TNPSC Thervupettagam

குல்னிசா இமின் - இப்படியும் ஒரு கவிஞர்!

January 26 , 2025 2 days 45 0

குல்னிசா இமின் - இப்படியும் ஒரு கவிஞர்!

  • உலகின் ‘சூப்பர் பவர்’ நாடுகளில் ஒன்று. 2017 முதல் 2022 வரையுள்ள ஐந்தாண்டுக் காலத்தை ஆய்வு செய்ததில், தன் குடிமக்களைச் சிறையிலடைப்பதில் -  ஒரு லட்சம் பேருக்கு 1,086 குடிமக்களைச் சிறையிலடைத்த, ‘மோசமான பெருமை’ கொண்டிருந்த எல் சால்வடாரின் சாதனையைக் குள்ளமாக்கும் வகையில் -  இந்த ‘சூப்பர் பவர்’ நாட்டில், ஒரு லட்சம் குடிமக்களில் 3,814 பேரை சிறைகளில் தள்ளிவைத்திருக்கும் கருஞ்சிறப்புக் கொண்டிருக்கும் நாடு இது.
  • இந்த வல்லரசின் மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதமாக இருந்தபோதிலும், அந்த நாட்டின் ஒட்டுமொத்த சிறைவாசிகள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், அந்த வல்லரசு நாட்டின் ஒரு குறிப்பிட்ட இன மக்களே!
  • உலகிலேயே மிக அதிக அளவில் – பிரான்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையைப் போல நான்கு மடங்கு -  சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் அந்த வல்லரசு நாட்டின் ஒரு குறிப்பிட்ட இன மக்களே!
  • முன் குறிப்பிட்ட ஐந்தாண்டுக் காலத்தில் (2017 - 2022) முறையான சிறைத் தண்டனை பெற்றிருப்பவர்களில் எண்பத்தேழு சதவிகிதம் பேருக்குச் சராசரி தண்டனைக் காலம் 9.24 ஆண்டுகள்; சாதாரணமாக, குறைந்த அளவு தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே. முறைப்படி அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் (Formal Prisons) போக, ஒரு நூதன வழியிலும், அந்த குறிப்பிட்ட இன மக்களிடையே பரவியிருப்பதாக ஆளுங் கட்சியினரால் கருதப்படும் "சித்தாந்த வைரஸ்களை" அகற்றுவதற்காக - தொழிற் பயிற்சி அல்லது மறுகல்வி முகாம்கள் (Vocational / Re-learning Camps)  என்ற பெயரில் - ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான இந்த இன மக்கள் மந்தைகளாகத் திரட்டி வைக்கப்பட்டுள்ளனர். ‘சிறை’ என்ற பெயரில்லை; சிறையைவிடக் ‘கொடுநிலை’ இம்முகாம்கள்!
  • "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற போர்வையில், தன் நாட்டிலுள்ள இந்த இன மக்கள் மீது 2017 ஆம் ஆண்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட  மிருகத்தனமான அடக்குமுறைகளின் போது, நூறாயிரக்கணக்கான சட்டத்திற்கு புறம்பான கைதுகள் நிகழ்ந்து, தண்டனைகளும் விதிக்கப்பட்டன. கைதுகள், தண்டனைகள் மிகப் பெரும்பாலும், ‘பயங்கரவாதம் தொடர்பான’ குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளன என்பது குறிக்க உரிய தகவல்.
  • மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த நாடு(ம்) ‘சட்டத்தால் ஆளப்படும் நாடு’ (Rule of Law) என்று சொல்லப்படுகிறது. ‘சட்டம்’ இருக்கிறது; ஆனால், சட்டம் என்பது கட்சி விரும்புவது மட்டுமே. 'சட்டம்' இருக்கிறது என்பதால் நீதி இருக்கிறது என்று அர்த்தமல்ல. முன் குறிப்பிடப்பட்டிருக்கும் தண்டனைகள், சிறைத் தண்டனைகள் பற்றிய புள்ளி விவரங்கள் சட்டப்படியா? நீதியின் அடிப்படையிலா? என்றெல்லாம் பார்க்க இங்கே வாய்ப்பேயில்லை. அவை யாவும் கட்சியின் விருப்பம், கட்சியின் விருப்பம் மட்டுமே என்பதே நிதர்சனம்.
  • நாடு, 1 அக்டோபர் 1949 முதல் ‘மக்கள் குடியரசு’ என்றே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே கட்சிதான்! (‘மக்கள் குடியரசில்’ வேறு கட்சிகள் குடியேறவோ, கொடியேற்றவோ அனுமதியே கிடையாது.) இருக்கும் கட்சியின் பொதுச்செயலாளரே நாட்டின் அதிபர்!
  • மனித நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்று எனக் கருதப்படும் நாடு; உலகின் மக்கள்தொகையில் (2023) இரண்டாவது; உலக நாடுகளில் நிலப்பரப்பு அடிப்படையில் மூன்றாவது பெரிய நாடு. 14 நாடுகளுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ள நாடான ‘சீன மக்கள் குடியரசில்’தான் (Peoples Republic of China- PRC) மேற்சொல்லப்பட்ட அவலங்கள் யாவும்.
