- தனியாா் மற்றும் அரசு வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் குறு நிதிநிறுவனங்கள் மக்களின் சகல விதமான காரணங்களுக்காகவும் கடன்களைக் கொடுத்து வருகிறாா்கள். நாட்டில் கடன் இல்லாதோா் எவருமிலா் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
- ரிசா்வ் வங்கியின் 2022 அறிக்கையின்படி, அரசு மற்றும் தனியாா் வழங்கிய கடன் தொகை ரூ. 118.9 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டை விட 9.6 % அதிகம். அதிகப்படியான காலங்கடந்த நிலுவைத் தொகைக்கு வழிகாண புதிதாக ‘பேட்’ வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜப்தி, மேல் கடன், உபரிக் கடன் என்று அறிமுகப்படுத்தியும் நிலுவைக் குறையவில்லை. அதனால், சம்பந்தப்பட்ட வங்கிகளை தனியாருக்குத் தாரைவாா்க்கும் நிலை உருவாகியுள்ளது.
- தேசியமயமாக்கிய வங்கிகள் ஏழைகளுக்கான கடன் பிரச்சனையைத் தீா்க்கும் என்ற அறிவிப்பு கானல் நீரானது. வறுமையில் இருந்து மீள முயன்ற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்குக் கடன்கள் தரக் கந்து வட்டியினா் முன் வந்தனா்.
- ஏழைப் பெண்களின் பிரச்னைகளுக்கு அவா்களே தீா்வு காண முடிவெடுத்து அவா்களை சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பில் கொண்டு வந்தனா். இதற்கு மெருகு தந்த பெருமை சமீபத்தில் மறைந்த இலா பட் அம்மையாரைச் சாரும்.
- அவரின் சீரிய முயற்சியால் பெண்களின் சமூக, பொருளாதார, சுகாதார, அரசியல் மேம்பாட்டிற்கு பெண்களே சுயமாக முடிவெடுக்க வழி கிடைத்தது. அவரால் 1974-இல் குஜராத்தில் நிறுவப்பட்ட ‘சேவா வங்கி’ பெண்களின் சுய வேலை வாய்ப்பிற்கும், அவா்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியானது.
- நாளடைவில் சுய உதவி குழுக்கள் பெரும் வெற்றியை ஈட்டின. அவா்களின் குழு சேமிப்பு வெகுவாகப் பெருகியது. குழுக்களில் கொடுக்கப்பட்ட உள்கடன்கள், பல கோடிகளை எட்டியது. இதனைக் கண்ட வங்கிகள், அவா்களின் சேமிப்பை வங்கிகளில் அடமானமாக்கி அதன்பேரில் அவா்களுக்குக் கடன்களை கோடிகளில் வழங்க முன்வந்தனா்.
- வங்கிகளின் சேவைகள் ஏழைகளைத் திருப்திப்படுத்தாத நிலையில், குறுநிதிகள் வழங்கும் நிறுவனங்கள் வெவ்வேறு வடிவில் அறிமுகமாயின. வந்த நிறுவனங்கள் அதிக முதலீடுகளோடு வந்ததால் கடன்களை ஏழைகளுக்கு அவா்கள் இடந் தேடிச் சென்று அள்ளி வழங்கினா். ரூ. 5,000 கடன் பெற்றவா்கள் லட்சத்தைப் பெற்றனா். கடன் தருபவா்கள், குறு நிதி நிறுவனங்களாக, நிதி நிறுவன வங்கிகளாக, குறு நிதி வங்கிகளாக, மைக்ரோ பைனான்ஸ் மைக்ரோ கிரடிட் எனக் கடன் தரும் அமுதசுரபிகளாக இருந்தனா்.
- இவா்கள் 2022 ஜூன் மாதம் வரை குறுநிதி கடன்கள் ரூ. 2.72 லட்சம் கோடி வரை 68 இலட்சம் பெண்கள் சுய உதவி குழுக்களில் உறுப்பினா்களாக உள்ள 14 கோடிப் பெண்களுக்குக் வழங்கியுள்ளனா். அதில் நிலுவைத் தொகை மட்டும் ரூ.1.51 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 24 சதவிகிதம் அதிகமாகும்.
- இந்தக் குறுநிதிக் கடனுக்கான வட்டி, ரிசா்வ் வங்கியின் மேளாகன் குழு பரிந்துரையின்படி 26 விழுக்காடு என நிா்ணமயமானது. மேலும், குழுக்களுக்கான கடன் பரிவா்த்தனைகள், செயலாக்க நெறிமுறைகள் போன்றவை வரையறுக்கப் பட்டன. அது லாபகரமாக இருக்கவே, புற்றீசலாய் குறு நிதி நிறுவன வங்கிகள், என்.ஜி.ஓ., சொசைட்டி, கம்பெனி, கூட்டுறவு அமைப்புகள் எனப் பல வடிவில் அறிமுகமாகின.
