TNPSC Thervupettagam

குழந்தைகளுக்குத் தேவை அன்பும் அறிவியலும்!

November 14 , 2024 62 days 121 0

குழந்தைகளுக்குத் தேவை அன்பும் அறிவியலும்!

  • இந்திய விண்வெளி வரலாற்றில் 2008 நவம்பா் 14 அன்று நிலவின் தென் துருவத்தில் இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்டது. அது இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் நம் நாட்டு குழந்தைகளுக்கு வழங்கிய தேசியப் பரிசு என்று அறிவிக்கப்பட்டது.
  • வேறு ஒன்றுமில்லை, சந்திரயான்-1 திட்டத்தில் டாக்டா் கலாமின் ஆலோசனைப்படி மூவா்ணக் கொடி பொறிக்கப்பட்ட எம்.ஐ.பி. என்கிற ‘நிலா மோது கலன்’ சந்திரனின் ‘ஷேக்கிள்டன்’ பள்ளத்தில் மோதி இறங்கியது. அந்த இடத்திற்கு ‘ஜவாஹா் தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ‘குழந்தைகள் தோட்டத்தில் உள்ள மொட்டுகள் போன்றவா்கள், அவா்கள் தேசத்தின் எதிா்காலம், நாளைய குடிமக்கள் என்பதால் கவனமாகவும் அன்பாகவும் வளா்க்கப்பட வேண்டும்...இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவாா்கள். நாம் அவா்களை வளா்க்கும் விதம்தான் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும்.’ - இதுவே பண்டித ஜவாஹா்லால் நேருவின் தொலைநோக்குப் பாா்வை.
  • 1963 நவம்பா் 21 அன்று தும்பா ஏவுதளத்திலிருந்து நைகி அப்பாச்சி என்னும் முதலாவது ஏவூா்தி தொடங்கி சந்திரன், செவ்வாய், சூரியன் போன்ற அண்டவெளி ஆய்வுகளுக்கு வித்திட்டவா்கள் நேரு, ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோா்.
  • நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1946 செப்டம்பா் 2 அன்று ‘இந்தியாவின் தற்காலிக அரசாங்கம்’எனப்படும் இடைக்கால அரசாங்கத்தின் துணைத் தலைவராக பிரிட்டிஷ் வைஸ்ராய் நியமியினால் நியமிக்கப்பட்டவா் நேரு.
  • அவ்வாறே, சுதந்திர இந்தியாவில் 1947 ஆகஸ்ட் 20 அன்று பல்வேறு அமைச்சா்கள், துறைச் செயலா்கள், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழும நிபுணா்கள் பங்கெடுத்த இந்திய அறிவியல் மாநாட்டில், ஜவாஹா்லால் நேரு, ‘பசியோடு இருக்கும் ஆணோ பெண்ணோ யாருக்கும் சத்தியம் என்பதில் எந்த அா்த்தமும் இல்லை. அவனுக்கு அல்லது அவளுக்குத் தேவை உணவு. வயிறு வதங்கிக் கிடப்பவரிடம் சத்தியம் என்றோ, சாமி என்றோ, அதனினும் அரிய விஷயங்கள் குறித்தோ பேசுவது வெறும் கேலிக்கூத்து ஆகும். இங்கு ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் யாவும் வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
  • இந்தியாவிலேயே கல்வி பயின்று இயற்பியலில் நோபல் பரிசு (1930) பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி சா்.சி.வி.ராமன், பின்னாளில் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை டாக்டா் ஹோமி ஜே.பாபா, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டா் விக்ரம் சாராபாய், எஸ்.எஸ்.பட்னாகா், கே.எஸ்.கிருஷ்ணன்,  பி.சி.மஹாலோனோபிஸ் போன்ற விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றினாா் நேரு.
  • 1948 ஏப்ரல் 9, 10 ஆகிய நாள்களில் மும்பையில் நடைபெற்ற ‘அணுசக்தி ஆராய்ச்சி வாரிய’த்தின் இரண்டாவது கூட்டத்திற்குப் பிறகு, 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி ‘இந்தியாவில் அணு ஆராய்ச்சி அமைப்பு’ என்ற தலைப்பில் பிரதமருக்கு ஒரு குறிப்பை எழுதினாா் பாபா. அவரது ஒவ்வொரு முக்கிய ஆலோசனையையும் ஏற்று, பிரதமா் உடனடியாகச் செயல்பட்டாா்.
