TNPSC Thervupettagam

குழந்தைகளைப் புரிந்து கொள்வோம் - பாராட்டப் பழகுங்கள்

July 16 , 2023 545 days 318 0
  • பாராட்டுதல் என்பது மனிதர்களின் உன்னதமான குணங்களில் ஒன்று. பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. உங்கள் அலுவலகத்தில் மேலாளர் உங்களை அழைத்துப் பாராட்டினால் உங்களுக்குள் ஏற்படும் களிப்பை எண்ணிப் பாருங்கள்; பாராட்டினால் ஏற்படும் மகிழ்ச்சி எத்தனை பரவச மானது என்பது புலப்படும்.
  • பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்கிற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாகச் செய்வார்கள். இதனால்தான், பாராட்டுரையே தலைசிறந்த ஊக்குவிக்கும் ஆற்றல் என்று உளவியலாளர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், பாராட்டும் பழக்கம் தானாக வருவதில்லை. அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஊக்கமளிக்கும் பாராட்டு

  • சொல்பேச்சு கேட்க மறுக்கும் சிறார்களுக்குப் பாராட்டைப் போலச் சிறந்த ஊக்க மருந்து வேறொன்றும் இல்லை. இந்தப் பாராட்டு மொழி, பல விந்தைகள் செய்யும் ஆற்றல் பெற்றது. சிறார்களைப் பாராட்டும்போது, தாம் பெற்றோரால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்கிற எண்ணத்தை அவர்கள் மனத்தில் அது விதைக்கிறது. இதன் விளைவாகப் பெற்றோர் கூறுவதை அவர்கள் செவிமடுக்கத் தொடங்குகிறார்கள். பெற்றோரின் பாராட்டினால், அவர்களின் தன்மதிப்பும் தன்னம்பிக்கையும் தழைக்கின்றன; அவர்கள் தமது நடத்தையைத் திருத்திக் கொள்ளும் நல்வாய்ப்பைப் பெருக்குகிறது.
  • பாராட்டப்படும்போது உண்டாகும் நல்லுணர்வுக்கும் ஊக்கத்துக்கும் மூளையில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களே காரணம். பாராட்டப்படும்போது நமது மூளையில் வெகுமதிப் பிரிவு (Reward system) என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள நரம்பணுக்கள் தூண்டப்படுகின்றன. இதனால் டோபமைன் போன்ற ஊக்குவிக்கும் வேதிப்பொருள்கள் சுரக்கப்படுகின்றன. பாராட்டுவதால் உண்டாகும் உற்சாகத்துக்கும், அச்செயலை மீண்டும் செய்ய விழைவதற்கும் இதுவே காரணம்.

எப்படிப் பாராட்ட வேண்டும்?

  • பாராட்டும் முறை சரியாகவும் திருத்தமாகவும் இருக்க வேண்டும். அது வெற்றுச் சொற்களாக இருக்காமல், நம்பத்தக்கத்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். அதில் ஓர் உண்மைத் தன்மை இழையோட வேண்டும்; அது அடிமனதிலிருந்து வரவேண்டும்; போலியாக இருக்கக் கூடாது. முக்கியமாக, நன்னடத்தையைக் கண்டவுடனேயே பாராட்ட வேண்டும், தள்ளிப்போட்டால் அதன் தாக்கம் குறைந்துவிடும்.
  • பாராட்டும்போது அவர்கள் எதற்காகப் பாராட்டப்படுகிறார்கள் என்பதையும் வெளிப்படை யாக உணர்த்த வேண்டும். அதாவது, அவர்கள் என்ன காரணத்துக்காகப் பாராட்டப்படுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ‘நல்லது', ‘நீ கெட்டிக்காரன்' என்று பொதுப்படையாகக் கூறுவது மட்டும் போதாது. “நான் தொலைபேசியில் என் தாயோடு பேசிக்கொண்டிருந்தபோது நீ என்னைத் தொந்தரவு பண்ண வில்லை. நீ நல்லபடி நடந்துகொண்டாய்” என்று கூறினால் தான் எதற்காகப் பாராட்டப்படுகிறேன் என்பதைச் சிறாருக்குத் தெளிவுபடுத்தும்; அதே நடத்தையை மீண்டும் மீண்டும் செய்ய ஊக்குவிக்கும்.

பாராட்டின் வகைகள்

  • பாராட்டுதல் பல வகைப்படும். சொற்களால் பாராட்டுவது ஒரு வகை. சொற்கள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழ்வது, மெச்சிப் பேசுவது ஆகியவை பாராட்டின் பல வகைகளே. அதேபோல ஒரு சிறிய புன்னகை மூலம், குழந்தை செய்யும் ஒரு செயலை அங்கீகரிப்பது இன்னொரு வகைப் பாராட்டு. முதுகில் தட்டிக் கொடுப்பது, அணைத்துக் கொள்வது, கைகளைப் பிடித்துக் குலுக்குவது ஆகியவை வேறு பாராட்டு உத்திகள்.