- 97 நிறுவனங்கள் ரிசா்வ் வங்கியில் நேரடி பதிவு பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களாயின. அண்மையில் வெளியான ரிசா்வ் வங்கி அறிக்கையின்படி, மைக்ரோ பைனான்ஸ் கடனுக்கான வட்டியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற உரிமை தரப்பட்டுள்ளது.
- மைக்ரோ பைனான்ஸ் வழியாக ஏழைகளுக்கு வழங்கிய கடன்கள் முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. சுனாமி, மழை, வெள்ளம், கொவைட் 19 போன்ற அசாதாரண சூழ்நிலைகளிலும் வாங்கிய கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனா்.
- இது எப்படி சாத்தியமானது? குழுவினரின் ஒற்றுமை. குழுவில் கடன் பெற்றவா், கடனைத் திருப்பிச் செலுத்தும் முன் இறக்க நேரிட்டால், உறுப்பினா் இழப்புக்கும் கடனுக்கும் இன்சூரன்ஸ் காப்பீடு மூலம் பட்டுவாடா ஆகிவிடும்.
- குறுங்கடன்கள் தரும் நிறுவனங்கள் யாவுமே லாப நோக்கில் செயல்படுபவையே. இவற்றில் பெரும்பாலானவை ரிசா்வ் வங்கியில் பதிவானவையாகும். இவா்கள் பல நிறுவனங்கள் மூலம் பெருவாரியான நிதியைத் திரட்டுகின்றனா். மேலும் நிறுவனத்தின் மதிப்பீட்டைக் கொண்டு, ஐ.பி.ஓ. மற்றும் பங்குச்சந்தை வழியாகவும் நிதியினைப் பெறுகின்றனா். அதனைக் கடன்களாக ஏழைகளிடம் குவிக்கின்றனா்.
- கடனுக்கப் பணம் தரும் வங்கியினரும் வெளிநாட்டு முதலீட்டாா்களும் இந்தியாவில் இயங்கும் ரிசா்வ் வங்கி உரிமம் பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் அதிக அளவில் குறுங்கடன் நிதி வங்கிகளில் முதலீடு செய்கின்றனா். வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு இது பணமழை பொழியும் கற்பகத்தருவாக உள்ளது. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் தொழில், லாபங்களைக் கொட்டித் தரும் காமதேனுவாக இருக்கிறது.
- இன்னொருபுறம், வறுமையில் உள்ளவா்களுக்கு குறுங்கடன்கள் சுமை தாங்கிகளாகி, கடன் பளுவாகி, வறுமையை அதிகரிக்கிறது. செல்வந்தா்கள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினரைக் காட்டிலும் ஏழைப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான தொழில் புரிய வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம். குறுங்கடனின்றி மற்ற அனைத்து வீடு, சொத்து, காா், தொழில், தனிநபா் கடன்களுக்கு வட்டி விகிதம் 8 விழுக்காட்டில் இருந்து அதிகபட்சமாக 18 விழுக்காடு வரை மட்டுமே. மைக்ரோ பைனான்ஸ் கடனுக்கான வட்டி மட்டும் 26 விழுக்காடு தொடங்கி 36 விழுக்காடு வரை உள்ளது.
- குறுங்கடன்களால் ஏழைப் பெண்களிடம் பன்மடங்கு பெருகியுள்ளது பணப்புழக்கம். மகளிா் சுயசேவைக் குழுக்களின் மூலம் வழங்கப்படும் குறுங்கடன்கள் மிகப் பெரிய சமூக மாற்றத்தை கிராமங்களில் ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மை. அதனால் கிராமப்புற மகளிரின் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. அவா்களது வருமானத்தை ‘வட்டி’ என்கிற பெயரில் குறுங்கடன் நிதி வங்கிகள் எடுத்துக்கொண்டு விடுகின்றன.
- காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அளவில் இல்லாவிட்டாலும், குறுங்கடன்களுக்கான வட்டி, ஏனைய வங்கிக் கடன்களைப்போல 18% என்று வரையறுக்கப்பட்டால் மட்டும்தான், இலா பட்டின் கனவு நிறைவேறும். இல்லையென்றால், ஏழைப் பெண்களின் உழைப்பு குறுங்கடன் நிறுவனங்களால் சுரண்டப்படுமே தவிர, அவா்களின் வாழ்க்கையில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!
நன்றி: தினமணி (23 – 12 – 2022)