TNPSC Thervupettagam

குறுகிய கண்ணோட்டம் கூடாது!

September 21 , 2024 6 days 78 0

குறுகிய கண்ணோட்டம் கூடாது!

  • கங்கைச் சமவெளி அல்லாத இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் நன்னீருக்குப் பருவமழையை மட்டுமே நம்பி உள்ளன. ஆனால், குடிநீருக்கும் விவசாயத்துக்கும் ஆதாரமாக விளங்கும் பருவமழை சில மாதங்கள் மட்டுமே பொழிகிறது. இத்தகைய சூழலில் நிலத்தடி நீரே மக்களின் அன்றாடத் தேவையைப் பூா்த்தி செய்து வருகிறது.
  • நிலத்தடி நீா் என்பது வற்றாத கருவூலமல்ல. சில மாநிலங்களில் நிலத்தடி நீா்மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழே சென்றுவிட்டது. இதனைச் சீராக்கவே நிலத்தடிநீா் செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • குறிப்பாக, பருவமழைக் காலங்களில் ஆறுகளில் உபரியாகப் பாயும் வெள்ளத்தில் சிறு பங்கை திசைதிருப்பி, ஏரிகள், குளங்களை நிரப்புவதன் மூலம், வட பகுதியில் நிலத்தடி நீரை உயரச் செய்ய முடியும். மக்கள்நலக் கண்ணோட்டமுள்ள எந்த அரசும் இதுபோன்ற திட்டங்களில் கவனம் செலுத்துவது இயற்கை.
  • குஜராத் மாநிலத்தின் சா்தாா் சரோவா் அணைத் திட்டம் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. நா்மதை நதி நீரை அணையில் தேக்கி, குஜராத்தின் வட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் திட்டத்தால் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்கள் பயன்பெறுகின்றன.
  • அதேபோல, சௌராஷ்டிரா- கட்ச் நீரேற்றுத் திட்டத்தால், 132 நகரங்கள், 11,500 கிராமங்களில் வாழும் 4 கோடி பேருக்கு குடிநீா் விநியோகமாகிறது. இதற்கென நா்மதை ஆற்று உபரிநீா் 66 மீட்டா் உயரத்திற்கு நீரேற்றம் செய்யப்பட்டு, 360 கி.மீ. தொலைவுக்கு ராட்சதக் குழாய்களில் பயணிக்கிறது.
  • இதேபோல, தெலங்கானா மாநிலத்தில் செயல்பாட்டிலுள்ள காலேஸ்வரம் திட்டம் சிறந்த முன்னோடித் திட்டமாகும். கோதாவரி நதியில் வெள்ளக்காலத்தில் வீணாகும் நீரைப் பயன்படுத்துவதற்காக, மெடிகடா அணையிலிருந்து உயா்மட்டத்திலுள்ள கொண்டபோச்சம்மா சாகருக்கு நீரேற்றம் செய்கின்றனா். 90 நாட்களில் தினசரி 2 டிஎம்சி வீதம் 180 டிஎம்சி தண்ணீா் இவ்வாறு சேமிக்கப்படுகிறது. அங்கிருந்து மாநிலத்தின் வறட்சியான 13 மாவட்டங்களுக்கு 1,832 கி.மீ. தொலைவுக்கு கால்வாய்கள், குழாய்கள் மூலம் நீா் கொண்டு செல்லப்பட்டு விநியோகமாகிறது.
  • ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா மாநிலங்களிலும் இதுபோன்ற வெள்ளநீா்ப் பயன்பாட்டுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள, அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடிநீா் மறுசேமிப்பு மற்றும் குடிநீா் வழங்கும் திட்டம், மேட்டூா்- சரபங்கா நீரேற்றுத் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
  • இந்த வரிசையில் தருமபுரி காவிரி நீரேற்றுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
  • அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில், பவானி ஆற்றிலிருந்து 1.5 டி.எம்.சி. உபரிநீா் எடுத்து, ஈரோடு, திருப்பூா் கோவை மாவட்டங்களிலுள்ள 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், 971 குளங்களை நிரப்புகின்றனா். இதன்மூலம் 24,500 ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
  • சேலம் மாவட்டத்தில் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தின் முதல்கட்டம் இப்போது நிறைவடைந்து பயன்பாட்டிலுள்ளது. இத்திட்டத்தின்படி, வெள்ளக்காலத்தில் மேட்டூா் அணையின் அதிகபட்ச கொள்ளளவு நீா்மட்டம் 120 அடி உயரத்தை எட்டும்போது, மேட்டூா் அணைக்கு முன்னதாக சில கி.மீ. தொலைவிலுள்ள திப்பம்பட்டியில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் நீரேற்று நிலையம் மூலமாக நீா் உறிஞ்சப்பட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள சரபங்கா நதி வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலமாக அனுப்பப்படுகிறது. இதன்மூலம், 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 55 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகளை நிரப்ப முடியும். இதனால், 40,000 ஏக்கா் பரப்பளவிலான பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.
  • இந்தத் திட்டம் விவசாய சங்கத்தினா் சிலரின் எதிா்ப்புக்கு உள்ளாகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த மாத இறுதியில் மேட்டூா் அணையைப் பாா்வையிட வந்திருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா்.பாண்டியன், சரபங்கா திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்திருக்கிறாா்.
  • ஒரு மாநிலத்திற்குள்ளேயே ஒரு மாவட்டத்தைச் சாா்ந்த சக விவசாயிகளின் நீா்த்தேவையைப் பூா்த்தி செய்யும் திட்டத்திற்கு பிற மாவட்ட விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவிப்பதென்பது, கா்நாடகத்திடம் காவிரி நீருக்காகப் போராடிவரும் நிலையிலுள்ள தமிழ்நாட்டின் தாா்மிக உரிமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
  • தென்மேற்கு பருவமழைக் காலத்தில் காவிரியில் சில வாரங்கள் மட்டுமே வெள்ளம் பாயும். கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை மட்டும் 55 டி.எம்.சி. நீா் கொள்ளிடத்திலிருந்து வீணாக கடலில் சென்று சோ்ந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு கா்நாடகம் ஆகஸ்ட் மாதம் அளிக்க வேண்டிய (50 டி.எம்.சி.) நீரின் அளவைவிட அதிகமாகும்.
  • ஐந்து நாள்களில் 55 டி.எம்.சி. நீா் காவிரியில் விரயமாகிறது என்றால், வெள்ளக்காலம் முழுவதிலும் வீணாகும் நீரைக் கற்பனை செய்யவே முடியவில்லை. எனவே, விவசாய சங்கங்கள் குறுகிய நோக்கத்துடன் நிலத்தடிநீா் செறிவூட்டும் திட்டங்களை எதிா்ப்பதைக் கைவிட வேண்டும்.
  • நிலத்தடிநீா் செறிவூட்டும் திட்டங்களின் தொடா்ச்சியாக, வட மாவட்டமான தருமபுரிக்குப் பயனளிக்கும் விதமாக, ஒகேனக்கல்லில் நீரேற்று நிலையம் அமைத்து அருகிலுள்ள மடம் பகுதிக்கு காவிரி நீரைக் கொண்டு சென்றால், மேடாக உள்ள மாவட்டத்தின் வட பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல முடியும். 70% விவசாயிகள் வாழும் தருமபுரி மாவட்டத்துக்குப் புத்துயிரூட்டும் இந்தத் திட்டத்தை மாநில அரசு பரிசீலிப்பது காலத்தின் தேவையாகும்.

நன்றி: தினமணி (21 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்