்காது. குப்பை மேலாண்மையை மேம்படுத்துவதற்கு பதிலாக, அவற்றின் உற்பத்தி, பயன்பாட்டை ஆதரிப்பதாகவே மாறும்.
  • எரிஉலைகள் இந்தியாவிற்கு உகந்தவையல்ல. தரம் பிரிக்காமல் எல்லாக் குப்பையையும் எரிப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது, மக்கள் உடநலத்தைச் சீர்குலைப்பது, ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் முறைசாரா தூய்மைப் பணியாளர் களின் வேலைவாய்ப்பைப் பறிப்பது எனப் பல கோணங்களில் யோசித்துப் பார்க்க வேண்டும்.
  • இந்த எரிஉலைகள் இவை எல்லாவற்றையும் சேர்த்தே எரித்துக் கொண்டு இருக்கின்றன. அரசு மானியங்கள் கொடுத்து, மேலும் பல சலுகைகள் கொடுத்து இந்த எரிஉலைகள் நச்சுகளைப் பரப்புவதற்கு ஏன் வழிவகை செய்ய வேண்டும்?
  • மாறாக, பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைத்தல், கழிவைத் தரம் பிரித்தல், மறுபயன்பாடு, மாற்று பயன்பாடு, மறுசுழற்சி போன்ற முறைகளைச் செயல்படுத்த வேண்டும். இது பல

நன்றி : இந்து தமிழ் திசை (26 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்