TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான மூன்றாம் வெளி

July 24 , 2022 746 days 449 0
  • கடந்த வாரம் தன்னார்வலர்களுடனான உரையாடலில் பெரியவர்களுக்கான மூன்றாம் இடம் குறித்துப் பேச்சு வந்தது. பெரியவர்களுக்கு மூன்றாம் இடம் என்கிற ஒன்று உண்டு. நச்சரிப்பாக அவர்கள் கருதும் வீட்டையும், உழைப்பைச் சுரண்டும் வேலைத்தளத்தையும் விடுத்து, ஒரு இடத்தைப் பெரியவர்கள் கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். இது பாலினத்தைப் பொறுத்து வேறுபடக் கூடியது.
  • ஆண்களுக்கான மூன்றாமிடமாக எடுத்த எடுப்பில் ‘ஒயின் ஷாப் சார்’ என்றார் ஒரு பெண். டீக்கடை, பார்பர் ஷாப் என பட்டியல் நீண்டது. பெண்களுக்கான மூன்றாமிடங்கள் குறித்துப் பேசும்போது, இடங்களுக்கான உதாரணங்களைவிட, அப்படிப் புதிய இடங்களை உருவாக்க வேண்டிய தேவைகளைக் கவனிக்க முடிந்தது.
  • உரையாடலில் மூன்றாம் இடங்களாகப் பேசப்பட்ட யாவும் பெரும்பாலும் அரட்டைத் தளங்களாகவே இருந்தன. பெண்களுக்குக் கோயில் இருந்ததைக் கவனிக்க முடிந்தது. சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், மூன்றாவது இடம் என்பது ஆசுவாசம் கொள்வதற்கான ஓர் இடம்.

