- அறுவடைக்குப் பிறகு வைக்கோல் கூளங்களை வயலிலேயே எரிக்கும் வழக்கம் தற்போது விவசாயிகளால் பின்பற்றப்பட்டுவருகிறது.
- 1980-க்கு முன்னால், விவசாயிகள் கைகளாலேயே கதிரறுத்தபோது எஞ்சிய அடித்தட்டைகளை அங்கேயே மக்கும்வகையில் விட்டுவிடுவார்கள். தற்போது கூளங்களை எரிக்கும் வழக்கமானது பசுமைப் புரட்சியின் அறிமுகம், ஒருங்கிணைந்த அறுவடைத் தொழில்நுட்பத்தின்படி இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்தல் ஆகியவற்றுக்குப் பின்னரே உருவாகியிருக்க வேண்டும்.
- பசுமைப் புரட்சி நெல், கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கியதோடு, அறுவடைக்குப் பிறகான வைக்கோல் கூளங்களையும் பெருக்கியது. எனினும், இயந்திரங்களைச் சார்ந்திருக்கும் பிரபலமான ஒருங்கிணைந்த அறுவடைத் தொழில்நுட்பமானது செயல்திறன் மிக்கதாக இல்லை.
- எனவே, வைக்கோல் கூளங்களை எரிக்கும் வழக்கமானது செலவு குறைந்ததாகவும் எளிதான தீர்வாகவும் விவசாயிகளுக்குத் தோன்றுகிறது. அறுவடை செய்த 20-25 நாட்களுக்குள் அடுத்த நடவுப் பணிகளைத் தொடங்குவதற்கு வாய்ப்பாகவும் அது இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்
- வைக்கோல் கூளங்களை எரிக்கும் வழக்கம் பெரிதும் வட இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது.
- நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்களை அது வளிமண்டலத்தோடு கலக்கச் செய்கிறது. இந்த வழக்கமானது, சமீபத்திய ஆண்டுகளில் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதியிலும் அதையொட்டி அமைந்துள்ள டெல்லி உள்ளிட்ட அருகமை மாநிலங்களிலும் புகைமூட்டங்களை உருவாக்கிவருகிறது.
- இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் காற்று மாசால் பாதிக்கப்படுகிறார்கள். எரிசக்தி மற்றும் வள ஆதாரங்கள் நிறுவனத்தின் (டிஇஆர்இ) அறிக்கையின்படி, 2019-ல் புது டெல்லியிலும் வடஇந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளிலும் காணப்பட்ட காற்று மாசானது உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான அளவைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமாக உள்ளது.
- இவ்வாறு வைக்கோல் கூளங்களை எரிக்கும் வழக்கம் மண் வளத்துக்கும் தீங்குகளை விளைவிக்கிறது. இயற்கையான உரச் சத்துகளை அழிப்பதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் குறையச் செய்கிறது.
- பெருந்தொற்றுக் காலத்தில் வைக்கோலை எரிக்கும் வழக்கம் நுரையீரலைப் பலவீனப்படுத்தி, மக்கள் நோய்களால் எளிதில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடக்கூடும். தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுவருபவர்களையும் அது பாதிக்கக்கூடும்.
- 2013-ல் பஞ்சாப் மாநில அரசால் வயலில் வைக்கோலை எரிக்கும் வழக்கம் தடைசெய்யப்பட்டது.
- 2015-ல் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வைக்கோலை எரிக்கும் வழக்கத்துக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்ததோடு விவசாயிகளுக்கு வைக்கோல் கூளங்களைக் கத்தரித்து மண்ணுக்குள் செலுத்தும் இயந்திரம், அவற்றைச் சேகரித்து அகற்றும் இயந்திரம் ஆகியவை கிடைக்கச் செய்வதில் உதவுமாறும் அரசுக்கு உத்தரவிட்டது.
- வயலில் வைக்கோல் கூளங்களை எரிப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-ன் கீழும், காற்று (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ன் படியும் குற்றமாகும்.
- சமீபத்தில், ஆதித்யா தூபே எதிர் ஒன்றிய அரசு வழக்கில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வைக்கோல் கூளங்களை எரிக்கும் வழக்கத்தைத் தடைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவற்றைக் கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி.லோகூரை ஒரு நபர் கமிட்டியாக உச்ச நீதிமன்றம் நியமித்தது.
- பஞ்சாப், ஹரியானாவில் வைக்கோல் கூளங்களை எரிக்கும் வழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து ஹரியானா மாநில அரசு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
- குறிப்பிட்ட ஒரு பகுதியில் கூளங்கள் எரிக்கப்படுவதைக் கண்டறியவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அதைத் தெரிவிக்கவும் செயலிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவையும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
- நீதிபதி மதன் பி.லோகூர் ஆணையத்துக்குப் பதிலாக, காற்றின் தரத்தைப் பாதுகாப்பதற்கான நிரந்தர ஆணையம் ஒன்றை நிறுவும் அவசரச் சட்டத்தையும் தற்போது ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது.
புதிய புரட்சி
- தற்போதைய உடனடித் தேவை வைக்கோல் கூளங்களை உடனடியாக அகற்றுவதற்கான ஒரு திட்டம்தான்.
- தற்போது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயல்திட்டமானது, வைக்கோல்களைக் கட்டும் இயந்திரங்களோடு கூளங்களைக் கத்தரித்து மண்ணுக்குள் செலுத்தும் இயந்திரம், அவற்றைச் சேகரித்து அகற்றும் இயந்திரம், வைக்கோல்களைத் துண்டு துண்டுகளாக்கும் இயந்திரம் போன்றவற்றையும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் அதிக அளவிலான வாடகை மையங்களைத் தொடங்குவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
- சோளத்துக்கும் கோதுமைக்குமான சர்வதேச மேம்பாட்டு மையத்தின் ஆய்வு ஒன்றின்படி, அடித்தட்டைகளை வெட்டி அகற்றும் இத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்துவதால், வேளாண் உற்பத்தியை 10% முதல் 15% வரையில் அதிகரிக்க முடியும். மேலும் விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலிச் செலவுகளையும் குறைக்க முடியும். மண்ணையும் அதன் வளம் கெடாமல் பராமரிக்க முடியும்.
- இந்த ஆண்டு, ‘பூஸா டிகம்போஸர்’ என்ற புதுமையான வழிமுறை ஒன்றையும் மத்திய அரசு முயன்றுபார்க்கிறது.
- அடித்தட்டைகளை எளிதில் மக்கச்செய்யும் இந்த வழிமுறையானது, பூஸாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்சைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்கு மாத்திரைகளைக் கொண்ட இந்தப் பூஸா சிதைமாற்ற ஊக்கித் தொகுப்பானது, வைக்கோல்களை வழக்கத்தைக் காட்டிலும் மிகவும் வேகமாக மக்கச் செய்கிறது.
- வைக்கோல்களை வெட்டித் துண்டுகளாக்கி அவற்றின் மீது பூஞ்சைகளைக் கொண்ட திரவத்தைத் தெளித்து அவற்றை மண்ணோடு கலப்பதால் அவை எளிதில் மக்கிவிடும்.
- இதுபோன்ற வழிமுறை வெற்றிகரமாக அமைந்துவிட்டால், வேளாண்மையில் இது ஒரு புதிய புரட்சியாக இருக்கக்கூடும்.
- காற்று மாசைக் குறைப்பதோடு மண் வளத்தை அதிகரிக்கச் செய்யும் சாத்தியமும் இந்த வழிமுறைக்கு இருக்கிறது.
நன்றி : இந்து தமிழ் திசை (09-11-2020)