TNPSC Thervupettagam

குழந்தைத் திருமணப் ‘பெருமைகள்’

May 20 , 2023 555 days 407 0
  • குழந்தைத் திருமணம் (பால்ய விவாகம்) பற்றிச் சமீபத்தில் இரண்டு செய்திகள் கவனம் பெற்றன. தில்லை வாழ் அந்தணர்கள் சிலர் தம் குழந்தைகளுக்குப் பால்ய விவாகம் செய்து வைக்கும் வழக்கத்தை இன்று வரை கொண்டிருக்கின்றனர் என்னும் செய்தி. அது சட்ட விரோதம் என்பதை விடவும் திருமணம் செய்த பெண்களுக்கு எத்தகைய பரிசோதனை நடந்தது என்பதே விவாதத்துக்குரியதாக மாற்றப்பட்டது. பரிசோதனை தொடர்பாக உரிய அதிகாரிகளும் மருத்துவர்களும் விளக்கம் கொடுக்க நேர்ந்தது. அப்பிரச்சினை தொடர்பான விசாரணையும் தொடர்கிறது. இக்காலத்திலும் குழந்தைத் திருமண நடைமுறை இருப்பதைப் பற்றிப் பெரிதாகப் பேச்சு எழவில்லை.
  • இரண்டாவதாகக் கவனம் பெற்ற செய்தி, 1970களில் திருமணம் செய்துகொண்ட தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தம் திருமணம் ‘பால்ய விவாகம்’ என்று பொதுவில் பேசிய நிகழ்வு. அவர் அப்படி வெளிப்படையாகப் பேசியது பிரச்சினை இல்லை. அதை நியாயப்படுத்துவதுபோல அமைந்ததுதான் வருத்தத்துக்குரிய விஷயம். “எனக்கு மிக இளம் வயதில் குழந்தைத் திருமணம் நடந்தது. நானும் என் மனைவியும் சேர்ந்தே வளர்ந்தோம். அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. அவர்தான் என் முழு பலம். இந்த உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார்” (மின்னம்பலம், 12-05-23) என்று ஆளுநர் கூறியுள்ளார். குழந்தைத் திருமணம் நடந்ததைத் தனியாகவும் தம் மனைவி தமக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தார் என்பதைத் தனியாகவும் சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்சினையில்லை. இரண்டையும் ஒருசேரச் சொல்லும்போது குழந்தைத் திருமண ஆதரவு அவர் குரலில் ஒலிப்பதாகத் தோன்றுகிறது.

