- குளம், சிற்றணைகளை தூர்வாரும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.
- கோவை மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு வறட்சியான சூழல் நிலவியது. விவசாயப் பயன்பாட்டுக்கு, அடிப்படைத் தேவைக்குத் தண்ணீர் இல்லாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுகிடந்தன.
- நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய கால்வாய்கள் அடைத்துக் கொண்டிருத்தல், ஆக்கிரமிப்பு, சீமைக் கருவேல மரங்கள், பிளாஸ்டிக் கழிவு அடைப்பு ஆகியவையும் நீர்நிலைகள் வறண்டதற்கு முக்கியக் காரணங்களாகும்.
- கோவையை மையப்படுத்தி இயங்கிவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: "நீர்நிலை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தி 2017 பிப்ரவரி மாதம் ஒரு கூட்டம் நடத்தினோம். தொடர்ந்து தன்னார்வமாக 50 பேர் பேரூர் பெரியகுளத்தில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றினோம். அதன் பின்னர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளங்களைச் சீர்படுத்தும் பணிகளைத் தொடங்கினோம்.
- ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது இளைஞர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. பொக்லைன் இயந்திரங்கள், கழிவு அகற்றும் உபகரணங்கள் போன்றவற்றைத் தொழில் நிறுவனங்கள் வழங்கின. இவற்றைப் பயன்படுத்தி 265 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேரூர் குளத்தில் சீமைக் கருவேல மரங்கள், காட்டாமணக்குச் செடிகளை அகற்றினோம். ஏழு டன் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றினோம்.
- தொடர்ச்சியாக வாரந்தோறும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டோம். குனியமுத்தூர் நகராட்சியாக இருந்தபோது, அதன் கழிவுகள் செங்குளத்தின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டுவந்தன. ஒருபுறம் குப்பை, மறுபுறம் புதர்ச்செடிகள் என அக்குளம் வறண்டிருந்தது. செங்குளத்தில் சீரமைப்புப்பணிகளை மேற்கொண்டோம். தொடர்ந்து பேரூர் பெரியகுளம், செங்குளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயணசமுத்திரம் ஆகிய குளங்களுக்கு நீர் வரக்கடிய 12.5 கிலோ மீட்டர் தூர வாய்க்காலைத் தூர்வாரினோம்.
மரம் நடும் பணி:
- வெள்ளலூர் குளம் 12 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. அதன் தடுப்பணையில் குப்பை போட்டு மூடப்பட்டிருந்ததே இதற்குக் காரணம். 6.5 கிலோ மீட்டர் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு, புதர்மண்டிக் காணப்படுதல், குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுதல் ஆகியவை குளத்தின் வறட்சிக்கு முக்கியக் காரணங்கள். அணைக்கட்டுப் பகுதியில் இருந்த குப்பைக் குவியலை அகற்றினோம்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி நடவடிக்கையை விரைவுபடுத்தினோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசி அவர்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்தோம். மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றியது. பிறகு வாய்க்காலை நாங்கள் தூர்வாரினோம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2018இல் பெய்த மழையில் வெள்ளலூர் குளம் நிரம்பியது.
- குளத்தின் கரைப்பகுதியில் 2018 இல் மரக்கன்று நடும் பணியைத் தொடங்கினோம். தற்போது வரை 10 ஆயிரம் மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறோம். தற்போது 156 வகையான பறவையினங்கள், 103 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களை இங்கு ஆவணப்படுத்தியுள்ளோம்.
- பேரூர் பெரியகுளத்தில் 8 ஆயிரம் மரக்கன்றுகளும், அன்னூர் காட்டம்பட்டி குளத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகளும் நட்டுள்ளோம். மாநகராட்சியின் பொதுஒதுக்கீட்டு இடங்களில் 8,500 மரங்களை நட்டுள்ளோம். தற்போது, பிள்ளையார்புரத்தில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றுவருகிறது. 40 ஆயிரம் மரங்களைப் பராமரித்துவருகிறோம்.
14 நீர்நிலைகளை மீட்டுள்ளோம்:
- நீர் நிலைகளை ஆய்வுசெய்து நீர்வழித்தடங்களில் உள்ள தடைகளைக்கண்டறிந்து அகற்ற மாவட்ட நிர்வாகத்தினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்கிறோம். 150 டன் பிளாஸ்டிக் கழிவை நீர்நிலைகளில் இருந்து அகற்றியுள்ளோம். கோவையில் நொய்யல் ஆற்றை மையப்படுத்தி 24 குளங்கள் உள்ளன. அது தவிர குளங்கள், குட்டைகள், ஏரிகள் என 900-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. இவை உள்ளூர் நீராதாரங்களையே நம்பியுள்ளன.
- ஆக்கிரமிப்பு, முறையாகப் பராமரிக்காதது, நீர் வரத்து இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் இவை மறைந்துவருகின்றன. இவற்றை மீட்டு ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். இதுவரை மலுமிச்சம்பட்டிக் குட்டை, வெள்ளாச்சிக் குட்டை, மாகாளியம்மன் கோயில் குட்டை, கடைக்காரன் குட்டை, ஓடைக்காடு குட்டை, ஓடக்குறைக் குட்டை, புங்கன் குட்டை, புங்கையன் குட்டை, மயிலாடும்பாறை குட்டை, செட்டிபாளையம் பெரிய குட்டை உள்ளிட்ட 14 நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரித்து வருகிறோம்.
- இதுவரை 341 வாரங்களைக் கடந்து குளங்களை மையப்படுத்தி வேலை செய்துவருகிறோம். அத்துடன் நீர்நிலை மேம்பாடு, காலநிலை மாற்றம் குறித்துப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். எங்களது சேவையைப் பாராட்டி மத்திய அரசின் ஜல்சக்தி துறை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 07 – 2024)