TNPSC Thervupettagam

குழந்தைகள் வளர்ப்பில் ஊட்டச்சத்தின் அவசியம்

September 30 , 2023 469 days 367 0
  • பிடித்த உணவு என அதிகம் உட்கொண்டாலோ, பிடிக்காத உணவு எனக் குறைவாக உட்கொண்டாலோ உடலில் உபாதைகள் உண்டாகும் என்றும் திருக்குறள் கூறுகிறது.
  • ஊட்டச்சத்தில் பெரிய பங்கு இல்லாத உணவு வகைகளால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது என அலட்சியமாக இருப்பது தவறு. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவுப் பற்றியும் அதனால் கிடைக்கும் ஆற்றல் பற்றியுமான புரிதல் அவசியம். குறிப்பாக, உணவு சார்ந்து பெண்கள் அதிக அலட்சியமாக இருக்கிறார்கள்.

பருமன் ஆரோக்கியமல்ல

  • நம் மக்களைப் பொறுத்தவரை நன்கு பருமனாக உள்ள குழந்தைகளே ஊட்டச்சத்துள்ள ஆரோக்கியமான குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள். இது தவறான எண்ணம். எந்தக் குழந்தையால் நோயின்றி தன்னுடைய அன்றாட பணியைச் செய்ய முடிகிறதோ அதுவே ஆரோக்கியம்.
  • இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுஎன்றால் அது ரத்த சோகையாக மட்டுமே பெரும்பாலும் கருதப் படுகிறது. ஆனால், ஒவ்வொருவரின் வயது வித்தியாசத்திற்கு ஏற்ப ஊட்டச்சத்தின் தேவை மாறுபாடுகிறது.

பச்சிளம் குழந்தையின் தேவை

  • எந்தக் காலத்திலும் பச்சிளம் குழந்தைக்கு ஊட்டச்சத்துத் தேவைக்கு ஈடுகொடுப்பது தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் ஒன்று மட்டுமே குழந்தையின் முதல் ஆறு மாத கால வளர்ச்சிக்குப் போதுமானது, இன்றியமையாதது. தாய்ப்பாலூட்டுதல் பற்றிப் போதிய விழிப்புணர்வு பரப்பப்பட்டும், பல்வேறு காரணங்களால் முறைப்படி அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

தாய்ப்பால் ஏன் அவசியம் 

  • குழந்தை பிறந்ததற்குப் பிந்தைய முதல் மூன்று நாள்களில் சுரக்கும் சீம்பால் (colostrum) எனும் மஞ்சள் நிற திரவம் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்ட செல்கள் உள்ளடங்கியதாக இருக்கும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சுரக்கும் பாலில் அதிகளவு கொழுப்புச் சத்தும், லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை சத்தும் இருக்கும்.
  • அடுத்த மூன்று வாரங்களில் சுரக்கும் தாய்ப்பால் நீர்த்தன்மை மிகுந்து இருந்தாலும், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாக இருக்கும். தாய்ப்பால் ஊட்டும் 20 நிமிடங்களில் முதல் சில நிமிடங்களில் கிடைக்கும் பாலும், கடைசி நிமிடங்களில் கிடைக்கும் பாலும் குழந்தைக்கு மிக முக்கியமானது.
  • அதாவது முதலில் சுரக்கும் பாலில் உள்ள அதிகளவு நீர்த்தன்மை குழந்தையின் தாகத்தை சரிசெய்வதாகவும், கடைசியாகச் சுரக்கும் பால் அதிகளவு ஆற்றலைக் கொடுக்கக் கூடியதாகவும், குழந்தைக்குத் தாய்ப்பால் குடித்த நிறைவை தரக்கூடியதாகவும் அமையும்.

தாய்ப்பால் அதிகரிக்க

  • தாய்மார்கள் அதிக அளவு நார்ச் சத்துள்ள பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நொதிக்க வைத்த உணவுப் பொருள்களை முற்றிலும் தவிர்த்து, குடிநீர் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
  • பால் சுரப்பை அதிகப்படுத்த முழு தானியங்கள், பார்லி கஞ்சி, புரதச்சத்து மிகுந்த மீன், கொண்டைக் கடலை, நார்ச்சத்து மிகுந்த கீரைகள், பச்சை காய்கறிகள் போன்றவையும் பூண்டு, வெந்தயம், சோம்பு, கேரட், பால் பொருள்கள் ஆகியனவும் சிறந்தவை. மேலும் அரசு வழங்கும் மகப்பேறு சஞ்சீவிப் பெட்டகங்களில் உள்ள சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