  • சீன அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 35-ன்படி, ‘கருத்துச் சுதந்திரம் உண்டு’ என்று (ஒரு கனவை!) குறிப்பிடுகிறது. ஆனால், கருத்துச் சுதந்திரம் என்பது  ‘தேசியப் பொதுநலன்’ மற்றும் ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சி’யின் (CCP) விருப்பங்களுக்குக் கீழ்ப்படிதலுள்ளவையே. ‘அரசியலமைப்புச் சட்டத்திலுள்ளது, ஆகவே ‘சட்டப்படியான அடிப்படைகொண்டது’ என்று எந்த உரிமையையும், விஷயத்தையும் நீதிமன்றங்களின் முன் எடுத்துரைத்து வாதிட யாருக்கும் உரிமையில்லை என்பது ‘சீன விநோதம்’!
  • ‘’அப்ப, ‘அரசியல் அமைப்புச் சட்டம்’ (Constitution) எதற்கு’’? என்று கேட்கத் தோன்றுமே! தோன்றக் கூடாது... இது சீனா! நீதித்துறை, நீதிமன்றங்கள் சுதந்திரமான அமைப்பா? அப்படியெல்லாம் நீதியை (சுதந்திரமாக, புறம்போக்காக) அலைய விடக்கூடாதல்லவா?... இது சீனா! கருத்து சுதந்திரம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் CCP யின் கொள்கைகள், குறிப்புகள், தீர்மானங்களைவிட்டு வழுவாமல் வழங்கப்படும் நீதி... இது சீனா! பற்பல துறைகளில், விதவிதமான நிபந்தனைகளோடு, - அயிரை மீனும் தப்பிவிடாத வலைப்பின்னலாக - கொக்கிலுங் கூர்ந்த தணிக்கைகளைக் கடந்து (Vigilant Censorship) கருத்துச் சுதந்திரம் (தாராளமாகப்) பாயலாம்! ஒரு துறை வலை தப்பினாலும் இன்னொரு துறை வலையில் சிக்கும், பரமபதப் பயணம்தான் பாவம், கருத்துச் சுதந்திரத்திற்கு. அதிலும் மின்னஞ்சல், அனுமதிக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளப் (வீ சாட்) பதிவுகள், பதிவிறக்கம், பகிர்வுகளுக்குப் படு கடுமையான கண்காணிப்பு, தணிக்கை, விசாரணைகள்.  
  • அந்நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஒரு தன்னாட்சிப் பகுதியான சிஞ்சியாங் அல்லது ஜின்ஜியாங் (Xinjiang) என்பது  சீனாவின் மாகாணங்களில் பரப்பளவில் மிகப் பெரியது. அங்கு பெரும்பான்மையான இனத்தவராக வாழும் இஸ்லாமியர்களான உய்கர் (Uyghur) இன மக்களைத்தான், ‘உலகில் மிக அதிகமாகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு மக்கள் இனம்’ என்ற அவலப்பெயர் பெற்றிருக்கும் நிலையில் வைத்திருக்கிறது வல்லரசான சீனா.

ஜின்ஜியாங் (Xinjiang)

  • பழமையான வரலாறு கொண்ட சீனாவின் 2,500 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளின்படி, ஜின்ஜியாங் பகுதி முற்காலங்களில் பல்வேறு காலகட்டங்களில், பல இன அரசர்களால் ஆளப்பட்டு, அவர்களது கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்துள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இப்பகுதி முழுதும் அல்லது இதன் ஒருசில பகுதிகள் பிற அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. 95 சதவீதம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசத்தின் மீது 1949 இல் சீனா படையெடுத்து ஆக்கிரமித்துக் கொண்டது. அப்போது முதல் ஜின்ஜியாங், சீன மக்கள் குடியரசின் ஒருபகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டுவிட்டது.
  • இந்தப் பிராந்தியத்திற்கு 1955 இல் ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசம் எனப் பெயர் முன்மொழியப்பட்டபோது, ஜின்ஜியாங்கின் முதல் தலைவரான சயிஃபுதின் அசிசி என்பவர், “தன்னாட்சி என்பது மலைகள் மற்றும் ஆறுகளுக்கு வழங்கப்படுவதில்லை. அது, அக்குறிப்பிட்ட குடியுரிமை கொண்டவர்களுக்கே வழங்கப்படுகிறது. எனவே, ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம் என பெயர் மாற்றப்பட வேண்டும்” என வலுவாக எடுத்துரைத்த எதிர்க்கருத்தை, மாவோ (மாசேதுங்) ஏற்று, உய்குர் இனக் குழுக்களை அடையாளப்படுத்தும் வகையில் அதன் நிர்வாக மண்டலத்திற்கு, ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம் (XUAR) எனப் பெயரிட்டார். திபெத்தைப் போலவே, இப்பகுதியும் சீனாவில் தன்னாட்சிப் பிரதேசம், அதாவது பெயரளவில்! சுய - ஆளுகைக்கான சில அதிகாரங்களுண்டு; ஆனால், நடைமுறையில் திபெத்தும் சரி, ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசமும் (XUAR) சரி, இரு பகுதிகளுமே சீனாவின் மத்திய அரசால் பெரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.
