TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமே தீர்வாகி விடுமா

March 6 , 2024 139 days 199 0
  • பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) உறுதிசெய்யும் சட்டத்தைக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மீண்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 100 கோடி டன்கள் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாட்டில், எம்எஸ்பியைச் சட்டபூர்வமாக்க முடியுமா? அதனால் யாருக்கு லாபம்?

எம்எஸ்பியின் வரலாறு:

  •  1965 முதல் கரீப் (மானாவாரிச் சாகுபடி), ரபி (குறுவைச் சாகுபடி) என இரண்டு பருவங்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் பயிர்களுக்கான ஆதார விலையை, விவசாயச் செலவுகள் - விலைகள் ஆணையத்தின் (CACP) பரிந்துரைப்படி மத்திய அரசு அறிவிக்கிறது.
  • தொடக்கத்தில் கோதுமை, நெல்லுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட எம்எஸ்பியானது, தற்போது 23 பயிர்களுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்றுரீதியாக, சாகுபடிச் செலவுகள், இடுபொருள்களின் விலைகள், பயிர்களின் உற்பத்தி-தேவை, உலகச் சந்தைகளில் பயிர்களின் விலையில் ஏற்படும் போக்கு போன்ற காரணிகளின் அடிப்படையில், எம்எஸ்பி தீர்மானிக்கப்படுகிறது.
  • பயிர்களின் உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்கு, விவசாயச் செலவுகள்-விலைகள் ஆணையமானது 9 வெவ்வேறு விலைக் காரணிகளை (A1, A2, A2 FL, B1, B2, C1, C2, C2*, C3) பயன்படுத்தினாலும், 2018 வரை எம்எஸ்பியானது A2 FL செலவுச் சூத்திரத்தின் (formula) அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. C2 செலவுச் சூத்திரத்தின்படி பயிர் சாகுபடிக்காக விவசாயிகளால் செய்யப்படும் அனைத்துச் செலவுகளும் எடுத்துக்கொள்ளப்படும்.
  • ஆனால் A2 செலவுக் கணக்கில், விவசாயி தனது கையிலிருந்து சாகுபடிக்குச் செலவிடும் செலவு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அதாவது, A2 FL செலவுச் சூத்திரத்தின்படி, பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குச் செய்யப்படும் முதலீடு, அதன் தேய்மானச் செலவு, பயிர்க் கடனுக்கான வட்டி போன்றவற்றைக் கணக்கில் கொள்வதில்லை. எனவே, C2 மற்றும் A2 FL செலவுகளுக்கு இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
  • A2 FL செலவின்படி செய்யப்படும் எம்எஸ்பி, விவசாயிகளுக்கு லாபமற்றதாக உள்ளதால், C2 செலவுக் கணக்கின்படி எம்எஸ்பியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக வலுப்பெற்றுவருகிறது. இதற்கிடையில், எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான ‘விவசாயிகள் ஆணையம்’ (2006), பயிர்களுக்கான எம்எஸ்பியை உற்பத்திச் செலவைவிட, 50% அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
  • விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது 2018-19 பட்ஜெட்டில், பயிர்களின் A2 FL உற்பத்திச் செலவுக்கு மேல் 50% கூடுதலாக எம்எஸ்பி நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தது. கரீப் பருவம் 2018 முதல் இம்முறையில் பயிர்களுக்கான எம்எஸ்பி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • அதன் பிறகும் பயிர் சாகுபடியின் வருமானம் போதுமானதாக இல்லை என்கின்றன விவசாய அமைப்புகள். விவசாயிகள் எம்எஸ்பியைப் பெறுவதற்குப் பயிர்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், கொள்முதல் கொள்கைகளில் பல சிக்கல்கள் உள்ளதால், பெரும்பாலான விவசாயிகளால் எம்எஸ்பியைப் பெற முடியாமல் போகிறது.

கொள்முதல் முரண்பாடுகள்:

  •  நெல், கோதுமை தவிர, மற்ற பயிர்களின் கொள்முதல் பெரும்பாலான ஆண்டுகளில் நடப்பதில்லை. 1970-களிலிருந்து நெல், கோதுமைப் பயிர்களில் சிறப்பான கொள்முதல் நடந்தாலும், அனைத்து மாநில விவசாயிகளுக்கும் பயன் கிடைப்பதில்லை.
  • உதாரணமாக, 2021-22 காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் மொத்த அளவில், 22% பஞ்சாபில் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 31% கோதுமை பஞ்சாபில் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொள்முதலுக்காகச் செலவிடப்பட்ட மொத்தப் பணத்தில் சுமார் 52% பஞ்சாப் மாநிலத்துக்கு மட்டும் சென்றுள்ளது.
  • உற்பத்தியுடன் தொடர்புபடுத்தப்படாமல் பல்வேறு மாநிலங்களில் பயிர் கொள்முதல் பல காலமாகச் செய்யப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் பயிர்களை எம்எஸ்பிக்கும் கீழே தனியார் வியாபாரிகளிடம் கட்டாயமாக விற்றுவருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் உற்பத்திப் பங்குடன் இணைத்து, பயிர்களைக் கொள்முதல் செய்தால், பெரும்பாலான சிக்கல்கள் தானாகவே மறைந்துவிடும்.