குழந்தைத் திருமண ஒழிப்பில் அரசு

  • இன்றும் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்போர் உள்ளனர், அப்படித் திருமணமும் செய்துவைக்கின்றனர் என்பது ஆச்சரியமில்லை. நன்கு கற்றோர், சமூகத்தில் உயர்நிலை வகிப்போரின் மனநிலைகூட குழந்தைத் திருமணத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். பெண்ணுக்குப் பதினெட்டு வயது முடியும் முன் அதாவது பதினாறு, பதினேழு வயதில் திருமணம் செய்யும் நடைமுறை சில இடங்களில் இருப்பதை அவ்வவ்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில காதல்களிலும் வயது பிரச்சினை வருவதைக் காண முடிகிறது. குழந்தைத் திருமண ஒழிப்பில் மாவட்ட நிர்வாகங்கள் கடுமை காட்டுகின்றன. அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கச் செல்லும்போது வயது விசாரணை கட்டாயம் நடக்கிறது. பதினெட்டு வயதுக்குக் குறைவாக இருந்தால் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தும் இன்னும் பத்து, பதினொரு வயதுக் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் நடைமுறை சில சாதிகளில் இருப்பது அவமானத்துக்குரியது.
  • கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாகக் குழந்தைத் திருமணப் பிரச்சினை பேசப்பட்டு வந்திருக்கிறது. பால்ய விவாகம், இளவயதுத் திருமணம், குழந்தைத் திருமணம் என்று சொல்லாட்சிகளும் மாறி வந்திருக்கின்றன. இதை ஒழிக்கக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு சட்டரீதியாகவும் சமூக நலத் திட்டங்கள் வழியாகவும் முயன்றதால் இப்போது பெருமளவு குறைந்திருக்கிறது. பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்ததும் பெண்களைக் கல்வி கற்க அனுப்புவதும் முக்கியமான காரணம். பத்தாம் வகுப்பு முடித்திருக்கும் பெண்ணுக்குத் திருமணம் நடந்தால் உதவித் திட்டம் வந்தது முக்கியமானது. அது படிப்படியாக மாற்றம் பெற்று இன்று உயர்கல்வி கற்கும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அரசு வழங்கும் திட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. இவையெல்லாம் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன; வகிக்கின்றன.
  • இதற்கான சட்டம் இயற்றப்பட்டது பெரும் வரலாறு. அது முழுமையாக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. 1891இல் சட்டம் இயற்றும் நடைமுறை தொடங்கி 1930இல்தான் அது அமலுக்கு வந்தது. நாற்பதாண்டுகள் பல்வேறு எதிர்ப்புகளையும் தடைகளையும் கடந்து ‘சாரதா சட்டம்’ என்று அழைக்கப்படும் அது நடைமுறைக்கு வந்தபோது பெண்ணுக்குத் திருமண வயது பன்னிரண்டு, ஆணுக்குப் பதினாறு என்றிருந்தது. இன்று பெண்ணுக்குப் பதினெட்டு, ஆணுக்கு இருபத்தொன்று என்றுள்ளது. பெண்ணுக்கும் இருபத்தொன்றாக்கும் சட்டமும் வரவுள்ளது. குழந்தைத் திருமணத்தை ஒழிக்கும் இத்தனை நெடிய போராட்டத்தில் தமிழ் இலக்கியத்துக்கும் பங்கிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

என்ன சொல்கிறது தமிழ் இலக்கியம்?

