TNPSC Thervupettagam

குருகிராம் – சாலிகிராமம் கட்டுமானத் துயரங்கள்

September 26 , 2023 416 days 346 0
  • பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்பிடின், கட்டுமானப் பொருளான சிமென்ட்டைக் கண்டுபிடித்து இரண்டு நூற்றாண்டுகள் ஆகப்போகின்றன. இருந்தபோதிலும், இன்றளவிலும் அதை ஒரு நவீனக் கட்டுமானப் பொருளாகத்தான் நான் கருதுகிறேன். காரணம், சிமென்ட் பற்றிய ஆராய்ச்சி ஒரு தொடர்கதை. சிமென்ட் வியப்பான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடிய பொருள்.
  • பொறியியல் நுணுக்கங்களுடன் நுட்பமாக அதைக் கையாண்டால் அற்புதமான பலன்களை அடையலாம். பெரும்பாலும் சிமென்ட் உபயோகிப்பாளர்கள் முழுமையான புரிதல் இன்றியே அதைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் இரண்டு பெரும் அடுக்ககங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் கவலைக்குரியவை; பொறியாளர்களின் கவனத்துக்குரியவை.

குருகிராம் துயரம்

  • சென்னை சாலிகிராமம் அடுக்ககப் பிரச்சினை தற்போது பெரும் விவாதப் பொருளாக உள்ளது. ஆனால், நம் கவனத்தை அதிகம் ஈர்க்காத குருகிராம் அடுக்ககம் நமது தேசத்தின் பெரும் துயரம். ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் நகரில், ‘சிண்டல் பாரடைஸ்என்ற பெயரில் அடுக்ககத் தொகுப்புகள் கட்டப்பட்டன.
  • 18 தளங்களைக் கொண்ட ஏழு தொகுப்புகள் கட்டப்பட்டன. 2018இல் கட்டி முடிக்கப்பட்டு உரிமையாளர்கள் குடிபுகுந்தனர். ஆரம்பத்திலேயே பல அடுக்ககங்களில் வெடிப்புகள் முகம் காட்டத் தொடங்கின. குறைகளைச் சரிசெய்யும் வேலையும் தொடங்கப்பட்டது.
  • நிலைமை மோசமாகத் தொடங்கியதும் பலர் வீட்டைக் காலிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.டி-ப்ளாக்கில் 6ஆவது மாடியில் வசிக்கும் அறையில், 2022ஆம் ஆண்டு பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது தளம் (slab) இடிந்து விழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகக் கீழிருந்த மேலும் நான்கு தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. பலர் ஏற்கெனவே காலி செய்திருந்ததால் இறப்பின் எண்ணிக்கை இரண்டைத் தாண்டவில்லை.

திசைதிருப்பும் முயற்சி

  • ஒரு கட்டிடத்தில் மற்ற பாகங்களைக் காட்டிலும் தளம் (slab) தான் சிறப்பாகச் செயல்படக் கூடிய அங்கம். அவ்வளவு எளிதில் விழாது. அப்படியே விழுந்தாலும் அது தனியாக விழ முடியாது. மற்ற பகுதிகளை இழுத்துக்கொண்டுதான் விழ வேண்டும். வெடிகுண்டு போட்டது போன்ற விளைவுக்கு நிகரானது எனலாம்.
  • குருகிராம் சம்பவத்தில், குளோரைடு அதிகமானதால் கம்பி துருப்பிடித்து வீழ்ந்துவிட்டது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அது உண்மையல்ல. உண்மையாக இருந்தாலும், இவ்வளவு விரைவில் நிகழாது. அப்படியே நிகழ்ந்தாலும் தொடர்ச்சியாக ஐந்து தளங்கள் ஒரே வேளையில் விழக் கூடாது.
  • அந்தக் கட்டிடத்தில் இரண்டு தவறுகள் நிகழ்ந்துள்ளன. முதல் பெரும் தவறு கம்பிகள் முறையாகக் கட்டப்படவில்லை. அடுத்ததாக, தரமற்ற கான்கிரீட்.பொலபொலவென்று ஐந்து தளங்களும் உடைந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது அசாதாரணமானது. என் அனுபவத்தில் இப்படியொரு தவறைக் கண்டதில்லை. கான்கிரீட் தரம் குறைவாக இருந்தாலும் கம்பியை முறையாகக் கட்டியிருந்தால் விழுவதற்குமுன் எச்சரிக்கை யாவது கிடைத்திருக்கும், இதை நீண்மைத்தன்மை (ductility) என்பர். கட்டிடவியல் மாணவர்களுக்குப் பல மட்டங்களில் வலியுறுத்தப்படுகின்ற நுணுக்கம் இது. இது ஒரு முழுமையான பொறியியல் தோல்வி.
  • விபத்துக்குப் பிறகு டி-ப்ளாக்கை இடிக்க உத்தரவிடப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மேலும் சில பிளாக்குகளை இடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியாளராக நான் வருத்தப்படும் விஷயம் இதுதான் - உண்மை ஏன் வெளிவர மறுக்கிறது? அது மிக முக்கியமல்லவா!

