- கொவைட் -19 தீநுண்மி பாதிப்பு உலக அளவில் ஒரு கோடியைத் தாண்டியிருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்கு இந்த நோய்த்தொற்று அடங்குவதற்கான அறிகுறி காணப்படவில்லை.
- கொவைட்-19-க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கிவிட்டன. சோதனை நடத்தி தயாரிப்பு நிலைக்கு வருவதற்கு குறைந்தது செப்டம்பர் மாதம் ஆகும் என்று தோன்றுகிறது.
- இதற்கு முன்னால் பரவிய தீநுண்மிகளான சார்ஸ், நிபா போன்ற தொற்றுகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளும் மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சிகிச்சையும் வழங்கப்படுகின்றன.
- டெக்காமெதாசோன் என்கிற ஸ்டீராய்டும், ரெம்டெசிவிர் என்கிற மருந்தும் வழங்கப்படுகின்றன. கொவைட் - 19-க்கான மருந்துகள் இவை என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறதா என்ன?
எதார்த்த நிலைமை
- உலகெங்கிலும் பாதிக்கப்பட்டிருக்கும் கொவைட்-19 நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும் வெறும் அனுமானங்களின் அடிப்படையில் வழங்கப்படுபவையே தவிர, நோய் தீர்க்கும் உத்தரவாதமுடைய சிகிச்சை அல்ல என்பதுதான் உண்மை.
- இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் பிராண வாயு தரப்பட்டு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வளவே.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்; இல்லையென்றால் மரணமடைகிறார்கள் என்பதுதான் எதார்த்த நிலைமை.
- உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொவைட் - 19 தொற்றால் ஏற்படும் மரண விகிதம் மிக மிகக் குறைவு.
- ஒரு லட்சம் பாதிப்புகளுக்கு உலக சராசரி மரணம் 6.04 என்றால், இந்திய அளவில் அது 1.6 மட்டுமே. ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை எண் 154-இன் படி, பிரிட்டன் 63.13, ஸ்பெயின் 60.6, அமெரிக்கா 36.30, ஜெர்மனி 27.32, பிரேஸில் 23.68 என்று லட்சம் பாதிப்புகளுக்கான மரண எண்ணிக்கை இருக்கும்போது, இந்தியாவில் வெறும் 1.6-ஆக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?
இயற்கை வைத்தியங்கள்
- நமது உணவு முறையிலேயே மருத்துவம் அடங்கியிருக்கிறது என்கிற உண்மையை ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து வியப்படைகிறது.
- மேலை நாட்டவர்கள் மஞ்சள், மிளகு, ரசம் என்று நோய்த்தொற்றை எதிர்கொள்ள நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
- பாலில் மிளகு- மஞ்சள் கலந்து குடித்தல், நெல்லிக்காய், எலுமிச்சைச் சாறு குடித்தல் போன்றவை உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே தவிர, சந்தைப்படுத்தப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், போர்ன்விட்டா குடியுங்கள்; எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று யாரும் கூறுவதில்லை.
- கேரள அரசு வீடுவீடாகப் போய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக விநியோகிக்கிறது; கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகளை தமிழக அரசு இலவசமாக விநியோகிக்கிறது; ஆயுஷ் அமைச்சகம் தினந்தோறும் யோகாசனம், மூச்சுப் பயிற்சிகளைப் பரிந்துரைக்கிறது.
- இதற்கெல்லாம் சோதனைச்சாலை ஆய்வுகள் உண்டா என்று கேட்பது அர்த்தமற்றது. இவை காலம்காலமாக இந்த மண்ணுக்கே உரித்தான அனுபவ அறிவு.
- இவை தலைமுறை தலைமுறையாகக் காலம் உறுதி செய்திருக்கும் மருந்துகள். நமது சித்த - ஆயுர்வேத மருந்துகள், அலோபதி மருந்துகளைப்போல பக்க விளைவுகளை ஏற்படுத்தாதவை. இவை ரசாயனக் கலவைகள் அல்ல; இயற்கை வைத்தியங்கள்.
கொடிய தீநுண்மி
- பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் ஆய்வு செய்து, மருந்தை வெளிக்கொணர்ந்து அதன்மூலம் பல லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்ட நினைக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களால், இந்தியாவில் ஆயுர்வேத, சித்த மருத்துவ அடிப்படையில் சில ஆயிரம் ரூபாய் செலவில் மருந்து கண்டுபிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.
- ஆனால் இந்தியாவிலுள்ள அறிவுஜீவிகள் சிலர் நமது பாரம்பரிய மருத்துவ மேதைமையை எள்ளி நகையாடி, அறிவுபூர்வ ஆராய்ச்சி என்று மேலை நாட்டு கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடுக்காய், கற்பூரவல்லி, சிற்றரத்தை, அழிஞ்சில் உள்ளிட்டவற்றில் உள்ள மருத்துவக் கூறுகளின் மூலம் கொவைட் - 19 தீநுண்மி உடலில் பரவாமல் தடுக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
- அதேபோலத்தான் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்திருக்கும் கொவைட் - 19 சிகிச்சைக்கான கொரோனில் ஆயுர்வேத மருந்துத் தொகுப்பையும் அணுக வேண்டும்.
- துளசி, அஸ்வகந்தம் உள்ளிட்ட மூலிகைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த மருந்தால் கொவைட் - 19 தீநுண்மி குணமாகுமோ இல்லையோ நிச்சயமாக அலோபதி மருந்துகளைப்போலப் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
- பதஞ்சலி நிறுவனம் மருந்தைச் சந்தைப்படுத்துவதற்குப் பதிலாக, ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பியிருந்தால் விவாதத்தைத் தவிர்த்திருக்கலாம்.
- பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களால், நமது பாரம்பரிய சித்த - ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளின் அடிப்படையில் கொவைட் - 19 தீநுண்மிக்கு மருந்து காணும் முயற்சிகளில் தளர்வு ஏற்பட்டுவிடக்கூடாது.
- இந்திய மருத்துவ முறை என்றால் இளக்காரமாகக் கருதும் மேலைநாட்டு அடிமை மனநிலைதான் இந்தியாவைப் பிடித்திருக்கும் கொவைட் - 19-ஐவிடக் கொடிய தீநுண்மி!
நன்றி: தினமணி (29-06-2020)