  • இதில் 1879இல் வெளியான தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி 1930 வரை வந்த பல நாவல்களும் குழந்தைத் திருமணப் பிரச்சினையை வலுவாகப் பேசியிருக்கின்றன. ச.வேதநாயகம் பிள்ளை “சிறுபிள்ளைகள் பொம்மைகளைப் போல அசடப் பொருள்களாயிருந்தால் தாய் தகப்பன்மார்கள் சிசு விவாகம் செய்து வேடிக்கை பார்ப்பதில் ஆட்சேபமிராது” (சுகுணசுந்தரி, ப.57) என்று பொம்மைக் கல்யாணத்தோடு ஒப்பிடுகிறார். அவர் ‘சிசு விவாகம்’ என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார். சிசு விவாகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளை அவர் சுவையாக விவரிக்கிறார். சிசு விவாகத்தின்போது சிறுபிள்ளையாக இருக்கும் பெண் பிறகு வளர்கிறாள்; அவள் கணவனும் வளர்கிறான். பையனை விடவும் பெண்ணின் வளர்ச்சி உயரத்திலும் உருவத்திலும் அதிகமாக இருக்கிறது. அதனால் அவனுக்கு அக்காள் போலவும் தாய் போலவும் தெரிகிறாளாம். மாறியும் நடப்பதுண்டு. பெண்ணுக்குத் தமையன் போலவும் தகப்பன் போலவும் தோன்றும்படி கணவன் வளர்ந்துவிடுவதும் உண்டாம்.
  • ‘சிசு விவாகத்தில்’ பையனுக்கும் பெண்ணுக்கும் ஒரே வயதாகவோ ஒன்றிரண்டு வயது வேறுபாடாகவோதான் இருக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் பெண் விரைவில் பருவமடைந்துவிடுகிறாள். பையனுக்குப் ‘பக்குவ காலம்’ வரத் தாமதப்படுகிறது. ஆகவே, உடலுறவுக்குப் பெண் சில காலம் காத்திருக்கும் நிலைமை ஏற்படுகிறதாம். சிசு விவாகத்தின் காரணமாகப் ‘பால்ய விதவைகள்’ எண்ணிக்கை மிகுவதையும் அவர் குறிப்பிட்டுச் சொல்கிறார். சிறுபையன் இறந்துவிட்டால் அவன் மனைவியாகிய பெண்குழந்தையை உடன்கட்டை ஏறச் வைக்கும் கொடுமையும் நடந்திருக்கும் போல. இந்த வழக்கத்தைப் பற்றிச் சொல்லும் தாயிடம் சிறு பெண்ணொருத்தி கேட்கிறாள், “நான் முந்தி இறந்து போனால் புருஷனும் என்னோடுகூட உடன்கட்டை ஏறுவானா?” (மேற்படி, ப.61). இது வேதநாயகம் பிள்ளை எழுப்பும் கேள்விதான்.
  • குழந்தைத் திருமணப் பிரச்சினை பற்றித் தம் நாவல்களில் தொடர்ந்து எழுதிக் கவனப்படுத்தியவர் அ.மாதவையா. ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலின் முதன்மைக் கதாபாத்திரங்களாகிய கோபாலன், நாராயணன் ஆகியோர் இரண்டு சபதங்களைச் செய்கின்றனர். ஒன்று, பால்ய விவாகம் செய்துகொள்வதில்லை என்பது. இரண்டாவது, பெண் ருதுவாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே சாந்தி முகூர்த்தம் என்பது. ஆனால், கோபாலனால் அவற்றைக் கடைபிடிக்க இயலவில்லை. கல்யாணி என்னும் பெண்ணைப் பால்ய விவாகம் செய்ய நேர்கிறது. அப்பெண்ணைப் பற்றி மாதவையா சொல்கிறார்:
