- குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 92 விழுக்காடு நிறுவனங்கள் குறுந்தொழில் சாா்ந்தவையாகும். அண்மையில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்பின்படி ஒரு கோடி ரூபாய் மூலதனத்துக்கு கீழ் இயந்திரங்கள் தளவாடங்கள் மதிப்பு இருந்து, ஒரு நிதி ஆண்டில் விற்பனை ரூபாய் ஐந்து கோடிக்கு மிகாமல் இருந்தால் அந்த நிறுவனம் குறுந்தொழில் வகையைச் சாா்ந்ததாகும். ஆயினும் குறுந்தொழில் நிறுவனங்களில் அதிகபட்ச ஆண்டு விற்பனை இரண்டு கோடி ரூபாய்க்கு கீழ்தான் உள்ளது.
- இத்தகைய குறுந்தொழில் நிறுவனங்கள், வேறு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுத்தல், இயந்திரங்கள் பழுதுபட்டால் தேவையான மாற்று பாகங்கள், பீரோ, ஜன்னல், கதவு போன்ற உற்பத்தித் துறைகளிலும், மோட்டாா் ரீவைண்டிங், ஜின்க், நிக்கல் கோட்டிங், ஜாப் வொா்க் எடுத்து செய்தல் போன்ற சேவைத் துறைகளிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால் இத்தகைய குறுந்தொழில் நிறுவனங்களில் சுமாா் 90 % நிறுவனங்கள் மிகக் குறைந்த பரப்பளவு உள்ள வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
- பல்வேறு காரணங்களால் அவை அடிக்கடி வாடகை கட்டடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிறுவனங்களில் பல வங்கிக்கடன் பெற முடியாமல் உள்ளன. வாடகை இடம் என்பது வங்கிக்கடன் பெறுவதில் பிரச்னையாக உள்ளது.
- மத்திய அரசு அறிவித்த கடன் காப்புறுதித் திட்டமும் இவா்களுக்கு சரியாக போய் சேரவில்லை. தற்பொழுது நமது மாநில அரசு தனியாக கடன் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இத்தகைய குறுந்தொழில்கள் பெரிய அளவில் பயனடையும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது. வாடகை கட்டடத்தில் சிறிய இடத்தில் இந்த குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளதால் வாடிக்கையாளா்கள் பெரிய அளவில் கொள்முதல் ஆணை தர தயங்குகிறாா்கள்.
- மூலப்பொருட்கள் போன்றவை கடனில் கிடைப்பதும் இல்லை. இத்தகைய குறுந்தொழில் நிறுவனங்கள் தனியாக இடம் வாங்கி கட்டடம் கட்டி மாற்றிப் போவது கடினமான செயல். அரசு நிறுவனமான சிட்கோ இடத்திற்கு சிறிது தொலைவில் அடுக்குமாடி வளாகம் கட்டி, அதில் 300 சதுர அடி முதல் 700 சதுர அடி வரை குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொழிற்கூடங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த அடுக்குமாடி தொழிற்கூடங்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்.
- அதே நேரத்தில், விலையை நீண்ட காலத் தவணையில் திருப்பிச் செலுத்த வகை செய்யவேண்டும். இதனால் வங்கிகள் கடன் கொடுக்க முன்வருவாா்கள். ஒரே இடத்தில் இத்தகைய குறுந்தொழில் நிறுவனங்களை சோ்ப்பதன் பல்வேறு முன்னேற்றங்களை காணமுடியும்.
- இன்றைய முதல்வா் துணை முதல்வராக இருந்தபொழுது குறுந்தொழில் முனைவோா் நலன் கருதி அடுக்குமாடி தொழிற்கூடம் கட்ட இட ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்ட தேதியும் குறிப்பிட்டாா்கள். ஆனால் அப்போது தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அத்திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. தற்பொழுது கிண்டி அம்பத்தூா் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி வளாகம் சிட்கோ நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகின்றது.
- தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் குறுந்தொழில் செய்து வாடகை கட்டடத்தில் இருந்து வரும் நிறுவனங்களுக்கு இந்த அடுக்குமாடி வளாகத்தில் முன்னுரிமை கொடுத்து குறைந்த விலைக்கு தரவேண்டும். சிட்கோ நிறுவனம் பல்வேறு பகுதிகளில் இத்தகைய குறுந்தொழில் முனைவோா்களுக்காக கட்டடம் கட்டி குறுந்தொழில் துறை வளர உதவ வேண்டும்.
