TNPSC Thervupettagam

குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஓர் பார்வை

January 4 , 2024 316 days 264 0
  • குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு, திருத்தங்களுடன் புதிய மசோதாக்களை மக்களவையில் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மசோதாக்கள் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
  • பழைய காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றும் வகையிலும், நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலும், மத்திய அரசு மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை உருவாக்கியுள்ளது. அதன்படி, "பாரதிய நியாய சம்ஹிதா', பாரதிய நாகரிக் சுரக்ஷô சம்ஹிதா', பாரதிய சாட்சிய அதினியம்' ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் 12-ஆம் தேதி அறிமுகம் செய்தார். அம்மசோதாக்களின் மீதான விவாதம் மக்களவையில் நடந்தது.
  • இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடும்போது, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இதுவரை 158 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் புதிய குற்றவியல் சட்டத்தின் ஒவ்வொரு புள்ளி, கமாவையும் தான் சரிபார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
  • மேலும் அவர், புதிய சட்டத்தின் அனைத்து அம்சங்களும் விரிவாக அலசி ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும், அவை நம் அரசியல் அமைப்பின் கருத்துகளோடு சரியாகப் பொருந்திப் போகின்றன என்றும் குறிப்பிட்டார்.
  • இந்த மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் காலனித்துவ இந்திய தண்டனைச் சட்டத்திற்கு, சரியான மாற்றாக அமையும் என்றும், இந்தியத்தன்மை அரசியலமைப்பு, மக்களின் நல்வாழ்வை இவை உறுதி செய்யும் எனவும் அவர் கூறினார்.
  • மக்களவை, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும். ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவையில் அதிக அளவில் இருந்த நிலையில், இம்மசோதாக்கள் விவாதிக்கப்பட்டிருப்பது, எவ்வகையில்  நியாயமாகும் என்கிற கேள்வி எழுகிறது.
  • ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் இம்மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை அண்மையில் வழங்கியது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில்தான், திருத்தப்பட்ட மசோதா உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
  • மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடுகிறபோது, தற்போதுள்ள இந்திய குற்றவியல் சட்டங்களின் நோக்கம், குற்றமிழைத்தவரைத் தண்டிப்பதுதானே தவிர, அவருக்கு நியாயம் வழங்குவது அல்ல. புதிய மசோதாக்கள் சட்டமாகும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். தற்போதைய சட்டங்களை ஆங்கிலேயர்கள், இந்தியாவைத் தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் நோக்கத்தில் இயற்றினர். ஆனால், புதிய சட்டங்களைப் பொறுத்தவரை, அவை தண்டனை வழங்குவதை விட, நியாயம் வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
  • அவையில் அமளியில் ஈடுபட்ட சி. தாமஸ், .எம். ஆதி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
  • நியாயத்தைப் பெறுவதற்காக புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வருவதாகக் கூறும் அரசு, எதிர்க்கட்சிகளின் குரலை ஏன் நசுக்கப் பார்க்கிறது என்றும், இதுதான் நியாயத்தைப் பெற்றுத் தரும் முறையா என்றும் பலரும் கேள்வி எழுப்புவதைப் புறக்கணிக்க முடியாது.
  • இந்த மசோதாக்கள், குற்றவியல் சட்டத்தை மறுகாலனித்துவப்படுத்துவதற்கு மாற்றாக, காலனித்துவ தத்துவத்தையே நிலைநிறுத்துகின்றன. இதன் மூலம், மக்களை அதிகபட்சமாகக் கட்டுப்படுத்துவதே அரசின் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களைக் குறிப்பிடும்  சொல்லாட்சிகள் பற்றி கவலைப்பட அதிகம் இருக்கிறது.
  • குற்றவியல் சட்டம், நீதிக்கான மாறுபட்ட பார்வை இவற்றைக் காண்பது என்பது கடினம். விரிவான மிகை குற்றவியல், பரந்த காவல்துறை அதிகாரங்கள் மூலம், நியாயமற்ற முறையில், அரசு தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் சூழலை நோக்கியே இவை செல்லக்கூடும். "பாரதிய நாகரிக் சுரக்ஷô சம்ஹிதா' வில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சம், சிவில் உரிமைகளில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதைப்போல, காவல்துறையின் அதிகாரம் பெருமளவில் விரிவடைவதன் மூலம், மனித உரிமைகள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகும்.