பாராட்டை மழுங்கடிக்கக் கூடாது

  • பாராட்டும்போது உங்களை அறியாமலே நீங்கள் சில தவறுகள் செய்யலாம். உதாரணத்துக்கு, சில பெற்றோர் பாராட்டுரையோடு நிறுத்திக்கொள்வதில்லை. “நீ நன்றாக நடந்துகொண்டாய், ஆனால்......” என்று கூடவே ஒரு நிபந்தனையையும் இணைத்துக்கொள்வார்கள்.
  • நான் தொலைபேசியில் என் தாயோடு பேசிக்கொண்டிருந்தபோது என்னைத் தொந்தரவு பண்ணவில்லைதான், ஆனால் அந்த நேரத்தில் உனது வீட்டுப் பாடங்களைச் செய்திருக் கலாம்” என்று கூறுவது பாராட்டாகாது. அது மறைமுகமாகக் குறை கூறுவதாகவே முடியும். எனவே, பாராட்டும்போது உங்களை அறியாம லேயே அதன் தாக்கத்தை மழுங்கடித்துவிடக் கூடாது.
  • சில நேரம், பெற்றோர் பாராட்டும்போது தம்மை அறியாமலேயே முன்னர் நடந்த அசம்பாவிதமான சம்பவங்களை இணைத்துப் பேசுவதுண்டு. உதாரணத்துக்கு, “நான் தொலைபேசியில் என் தாயோடு பேசிக்கொண்டிருந்தபோது முன்னர் போலத் தரையில் புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் என்னைப் பேசவிட்டாய்” என்று கூறுவது, முன்னர் செய்த ஒரு குற்றத்துக்காகக் குழந்தையைக் கண்டிப்பதாக அமையுமே தவிர, பாராட்டுவதாக இருக்காது.

பிறரிடம் பாராட்டுங்கள்

  • சிறாரைப் பாராட்டுவதில் இன்னொரு வகையும் உண்டு. தன் குழந்தையைப் பிறரிடம் பாராட்டிப் பேசுவதில் பெற்றோருக்கு எப்போதும் ஒரு தனி மகிழ்ச்சி உண்டு. ஆனால், அவ்வாறு புகழும்போது அதைக் குழந்தையின் காதுகளுக்கும் கேட்கும்படி செய்தால், அது ஒரு மறைமுகமான புகழுரையாக அமையும்.
  • அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தைக்கு அது பெருமகிழ்ச்சியளிக்கும், நன்னடத்தையை ஊக்குவிக்கும். “இப்போதெல்லாம் என் மகன்/ள் எதிர்த்துப் பேசுவதில்லை, என்னால் நம்பமுடியவில்லை” என்று அவனுக்கு/அவளுக்குக் கேட்கும்படி கூறுவது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு டானிக்காக இருக்கும். இதைத் திட்டமிட்டு வலிந்து செய்வது, ஒரு சிறந்த உத்தியாகக் கருதப்படுகிறது.

ஆசிரியர்களுக்கும் பொருந்தும்

  • பாராட்டுவது பற்றி இங்கே கூறப்படும் அனைத்தும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் நன்னடத்தையை ஊக்குவிக்க இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை. ஆயினும், இங்கே சொல்லப்படும் பல உத்திகள் வகுப்பறைச் சூழலுக்கும் பொருத்தமானவை. குறிப்பாக, மாண வர்களின் நல்லொழுக்கத்தையும் கற்றலையும் மேம்படுத்த ஆசிரியர் இங்கே கூறப்பட்ட பாராட்டும் முறையைக் கடைப்பிடிக்கலாம்.
  • ஆனால், பெற்றோர் பாராட்டுவதற்கும் ஆசிரியர் பாராட்டுவதற்கும் ஒரு முக்கிய மான வேறுபாடு உண்டு. ஆசிரியர்கள் சிறார்களின் முயற்சியைத்தான் பாராட்ட வேண்டுமே தவிர; அவர்கள் பெறும் மதிப்பெண்களை அல்ல என்பதைக் கல்வி உளவியலாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். இந்த நுட்பமான வித்தியாசத்தை வலியுறுத்துவது ஏன்?
  • ஒரு மாணவர் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு இன்றியமையாத காரணமாக விளங்குவது மாணவரின் விடாமுயற்சியே. இதை ஊக்குவிப்பதே ஆசிரியர்களின் முக்கிய கடமை. படிப்பில் அக்கறை உள்ள ஒரு மாணவன்கூடச் சில நேரம் குறைவான மதிப்பெண்கள் பெறக்கூடும். எனவே மாணவர்களின் கடின உழைப்பைப் பாராட்டுவதை முதன்மைப் படுத்துவது முக்கியம். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அதிக மதிப்பெண்கள் பெறுவது இரண்டாம் பட்சமே.

நன்றி: தி இந்து (16 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்