  • ஜின்ஜியாங் (XUAR) பரப்பளவு 16 லட்சம் சதுர கி.மீ. உய்குர் (அல்லது வீகெர்) இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜின்ஜியாங்கின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகள்  ரஷியா, மங்கோலியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய 8 நாடுகளுடன் ஒட்டியமைந்துள்ளதால் அந்நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டுள்ளது. சீனாவில் மிக நீளமான எல்லையும் (5,400 கிலோமீட்டர்), மிக அதிகமான பிற நாடுகளின் நுழைவாயில்களையும் கொண்டிருக்கும் பகுதி ஜின்ஜியாங் ஆகும்.
  • ஜின்ஜியாங் சீனாவை ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் ‘பட்டுப் பாதை’யாகக் கருதப்படுகிறது, 1949 முதல் சீன ஆட்சியின் கீழ், இந்தப் பகுதியில் “வளர்ச்சி” என்ற பெயரில் ஆட்சியினர் மேற்கொண்டுவரும் விநோதமான திட்டங்களால்; கம்யூனிஸ்ட் கட்சியினரால் ஊக்குவிக்கப்பட்டு நடைபெற்று வரும் ஹான் சீன இனத்தவர்களது குடியேற்றங்களால்; கம்யூனிஸ்ட் கட்சியால் இப்பகுதியில் பூர்விகமாக வாழ்ந்துவரும் உய்குர் இன மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு  கட்டுப்பாடுகளால், இந்நிலப்பரப்பும், அதன் இனக்குழுக்களின் மொழி, மதம், பண்பாடு போன்ற அதிமுக்கிய சமுதாயக் கூறுகளின் பழைய நிறமும் முகமும் வலிந்து மாற்றப்பட்டுக் கொண்டுவரும் நிலையிலுள்ளது. பெண்கள் பர்தா அணியவும், இளைஞர்கள் தாடி வளர்க்கவும் கூட சீன அதிகாரிகள் தடைகளை விதித்துள்ளனர்.
  • சீனாவின் மத்திய ஆட்சி, கஷ்கரின் வளர்ச்சியை உள்ளூர் பொருளாதாரத்தின் முன்னேற்றமாகப் பார்ப்பதாகக் கூறுகிறது, ஆனால், உய்குர்கள் அதைத் தங்கள் மொழி, மரபுகள் மற்றும் கலாச்சார அடையாளத்தை அழிக்கத் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர். இந்த முரண்பாடு ஒரு உய்குர்களிடையே பிரிவினைவாத எண்ணம், இயக்கம் இயல்பாக உருவாக உதவியிருக்கிறது. இதனால், சில நேரங்களில் இப்பகுதியில் வன்முறை வடிவங்கள் வெடிக்கின்றன. இந்நேர்வுகளை, மத தீவிரவாதிகளின் 'பயங்கரவாத நடவடிக்கைகள்' என்று சீன அரசாங்கம் முத்திரை குத்தி கடுங்கரம் நீட்டி ஒடுக்கத் தொடங்கியுள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தில் மசூதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் உள்பட நகரில் அதிகப் பாதுகாப்பு இருப்பதால் பதற்றம் அதிகரித்து நிலைகொண்டுள்ளது.

உய்குர்கள் (Uyghurs)

  • ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி (XUAR) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் ஜின்ஜியாங்கில் சுமார் 12 மில்லியன் உய்குர்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள், வாழ்கின்றனர். உய்குர்கள், ‘துருக்கி’ மொழிக்கொத்த தங்கள் சொந்த உய்குர் மொழியைப் பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் கீழ் சீனாவுடன் இருந்தாலும், கலாச்சார ரீதியாகவும், இன ரீதியாகவும் தங்களை மத்திய ஆசிய நாடுகளுடன்தான் உய்குர் மக்கள் நெருக்கமாக உணர்கிறார்கள்.
  • சீனாவின் 1949 ஆக்கிரமிப்புக்குப் பின்னுள்ள காலங்களில், இப்பகுதியில், கட்சியின் (CCP) திட்டப்படி, பல நூறு இராணுவ கிராமங்களை உருவாக்கி இராணுவ குடும்பங்களைக் குடியமர்த்தியதால், காலப்போக்கில் இந்த இராணுவ கிராமங்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர்களான ஹன் சீனர்கள் மிகுந்த குடியேற்ற கிராமங்களாக மாறியுள்ளன. கடந்த தசாப்தங்களில் ஹன் சீனர்கள் பெருமளவில் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்திருப்பது, இங்குள்ள இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கையை நீர்த்துப்போகச் செய்ய ஆட்சியின் திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, உய்குர் இஸ்லாமியர்களுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், நாட்டின் ஆட்சியும் எண்ணற்ற வழிகளில் இடர்களை எண்ணித் துணிந்து ஏற்படுத்திக்கொண்டே வருகின்றன.