வீடும் பள்ளியும்

  • சரி, குழந்தைகளுக்குப் ‘பள்ளிக்கூடம் - வீடு’ ஆகிய இரண்டையும் தாண்டி மூன்றாவதாக ஓர் இடம் இருக்கிறதா?
  • பள்ளியால் ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்துக்கும் இடமளிக்க முடிவதில்லை. ஒரு சில அளவுகோல்களை மட்டுமே வைத்துக்கொண்டு, மொத்தக் குழந்தைகளையும் அது வரிசைப்படுத்திவிடுகிறது. தேர்வும் மதிப்பீடும் சிலரை மட்டும் உயர்த்தி, பலரின் தனித்திறன்களைக் கண்டறியாமலேயே கும்பலாக வெளியேற்றிவிடுகிறது.
  • வாழும் ஒவ்வொரு குழந்தையும் முக்கியம். ஒவ்வொரு குழந்தைக்குமான கற்றல் நலனுக்குப் பள்ளி என்கிற அமைப்பு மட்டும் இங்கு போதாது. வீடும்கூட எதிர்பார்ப்பைத் திணித்தே பழகிவிட்டது. அனைத்துக் குழந்தைகளும் இயல்பாக வெளிப்பட, பிடித்ததைப் பேச, விருப்பமுள்ளதைத் தெரிந்துகொள்ள - தேர்வுகளற்ற சுதந்திரமான கற்றல் வெளியை உருவாக்க வேண்டிய பெருங்கடமை சமூகத்துக்கு இருக்கிறது. அதற்குப் பள்ளியையும் வீட்டையும் தாண்டி மூன்றாவதாக ஓர் இடம் என்பது சமீபகாலமாகத் தீவிரமாக உணரப்பட்டுவருகிறது.
  • குழந்தைகளுக்கான மூன்றாம் இடம் என்பது ஆசுவாசம் கொள்வதற்கான ஓர் இடம்தான். ஆனால், அத்துடன் கற்றல் வாய்ப்புகளையும் அது பெரிதாகக் கொண்டிருக்கிறது. எவ்விதத்திலும் வற்புறுத்தல் இல்லாதது. முக்கியமாகக் கொண்டாட்டத்துடன் கூடியது. சுவர்கள் அற்றது.
  • குழந்தைகளை மதிப்பீடு செய்யாதது. எந்தப் பதிவேடுகளுக்கும் இடமற்றது. ஆசிரியர் என்பவரை வெறும் வயதில் மூத்தவராக மட்டுமே கொண்டது. சில நேரம் இந்த வரையறையும்கூட மாறலாம். தீர்மானிக்கப்படாத / தீர்மானிக்கக் கூடாத ஒன்றாகவே அவை அமைய வேண்டும்.
  • கல்வியில் மூன்றாவது இடம் குறித்த பேச்சுகளும் பரிசோதனைகளும் உலக நாடுகளில் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் இப்பேச்சைத் தொடங்கி வைத்தவர், மூத்த கல்வியாளர் ச.மாடசாமி. மூன்றாம் இடங்கள்தான் முதல் இரண்டு இடங்களான பள்ளிக்கூடத்தையும் வீட்டையும் பலப்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகிறார் அவர்.
  • 1989 இல் ரே ஓல்டன்பெர்க் என்பவர் The great good place எனும் நூல் வழியாகச் சமூகத்தில் மூன்றாம் இடங்கள் குறித்த பேச்சைத் தொடங்கிவைத்தார். யாஹ்யா.ஆர் & வூட்.., என்பவர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கான மூன்றாம் இடமாக விளையாட்டை முன்வைத்து ஆராய்ந்தார்கள்.
  • மைதானம் என்பது பெரியவர்கள் தலையீடின்றிப் பிள்ளைகள் இயல்பாகத் துள்ளிக் குதிக்கும் இடம். அங்கு ஆடும் விளையாட்டையும் அதற்கான விதிகளையும்கூட அவர்களே உருவாக்கிக்கொண்டால், அதுவே மூன்றாம் இடம். பல விளையாட்டுகளை ஆடிக்கொள்ளும் வாய்ப்பும் சுதந்திரமும் உள்ள மைதானம் மூன்றாம் இடத்துக்கான எளிய குறியீடு.
  • நாங்கள் படிக்கும்போது ‘தட்டுப் பந்து’ எனும் ஒரு விளையாட்டை விளையாடுவோம். அது கூடைப்பந்து மைதானத்தில் இருக்கும் வரை, கோடுகளைப் பயன்படுத்தி நாங்களே உருவாக்கிக்கொண்ட ஆட்டம். ஒரு கிரிக்கெட் பந்து போதுமானதாக இருந்தது. விதிகளும்கூட நாங்களே அமைத்தவை.
  • ஆள் எண்ணிக்கை குறைந்தால் விதிகளை மாற்றிக்கொள்வோம். அங்கு நடுவர் இல்லை. விளையாட்டின் நேரத்தையும், ஆடுபவர்களின் எண்ணிக்கையையும், விதிகளையும் நாங்களே முடிவு செய்துகொண்டோம். நாங்களே முடிவுசெய்திடும் சூழல்தான் சந்தோஷத்தை மையப்படுத்தி, நாங்களே ஒன்றை வடிவமைக்கக் காரணமானது.
  • தலையீடற்ற சுதந்திர வெளி சிக்கலின்றி விதிகளை உருவாக்கும் அறிவைத் தந்திருந்தது. அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட விளையாட்டை முழுமையான மூன்றாம் இடமாகக் கொள்ளவும் முடியவில்லை. திட்டமிட்டு உருவாக்கி, கண்காணித்து - வெற்றி-தோல்வியை அறிவிக்கும் ஒரு விளையாட்டை எல்லாருக்குமான மூன்றாமிடமாகக் கொள்ள முடியவில்லை.
  • அவ்விளையாட்டை விரும்பாத குழந்தைகளையும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளையும் உள்ளடக்கி யோசிக்கும்போது புரியும். எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒருவிதத்தில் அடைத்துவைக்கும், தடையாக இருக்கும் சுவரற்ற தன்மையை முக்கியக் கூறாகக் கொண்ட ஒன்றை மூன்றாம் இடம் எனலாம்.

