TNPSC Thervupettagam

குழந்தைகள் பேசிட உதவுவோம்

May 1 , 2022 828 days 404 0
  • கடந்த இரு ஆண்டுகளாக, உலகெங்கும் உள்ள மக்களின் பொருளாதாரத்தையும், சமூக உறவுகளையும் கரோனா தீநுண்மி கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, மழலையர் பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டு, அண்மையில்தான் திறக்கப்பட்டுள்ளன. அதனால், குழந்தைகளிடம் இனம் தெரியாத கவலையும், பயமும் இன்னும் காணப்படுகின்றன. அதனால், அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை அளிப்பதில் சில பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • ஆலோசனைகள் வெற்றிகரமாக குழந்தைகளை சென்றடைய, குழந்தைகள் மனம் விட்டு பேச வேண்டும். இந்த சிக்கலான நிலையில் குழந்தைகளின் பேசும் திறன் மட்டுமே, அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்க உதவும். நமது கல்வி முறையின் அடித்தளம் இவர்கள். இன்றைய குழந்தைகளின் எதிர்காலம்தான் நம் நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்கள் முன்னுரிமை கொடுத்து கவனிக்கபடவேண்டியவர்கள்.
  • ஆனால், சமுதாயத்தில் கூட்டுக் குடும்ப முறை ஏறத்தாழ மறைந்து விட்ட நிலையில், வீட்டுக்கொரு குழந்தை என்ற நிலை உருவாகி வருகிறது. தனிக்குடும்ப வாழ்க்கை அமைப்பில், கணவன் - மனைவி இருவரும் பணிக்கு செல்ல நேரிடுவதால், அவர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால், குழந்தைகள் அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்து போகிறது.
  • எனவே, இவ்வகை குழந்தைகள் பேச வெகு நாட்களாகின்றன. பெரும்பாலும் தனித்தே இருக்கும் இக்குழந்தைகளுடன் பேச எவருமில்லாத காரணத்தால் பேசத்தொடங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இது பெற்றோருக்கு கவலையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இது ஒரு சமூக பிரச்னையாக மாறிவருகிறது.
  • குழந்தைகள் பேசுவது அவர்களின் மரபுவழி, வளரும் சூழல்களுக்கேற்ப மாறுபடுகின்றது. மூன்று வயது முடிந்தும் பேசாத குழந்தைகளை உடனடியாக பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதற்கான காரணங்களை கண்டறிவது நல்லது. பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதம் ஏற்படலாம். அவர்களுக்கு உடனடிசிகிச்சை தேவை.
  • பெற்றோர்கள் தமது குழந்தைகளின் மழலைப் பேச்சில் மயங்கிப் போகும் காலங்கள் மிகவும் இனிமையானவை. தாய் பேசும்போது அவரின் உதட்டசைவுகளைக் கூர்ந்து கவனித்து குழந்தைகள் பேச முற்படுகின்றனர்.
  •  இந்த நிலையில் குழந்தைகள் தமது தாய்மொழியைக் கற்பதற்கு அவர்களின் அன்னையின் பங்கும் தந்தையின் பங்கும் மிகவும் முக்கியமானவை. எனவே அவர்கள் கணிசமான நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு அவர்கள் பேசுவதற்கான தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • எப்போதும் வேலை வேலை என்று இருக்கும் பெற்றோரின் குழந்தைகள், ஒற்றைப்பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள், அன்றாடம் குடும்பப் பூசல்களிடையே வளரும் குழந்தைகள் ஆகியோர் பேச வெகு நாட்களாகும். எந்தவிதக் காரணமாக இருந்தாலும், நம்மால் நிச்சயம் குழந்தைகளைப் பேச வைக்க முடியும்.
  • குழந்தைகள் பேசுவதற்கான சூழலை முதலில் பெற்றோர் குடும்பத்தில் ஏற்படுத்தி தரவேண்டும். குழந்தையை அனைவருடனும் பழக விடுவதன் மூலம் பெற்றோர் முயற்சியில்லாமலே அவர்களை பேச வைத்திட முடியும். மற்ற குழந்தைகளுடன் சுதந்திரமாக விளையாடும்போது அவர்களுக்கு பேச்சு தானாகவே வரும். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் மற்றவர்களிடம் பேசுவதற்கான தேவையை ஏற்படுத்த முடியும்.
  •  யாரேனும் பேசும்போதுதான் குழந்தைகள் அதைப் பார்த்து பேச கற்றுக் கொள்ள முடியும். குழந்தைகளுக்கு என்ன புரியப் போகின்றது என்று எண்ணி விடாதீர்கள். நீங்கள் என்ன கேட்டாலும், அவர்கள் அதற்கு பதில் அளிக்க முயல்வார்கள்.
  • நம் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் சுட்டிக்காட்டி குழந்தைகளுக்கு பேசக் கற்று கொடுப்பது நல்ல தொடக்கமாக அமையும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற குடும்ப உறவு முறைகளையும் எப்போதும் கூறி, அவர்களையும் சொல்ல வைக்கலாம். இதுவே குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.
  • இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் போது கதைகளை சொல்லி தூங்க வைக்கலாம். இதுவும் குழந்தையின் பேச்சுத்திறனை முன்னேற்றும். இதனால் உடனடி வேறுபாட்டைக் காண முடியாது. என்றாலும் உங்களுக்கு அவர்கள் பேசுவதில் மனநிறைவு கிடைக்கும் வரை முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள். ஆடு, மாடு, நாய், பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள்.
  • எளிய குழந்தைப் பாடல்களை, குழந்தைகள் சாப்பிடும் போது பாடிக் காட்டலாம். இதை திரும்பத் திரும்பக் கேட்கும்போது அவர்களும் ஒரு நாள் அதைப் பாடுவார்கள். அவர்கள் கேட்டு திரும்பச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் ஒரு நாள் நிச்சயம் சொல்லுவார்கள். குழந்தைகளை பேச வைக்க இதுவும் ஒரு வழியாகும். வெறும் பேச்சு மட்டும் போதாது. அவர்களையும் மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லுங்கள்.
  • சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள். அது அக்குழந்தையின் பெயராகக் கூட இருக்கலாம். அந்தப் பெயரை இரவு நேர கதைகளில் பயன்படுத்தலாம். இதையெல்லாம் கேட்கும் குழந்தைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியும் அவர்களை விரைந்து பேசச் செய்ய நம்மால் முடியும்.
  • குழந்தைகள்தான் நமது எதிர்கால நம்பிக்கை. அவர்களின் மொழித்திறனும், பேச்சுத்திறனும் அவர்களின் ஆளுமைக்கு மேலும் மெருகு சேர்க்கும். அவர்களை வழிநடத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் உள்ளது. நல்ல பேச்சாற்றல் பெறுவது, பின்னாளில் அவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண உதவும். அதனால் நல்ல சமுதாயம் உருவாகும்.
  •  எனவே இனியாவது குழந்தைகள் சுதந்திரமாக பேசுவதற்கு நாம் உதவிடுவோம்.

நன்றி: தினமணி (01 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்