TNPSC Thervupettagam

கூட்டறிக்கை அல்ல, வெற்றறிக்கை!

October 7 , 2020 1390 days 622 0
  • தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக மாறியிருக்கிறது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவு.
  • ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து, கடந்த 35 ஆண்டுகளாகப் பலமுறை இலங்கையின் ஆட்சியாளர்களால் இந்தியா நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டிருக்கிறது. இப்போதும் ராஜபட்ச குடும்பத்தினரின் ஆட்சியில் அது தொடர்கிறது என்பது உறுதிப்பட்டிருக்கிறது.
  • ஆகஸ்ட் மாதம் மகிந்த ராஜபட்ச பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு, அவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடேயேயான காணொலி சந்திப்பு செப்டம்பர் 26-ஆம் தேதி நடந்தது.
  • இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இரு தரப்பு உறவில் நிலவும் கருத்து வேறுபாடுகள் அப்படியே தொடர்கின்றன என்பதைத்தான் சந்திப்பு உறுதிப்படுத்தியது.
  • அந்தக் கருத்து வேறுபாடுகளை மாற்ற இந்தியாவால் இயலாது என்பதையும், அது குறித்து ராஜபட்ச குடும்ப ஆட்சி அக்கறை காட்டவில்லை என்பதையும் அந்தக் காணொலி கூட்டம் வெளிப்படுத்தியிருக்கிறது.
  • இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வும், அங்கு இந்தியாவால் செயல்படுத்தப்படும் பல கட்டமைப்புத் திட்டங்களும் இரு நாட்டுத் தலைவர்களாலும் விவாதிக்கப்பட்டன.
  • அதேபோல, இலங்கை இந்தியாவுக்குத் தர வேண்டிய 960 மில்லியன் டாலர் (ரூ.7,050 கோடி) கடனை திருப்பித் தருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் அந்தக் கூட்டத்தில் பிரதமர் ராஜபட்சயால் முன்வைக்கப்பட்டது.

இந்தியா - இலங்கை உறவு

  • 1987 இந்திய - இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில், இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13-ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
  • இலங்கையின் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வழிகோலும் அந்த 13-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் எழுத்தளவில் மட்டுமே இருக்கிறது.
  • இப்போது அதிபர் தேர்தலிலும் பிரதமர் தேர்தலிலும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் பேராதரவுடன் ராஜபட்ச குடும்பம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 13-ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகமாகி இருக்கிறது.
  • 13-ஆவது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையில் மாநில அரசுகள் அமைக்கப்பட்டாலும்கூட, சிறுபான்மைத் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தேர்தலே நடத்தப்பட்டது.
  • சில ஆண்டுகளுக்கு முன்புதான் மாகாண அரசுகள் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன என்றாலும்கூட, அவற்றுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை. இப்போது ராஜபட்ச குடும்பத்தின் ஆட்சியில் 13-ஆவது சட்டத்திருத்தமே அகற்றப்படலாம் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
  • எதிர்பார்த்தது போலவே இரு நாட்டு பிரதமர்களின் கூட்டம் முடிந்திருக்கிறது. அவர்களது கூட்டு அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மை தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சம உரிமை, நீதி, அமைதி, சுயாட்சி அதிகாரம் ஆகியவை இலங்கை அரசால் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
  • அதேபோல, 13-ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
  • இந்திய பிரதமரின் கருத்துகளை பிரதிபலிப்பதாக இல்லை, கூட்டறிக்கையில் இலங்கை பிரதமர் ராஜபட்சவின் கருத்து.
  • தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில், சமீபத்திய தேர்தலில் பெரும்பான்மை மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவுகளை எட்ட இலங்கை எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதுதான் பிரதமர் ராஜபட்சயின் பதிவு.
  • இருதரப்பு காணொலி கூட்டம் முடிந்த பிறகு, இலங்கை தலைநகர் கொழும்பில் ராஜபட்ச அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், 13-ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி அறிவுறுத்தியது குறித்து எதுவுமே கூறப்படவில்லை.
  • தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அவசியம் எழவில்லை என்பதும், அது பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பது ராஜபட்ச ஆட்சியின் தேர்ந்த முடிவு.
  • அதனால், இந்த பிரச்னையில் இந்தியாவின் அறிவுறுத்தலை இலங்கை சட்டை செய்யாமல் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
  • பிரதமர் மகிந்தாவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், 13-ஆவது சட்டத்திருத்தம் விரைவிலேயே அகற்றப்படக்கூடும்.
  • இருதரப்புக் கூட்டமாக இந்திய - இலங்கை பிரதமர்களின் காணொலி சந்திப்பு நடந்தது என்றாலும்கூட, அந்த சந்திப்பில் மாயாவியாக சீனா முன்னிலை வகித்தது என்பதுதான் உண்மை.
  • பிரதமர் மகிந்தாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு உலகறிந்த உண்மை. ஜூலை 2017-இல் ஒப்புக்கொண்ட எந்த ஒரு இந்தியக் கட்டமைப்புத் திட்டமும் இலங்கையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. அது குறித்து கூட்டறிக்கையிலும் எந்தவித உத்தரவாதமும் காணப்படவில்லை.
  • இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருதரப்பு கூட்டம் நடந்தது. இரண்டு பிரதமர்களும் காணொலி மூலம் பார்த்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள். அவர் கருத்து அவருக்கு, இவர் கருத்து இவருக்கு..!

நன்றி: தினமணி (07-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்