TNPSC Thervupettagam

குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் சிறுதானியங்கள்

December 25 , 2022 595 days 328 0
  • மேற்கத்திய மோகம், வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் நமக்கு அந்நியமாகிவிட்டன. இதன் விளைவாக எண்ணற்ற நோய்களுக்கு நாம் நெருக்கமானவர்களாக மாறிவிட்டோம். இன்று நீரிழிவு நோய், உடல்பருமன் போன்ற பாதிப்புகள் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து, கெடாததன்மை, சுற்றுச்சூழல் நன்மைகள் போன்ற காரணங்களால் அவை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.
  • உலக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை இந்தியாவின் சிறுதானியப் பயிர்களில் சில. இந்தச் சிறிய தானியங்களில் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. நம் உடலின் நலத்தை மேம்படுத்தும் இவை தற்போது ஊட்டச்சத்துத் தானியங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு அளிக்கும் நன்மைகள்

  • ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் முக்கியம் என்பதால், குழந்தையின் தினசரி ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஊட்டச்சத்து மிகுந்து உணவுகளைக் கண்டறிந்து, அவற்றைக் குழந்தைகள் விரும்பும் சுவையில் சமைத்துக்கொடுக்கிறார்கள்.
  • தற்போது, ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கான பெற்றோர்களின் அன்றாடத் தேடலைச் சிறுதானிய உணவு எளிதாக்கியிருக்கிறது. இந்த உணவு எளிதில் சமைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. சிறுதானியம் கொண்டு சமைக்கப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி, கிச்சடி போன்ற உணவுகள் குழந்தைகளால் எளிதில் ஜீரணிக்கக்கூடியவையாக, ஒவ்வாமை ஏற்படுத்தாதவையாக இருக்கின்றன.

மிகுந்த ஊட்டச்சத்து

  • குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த ஊட்டச்சத்து தேவைகளைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடிய உணவுகள் தேவைப்படுகின்றன. குழந்தைகளுக்கான சரியான உணவு என்பது, அவர்களின் சரியான வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்து முக்கிய ஊட்டச்சத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். சிறுதானிய உணவு அந்த அம்சங்கள் அனைத்தையும் கொண்டதாக இருக்கிறது.
  • சத்தான சிறுதானிய உணவு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் நன்மை பயக்கிறது. குழந்தைகளுக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம் உள்ளிட்டவை சிறுதானியத்தில் அதிகம் உள்ளன. இதன் காரணமாகச் சிறுதானிய உணவு, குழந்தைகளுக்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த தினசரி சமச்சீர் உணவாக உள்ளது.

நன்மைகள்

  • சிறுதானிய உணவிலிருக்கும் புரதம் - தசை வளர்ச்சியை அதிகரிக்கும்; துத்தநாகம் - அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவும்; மெக்னீசியம் - சோர்வைக் குறைக்கும்; நார்ச்சத்து-செரிமானத்தை மேம்படுத்தும்; கால்சியம் - எலும்புகளை வலுவாக்கும்; இரும்பு - ஹீமோகுளோபின் உருவாக்கத்தைப் பெருக்கும். சிறுதானியத்தில் 15-20 சதவீதம் வரை நார்ச்சத்து உள்ளதால், அது குழந்தைகளின் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிலிருக்கும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் பாக்டீரியா வளர்ச்சிக்கு நல்ல மூலமாகவும் உள்ளது.
  • இன்றைய காலகட்டத்தில், ஊட்டச்சத்துக் குறைபாடு குழந்தைகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. அது குழந்தைகளை எளிதில் நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாக்குவதோடு, அதிலிருந்து அவர்கள் குணமடைவதற்கான சாத்தியத்தையும் குறைக்கிறது. முக்கியமாக, அவர்களின் வளர்ச்சியையும் அது தடுக்கிறது. குழந்தைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்வதற்கும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சிறுதானிய உணவு பெரிதும் உதவும்.

நன்றி: தி இந்து (25 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்