6 மாதத்திற்குப் பின்

  • குழந்தை 6 மாதத்திற்குப் பிறகு தவழ ஆரம்பிக்கும். இக்காலத்தில் குழந்தையின் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டும். தற்போது 6 மாதக் குழந் தைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தைப் பற்றிப் பார்ப்போம்.
  • இதில் முக்கியப் பங்கு வகிப்பது வைட்டமின் ‘டி’, ‘கே’, இரும்புச் சத்து. இதில் வைட்டமின் ‘டி’ குழந்தைகளின் உடலில் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதில் மாறுபாடு ஏற்படும்போது குழந்தைகளுக்கு எலும்பு நலிவு (Rickets) நோய் உண்டாகிறது. இக்குறைபாட்டின் அறிகுறியாக முதலில் வளர்ச்சி குறைவு, கால் எலும்புகள் வளைதல், பல் சார்ந்த பிரச்சினைகள், உச்சிக் குழி தாமதமாக மூடுதல், முதுகு எலும்பு வளைதல் போன்ற சிறு தொந்தரவுகளில் தொடங்கி குழந்தைக்கு இதய பாதிப்பு வரை உருவாக வாய்ப்பு உண்டு.
  • வைட்டமின் ‘டி’யைப் பொறுத்தவரை எளிதாக சூரிய ஒளி மூலம் தோல் வழியே கடத்தப் படுகிறது. தற்போது வைட்டமின் ‘டி’ சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதே போல் வைட்டமின் ‘இ’ சத்து குழந்தைகளுக்குச் சரும வறட்சி ஏற்படாமல் பாதுகாப்பதோடு, எடை குறைவாகப் பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவாற்றல் சார்ந்த செயல்களை ஊக்குவிக்கிறது.
  • மேலும் கேழ்வரகைக் கூழ்போலச் செய்து குழந்தைக்கு வழங்குவதன் மூலம் இரும்புச் சத்து, கால்சியம் சத்துத் தேவையை இது பூர்த்திசெய்யும். குழந்தைக்கு 8 மாதத்திற்கு மேல் சிறிது சிறிதாக அனைத்து உணவு வகைகளையும் கொடுத்து பழக்கலாம்.

1-5 வயது

  • ஒன்று முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்குச் சரிவிகித உணவு வழங்க வேண்டும். சரிவிகித உணவு என்பது உணவின் எடையைக் குறிப்பது அன்று. அது உணவின் பகுதிகளை நிர்ணயிப்பது. இத்தகைய உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்து , பழம், காய்கறிகள், பால் பொருள்கள் என அனைத்தும் நிரம்பி இருக்க வேண்டும். குறிப்பிட்ட இந்தக் காலத்தில் மூளை வளர்ச்சி முழுமையடையும்.
  • அதனால்தான் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் தகுந்த முறையான மருத்துவம் கிடைக்கும்போது மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணிசமாகக் குறைந்து, குழந்தைக்கு இயல்பு வாழ்வைப் பெறவைக்க முடியும். மூளையைச் சீரமைக்கும் ஊட்டப் பொருள்கள் இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, அயோடின்,வைட்டமின் பி6 ஆகியன காணப் படுகின்றன.
  • இந்த ஊட்டச்சத்துகள் சரிவர கிடைக்காதபோது குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். அது பொதுவான அறிகுறியாக உடல் சோர்வு, நரம்பு வலியில் தொடங்கி வலிப்புத் தொந்தரவு வரை ஏற்படுத்தக்கூடியது. இதைத் தவிர்க்க முட்டை, பச்சைக் காய்கறிகள், மீன், உலர் கொட்டைகள், வல்லாரை, சோம்பு, மஞ்சள், இஞ்சி, நெல்லி, கறிவேப்பிலை போன்ற பொருள்களை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

612 வயது

  • பள்ளிப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும்படி உணவு கொடுக்க வேண்டும். இதில் குறிப்பாக புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக வழங்க வேண்டும்.
  • புரதச்சத்தின் முதல் வேலை தசைகளை உருவாக்கி அவை தொடர்ந்து இயங்க உதவுகிறது. மேலும் உணவுப்பாதையின் செரிமான ஆற்றலை அதிகரிக்கிறது.
  • புரதத்தைத் தவிர்த்து கார்போ ஹைட்ரேட் குழந்தைக்கு அதிகளவு கொடுக்கும்போது, அது குழந்தைக்கு உடல் பருமனை உண்டாக்கிவிடுகிறது. மேலும் ஊட்டச்சத்தற்ற உணவுப் பொருள்களான சக்கை உணவு, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்குத் தீனி போன்றவை இன்றைய குழந்தைகளுக்கு அதிகமாக வழங்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உணவுப்பாதை தொடர்பான குடல்வால் வீக்கம், வயிற்றில் நெறி கட்டுதல், குடல் செருகல் ஆகியன உண்டாகிறது.
  • குழந்தைகளுக்குச் செயல்பாடு களில் சரி, தவறு சொல்லிக் கொடுப்பது போல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் எவை, அவை எந்தெந்த உணவுப் பொருள்களில் உள்ளன என்பதையும் கற்றுத்தர வேண்டும்.

13-19 வயது

  • இளமைப் பருவமே மற்ற எல்லாப் பருவங்களிலும் மிக முக்கியமானது. உடல், எண்ணங்கள் சார்ந்த அதிக அளவு மாற்றங்களை இந்த வயதில்தான் ஒருவர் சந்திக்கக்கூடும். மேலும் இளமைப் பருவத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்தே அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும்.
  • இளமைப் பருவத்தில் கிடைக்கக் கூடிய நல்ல உணவு ஆதாரங்களே அடுத்த 20 வருடத்திற்கு ஊன்று கோலாக அமையும். ஆனால், நமது நாட்டில் அதிக அளவிலான ஊட்டச்சத்துப் பற்றாக்குறையில் முன்னிலையில் இருப்பது இந்த வயது உடையவர்களே. இந்த நிலை மாற பெற்றோர் மட்டும் இன்றி ஆசிரியர்களும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து கருத்தில் கொண்டு, அதைச் சரிப்படுத்த முயல வேண்டும்.
  • ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் மாதம் கடை பிடிக்கப் படுகிறது. காலம் காலமாகத் தொடரும் ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு ஒன்று சேர்ந்து தீர்வு காணப்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்