TNPSC Thervupettagam

குழந்தையின்மைக்கு இலவச சிகிச்சை சவால்கள் என்ன?

July 5 , 2024 190 days 181 0
  • ‘குழந்தையின்மை சிகிச்சையும் பொதுச் சுகாதாரத்தின் அங்கமே’ (2023நவம்பர் 30) என்னும் தலைப்பில் வெளியான தலையங்கத்தில் மத்திய-மாநில அரசுகளுக்கு ‘இந்து தமிழ் திசை’ முனவைத்த கோரிக்கை சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • நாட்டிலேயே முதல் முறையாக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கைக் கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது இலவச செயற்கைக் கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட உள்ளது.
  • கோவா, டெல்லி, சண்டிகர், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய இடங்களின் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், அங்கு ஒரு கருத்தரிப்புச் சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை பயனாளிக் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • பொதுவாக, ஒரு குழந்தையைச் செயற்கை வழியில் பிறக்கச் செய்வதற்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும். தனியார் மருத்துவமனையில் இன்னும் கூடுதல் செலவாகும். இந்தச் சூழலில், இந்தியாவில் முதல்முறையாகத் தமிழகத்தில்தான் முழுவதுமாக இலவச செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஏன் தேவை

  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பெண்களிடம் கருவளம் குறைந்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் 20% அளவுக்குச் சரிந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இந்தியாவில் குழந்தையின்மை பாதிப்பு 25 வயதிலிருந்து 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு 3.9 சதவீதமாக இருக்கிறது. இதையே மற்றொரு புள்ளிவிவரம், குழந்தையின்மைப் பிரச்சினையால் 2.75 கோடி தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
  • ‘குழந்தையின்மைக்கான சிகிச்சையும் பொதுச் சுகாதாரத்தின் ஓர் அங்கம்தான்’ என்பதை மத்திய-மாநில அரசுகள் கருத்தில் கொண்டு, இவர்களுக்குக் கட்டாயம் மருத்துவ உதவி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும், செயற்கைக் கருத்தரிப்புக்கான இந்தியச் சங்கமும் தெரிவித்துள்ளன
  • இந்தியக் குடும்பங்களில், மணம் புரியும் ஒவ்வொரு தம்பதியும் குழந்தை பெற்றுக்கொள்வது சமூகக் கட்டாயமாக இருக்கிறது. குழந்தையின்மை என்பது ஒரு சமூக இகழ்ச்சியாகவும் கருதப்படுகிறது. தம்பதிகளிடம் உடலில் குறைபாடுகள் இருந்தால், அவை குறித்துப் பேசவும், அவற்றைச் சரிசெய்வதற்கான மருத்துவச் சிகிச்சைகள் குறித்து விவாதிக்கவும் இந்தியச் சமூகத்தில் பெரும் மனத்தடைகள் உள்ளன.
  • வசதி படைத்தவர்கள் குழந்தையைத் தத்தெடுக்கும் முயற்சிகளில் இறங்குகின்றனர். ஆனால், தத்தெடுப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை. பெரும்பாலான கிராமப்புறத்தினர் தத்தெடுப்பதை விரும்புவதுமில்லை. ஆகவே, அநேகத் தம்பதிகள் செயற்கைக் கருத்தரிப்புக்குத் தயாராகின்றனர்.
  • நாட்டில், ஒரு சுழற்சி செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கே பல லட்சங்கள் தேவைப்படுகின்றன. முதல் முயற்சி வெற்றியடையவில்லை என்றால், மறுசுழற்சி அவசியம் என்கிற நிலைமையில் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தொகை பெரும் சுமையாக இருக்கிறது.

தவறு செய்யும் தனியார் மையங்கள்:

  • 1980களில் செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 40 ஆண்டுகளில் தனியார் கருத்தரிப்பு மையங்கள் அபரிமிதமாக வளர்ச்சிஅடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்கள் செயல்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
  • செயற்கைக் கருத்தரிப்புக்கென உயர் சிறப்பு நிபுணர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாலும், இந்த மருத்துவச் சேவைக்கு மிகவும் நுட்பமான, விலைஉயர்ந்த தொழில்நுட்பக் கருவிகள் தேவைப்படுவதாலும், மருந்துச் செலவு அதிகம் என்பதாலும் தனியார் மருத்துவமனைகள் இதற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. சில தனியார் மையங்கள் சேவை மனப்பான்மையைத் தொலைத்து, இதை வணிகமயமாக்குவதும் உண்டு
  • மேலும், குழந்தைகள் மீதான மக்களின் ஏக்கத்தையும், எப்பாடுபட்டாவது குழந்தை பெற்றுவிட வேண்டும் எனும் சமூக நெருக்கடியையும் பயன்படுத்திக்கொண்டு போலி செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் பல செயல்படுவதையும் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். கடந்த காலங்களில் 6 தனியார் மையங்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை இதை உறுதிப்படுத்துகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே தமிழக அரசு இலவச செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளது

செயற்கைக் கருத்தரிப்பு என்றால் என்ன?

  • குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வது ‘செயற்கைக் கருத்தரிப்பு முறை’ (In-vitro fertilization –IVF) எனப்படுகிறது. இதில், பெண்ணின் கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துவதுதான் (Intra Uterine Insemination – IUI) அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
  • அதாவது, ஆணின் விந்தணுவை ஆய்வகத்தில் சேகரித்து, அதில் ஆரோக்கியமான, வளமான விந்தணுக்களைத் தரம் பிரித்து, அவற்றைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தை பிறக்க வழி செய்கின்றனர் அல்லது பெண்ணின் கருமுட்டைகளைச் சேகரித்து, ஆய்வகச் சூழலில் வளர்த்து, அதில் விந்தணுக்களைச் செலுத்தி, கரு உருவான பிறகு, அதைப் பெண்ணின் கருப்பைக்குள் (Embryo Transfer) செலுத்துகின்றனர். புறநோயாளிப் பிரிவிலேயே இந்தச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

யார் யார், என்ன சேவைகள் பெறலாம்?

  • ஆண்களுக்கான விந்தணு பரிசோதனை, பெண்களுக்கான கருமுட்டை மற்றும் கருக்குழாய்ப் பரிசோதனை, கருப்பை நுண்ணறை தொடர் கண்காணிப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இவை முதல் அடுக்கு, இரண்டாம் அடுக்கு என இரு வகையில் வழங்கப்படுகின்றன. முதல் அடுக்கில், ஆண்களுக்கு விந்தணுப் பெருக்கத்துக்கான மருந்துகளும், பெண்களுக்குக் கருமுட்டை உருவாவதற்கான மருந்துகளும் வழங்கப்படும். கருமுட்டை உருவாவது ‘ஸ்கேன்’ பரிசோதனையில் கண்காணிக்கப்படும்.
  • கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அது அகற்றப்படும். இந்த வழியில் பலன் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது அடுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதாவது, விந்துவைக் கருப்பைக்குள் செலுத்துவது, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கருவைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவது ஆகியவை மேற்கொள்ளப்படும்.
  • பெண்களில் இயல்பாகக் கருமுட்டை வளராதவர்கள், கருக்குழாயில் அடைப்புள்ளவர்கள், வளம் குறைந்த கருமுட்டைகள் கொண்டவர்கள், கருப்பையில் பிரச்சினை உள்ளவர்கள் இந்தச் சேவையில் பலன் பெறலாம். விந்தணுக்களில் பிரச்சினை உள்ள ஆண்களும் பலன் பெறலாம்.

சவால்கள் என்னென்ன ?

  •  இந்த நல்ல திட்டம் தற்போதுதான் செயல்படத் தொடங்கியுள்ளது. குழந்தையின்மை சிகிச்சையில் வெற்றி விகிதத்தைவிட தோல்வி விகிதமே அதிகம் என்பதால், சிகிச்சைக்குத் தம்பதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மருத்துவர்களுக்கு அதிக கவனமும் சுதந்திரமும் தேவை.
  • முக்கியமாக, மேலிடத்து அழுத்தங்கள் கூடாது. மருத்துவர்கள் இந்தச் சிகிச்சையின் சாதக பாதகங்களைத் தம்பதியினருக்குச் சொல்லித் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை, ஆரம்பக் காலங்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க வேண்டியதிருந்தால், பொதுச் சமூகத்தில் அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கை குறைந்துவிடும்.
  • மேலும், இந்தச் சிகிச்சையை ஒரு பயனாளிக்குத் தொடங்கிவிட்டால் அதை நடுவில் நிறுத்த முடியாது. ஆகவே, தமிழக அரசு சிகிச்சைக்குத் தேவையான நிதி ஒதுக்கி, போதுமான மருத்துவ வளம், ஆய்வக வசதிகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் எவ்வித இடையூறும் இல்லாமல் எப்போதும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
  • அடுத்து, இந்தச் சிகிச்சையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரலாம். சமயங்களில் கருமுட்டை தானம்கூடத் தேவைப்படலாம். அதற்கு இடைத்தரகர்களை நாடக் கூடாது. முதல்கட்டமாக, பத்து பேருக்குச் சிகிச்சை வழங்கவும், ஓராண்டுக்கு அதிகபட்சம் 60 பேருக்கு அதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது.
  • போகப்போக, ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும், குழந்தையின்மைக்கான சிகிச்சை மையங்களை அரசு நிறுவ வேண்டும். அதற்கேற்ப செயற்கைக் கருத்தரிப்புக்குச் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்களைத் தயார் செய்வதும் முக்கியம். அப்போதுதான் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்துத் தரப்பினரும் கருத்தரிப்புக்கான சிகிச்சைகளைப் பெற முடியும்.
  • இறுதியாக, செயற்கைக் கருத்தரிப்பு குறித்த புரிதலும் தெளிவும் அநேகருக்கும் இல்லை என்பதுதான் யதார்த்தம். அரசு கொண்டுவந்திருக்கும் இந்த நல்ல திட்டம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போல் வெற்றிபெற வேண்டும் என்றால், பொதுச்சமூகத்தில் செயற்கைக் கருத்தரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வழி செய்ய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்