- தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில், மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைகளில் குறைக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்களை, புதிதாகப் பொறுப்பேற்ற திமுக ஆட்சியிலும் இதுவரை உருவாக்காதது மருத்துவர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது.
- மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்குக் குறைந்தபட்சத் தேவையாக இருக்க வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பற்றி தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) விதிமுறைகளை வகுத்துள்ளது.
- இந்த விதிமுறைகளைக் காரணம்காட்டி, 2019-ல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை 4D2 மூலமாக மருத்துவர் பணியிடங்கள் மறுசீரமைக்கப்பட்டன.
- ‘நான்-கிளினிக்கல்’ துறைகள் அனைத்திலும், ‘கிளினிக்கல்’ துறைகள் என அழைக்கப் படுவனவற்றில் காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டன.
- ஒரே நாள் இரவில், ஆசிரியர் பணியில் இருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அவர்கள் பணியாற்றிவந்த துறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- மருத்துவர்களின் நிலை குறித்து அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மருத்துவர் கவலை கொள்ளவில்லை.
அரசு பரிசீலிக்க வேண்டும்
- இந்தப் பணியிடங்கள் சீரமைப்பும் என்.எம்.சி. நிர்ணயித்த குறைந்தபட்ச விதிமுறைகளின் படி அமையவில்லை. உதாரணமாக, மதுரை மருத்துவக் கல்லூரி உளவியல் துறையில் 250 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 9 உதவிப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அங்கு பணியாற்றுவது 5 பேர் மட்டும்தான்.
- இப்படித்தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 மருத்துவக் கல்லூரிகளிலும் என்.எம்.சி நிர்ணயித்த குறைந்தபட்ச விதிகளின்படி இருந்தாக வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை நிரப்பப்படாமல் இருக்கின்றன.
- பணியில் இருந்த தகுதிவாய்ந்த மருத்துவர்களும் வெளியில் அனுப்பப்பட்டுவிட்டனர். இந்த அநீதியை எதிர்த்து, ஏறத்தாழ 150 அரசு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, 14.8.2019 அன்று வழிகாட்டும் நெறிமுறைகளைத் தீர்ப்பாகப் பெற்றும் அவர்களின் துயரங்கள் இன்னும் நீங்கவில்லை.
- அதாவது, நீதிமன்ற ஆணையை அரசு இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. உதாரணமாக, நான்கு முக்கியமான மருத்துவத் துறைகளில் மாநிலம் தழுவிய பணிமூப்பு வயதின் அடிப்படையில் மறுசீரமைப்பு நடத்தப்படவில்லை.
- தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் எதிர்பார்ப்பு.
- பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு மறு பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்ததை அவர்களது துறை சார்ந்த அனுபவமாகக் கருத்தில் கொண்டு, அவர்களின் பணிமூப்பில் சிக்கல்கள் எழாமல் பாதுகாக்க வேண்டும்.
- போதுமான மருத்துவர்கள் இன்றி மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிப்பது பெரும் சவாலாகவும் இருந்துவருகிறது. உதாரணமாக, கண் மருத்துவத் துறையில் புற நோயாளிகள், உள்நோயாளிகள் கவனிப்பு, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்குப் பாடம் நடத்துதல், தினசரி அறுவைச் சிகிச்சைப் பணிகள் ஆகியவை உள்ளன.
- இதனுடன் ROP screening, TN RAAB Survey மற்றும் CMCHIS குறித்து வாரந்தோறும் ஆய்வுக் கூட்டங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில், ஒரு மருத்துவர் மகப்பேறு விடுப்பிலோ மருத்துவ விடுப்பிலோ சென்றுவிட்டால், பணியிலிருந்தும் மற்ற மருத்துவர்கள் அவசரத்துக்குக் கூட விடுமுறை எடுக்க முடிவதில்லை.
- இதனால், மருத்துவர்கள் மிகுந்த சிரமத்தையும் மன அழுத்தத்தையும் எதிர் கொண்டு வருகின்றனர்.
- சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கே.எம்.சி. மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, அண்ணாநகர் புறநகர் அரசு மருத்துவமனை மற்றும் பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த பல் மருத்துவர் பணியிடங்களை அகற்றியதன் மூலம், பணியில் இருந்த மருத்துவர்கள் பாதிக்கப் பட்டதோடு, நோயாளிகளும்கூட அலைக்கழிக்கப்பட்டுவருகின்றனர்.
- ஆசிய அளவில் புகழ்பெற்ற சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மயக்கவியல் துறை மருத்துவர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அறுவைச் சிகிச்சை செய்வதற்கான காத்திருப்புப் பட்டியல் நீண்டு, நோயாளிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
- இதைப் போல, இந்த மருத்துவமனையில் எலும்புமுறிவு மருத்துவர்களின் பணியிடங்களும் குறைக்கப்பட்டுவிட்டன.
- இதனால், எலும்புப் பிரச்சினைகளுடன் வரும் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப் படுவது மாதக்கணக்கில் தாமதமாகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் தான் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
- இந்நிலையில், குறிப்பாக கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மருத்துவர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டதன் பாதிப்பு, பணியில் இருக்கும் மருத்துவர்களின் வேலைப் பளுவை அதிகரித்துள்ளது.
- ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ல் அரசு மருத்துவர்கள் ஊதியக் கோரிக்கைக்காகப் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்கள் வேண்டும் என்பது.
- தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய இந்தத் தருணத்தில், முந்தைய ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்களை மீண்டும் உருவாக்குவது குறித்துத் தற்போதைய அரசு பரிசீலிக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (17 – 03 – 2022)