  • பொது குற்றவியல் சட்டத்தின்படி, காவல்துறையின் அதிகபட்ச வரம்பு 15 நாட்களில் இருந்து 60 நாட்கள் அல்லது 90 நாட்கள் (குற்றத்தின் தன்மையைப் பொறுத்து) விரிவுபடுகிறது. தற்போதைய சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்கு மட்டுமே, காவலில் இருக்க வேண்டியிருக்கும். ஆனால், புதிய சட்டம் காவல்துறையில் அத்துமீறல்களை ஏற்படுத்தி விடக்கூடும். ஆகவே, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.   
  • "பாரதிய நியாய சம்ஹிதா'வில் முன்மொழியப்பட்ட தெளிவற்ற பின்னணியில், குற்றங்கள் மிகைப்படுத்துவதற்குரிய சூழல் உருவாக்கி விடும். -எடுத்துக்காட்டாக பிஎன்எஸ் 1-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு போன்ற விதிகள் குறித்து அச்சமும், கேள்வியும் எழுகின்றன. இது, தற்போதுள்ள இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி),  இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றை மாற்றி, புதிய சட்டங்களை இயற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.
  •  இதற்கு முன்பு மசோதாக்கள் வந்தபோது கும்பலாகச் சேர்ந்து கொலை செய்வது மற்றும் வெறுப்பு காரணமான குற்றங்களுக்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜாதி மற்றும் சமூகம் போன்றவற்றின் அடிப்படையில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால், கூட்டாகக் கொலை செய்யப்பட்டால் குற்றம் இழைத்த குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், ஏழு ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டிக்கப்படுவார்கள் என்று அவை குறிப்பிட்டன. தற்போது அந்த ஏழு ஆண்டு என்பது ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக இந்திய நீதித்துறை சட்டத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னதாக, இவற்றுக்கு இன்றியமையாத சட்டங்கள் இருந்தன. இதில் ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், பொருளாதார பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தலும்கூட, பயங்கரவாத நடவடிக்கையின் கீழ் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
  • கள்ள நோட்டுகளைத் தயாரித்தல், அவற்றைக் கடத்துதல், புழக்கத்தில் விடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம், நிதிமேலாண்மையை சீர்குலைக்கும் செயல்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வரும். மேலும், இந்தியாவில் பாதுகாப்புக்காகவோ, அரசின் தேவைகளுக்காகவோ வைத்திருந்த சொத்துகளை அழிப்பதும் பயங்கரவாத செயலாகும் என்று கூறுகிறது. இப்போது இந்தியாவில் அரசை மிரட்டுவதற்காக ஒரு நபரை பணயக் கைதியாக காவலில் வைப்பது கூட பயங்கரவாதச் செயலாகும்.
  • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களால் செய்யப்படும் வாகனத்திருட்டு, மற்றும் பிக்பாக்கெட் போன்ற சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்க தற்போது வழி செய்யப்பட்டது. ஆனால், தற்போதுள்ள மசோதாவில் பாதுகாப்பு, அச்சம் போன்ற சொற்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய சிவில் பாதுகாப்புச் சட்டம், சமூக சேவையை தண்டனையாக விரிப்பது குறித்து வரையறுக்கிறது.
  • சமூக சேவை செய்ய உத்தரவிடுவது என்பது சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில், ஒரு குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனையாக இருக்கும் என்றும், அதற்காக குற்றவாளிக்கு எந்த ஊதியமும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறுகிறது.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாக்களில் சிறுதிருட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வேறு பல குற்றங்களுக்கு சமூக சேவை செய்ய உத்தரவிடுவது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில், இது வரையறை செய்யப்படவில்லை.
  • திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏழைகளையும் விளிம்பு நிலை மக்களையும் பாதுகாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கிறார். நாடாளுமன்றம் எதற்காக என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்காக என்பதையும் அரசு உணர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய கருத்துகளையும் செவிகொடுத்து கேட்க வேண்டும்.
  • நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரே நேரத்தில் 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தபால் மசோதா, யாருடைய கடிதத்தையும் பறித்து, பிரித்துப் படிக்கும் அதிகாரத்தைத் தருகிறது. ஆளும் மத்திய அரசு, திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்தையும்  கேட்க வேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்புமாகும்.

நன்றி: தினமணி (04 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்