  • “அவளைப் பார்த்தால் சோகி, அம்மானை, கழற்சி, பல்லாங்குழி, மரப்பாவை முதலிய சாமான்களை வைத்துக்கொண்டு விளையாடித் திரியும் பருவம் நீங்காத சிறுபெண்ணாகத் தோன்றுமேயல்லாது விவாகத்தின் அருமையையும் பெருமையையு முணர்ந்து தன் தலைவனோடிருந்து இல்லறம் தவறாது நடத்தக்கூடிய மனைவியாகத் தோன்றாது” (ப.78).
  • அவர் எழுதிய ‘முத்து மீனாட்சி’ நாவலின் மையமே குழந்தைத் திருமணத்தால் ஒரு பெண் படும் பாடுகளைச் சொல்வதுதான். அது இரு குழந்தைகளுக்கு நடக்கும் திருமணம் மட்டுமல்ல. குழந்தைப் பெண்ணை வயது முதிர்ந்த ஆணுக்குத் திருமணம் செய்துவைப்பதும் குழந்தைத் திருமணம்தான். சிறுவயதிலேயே கருவுறுவதாலும் போதிய மருத்துவ வசதி இல்லாமையாலும் பெண்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருந்துள்ளது. ஆகவே, ஆண்கள் மறுமணம் செய்துகொள்ளும் நடைமுறையும் சாதாரணம். நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் நவீன இலக்கியத்தின் முன்னோடியுமான மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளைக்கு ஐந்து மனைவிகள். ஒவ்வொரு மனைவி இறந்த பிறகு செய்துகொண்ட திருமணங்கள்தான்.
  • முத்து மீனாட்சிக்குத் திருமணம் நடக்கும்போது அவளுக்கு ஒன்பது வயது. கணவனுக்கோ முப்பது வயது. அவனுடைய முதல் மனைவிக்குப் பிறந்த மகளுக்கும் அதேசமயத்தில் திருமணம் நடக்கிறது. முத்து மீனாட்சியின் தந்தையிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துத்தான் பெண்ணெடுக்கிறார்கள். அப்போது வரதட்சிணை என்பது ‘வரன் (ஆண்) தரும் தட்சிணை’யாகவே இருந்திருக்கிறது. கணவன் குடும்பத்தார் அவளுக்குச் செய்யும் கொடுமைகளுக்கு அளவில்லை. அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது எங்கே அவள் செத்துவிடுவாளோ என்று அஞ்சுகிறார்கள். முத்து மீனாட்சி சொல்கிறாள், “ஆயிரம் ரூபா கொடுத்துக்கொண்ட கிடாரியைச் சாகவிட யாருக்குத்தான் மனம் வரும்?” (ப.41).
  • முப்பது வயதான கணவன் குழந்தையாகிய அவளைப் பெண்டாளத் துடிக்கிறான். குடும்பத்தாருக்கோ ஆண் வாரிசை அவள் உடனே பெற்றுத் தர வேண்டும். பத்து வயதான அவள் பருவமடையவில்லை. பருவமடையச் செய்யப் பலவிதமான உத்திகளைக் கையாள்கிறார்கள். ‘பருவமடையாத பெண்ணுடன் ஆண் உறவு கொண்டால் அவள் பருவமடைந்துவிடுவாள்’ என்னும் நம்பிக்கை அப்போது பரவலாக இருந்தது. அப்படி ஓர் ஏற்பாட்டை முத்து மீனாட்சியின் கணவன் குடும்பத்தார் செய்கின்றனர். “என் கணவரையும் மாமியையும் நான் அவ்வளவு அதிகம் வெறுத்துப் பகைத்ததற்கு அன்றென்னைச் செய்த குரூரமான இம்சையும் அவமானமுமே முக்கிய காரணம்” (ப.47) என்கிறாள் முத்து மீனாட்சி. இன்றைக்கு இதற்குப் பெயர் பாலியல் வன்முறை. அதுவும் குழந்தையைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது கடுங்குற்றம். ஆனால், அன்று இது அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்துள்ளது. காரணம் குழந்தைத் திருமணம்.

