TNPSC Thervupettagam

குழப்பமும் கொள்ளை நோயும்

May 26 , 2021 1340 days 544 0
  • அண்டை வீடு பற்றி எரியும்போது நாம் எப்படி நிம்மதியாக இருக்க முடியாதோ, அதேபோல அண்டை நாடுகளில் ஏற்படும் குழப்பங்களும் நம்மை பாதிக்கவே செய்யும்.
  • அதிலும் குறிப்பாக, நேபாளம், பூடான் போன்று நீண்ட காலமாக இந்தியாவுடன் பிணைப்பும், இந்தியாவின் ஆதரவும் பெற்ற அண்டை நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
  • இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
  • அதனால், நோய்த்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் நேபாளத்தில் காணப்படும் அரசியல் குழப்பம் வேதனை அளிக்கிறது.
  • கடந்த ஓர் ஆண்டாகவே நேபாளத்தில் அரசியல் நிலையின்மை தொடர்ந்து வருகிறது.
  • பிரதமர் கட்கபிரசாத் சர்மா ஓலியின் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், புஷ்பகமல் தாஹால் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் (மாவோயிஸ்ட் மையம்) இணைந்தபோது நேபாளத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
  • 2017 பொதுத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டபோது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஓலி தலைமையிலான அரசு இயங்கியது.
  • ஆனால், அத்தனை அதிகாரத்தையும் தானே வைத்திருக்க வேண்டும் என்கிற பிரதமர் ஓலியின் முனைப்பும், புஷ்பகமல் தாஹாலை அரவணைத்துச் செல்ல மறுக்கும் மனோபாவமும் பிளவை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

கட்சியில் பிளவு

  • கட்சி பிளவுபட்டு தாஹால் தலைமையிலான மாவோயிஸ்ட் மையம் வெளியேறியபோது பிரதமர் சர்மா ஓலியின் பெரும்பான்மை சிக்கலில் சிக்கியது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் சர்மா ஓலி அளித்த பரிந்துரையை ஏற்று அதிபர் வித்யாதேவி பண்டாரி, நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார்.
  • இந்த உத்தரவுக்கு நேபாள உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்டது. மீண்டும் ஆட்சியில் தொடர தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பிரதமர் ஓலிக்கு ஏற்பட்டது.
  • மே 10-ஆம் தேதி நேபாள நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் கே.பி. சர்மா ஓலி படுதோல்வி அடைந்தார்.
  • 271 பேர் கொண்ட நேபாள மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் 232 பேர்தான் கலந்து கொண்டனர். பிரதமர் ஓலிக்கு 93 வாக்குகள்தான் கிடைத்தன. அவருக்கு எதிராக 124 வாக்குகள் விழுந்தன.
  • 49 வாக்குகள் கொண்ட புஷ்பகமல் தாஹாலின் மாவோயிஸ்ட் மையமும், 61 உறுப்பினர்களைக் கொண்ட ஷேர்பகதூர் தாபா தலைமையிலான நேபாளி காங்கிரசும் ஓலிக்கு எதிராக வாக்களித்தன.
  • பிரதமர் ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியே அவருக்கு முழுமையாக வாக்களிக்க வில்லை. மாதவ்குமார் நேபாள் தலைமையிலான பிரிவு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை.
  • பிரதமர் ஓலி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை அறிவித்தது முதலே மாதவ்குமார் நேபாளும் அவருடன் 28 ஆதரவாளர்களும் பிரதமர் ஓலிக்கு எதிராக மாறிவிட்டனர்.
  • ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா சமாஜவாதி கட்சி (நேபாள்) - இன் 15 உறுப்பினர்களைக் கொண்ட பாபுராம் பட்டராய் பிரிவு பிரதமர் ஓலிக்கு எதிராக வாக்களித்தது என்றால், அதே கட்சியின் 15 உறுப்பினர்களைக் கொண்ட மகந்தா தாக்குர் பிரிவு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தது.
  • ஜனதா சமாஜவாதி கட்சி (நேபாள்) என்பது இந்திய எல்லையையொட்டிய சமவெளிப் பிரதேசத்தில் வாழும் இந்திய வம்சாவளியினரின் கட்சி. அவர்களை "மாதேசிகள்' என்று அழைப்பார்கள்.
  • பட்டராய் பிரிவினர், மாதேசிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டுமென்றும், மகந்தா தாக்குர் பிரிவினர் பிரதமர் ஓலியுடன் சுமுக உறவு வைத்துக்கொண்டு மாதேசிகளுக்கு சலுகைகளைப் பெற வேண்டும் என்றும், இரு வேறு கருத்து உடையவர்கள்.
  • பிரதமர் ஓலி, தனது கட்சியின் அதிருப்தியாளர்களுடன் சமரசம் செய்துகொண்டு நேபாள காங்கிரஸ், ஜனதா சமாஜவாதி கட்சி ஆகியவற்றின் துணையுடன் பெரும்பான்மை பெற்றிருக்க முடியும்.
  • ஆனால், அவர் மீதான நம்பிக்கை பலருக்கும் இல்லாமல் போனதால் அந்த முயற்சிகள் பயனளிக்க வில்லை.
  • அதேபோல நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தெளபா, மாவோயிஸ்ட் மையம், ஜனதா சமாஜவாதி கட்சியின் பட்டராய் பிரிவினர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து ஆட்சி அமைத்திருக்கலாம். அதுவும் அவர் எதிர்பார்த்தது போல நிறைவேறவில்லை.
  • எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தும் அவர்களால் போதிய எண்ணிக்கை பலத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திரட்ட முடியாததால் அதிருஷ்டம் மீண்டும் பிரதமர் சர்மா ஓலியை நோக்கித் திரும்பியது.
  • அவருக்கு நெருக்கமான அதிபர் வித்யாதேவி பண்டாரி, சர்மா ஓலியையே மீண்டும் பிரதமராக்கி உத்தரவிட்டார்.
  • அதைத் தொடர்ந்து பிரதமர் ஓலி மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு வழிகோலியிருக்கிறார்.
  • நோய்த்தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் நடத்தியாக வேண்டும். பிரதமர் சர்மா ஓலியின் தலைமையில் அடுத்த ஆறு மாதம் தொடரும் இடைக்கால அரசால் எந்த அளவுக்கு தார்மிக பலத்துடன் ஆட்சி நடத்த முடியும், கொள்ளை நோய்த்தொற்றை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்கிற கேள்விகள் எழுகின்றன.
  • தினசரி பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், நேபாளம் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதை உலக நாடுகள் கவலையுடன் வேடிக்கை பார்ப்பதல்லாமல் வேறென்ன செய்ய முடியும்?

நன்றி: தினமணி  (26 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்