  • தற்போது, சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட ஜின்ஜியாங்கில் வழிவழியாக வாழும் முஸ்லிம்கள் 57 சதவீதம், கட்சி, ஆட்சி ஆதரவோடு குடியேற்றப்பட்ட ஹான் (ஹன்) சீனர்கள் 41 சதவீதம் வாழும் நிலையுள்ளது.  மற்றொரு இன மக்களை இப்பகுதியில் வலுக்கட்டாயமாகக் குடியேற்றியுள்ளதால், முன்னரே குறிப்பிட்டபடி, இப்பகுதியில் அடிக்கடி இனக்குழுப் பிணக்குகள் விளைவதும், அமைதி குலைவதும், ஆட்சி ஒருதலைச்சார்பு காட்டி இப்பகுதியில் பெரும்பான்மையினமாகவுள்ள இஸ்லாமியருக்கு எதிராக அடக்குமுறைகளை அவிழ்த்து விடுவதும் வாடிக்கையாகியுள்ளது. இம்மாகாணத் தலைநகர் உரும்கியில் பெரிய அளவில், 5 ஜூலை  2009 இல், இனக்கலவரம் (Urumqi riots) வெடித்தது. அக்கலவரத்தை தனது இராணுவ பலத்தால் சீனா நசுக்கி ஒடுக்கியது. இக்கலவரத்தின்போது ஒரே நாளில் 184 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் (அரசுக் கணக்கு), மேலும் 10,000-க்கு அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர் (Disappearance).
  • ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஏராளமான உய்குர் தொழிலதிபர்கள், அறிவுஜீவிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலாசார மற்றும் மதப் பிரமுகர்களை சீன அதிகாரிகள் நீண்ட காலமாகத் ‘தடுப்புக் காவல்’ எனும் பெயரில் ‘முகாம்’களில் சிறை வைத்துள்ளனர். இந்நடவடிக்கை மத தீவிரவாதம் பரவாமலிருக்கவும், பயங்கரவாத முயற்சிகளைக் கட்டுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டதேயன்றி எவ்வகையிலும் குறிப்பிட்டு முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்று ஆட்சி கூறிவருகிறது. நம்ப ஆளில்லை!
  • குர்ஆனைப் படிப்பது, பிரார்த்தனை செய்வது போன்ற (குற்றச்) செயல்கள் கண்காணிக்கப்பட்டு, அந்தக் ‘குற்றங்களுக்காக’ வேறு வகைகளில் தண்டிப்பது; உய்குர் இஸ்லாமிய மதப் பிரமுகர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது; அவ்வாறு தாக்கப்படுவதற்குரிய ஆட்களை அடையாளங்காண “அவர்களின் பாரம்பரிய உடைகள், தாடியின் வடிவம், நீளம், குழந்தைகளின் எண்ணிக்கை” முதலியவற்றைக் கண்காணிப்பது; சிறைச்சாலைக்கோ அல்லது மறுகல்வி மையங்களுக்கோ எந்த முன்னறிவிப்புமில்லாமல் அவர்களைச் தூக்கிச்சென்று அடைத்து வைப்பது; ஜின்ஜியாங்கில் சுமார் அரை மில்லியன் மக்கள் மீது குற்றவியல் நீதிமன்றங்கள் மூலம் வழக்குத் தொடரப்பட்டுள்ளது; அவர்களது பகுதியில் வழக்கமான மத வழிபாட்டு முறைகளுக்கு இயன்ற முட்டுக்கட்டைகள் போட்டுத் தடங்கல்கள், தடைகளை ஏற்படுத்துவது; மசூதிகள் மற்றும் கல்லறைகளை அழித்தல் போன்ற செயல்களை - இந்த இனக்குழுவின் கலாசாரம் அழிக்கப்படும் அபாயத்தை விரைவுபடுத்தும் செயல்பாடுகளாக - மேற்கொண்டு வருவதாகப் பல குற்றச்சாட்டுகள் உய்குர் ஆர்வலர்களால் சீன அரசு மீது சாட்டப்பட்டுள்ளது.
  • உய்குர் இன மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சீன அரசு இராணுவத்தினர் மூலம் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது. இம்மக்களிடையே, குறிப்பாக உய்குர் இனப் பெண்களிடம் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டைத் திணிக்கிறது; ‘உண்டு, உறைவிடப் பள்ளிகள்’ எனும் ஏற்பாட்டின்படி, மழலைக் குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை மிக இளம் வயதிலேயே குழந்தைகளை வலுக்கட்டாயமாக இஸ்லாமியக் குடும்பச் சூழல்களிலிருந்து பிரித்து, உயர் பாதுகாப்புச் சிறைகள் போன்ற பள்ளி வளாகங்களில், ஆண்டுக்கணக்கில் வைத்துக், குடும்பங்களோடு தொடர்பே இல்லாது, குல, மத வழக்கங்களை அறவே மறக்கடிக்கும் வகைகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘நற்போதனை’ நடத்தப்படுகிறது.
  • உய்குர் மக்களின் பயன்பாட்டு மொழியிலுள்ள நூல்கள் யாவற்றையும் - தாய் மொழியிலுள்ள கல்வி வள மூலங்கள் (Learning Resources), பள்ளிப்பாட நூல்கள், துணை நூல்கள் உள்பட - தேடித்தேடிச் சுவடுகளின்றி அழிக்கப்படுவதன் மூலம், உய்குர் மாணவர்கள் தம் தாய்மொழியல்லாத (சீன) மொழியில் கற்க வேண்டிய கட்டாயத்தை - சீன மொழி மேலாதிக்கத்தை- ஏற்படுத்துகிறார்கள். மொத்தமாகப் பார்த்தால், இப்பகுதியில் உய்குர் முஸ்லிம்களின் மீது சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் இனப்படுகொலை (Genocide) வகைதான் என்று தயக்கமின்றிச் சொல்லலாம்.