என்ன செய்யலாம்?

  • எல்லா விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் எம்எஸ்பி உறுதிச்சட்டம் இயற்றப்பட்டால், அது கடுமையான பொருளாதார விளைவுகளை உருவாக்கும் எனச் சில பொருளாதார அறிஞர்கள் கூறிவருகிறார்கள். எம்எஸ்பிக்குக் கீழ் உள்ள 23 பயிர்களைக் கட்டாயக் கொள்முதல் செய்ய, தற்போதைய உற்பத்தியின்படி ஏறக்குறைய ரூ.17 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • எம்எஸ்பி சட்டபூர்வமாக்கப்பட்டால், தோட்டப் பயிர்களைச் (பழங்கள் மற்றும் காய்கறிகள்) சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழும். அவற்றின் தற்போதைய உற்பத்தி சுமார் 3,300 லட்சம் டன்கள். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களின் பால் பொருள்களுக்கு எம்எஸ்பி கோரலாம்.
  • இதனால், வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்வதற்குத் தேவைப்படும் செலவு கணிசமாக அதிகரிக்கக்கூடும். சிறு, குறு விவசாயிகளிடம் சந்தைப்படுத்தக்கூடிய (marketable surplus) பயிர்களின் அளவு குறைவாக உள்ள நிலையில், எம்எஸ்பி உறுதிச்சட்டம் இயற்றப்பட்டால், அது பணக்கார விவசாயிகளுக்கே லாபமாக இருக்கும்.
  • சந்தையில் இடைத்தரகர்கள், தனியார் வர்த்தகர்களின் தொடர்ச்சியான சுரண்டலே எம்எஸ்பியைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குக் காரணம். பெரும்பாலான நேரம், விவசாயிகள் விளைபொருள்களுக்கு எம்எஸ்பி விலையில் 70% கூடத் தனியார் வியாபாரிகளிடமிருந்து பெற முடியவில்லை.
  • பெரும்பாலான மாநிலங்களில் பயிர்களின் சந்தை விலை எம்எஸ்பிக்குக் கீழே நிலவுவதாக விவசாயச் செலவுகள் - விலை ஆணையம் வெளியிடும் தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன. எனவே, தனியார் வியாபாரிகள், தனியார் முகவர்கள் எம்எஸ்பிக்குக் கீழ் எந்தப் பயிரையும் கொள்முதல் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய சட்டம் இயற்றப்பட்டால் பிரச்சினைகள் எழாது.

விவசாயிகள் பலன் பெற...

  • 2018-19இல் வெளியிடப்பட்டுள்ள இந்திய விவசாயிகளின் நிலை மதிப்பீட்டு ஆய்வின்படி, எம்எஸ்பி அடிப்படையிலான கொள்முதல் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக சிறு, குறு விவசாயிகளிடம் குறைவு. இதைப் பயன்படுத்தி, தனியார் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் பயிர்களுக்குக் குறைந்த விலை நிர்ணயம் செய்து சுரண்டிவருகின்றனர். இதைத் தடுக்க, ‘சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் எம்எஸ்பியில் விற்கும் உரிமை சட்ட’த்தைக் கொண்டுவரலாம்.
  • ‘விவசாயிகளின் நிலை மதிப்பீடு 2018-19’ தரவுகளின்படி, பெரும்பாலான பயிர்களில், 5-10% விவசாயக் குடும்பங்கள் மட்டுமே தங்கள் பயிர்களை அரசுக் கொள்முதல் நிறுவனத்துக்கு விற்றுள்ளன. இதுபோன்ற கொள்முதல் நடைபெற்றால் விவசாயிகள் எம்எஸ்பியைப் பெற முடியாது.
  • இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) பங்கை மறுசீரமைப்பதற்காக சாந்தகுமார் தலைமையில் (2015) அமைக்கப்பட்ட குழுவானது நெல், கோதுமை கொள்முதலுக்குக் கொடுக்கப்படும் தேவையற்ற முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், கொள்முதல் திட்டத்தை மற்ற பயிர்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் பரிந்துரைத்துள்ளது.
  • இதனைக் கருத்தில் கொண்டு, பயிர்களின் உற்பத்தியில் 20-25% கொள்முதல் செய்தால், சந்தைக்கு அதிகப்படியாக வரும் பயிர்களின் வரத்து குறைக்கப்பட்டு, சந்தை விலை உயரும். இது அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடும்.
  • எம்எஸ்பி சட்டபூர்வமாக்கப்பட்டாலும், அது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும் எனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்குத் தற்போது பின்பற்றப்படும் முறையானது உண்மையான தரவுகளைக் கொண்டு செய்யப்படுவதில்லை.
  • நிகழாண்டின் உற்பத்திச் செலவின் அடிப்படையில் எம்எஸ்பியை நிர்ணயிப்பதற்கு முயற்சிகளை எடுப்பதோடு, அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தக்கூடிய கொள்முதல் கொள்கைகளை உருவாக்கினால், விவசாயிகள் எம்எஸ்பி உறுதிச்சட்டம் கேட்க மாட்டார்கள். அதேவேளையில், அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடிய, எம்எஸ்பி உறுதிச்சட்டம் கொண்டு வரப்பட்டால், உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) நம்மை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்