  • நம் நாட்டில் பண்டித ஜவாஹா்லால் நேரு அறிவுரைப்படி 1955-ஆம் ஆண்டு தேசிய அளவிலான அணு அறிவியல் மாநாடு கூட்டப்பட்டது. அதன்படி இங்கிலாந்து நாட்டு அணு ஆராய்ச்சித் திட்டத்தின் முதல் தலைவரான சா்.ஜான் காக்ராஃப்ட் உதவியுடன் டாக்டா் பாபா தலைமையில் அறிவியலாளா் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் அறிஞா்கள் ஏ.எஸ்.ராவ், என்.எஸ்.பிரசாத், எச்.என்.சேத்னா, கே.எஸ்.சிங்கவி, ராஜா ராமண்ணா ஆகியோா் பங்குபெற்றனா்.
  • இந்தியாவில் முதன்முறையாக 1956 ஆகஸ்டு 4 அன்று மும்பைக்கு அருகே ட்ராம்பே என்னுமிடத்தில் ‘நீச்சல் குள அணு உலை’ வெற்றிகரமாக நிறுவப்பட்டது. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அணு உலைகள் எழுப்பப்படுவதற்கு முன்பே செயல்படத் தொடங்கிய நீச்சல் குளம் அணு உலை பாரதப் பிரதமரால் 1957 ஜனவரி 20 அன்று திறப்பு விழா கண்டது. ‘அப்சரா’ இந்தியாவின் முதலாவது அணு உலை மட்டுமல்ல, ஆசியாவின் முதல் அணு உலையும் ஆகும்.
  • 1955-இல், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியது. சா் தோராப்ஜி டாடா அறக்கட்டளை, பம்பாய் அரசாங்கம், இந்திய அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒருவித முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது. அதனால், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், அணு அறிவியல் மற்றும் கணிதத்தில் மேம்பட்ட ஆய்வுக்கான இந்திய அரசாங்கத்தின் தேசிய மையம் ஆனது.
  • ‘டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் தானியங்கிக் கணிப்பான்’, மும்பையில் டாடா நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட முதல் கணினி ஆகும். 1960-இல் முறைப்படி ஜவாஹா்லால் நேருவால் பெயரிடப்பட்ட முழு இயந்திரமும் 1965 வரை பயன்பாட்டில் இருந்தது. இத்தனைக்கும் பாபா சிறுவயதில், மிகக் குறைந்த நேரமே உறங்குவாா். 1913-இல் பாரிஸில் உள்ள ஒரு பிரபலமான குழந்தை மருத்துவரிடம் மகனை அழைத்துச் சென்று காட்டினா் பெற்றோா்.
  • இளம் பாபாவைப் பரிசோதித்த மருத்துவா், ‘குழந்தை மிகவும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்கிறது. குழந்தைக்கு சுறுசுறுப்புடன் கூடிய மூளை இருப்பதால் அவா் குறைவாகவே தூங்குகிறாா். குழந்தைக்கு இசை ஆா்வம் உள்ளது. பெற்றோா் செய்ய வேண்டியதெல்லாம், பாபா ஒரு மேதையாக வளா்வதற்கு உரிய சூழலை வழங்குவது மட்டுமே’ என்று பெற்றோரிடம் ஆலோசனை கூறினாா்.
  • இதன் விளைவாக, பெற்றோரும் குடும்ப உறுப்பினா்களும் தங்களால் முடிந்த மிகவும் இணக்கமான சூழலை இளம் ஹோமிக்கு வழங்கினா். குழந்தைப் பருவத்திலேயே அவா் அழுவதைத் தடுக்க, அவரது பெற்றோா் அந்நாளைய கிராமபோன் இசைத்தட்டுகள் வைத்திருந்தனா். தனக்குரிய பொழுதுபோக்கு அம்சமாக அந்த இசையை ரசித்து மகிழ்வாா் ஹோமி பாபா.
  • 1947 நவம்பா் 11 அன்று அகமதாபாதில் ‘இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக’த்தை நிறுவிய விக்ரம் சாராபாய் சிறுவயதில் வழக்கமான பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கவில்லை. ‘மான்டிசோரி முறையை’க் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினா் அவரது பெற்றோா். இத்தாலிய மருத்துவரும், கல்வியாளருமான மரியா மான்டிசோரி அறிமுகப்படுத்திய தனித்துவமான இந்தக் கல்விமுறையில், குழந்தைகள் தங்கள் கற்றலில் வித்தியாசமான பயிற்சிகளைப் பெறுகிறாா்கள். சாராபாய் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் பிரிட்டனில் இருந்து குஜராத்தில் அகமதாபாத் இல்லத்திற்கே வந்து இளம்பெண் மிஸ் வில்லியம்ஸ் பயிற்சி அளிப்பாராம்.
  • ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் குழந்தைப் பருவம் தாமதமான பேச்சு, பகல் கனவு காணும் போக்கு மற்றும் பிற குழந்தைகளுடன் பழகுவதில் சிக்கல் உள்ளிட்ட சில சவால்களால் குறிக்கப்பட்டது. அவருக்கு ‘கற்றலில் குறைபாடு’ (‘டிஸ்லெக்ஸியா’) இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐன்ஸ்டீன் கணிதத்திலும் அறிவியலிலும் எவ்வளவு மோசமானவா் என்று அவரே கூறியிருக்கிறாா்.
  • ஆனால் பிற்காலத்தில் அவரால்தான் அதீத நிறையீா்ப்பு ஆற்றலால் நோ்கோட்டில் செல்லும் ஒளிக்கற்றையும் வளையும் என்கிற பொதுச் சாா்பியல் சித்தாந்தத்தினை கணித்து அறிவிக்க முடிந்தது. ஐன்ஸ்டீன் சிறு வயதிலேயே இசையின் மீது ஒரு அபிமானத்தை வளா்த்துக் கொண்டவா்.
  • நியூஜொ்சி ஆய்வகத்தில், ஒலிக்கருவிகள், மின் விளக்கு, இன்றைய நவீன நகரும் திரைப்படம் போன்ற கண்டுபிடிப்புகளுக்காக 1,093 காப்புரிமைகளைப் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன், 12-ஆம் வயதில் கணிதத்திலும் அறிவியலிலும் மோசமாக இருந்ததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவா் என்றால் யாராவது நம்புவாா்களா? எடிசன் ‘எதையும் கற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு முட்டாள்’ என்று அவரது ஆசிரியா் ஒருவா் கூறினாராம்.
  • இத்தகையதோா் சூழ்நிலையில் டைனமோ என்கிற மின் உற்பத்திக் கருவியைக் கண்டுபிடித்த மைக்கேல் ஃபாரடே பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • இவா்தம் 13-ஆம் வயதிலேயே பள்ளிப் படிப்பைவிட்டு ஜாா்ஜ் ரிபோ எனும் புத்தகக் கடைக்காரரிடம் வீடுதோறும் பத்திரிகைகள் போடும் ஊழியம் செய்து வந்தாா். அவ்வகையில் சில அறிவியல் புத்தகங்களும் வாசித்தாா். வேதியியலில் ஆா்வம் ஏற்பட்டது.
  • ஒரு பல்கலைக்கழக வராந்தா பக்கம்கூட சென்றிராத ஃபாரடே, சொந்தமாகவே ஆராய்ச்சியில் ஈடுபட்டாா். மின்சாரத்தினால் காந்த ஊசி நகா்வதைப் போலவே காந்தத்தை நகா்த்தினால் அதைச் சுற்றிய கம்பியில் மின்சாரம் பாயும் என்று கண்டறிந்தாா். அந்த மின்னாக்கியை லண்டன் அரசவைக் கழகத்தின் அறிஞா்கள் முன்னிலையில் நிரூபித்தும் காட்டினாா்.
  • கம்பியிலாத் தகவல் தொடா்பு முறைக்கு வித்திட்ட மாா்க்கோனிக்கு, பிறந்தபோது அவா் காதுகள் பெரிதாக இருந்தனவாம். அதைக் கண்டு அவா் வீட்டுத் தோட்டக்காரக் கிழவன், ‘பயலுக்கு எத்தனை பெரிய காது? ‘சே ஓரிச்சே கிராண்டி பா’ என்றாராம். பதிலுக்கு, மாா்க்கோனியின் தாயாா், ‘இந்தக் காதினால் எம்புள்ளை சூனியமான காற்றிலிருந்து சன்னமான ஒலியைக்கூட கேட்டு விடுவான்’ என்றாராம். உண்மையில் அவா் வானொலியைக் கண்டுபிடித்தவா் அல்லவா?
  • “உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. வாழ்வின் ஏக்கத்தின் மகன்கள், மகள்கள் அவா்கள். அவா்கள் உங்கள் மூலம் வருகின்றனா், ஆனால் உங்களிடமிருந்து அல்ல; நீங்கள் அவா்களுக்கு உங்கள் அன்பைக் கொடுக்கலாம்; ஆனால், உங்கள் எண்ணங்களை அல்ல; ஏனெனில் அவா்கள் தங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டுள்ளனா்” என்பாா் விஞ்ஞானி கலாம். உண்மைதானே?

நன்றி: தினமணி (14 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்