துளிர் இல்லங்கள் ஒருவகை மாதிரி

  • பத்தாண்டுகளுக்கு முன்பு கூடலூரில் நான் நடத்திய குழந்தைகளுக்கான துளிர் இல்ல அனுபவங்கள் மூன்றாமிடத்துக்கான அர்த்தங்களைக் கொணர்கின்றன. அங்குதான் பள்ளி குறித்த அபிப்ராயங்களை மாணவர்கள் வெளிப்படையாகக் கொட்டினார்கள்.
  • வீட்டின் நிஜ முகத்தை ரகசியமாய்ப் பேசிக்கொண்டார்கள். அதில் ஐந்து மாணவர்கள் தாங்களாகவே உள்ளூர் ஆய்வு நோக்கி நகர்ந்திருந்தார்கள். ஒரு மாணவர் மட்டும் ஓவியத்தின் பக்கமாய் வளர்ந்து கொண்டிருந்தார். ஒரு செடி வளர்வதைப் போல அவர்கள் இயல்பாக வளர்வதைப் பார்த்தேன். அது மூன்றாம் இடம்தான்.

இல்லம் தேடிக் கல்வி மூன்றாம் இடமா?

  • இல்லம் தேடிக் கல்வித் திட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும்கூட, தமிழகத்தில் முக்கியமான கல்வியாளர்கள் தொடர்ந்து ஆதரித்துவருகிறார்கள். அத்திட்டம், தமிழகத்தில் இரண்டு லட்சம் தன்னார்வலர்களை அடையாளம் கண்டது. அத்திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம்பகவத் ஐஏஎஸ், ‘‘இவ்வெண்ணிக்கையில் கால் பங்கு செயல்பட்டால்கூடக் குறைந்தபட்சம் 12 லட்சம் குழந்தைகள் பலனடைவார்கள்’’ எனத் தொடக்க விழாவில் கூறினார்.
  • இத்திட்டத்துக்கெனப் பாடத்திட்டமும் செயல் வடிவமும் உண்டு. ஆக, இது மூன்றாம் இடமில்லை. ஆனாலும் மூன்றாம் வெளியாக மாறுவதற்கான எல்லாச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது.
  • பின்னொரு நாள், இத்திட்டம் முடிவுக்கு வந்த பின்பும் சில ஆயிரம் தன்னார்வலர்கள் அதே பணிகளை ஏதோ ஒரு வகையில் தொடர்வார்கள் என நம்ப முடிகிறது. தனக்கு அருகில் உள்ள குழந்தைகளுடைய கல்வியின் நலனில் அக்கறையுடைய இளைஞர் கூட்டத்தை இத்திட்டம் கண்டறிந்துள்ளது. அருகமைக் குழந்தைகளின் கல்வியில் பங்கெடுக்கும் ஒரு மனப்பான்மை உருவாகியிருக்கிறது.
  • இந்த மனப்பான்மைதான் இதில் முக்கியமானது; வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. இத்திட்ட நிறைவுக்குப் பின் தன்னார்வலர்களிடம் வரும் குழந்தைகளால் அவ்விடம் மூன்றாம் வெளியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
  • பதினைந்திலிருந்து, இருபது வரையிலான குழந்தைகள் என்கிற அளவில் சின்னச் சின்னக் குழுக்களாக உருவாக வேண்டும். குழந்தைகள் தாங்களாகவே துளிர்க்க ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தரும் ஒரு ஆர்வலர் வேண்டும். குழந்தைகள் விரும்பும் வளங்களை ஏற்படுத்தித் தர உரிய தொடர்புகளும், வளங்கள் மிக்க ஓர் அமைப்பும் தேவை.
  • தன்னார்வ அமைப்புகள் இப்படியான மூன்றாம் வெளியை முயன்று பார்க்க முடியும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிற துளிர் இல்லங்களும், சிட்டுக்கள் மையம், இரவுப் பள்ளி போன்ற முந்தைய முயற்சிகளும், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் நடத்திக் காட்டிய வீதி வகுப்பறைகளும் மற்றும் பிற பாலர் அமைப்புகளும் குழந்தைகளுக்கான மூன்றாம் இடத்தைச் சாத்தியப்படுத்த வாய்ப்புள்ள உதாரணங்கள்.
  • இந்தியக் கல்வி வரலாற்றில் மூன்றாம் வெளிக்கான மாதிரிகளை உருவாக்கிக் காட்டிய மாநிலமாகத் தமிழகம் உருவாக வேண்டும். அதற்கான அர்ப்பணிப்பும் தகுதியும் நமக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை. முன்கை எடுக்க வேண்டியது மட்டுமே பாக்கி.

                                                                                                                                                                                                                                                         நன்றி: தி இந்து (24 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்