TNPSC Thervupettagam

குழந்தைகள் கடத்தல்: மனித சமுதாயத்துக்கே அவமானம்

December 30 , 2020 1483 days 674 0
  • சென்னையில் நடப்பாண்டில் மட்டும் 287 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களில் 179 பேர் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோலவே, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 51 பேர் காணாமல் போனதும், அவர்களில் 37 பேர் மட்டும் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
  • குழந்தைகள் கடத்தலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றாலும் இருபாலருமே இக்குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். குற்றங்களிலேயே குழந்தைகள் கடத்தல் மிகவும் கொடுமையானதும் மனித சமுதாயத்துக்கே அவமானம் அளிக்கக்கூடியதுமாகும்.
  • கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இயற்றப்பட்டிருந்தாலும் குழந்தைகள் கடத்தலைக் காவல் துறையால் மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுச் சமூகம் அனைவருக்குமே அதில் பங்கிருக்கிறது.
  • பெண் குழந்தைகள் காணாமல் போவதற்குப் பதின்பருவக் காதல் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் குடும்ப அமைப்பில் பெற்றோர்களுக்கு இடையில் புரிதல் இல்லாமை, தந்தையின் குடிப் பழக்கம், மற்ற குடும்ப உறுப்பினர்கள் அளிக்கும் தொல்லைகள் ஆகியவையும் அதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
  • பள்ளிக்கூடங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் படிப்புத் திறனை வளர்த்தெடுப்பதோடு அவர்களது திசைமாறல்களையும் கண்டறிந்து, உரிய முறையில் நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் இருக்கிறது. குழந்தைகளிடம் உரையாடும்போதும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும். எளிதில் உணர்ச்சிவயப்படும் நிலையில் இருக்கும் வயதில் அவர்களை நோக்கிச் சுடுசொற்களை வீசிவிடக் கூடாது.
  • வீடு, பள்ளிக்கூடம் ஆகியவற்றுக்கு வெளியே பொதுச் சமூகத்துக்கும் குழந்தைகள் வளர்ப்பில் பெரும் பங்கு இருக்கிறது. கடந்த தலைமுறை வரையில் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் வளரும் குழந்தைகளுக்கு அவ்விதமான ஒரு பாதுகாப்பு இருந்தது. ஊரின் மொத்தக் கண்களுமே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தன.
  • பெருநகர வாழ்க்கையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் நிலையில், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே கண்காணிக்கவும் அவர்களைத் தடுமாற்றங்களிலிருந்து பாதுகாக்கவும் முடியாத சூழல் நிலவுகிறது.
  • இந்நிலையில், நாம் வாழும் சூழலில் நாம் காண நேரும் சிறுவர், சிறுமியர்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை உடனடியாகக் காவல் துறையினரிடம் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். சமூக விரோதிகள் எனச் சந்தேகம் கொள்ளத் தக்கவர்களுடன் அவர்கள் பழகுவதற்கான வாய்ப்புகளே இருக்கக் கூடாது.
  • காணாமல் போகும் இருபால் குழந்தைகளுமே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் அபாயங்களும் இருக்கின்றன. அவர்கள் பிச்சையெடுக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் அவர்களைக் கடத்திவைத்துப் பணம் பறிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், குற்றவாளிகளின் விசாரணைக் காலத்தை நீட்டிக்கவிடாமல் தனிநீதிமன்றங்களை உருவாக்க வேண்டிய அவசியமும் எழுந்திருக்கிறது.
  • அதைப் போலவே, தற்பாதுகாப்பு சார்ந்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்றைய நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் பதின்பருவக் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்கூட விழிப்புணர்வு அவசியமாக இருக்கிறது.

நன்றி: தி இந்து (30-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்