  • 2022 ஆம் ஆண்டில் ஜின்ஜியாங் காவல்துறை கணினிகளில் இருந்து ஹேக் செய்யப்பட்டுக் கசிந்த ஆவணங்கள் அசோசியேட்டட் பிரஸ் மூலம் வெளியிடப்பட்டன. ஜின்ஜியாங் போலீஸ் கோப்புகள் என்று அழைக்கப்படும் இவற்றின் மூலம், சீன அரசு, இப்பகுதி முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க; அவர்களது மத, கலாச்சார விஷயங்களில் தடைகளை ஏற்படுத்தி, பயங்கரவாதம், பிரிவினைவாதம் அல்லது மத தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களைச் சிறைப்படுத்தி  ஒடுக்க, அவர்களிடையே கட்டாயக் ‘கருத்துச் சுத்திகரிப்பு வன்முறை’ வழியே உய்குர் இனக் கலாசாரத்தை அரித்து, அழிக்கும் நோக்கில் எடுத்துவரும் கொடுமையான பல நடவடிக்கைகள் உலக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஜின்ஜியாங் போலீஸ் கோப்பு கசிவுகளில் சில:

  • வரலாற்றுக் குற்றங்களுக்காகக் குற்றவாளிகள் எப்போது வேண்டுமானாலும் சுற்றி வளைக்கப்பட்டு நீண்ட கால சிறைத்தண்டனைகள் விதிக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக: எஜிஜ்கல் மெமெட் (Ezizgul Memet) என்பவர், 1976 இல் ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோது தனது தாயுடன் மூன்று நாள்கள் குர்ஆனைப் படித்தது கண்காணிக்கப்பட்டிருந்தது. அந்த ‘வரலாற்றுக் குற்றத்திற்காக’ அவருக்கு 2017 இல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
  • அதே குற்றத்திற்காக, துர்சுங்குல் எமெட், (1974 இல் குர்ஆனைப் படித்தது) 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
  • அய்டியல் ரோஜி (Aytial Rozi) என்பவர் 2009 மற்றும் 2011 க்கு இடையில், குர்ஆனைப் படித்து அதை ஒரு பெண்கள் குழுவுக்குக் கற்பித்தார், அதற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
  • சிறையில் அடைக்கப்பட்ட உய்குர்களின் வயது எதுவானாலும் சரி அவர்கள் கட்டாயமாகச் சீன மொழியைக் கற்க வேண்டுமே!
  • மேலும், உய்குர் இன மக்களின் மனதில் வேரூன்றியிருக்கும் "சித்தாந்த வைரஸ்களை" அகற்றுவதற்காக - ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மணி நேரங்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) பிரச்சார ஒலி, ஒளிபரப்புகளை, அக்கட்சித் தலைவர்களது உரைகளை, சிறைகளில் / முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள், அவரவர் தண்டனைக்கேற்ப, வார, மாத அளவுக்குக் கட்டாயம் கேட்க வேண்டும்.
  • பெண்கள் கைது செய்யப்படும்போது, "தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பொருள்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் குற்றவியல் காவலில் வைக்கப்படுவது” வழக்கம். சமையலறைக் கத்திகளும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்களாகக் / கருவிகளாகக் கருதப்பட்டன, பறிமுதல் செய்யப்பட்டன, பட்டியலிடப்பட்டன.
  • ரேடியோ ஃப்ரீ ஏசியாவின் (RFA) தகவலின்படி, தெற்கு ஜின்ஜியாங்கின் காஷ்கரின் மகிட் கவுண்டியில் உள்ள சுல்கும் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2014 இல் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து சில காலம் முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தவர்கள். அப்பெண்கள், ஜூன் 11, 2024 இல் தம் குழந்தைகளுக்கு மதத்தைக் கற்பித்ததற்காகவும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய ஒலிப்பதிவுகளைக் கேட்டதற்காகவும், 14 முதல் 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர்.
  • “முன்னர் விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அப்பெண்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, அவர்கள் திருந்த மேல் கல்விக்காக (!) அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று சீன அரசு அதிகாரி கூறியுள்ளதாக, ரேடியோ ஃப்ரீ ஏசியாவின் செய்தியாளர் ஒலிபரப்பியுள்ளார்.
  • 2017 இல், ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் (எக்ஸ்யுஏஆர்) புதிய கட்சி செயலாளர், சென் குவாங்குவோவின் வழிகாட்டுதலில், முன்னெப்போதுமிலாத ‘தடுப்புக்காவல்’ என்றதொரு திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தது. இத்திட்டத்தின் மூலம் 1.5 மில்லியன் வரை துருக்கிய சிறுபான்மையினர் (குறிப்பாக உய்குர் மற்றும் கசாக் இனத்தவர்) பல்வேறு வகையான முகாம்களில் - அரசியல் மறுகல்வி, தடுப்புக்காவல், மேற்கல்வி மற்றும் "தொழிற் பயிற்சி" முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
  • குல்னிசா இமின், (Gülnisa Imin) நவம்பர் 1976 இல் (1978 எனச் சில ஆவணக் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன) சிரா கவுன்டியின் குலக்மா கிராமத்தில் பிறந்தவர். 1997 ஆம் ஆண்டில், ஹோடன் வானொலி மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகத்தின் செயலகத்துறையில் பட்டம் பெற்ற பிறகு, அவர் சிரா கவுண்டியின் எண் 2 நடுநிலைப் பள்ளியில் முதலில், பின் சிரா உயர்நிலைப் பள்ளியில் உய்குர் இலக்கிய ஆசிரியராக பணியாற்றினார். திருமணமானவர், கணவர் நார்வேயில் பணி.
