TNPSC Thervupettagam

குரங்கு அம்மை தீநுண்மி

July 20 , 2022 750 days 581 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று, இந்தியாவில் சுமார் 5.25 லட்சம் பேர் உள்பட உலகம் முழுவதும் 63.61 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரை பலி கொண்டதுடன், பல நாடுகளின் பொருளாதாரத்தையும் அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது. இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும் நோய்த்தொற்றின் பாதிப்பு ஓய்ந்தபாடில்லை. இந்த சூழலில் உலகை அச்சுறுத்த இப்போது வந்திருக்கிறது குரங்கு அம்மை.
  • சர்வதேச அளவில் 63 நாடுகளில் 9,200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே வாரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு இந்த வாரம் அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.
  • குரங்கு அம்மை தீநுண்மி என்பது கொவைட் 19 போன்றதொரு புதிய வகை தொற்று அல்ல. ஆராய்ச்சிக்காக பயன்பட்ட குரங்குகளில் இந்த வகை நோய்த்தொற்று இருப்பதை 1958-லேயே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டில் இந்த வகை தீநுண்மியால் 1970-இல் பாதிப்பு ஏற்பட்டது என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
  • மேற்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிகளில்தான் குறைந்த அளவில் சிறு விலங்குகள் மூலம் இந்த தீநுண்மி முன்பு பரவியது. ஆனால், இப்போது இந்த வகை நோய்த்தொற்று இதற்கு முன்னால் அறியப்படாத வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருவதுதான் உலக சுகாதார அமைப்பை கவலை கொள்ளச் செய்துள்ளது. தற்போது குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஷார்ஜாவில் இருந்து வந்த ஒருவருக்கும், துபையில் இருந்த கடந்த 13-ஆம் தேதி கேரளம் வந்த கண்ணூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கண்டறியப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி வந்த பயணிக்கு குரங்கு அம்மை பாதிப்பு தெரியவந்தவுடன் கேரள சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
  • அந்தப் பயணியின் அருகருகே இருந்த இருக்கைகளில் பயணித்த பயணிகளின் சொந்த மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோர், அவர் பயணித்த ஆட்டோ ஓட்டுநர், வாடகை கார் ஓட்டுநர், அவர் சிகிச்சைக்கு சென்ற மருத்துவமனையின் தோல் மருத்துவர், அருகில் பயணித்தோர் உள்ளிட்ட 11 பேருடன், விமான நிலையத்தில் அந்தப் பயணியின் உடைமைகளைக் கையாண்ட விமான நிலைய ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள் ஆகியோரும் கண்காணிப்புப் பட்டியலில் கொண்டுவரப்பட்டனர்.
  • கேரளத்தை ஒட்டிய மாநிலமாக இருப்பதாலும், உலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதாலும், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களிலும், மாநில எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
  • காய்ச்சல், முகத்தில் தொடங்கி உடலில் பரவக் கூடிய கொப்புளங்கள், தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண், இருமல் போன்றவை குரங்கு அம்மை பாதிப்பின் அறிகுறிகள். இதனால், கண்வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வலிப்பு, கடுமையான உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது, பொதுவாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் நோய்த்தொற்று பாதிப்பு.
  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய் பாதிப்பு உடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆகியோர் இந்த நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். நீண்ட நாள் நெருங்கிய தொடர்பு உடையவர்களின் பெரிய சுவாசத் துளிகள் வாயிலாகவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறை படிந்த உடைகள் போன்றவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பரவும் தன்மை கொண்டது இந்த தொற்று.
  • கரோனா பாதிப்பு ஏற்பட்டால் எப்படி தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறதோ, அதேபோன்றுதான் குரங்கு அம்மை வைரஸால் பாதிக்கப்பட்டவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் துணிகள், படுக்கைகள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் மற்றவர்கள் தொடுவதைத் தவிர்த்தல், நோயாளியின் மூக்கையும் வாயையும் மறைக்கக்கூடிய முகக்கவசத்தைப் பயன்படுத்துதல், நோயாளியின் தோலில் இருந்து உதிரக் கூடிய சொறியை தூய்மையான துணி கொண்டு அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
  • கொவைட் 19-இன் உருமாற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தல் போதாதென்று இப்போது குரங்கு அம்மை தொற்றும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் தூய்மையைத் தீவிரமாகப் பேணுவது, ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை இன்னும் சில ஆண்டுகள் தொடர்வதை கைவிடலாகாது.*.

                                                                                                                                                                                                                                                                நன்றி: தினமணி (20 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்