உதவும் இலக்கியங்கள்

  • பத்மாவதி சரித்திரத்தில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை அ.மாதவையா எழுதியுள்ளார். பண்ணை சேஷையர் என்பவர் ஐம்பது வயதானவர். மனைவியை இழந்தவர். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தனர். ஆனால், அவருக்குத் தாம் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆசை. இந்த ஆசையை ஐயாசாமி வாத்தியார் என்னும் தரகர் பயன்படுத்திக்கொள்கிறார். தஞ்சாவூர் ஜில்லாவுக்குப் போய் அங்கே உள்ள வஞ்சனூரில் பதினொரு வயதுப் பெண்ணைப் பேசி முடிக்கிறார். மாப்பிள்ளைக்கு முப்பது வயதுதான் ஆகிறது என்றும் லட்ச ரூபாய்க்குச் சொத்திருப்பதாகவும் பொய் சொல்லிச் சம்மதிக்க வைத்துப் பெண் வீட்டாருக்கு ஆயிரம் ரூபாயும் திருமணச் செலவுக்கு ஐந்நூறு ரூபாயும் கொடுத்து முகூர்த்தம் குறித்து வருகிறார்.
  • முகூர்த்தத்துக்கு இரண்டு நாளுக்கு முன் சேஷையரும் ஐயாசாமியும் அவ்வூருக்குச் செல்கின்றனர். சேஷையரின் தோற்றத்தை “அவருடைய பருத்த தொந்தியையும் அப்பங்கள் போல் ஊதிப் புடைத்த கன்னங்களையும் தேங்காய்க்குக் குடுமி வைத்தது போல் உச்சியில் மட்டுமிருக்கும் ஐந்தாறு வெள்ளி மயிர்களையும்… கழுத்தையும் பார்த்தால் கலியாணத்துக் கிசைந்த மாப்பிள்ளை யென்று கனவிலும் நினையார்கள்” (ப.90) என்று வருணிக்கிறார். புத்தாடைகள், ஒப்பனைகளோடு சென்ற சேஷையரைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். பெண் வீட்டார் ஒத்துக்கொள்ளவில்லை. கூடுதலாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லிப் பேசி முடிக்கிறார்கள். திருமணமும் நடக்கிறது. பெண் ருதுவாகவில்லை என்று சொல்லி அனுப்ப மறுக்கிறார்கள். அவரும் ஊருக்குத் திரும்பிக் காத்திருக்கிறார்.
  • சில மாதங்களுக்குப் பின் அவர் மனைவிக்குப் பேதி உபத்திரவம் ஏற்பட்டிருப்பதாகத் தந்தி வருகிறது. பிறகு அப்பெண் இறந்துபோனதாக இன்னொரு தந்தியும் வருகிறது. வருந்திய சேஷையர் சில நாட்கள் கழித்துத் தாம் பெண்ணுக்குப் போட்ட நகைகளையாவது வாங்கி வரலாம் என்று தரகருடன் அவ்வூருக்குப் போகிறார். ஊர்க்குளத்தில் அப்பெண் தண்ணீர் எடுத்துச் செல்வதை இருவரும் பார்க்கிறார்கள். அவள் இறந்துவிட்டதாகத் தந்தி கொடுத்துவிட்டு அப்பெண்ணுக்கு வேறொரு திருமணம் செய்திருக்கிறார்கள். செலவழித்த பணம் எதையும் பெற இயலாமல் அவர் திரும்ப வேண்டியதாகிறது. தரகருக்கு அப்போதும் லாபம்தான்.
  • இதேபோல ஒரு சம்பவம் ‘முத்து மீனாட்சி’ நாவலிலும் வருகிறது. முத்து மீனாட்சியின் தந்தைக்கு இருபது வயது இருக்கும்போது நான்கு வயதான பெண்ணை அவருக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். அப்பெண் பத்தாம் வயதில் அம்மை நோயால் இறந்துபோனாள். அதற்குப் பின் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவருக்கு ஐம்பது வயதாகும்போது மனைவி இறந்துபோனார். அப்போது அவர் மகனுக்குத் திருமண வயது. திருமண வயதென்றால் பத்து, பன்னிரண்டு வயதிருக்கும். அவ்வளவுதான். மகனுக்குப் பெண் பார்க்கத் தஞ்சாவூர் ஜில்லாவுக்குச் சென்றார். பெண் வீட்டார் ஆயிரம் ரூபாய் கேட்டார்கள். அப்பெண்ணைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துவிட்டது. தானே திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ‘விலை எவ்வளவு?’ எனக் கேட்டார். இரண்டாயிரம் ரூபாய் என்றார்கள். பணம் கொடுத்து அப்பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். மகனுக்குப் பார்த்த பெண்ணை தந்தை திருமணம் செய்துகொண்டார். நம் முன்னோர்கள் வாழ்ந்த கதைகள் இவை. 
  • அக்காலத்தில் நடந்த குழந்தைத் திருமணம் தொடர்பான இப்படிப்பட்ட சம்பவங்கள் பாரதியாரின் ‘சந்திரிகையின் கதை’, வ.ரா. எழுதிய ‘சுந்தரி’ உள்ளிட்ட பல நாவல்களில் பதிவாகியுள்ளன. “சுந்தரி விதவையானாளொழிய இன்னும் ஸ்திரீயாகவில்லை” (ப.24) என்று எழுதுகிறார் வ.ரா. “ருதுவான பிறகு பெண்ணுடைய இஷ்டப்படி கலியாணம் செய்ய வேண்டும்” என்பது பாரதியார் கருத்து.
  • முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்றும் அவர்கள் அந்நாளில் ஆனந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்றும் பிதற்றித் திரிவோர் இந்நாவல்களை எல்லாம் வாசிக்க வேண்டும். நம் சமூகம் எந்த நிலையிலிருந்தது, இப்போது எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம் என்பவற்றை அறிவதற்கு இலக்கியங்கள் உதவுகின்றன. இவற்றை எல்லாம் அறியாதவர்கள் குழந்தைத் திருமணத்தின் ‘பெருமை’களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசினாலும் சமூகத்தைப் பின்னுக்கிழுக்க இயலாது என்பது மட்டும் உறுதி.

நன்றி: அருஞ்சொல் (20 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்