  •  பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோதே, 1990 ஆம் ஆண்டில், "கிராமப்புறங்களின் தூசி நிறைந்த சாலை" என்ற தனது முதல் கவிதையை ஹோடன் பெடகோகிக்கல் பல்கலைக்கழக வளாக இதழில் குல்னிசா இமின் வெளியிட்டார். அப்போதிருந்து, உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பத்திரிகைகள், இதழ்களில் அவரது கவிதைகள் வெளியிடப்பட்டு வந்தன. வெளியான அவரது கவிதைகளின் எண்ணிக்கை 500-க்கும் மேலிருக்கும்.
  • குல்னிசா இமின் கவிதைகள் 2014 முதல் சமூக ஊடகங்களில் மிகப் பிரபலமடைந்தன. அவரது சில கவிதைகள், ‘இசையுடன் பாடல்’களாக மறு ஆக்கம் செய்யப்பட்டு இணையத்தில் உலவுகின்றன. 2016 ஆம் ஆண்டில், இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு "சிவப்பு நிலவு கவிதை" இதழில் வெளியாயின. அதே ஆண்டு, சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கவிதைகள் "எரியும் கோதுமை" என்ற புகழ்பெற்ற தொகுப்பிலும் சேர்க்கப்பட்டன, மேலும், அக்கவிதைகள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ஜப்பானில் வெளியிடப்பட்டன. முஸ்லிம் உய்குர் கவிஞரான குல்னிசா இமின் ஹோடன் ப்ரிபெக்சர் மற்றும் சிராவின் கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.
  • “சொல்லுக்குத் தடை விதிக்கப்பட்ட இடங்களில்
  • பூக்கள் மலரவும் அனுமதிக்கப்படுவதில்லை;
  • பறவைகளும் சுதந்திரமாகப் பாட முடியாது”
  • என்று எழுதியிருக்கும் கவிஞர் குல்னிசா, சீன அரசின் கடுமையான தணிக்கை வரம்புகளுக்குள் இருந்துகொண்டே, நவீன உய்குர் கவிதைகளுக்கு விரிவானதொரு பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிட உரியதாகும்.
  • இஸ்லாமியப் பொற்காலத்தின் மிகப் பிரபலமான "ஆயிரத்தொரு இரவுகள்" என்ற கதைத் தொகுப்பின் கட்டமைப்பால் ஈர்க்கப்பட்டு, டிசம்பர் 4, 2015 முதல், ‘ஒவ்வொரு இரவும் ஒரு கவிதை’ எனச் சமூக ஊடகங்களில், ஆடியோகாஸ்ட் வடிவத்தில் "ஆயிரத்தொரு இரவுகள்" என்ற ஒரு கவிதைத் தொடரை (வீ சாட்) ஆன்லைனில் வெளியிடத் தொடங்கினார். குல்ஹான் என்ற புனைபெயரில் அவர் வழங்கிய இப்படைப்புகள், விரைவில் புகழடையத் தொடங்கின.
  • "ஆறு மணிக்கு, கசப்பான மாதுளம் பழம் போல் தொடங்கும் நாள்" என்ற வரிகளுடன் 2015 இல் தொடங்கிய கவிதைகள் - அவ்வப்போது அறிவிக்கப்படாத சிறு, சிறு இடைவெளிகளுடன்- மார்ச் 28, 2018 இல் "உன்னை விட்டுச் செல்கிறேன்" என்ற கவிதையுடன் திடீரென முடிவடைந்தன. அதற்குப் பிறகு கவிதையைக் காணோம்; கவிஞரையும்தான்!
  • அவரது கவிதை வெளியான 345-வது இரவில், குல்னிசா இமினின் இணைய இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அவரது தொடர்பு எதுவும் வெளியுலகிற்கு எட்டவில்லை! "ஆயிரத்தோரு இரவுகள்" என்ற தொடராக அறிவிக்கப்பட்டு, மக்களிடையே நல்லதொரு அங்கீகாரம் பெற்ற ஆடியோ காஸ்ட் கவிதைகளாகத் தொடர்ந்த ‘இரவுக் கவிதைகள்’, ஏனோ 345 ஆவது இரவோடு முடிந்ததே! எந்தத் தகவலும் இல்லை பல மாதங்களாக. குல்னிசா ஆசிரியையாகப் பணியாற்றிய சிரா கவுண்டி உயர்நிலைப்பள்ளி அதிகாரிகளைத் (RFA) தொடர்பு கொண்டபோதும், ” அவர் வேலைக்கு வரக் காணோம்” என்பது தவிர, வேறு தகவலோ, ​​கருத்தோ  தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
  • உய்குர்கள் தங்கள் கலாசாரம் மற்றும் மதத்தை மட்டுமல்ல, அவர்களின் மொழியையும் இழக்குமாறு ஆட்சியினர் ஏற்படுத்திவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளாகத் தொடரும் தமது மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளைத் தங்கள் எழுத்துகளில் பொதித்துக் காப்பவர்களாக - இருந்த, இருக்கும் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு என்ன நேரும் இந்நாட்டில் என்பது யூகிக்க முடியாத விஷயமல்லவே, சீனாவில். ஆதலால், சமீப ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு, தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று டஜன் ஆசிரியர்களில் குல்னிசாவும் சேர்ந்திருக்கிறார் என்ற அரசல், புரசல் பேச்சு அப்பகுதியில் உலவத் தொடங்கிவிட்டது.