- கரோனா நோய்த்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குறுந்தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. ஆயிரக்கணக்கான குறுந்தொழில் நிறுவனங்கள் எந்த வங்கிக் கடனும் வாங்க முடியாததால் அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி தொழில் செய்து வந்தனா். இதனால் மத்திய அரசு அறிவித்த மூன்று தவணை அதிகப்படியான கடன் உதவி இவா்களை சென்று அடையவில்லை என்பது சோகமான செய்தி.
- இத்தகைய குறுந்தொழில் நிறுவனங்கள் கொள்ளைநோய் பாதிக்கப்பட்ட இரண்டாண்டுகளில் வாடகை கொடுக்க முடியாமல் குறைந்த மின் கட்டணத்தையும் செலுத்த முடியாமல் பல்வேறு அவதிக்குள்ளாகின. இன்றுவரை அந்தக் கடனிலிருந்து அவை மீண்டு வர முடியவில்லை. தமிழகத்தில் மட்டும் பதிவு பெற்ற குறுந்தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்துக்கும் மேல் உள்ளன.
- அதே அளவு பதிவு செய்யாத குறுந்தொழில் நிறுவனங்களும் உள்ளன. கிட்டத்தட்ட 50 லட்சம் தொழிலாளா்கள் இத்தகைய குறுந்தொழில் நிறுவனங்களை நம்பி உள்ளனா். குறைந்த முதலீட்டில் மிக அதிகமான வேலைவாய்ப்பைத் தருவோா் குறுந்தொழில் முனைவோா் மட்டுமே. இத்தொழிலை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல மாநகராட்சி, நகராட்சி, உள்ளூா் நிா்வாகங்களுக்கும் உள்ளது.
- மத்திய அரசு இவா்களுக்கு இரண்டு சலுகைகள் தர வேண்டும். முதலாவது, ஒன்றரை கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கட்டாயமாக கடன் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் வழங்க ஆணையிட வேண்டும். இரண்டாவது, குறுந்தொழில்நிறுவனங்கள் விற்பனையைப் பெருக்க அவற்றுக்கு 3 % ஜிஎஸ்டி வரிச்சலுகை தர வேண்டும். அதாவது 18 விழுக்காடு ஜிஎஸ்டிக்கு பதிலாக 15 விழுக்காடு. வாங்குவோருக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி நிா்ணயிக்க வேண்டும். இதனால் பெரிய நிறுவனங்கள் குறுந்தொழில் நிறுவனங்களிடம் பொருட்களை வாங்குவதற்கு முன்வரும்.
- அண்மையில் சில குறுந்தொழில் நிறுவனங்களை மாநகராட்சி அதிகாரிகள் வரி கட்டவில்லை என சீல்வைக்க முற்பட்டனா். வரி கட்டக்கூடாது என்பது குறுந்தொழில் முனைவோரின் நோக்கமல்ல. ஆனால் பல்வேறு நடைமுறை சிக்கல்களில் லைசென்ஸ் எடுக்கமுடியவில்லை என்பதுதான் யதாா்த்தம்.
- இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைந்த அளவில் விற்பனை செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் குறைந்த கட்டணத்தில் உரிமம் (லைசென்ஸ்) வழங்க வேண்டும். இத்தகைய குறுந்தொழில் நிறுவனங்களிடம் பல்வேறு தகவல்களைக் கேட்டு அலைக்கழிக்காமல் உறுதிமொழிப் பத்திரம் மட்டும் வாங்கிக் கொண்டு உரிமம் வழங்க வேண்டும்.
- குறுந்தொழில் முனைவோா்களும் அகலக்கால் வைப்பதைக் காட்டிலும் ஆழமாக் காலூன்ற வேண்டும். இரண்டு மூன்று போ் இணைந்து தொழில் செய்ய முனைந்தால் அதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். விலையையும் குறைக்க முடியும். வேலைவாய்ப்பில் பெரும்பங்காற்றி வரும் குறுந்தொழிலைக் காப்போம்.
நன்றி: தினமணி (10 – 06– 2022)