சாலிகிராமத்தில் தவறிய தரம்

  • சாலிகிராமத்தில் ஜெயின் அடுக்ககம் கட்டிமுடிக்கப்பட்டு 5-6 ஆண்டுகளில் பிரச்சினைகள் சிறிய அளவில் தோன்றியுள்ளன. இன்று தளங்களின் அடியில் தெரியும் துருப்பிடித்த கம்பிகளைப் பார்க்கும்போது இனம்புரியாத துயரம் மனதைக் கவ்வுகிறது.
  • ஒரு கட்டிடம் உறுதியுடன் நிலைத்திருக்க மூன்று அம்சங்கள் பூர்த்தியாக வேண்டும். உறுதித்தன்மை (strength), விறைப்புத்தன்மை (stiffness), நீடித்து உழைக்கும் திறன் (durability). ஜெயின் அடுக்ககத்தில், கவர் கான்கிரீட் பாதிப்பு தவிர, வேறுவிதமான இடிபாடுகள் இல்லை. கம்பிகள் துருப்பிடித்துச் சேதமடைந்தாலும் கட்டிடம் பாதுகாப்பாக உள்ளது.
  • இது கட்டிடத்துக்குத் தேவையான பலம் இருப்பதை உணர்த்துகிறது. தூண்களில் அசைவுகளோ, உத்திரம் - தளத்தில் தொய்வு / அதிர்ச்சியோ இருப்பதாகத் தகவல்இல்லை. இது கட்டிடத்துக்குத் தேவையான விறைப்புத்தன்மை இருப்பதை உணர்த்துகிறது. ஆனால், மூன்றாவது அம்சத்தில் குறைபாடு உள்ளது.
  • நீடித்து உழைக்கும் திறன் என்பது, கட்டும்போது கடைப்பிடிக்கும் தரக்கட்டுப்பாட்டைச் சார்ந்தது. ஒருமுறையாவது தண்ணீரை / மணலைப் பரிசோதித்திருக்கலாம். பொதுவாக, நம் நாட்டில் தரக்கட்டுப்பாடு என்பது ஓர்ஒவ்வாத வார்த்தை. முதலீட்டாளர்கள் அந்த வார்த்தையைக் கேட்டாலே முகம் சுளிப்பார்கள்.

பரிகாரம் என்ன 

  • கட்டிடங்களில் பலம் - விறைப்புத்தன்மை குறைவாக இருந்தால் அவற்றை மீட்கலாம். ஆனால், மூன்றாவது தன்மை இல்லையென்றால் மீட்பது பெரும் சவால். அங்கு குடியிருப்பவர் ஒருவர், “கான்கிரீட்டில் உள்ள குளோரைடைப் பிரித்தெடுக்கும் நுட்பம் அல்லது கதோடிக் (cathodic) பாதுகாப்பு செய்வது பற்றி ஆலோசிக்கிறோம்என்று கூறுகிறார். சரிதான். ஆனால், குளோரைடைப் பிரித்தெடுக்கும் நுட்பம் சுமார் 25 ஆண்டு பழமையான முறை என்றாலும், அது இன்றுவரை முழுமை பெறவில்லை. இரண்டாவது நல்ல பலன் கொடுக்கும். இதன் வெற்றி - கட்டிடத்தின் தற்போதைய நிலையைச் சார்ந்தது.
  • சில கட்டிடங்களில் குளோரைடு வெளியிலிருந்து உட்புகுந்து சேதம் விளைவிக்கும். அதன் பாதிப்பு கான்கிரீட்டின் மேல் பகுதியில்தான் இருக்கும். ஆனால், ஜெயின் கட்டிடத்தில் குளோரைடு உள்ளேயே இருப்பது ஒரு பாதகநிலை.
  • உள்ளிருக்கும் குளோரைடை அளவிட வேண்டும். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று கதோடிக் பாதுகாப்பு இந்தக் கட்டிடத்துக்கு எந்த அளவுக்கு வெற்றி தரும் என்கிற ஆலோசனையைப் பெற வேண்டும். ஆரம்பச் செலவு, பராமரிப்புச் செலவு போன்றவற்றைத் திட்டமிட்ட பின்னர், செயலில் இறங்க வேண்டும். இன்னும் ஒருபடி மேலே செல்லலாம். கட்டிடத்தின் எஞ்சிய வாழ்நாளைக் கணக்கிட முடியும். அதற்குத் தேவையான மென்பொருள் தற்போது உள்ளது. அது சரியான முடிவெடுக்க வழிவகுக்கும்.

கற்க வேண்டிய பாடம்

  • கான்கிரீட்டில் கம்பிகளைப் புதைக்கும்போது நாம் பிரச்சினைகளையும் சேர்த்துப் புதைக்கிறோம் என்கின்ற புரிதல் வேண்டும். தேவைக்கு அதிகமான கம்பிகளைப் புதைப்பது, போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் கான்கிரீட் தயாரிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
  • கான்கிரீட்அறிவோம்என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் (இந்து தமிழ் திசை’, 15.07.2021) கருங்கல் கட்டிடங்களின் வயது 4 இலக்கங்களிலும், செங்கல் கட்டிடங்கள் 3 இலக்கங்களிலும், கான்கிரீட் கட்டிடங்கள் 2 இலக்கங்களிலும் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
  • ஆனால், கான்கிரீட் கட்டிடங்களுக்கு ஓரிலக்க வயதுதான் என்று குருகிராம் - சாலிகிராமம் கட்டிடங்கள் பொய் சாட்சியம் கூறுகின்றன. எதிர்காலத்தில் அறிவியல், பொறியியல், சமூகரீதியான நியதிகளை மனதில் நிறுத்தி கட்டிடங்களைக் கட்டி பொறியியல் நீதி காப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்