  • சீனாவில் ஒரு முன்னாள் அரசியல் கைதி 2013 மற்றும் 2014-க்கு இடையில் 15 மாதங்கள் சீன அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர், அப்துவேலி அயூப். கவிஞர் குல்னிசாவின் நண்பர். தற்போது, நார்வேயைத் தளமாக அமைத்துக் கொண்டு செயல்பட்டுவரும் அவர் மொழியியல், மானுடவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். உய்குர் யார்டெம் (உய்குர் ஹெல்ப்) என்ற அறக்கட்டளையின் நிறுவனர்.  நார்வேயில் இருந்துகொண்டே  சீனா, ஜின்ஜியாங்கில் காணாமல் போன மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட தன் இன மக்களான உய்குர்களின் நிலைமைகளைத் தரவுகளுடன் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வருகிறார்.
  • அவர் மூலம்தான், புகழ்பெற்ற பெண் கவிஞரான குல்னிசா இமின் தனது கவிதைகளுக்காக டிசம்பர் 2018 இல் சிறைப்படுத்தப்பட்ட தகவலும், 2019 ஆம் ஆண்டின் இறுதியில், பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பதினேழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் முதலாவதாக, மெதுவாக வெளிப்போந்தன. அதுவரை இக்கவிஞர் பற்றி உறுதிப்படுத்துமளவு செய்திகள் எதுவுமே வெளியுலகு அறியவில்லை. தகவல்களைப் பாதுகாக்கும் தீவிர இரகசியத் தன்மையைக் கருத்தில் கொண்டு செயல்படும் , ‘இரும்புத் திரை’ நாடு ரஷியா என்றால், ‘எஃகுத் திரை’ நாடு சீனா எனலாம்.
  • கவிதைகள் மூலம் அடக்குமுறையை அஞ்சாத் துணிச்சலுடன் எதிர்க்கும் உய்குர்கள் வரிசையில் மதிப்புடன் அறியப்பட்டிருக்கும், தற்போது 49 வயதான, குல்னிசாவுக்கு சிறைவாசங்கள் என்பது ஒன்றும் புதிதல்லதான், 2009 ஆம் ஆண்டு முதலே, ’பயங்கரவாத எதிர்ப்பு’, ‘கலவரத் தடுப்பு’ நடவடிக்கைகள் காரணமாகத் தடுப்புக்காவலில் சிறை, விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் காவலில் வைத்திருப்பது என்ற வகையில் பலமுறை (2014, 2017, 2018, 2019) சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவரது கவிதைகள்தான் குற்றம்; குற்றங்களுக்கான ஆதாரம் என்று சொல்லப்பட்டது.
  • ஆனால், தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி அவரது சிறைவாசக் காலம் நெடியதாக (17.5 ஆண்டுகள்) நிற்கிறது. இப்போதும் சீன அதிகாரிகள் அவரது கவிதைகள்தான் குற்றம்; அவரது கவிதைகள் பிரிவினைவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கின்றன எனக் கூறி அவருக்கு அளிக்கப்பட்டுள்ள நீண்ட தண்டனையை நியாயப்படுத்துகிறார்கள். அதே சமயம், கவிஞர் குல்னிசாவின் கவிதைகள் பல ஆண்டுகளாகப் (2010-களின் நடுப்பகுதியிலும், அதற்கு முன்பும்) பள்ளிப் பாடப் புத்தகங்களில்- உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழி மற்றும் இலக்கிய பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். மேலும், 2013 ஆம் ஆண்டு அவரது கவிதைகளை ஒரு இளைய தம்பதியர் விடியோவில் பாடி வெளியிட்டதும் மிகப்பிரபலமாகி இணையத்தில் இன்றுவரை பெருஞ்சுற்று நிகழ்த்தி வருகிறது. ஒருபுறம் அவர் கவிதைதான் குற்றம்; மறுபுறம் அவரது கவிதைகளுக்கு அங்கீகாரம்! விந்தைதான்!
  • பெண்கள்...
  • கண்ணீர் சிந்த விரும்பவில்லை;
  • அவர்கள்
  • தங்கள் தலையை உயர்த்த விரும்புகிறார்கள்
  • அவர்கள்
  • சூரிய ஒளியற்ற வானத்தை
  • சுதந்திரமாக, சும்மா, உற்றுப் பார்த்து
  • நிற்க விரும்புகிறார்கள்.
  • அவர்களின் துயரங்கள்,
  • அவர்களின் ஏக்கங்கள்
  • அவர்களின் கனவுகள் மற்றும்
  • தூக்கமில்லாத இரவுகள்...
  • வெளியில்
  • யாரிடமாவது
  • இவை பற்றிப் பேச விரும்புகிறார்கள்.
  • [ - “The Tenth Night: The Sunless Sky,”- Gulnisa Imin]
  • என, அடக்கி, ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் ஆதங்கங்களை உயிர்ப்போடு எதிரொலித்த குல்னிசாவின் கவிதைகளில் எது? எந்தக் கவிதை குற்றமாகி, அவரைக் கைது செய்ய வழிவகுத்தது? என்ற கேள்விகளுக்கு அதிகாரிகள் அளவில் தெளிவான குறிப்புப் பெற இயலவில்லை. கவிஞர் குல்னிசாவின் மீது ஏற்றப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விவரம், அவரது நீதிமன்ற விசாரணைகள் குறித்த விவரங்கள் எதுவும் ஊடகங்களால்கூட சீன அதிகாரிகளிடமிருந்து பெற முடியவில்லை. அதிகாரிகளுக்கே இவ்விவரங்கள் தெரியாதா? அல்லது தெரிந்த தகவலை எஃகுத் திரையிட்டு ‘வெளியுலக வெளிச்சம் எட்டா’ இருட்டில் பதுக்குகிறார்களா? என்பதும் தெரியவில்லை நமக்கு. என்றாலும், கவிஞர் குல்னிசா, காஷ்கர் (காஷி) மாகாணத்தில், டோக்குசாக் (டூகேசாக்) டவுன்ஷிப்பில் உள்ள முஷ் பெண்கள் சிறையில் தனது நெடுந்தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பதை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • "கவிதை வெளிப்பாடு மூலம் மொழியியல் பன்முகத்தன்மையை ஆதரிப்பதற்கும், அழியக்கூடிய ஆபத்தின் விளிம்புகளில் உள்ள மொழிகளைக் கேட்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும்" யுனெஸ்கோ, 1999 ஆம் ஆண்டில், மார்ச் 21 ஆம் நாளை, உலக கவிதை தினமாக அறிவித்திருப்பதை அறிவோம். அந்த (உலக கவிதை தினம்) நாளையொட்டி, லண்டனில் 2024 மார்ச் 12 முதல் 14 வரை, மூன்று நாட்கள், 53-வது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சுமார் 30,000 பார்வையாளர்கள் திரண்டிருந்த அந்நிகழ்வில், மனித உரிமை அட்டூழியங்கள் நாள்தோறும் நழுவாது நிகழும் நாடான சீனாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட உய்குர் கவிஞர் அஜீஸ் இசா எல்குன்,  “உய்குர்களை மறந்துவிடக்கூடாது” என்ற தலைப்பில் உணர்ச்சிமிகு உரையாற்றினார்.
  • அவரது உரையில், தனது தாயகம், சீனாவில் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எழுத்தில் வடித்துச் சொல்ல இயலாத அளவில் ஓயாது துன்புறுத்தப்படுவது குறித்து விவரங்களுடன் எடுத்துரைத்ததோடு, "கவிதை எழுதிய குற்றத்திற்காக" சீன அரசால் நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட உய்குர் கவிஞர்களை உலகம் நினைவுகூர வேண்டும் என்று, கவிதைக் குற்றத்தால் கடுஞ்சிறைக் கம்பிகளுக்குப்பின் வைக்கப்பட்டிருக்கும் கவிஞர்களின் எண்ணிக்கை குறித்த அதிர்வு தரும் செய்தியைப் பகிர்ந்தார்.
  • "சீன அரசாங்கத்தின் கைகளில் உய்குர் கவிஞர்கள் அனுபவித்த, அனுபவித்துவரும் கடுமையான, கொடுமையான நடவடிக்கைகளுக்கும், மற்றும் பொதுவான சட்டங்கள், நீதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பான துன்புறுத்தல்களுக்கும்... அவர்கள் செய்த ஒரே குற்றம், கடவுள் கொடுத்த தாய் மொழியான உய்குரில் கவிதை எழுதியதுதான்" என்று கண்ணீர் மல்க அவர் கலங்கி நின்றநிலை, சுமார் அறுபத்தியொரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களையும், சிறப்புப் பிரதிநிதிகளையும் பார்வையாளர்களையும் நெகிழச் செய்தது.
  • சீனாவில் மட்டுமல்ல, “கருத்துக்கொள்ள சுதந்திரம், கருத்தை வெளியிடுவதற்கான சுதந்திரம் மற்றும் வாசிப்பு உரிமை மீதான உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்க்க, கண்டிக்க, தடுக்க உலகெங்கிலும் உள்ள மக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உதவ வேண்டும்” என்றும், "அதிகரித்து வரும் எதேச்சாதிகாரம் மனித குலத்திற்குப் பேரழிவைக் கொண்டு வரக்கூடிய ஆபத்திருப்பதால், அதற்கு எதிராக இணைந்து நிற்குமாறு சுதந்திர உலகில் உள்ள எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களை எல்குன் வலியுறுத்தியதும் நினைவிற்கொள்ள உரியது.
  • “எமது மொழிவாசனை தழுவி மணக்கும்
  • எழுத்துப்பூக்களால் நிறைந்திருக்கிற
  • என்னைத் தூங்க வைக்கவில்லை,
  • உறக்கம் ... சிறைக்குள்
  • நள்ளிரவில் கவிதை எழுதுகிறது,
  • என்னுள், மெல்ல.”
  • - குல்னிசா இமின் (2018)

நன்றி: தினமணி (26 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்