TNPSC Thervupettagam

கூட்டாட்சியை மீட்டுருவாக்குதல்

October 28 , 2020 1545 days 643 0
  • நாடு முழுமைக்குமான ஒற்றை வரி விகித அமைப்பு என்னும் பெருங்கனவால் ஒவ்வொரு மாநிலமும் தானாகவே வரிக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள நேர்ந்தபோதே கவலைக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன.
  • மூன்றாண்டுகளுக்கு முன்னால், ஒருங்கிணைந்த ‘சரக்கு மற்றும் சேவை வரி’யின் அறிமுகம் நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தில் முடிவானது. 1947-ன் ‘விதியோடு ஓர் ஒப்பந்தம்’ உரையைப் போல நாடகப் பாங்கான வசீகரத்தைக் கொண்டிருந்தது அது. மேலும், அந்தக் கணமானது, நாட்டை ஒற்றைத்தன்மையால் ஒருங்கிணைக்கும் எண்ணத்தை நியாயப்படுத்துவதாகவும் தோன்றியது.
  • உண்மையில், மிகவும் அபாயகரமான வகையில் தவறுதலான பொருளாதார மதிப்பீடுகள் அமைந்திருந்தன.
  • நடைமுறைக்கு உகந்த வரிவிகிதத்தைக் காட்டிலும் கருத்தியலின் அடிப்படையிலேயே அந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவையெல்லாம் சேர்ந்து, ஆபத்தான நிலையை நோக்கி இட்டுச்சென்றன.
  • தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் சமீபத்திய அறிக்கை, ஜிஎஸ்டியில் கிடைத்த வரி வருமானங்கள், இழப்பீடாக அளிக்கப்படாமல் அனைத்து விதிமுறைகளுக்கும் மாறாக மத்திய அரசால் தக்கவைத்துக்கொள்ளப்பட்டதை எடுத்துக்காட்டியிருக்கிறது.
  • மாநிலங்களின் கருவூலங்கள் காலியாகிவரும் நிலையில், ஒன்றிய அரசு தமது உத்தரவாதத்தின் பேரில் அவற்றைக் கடன் வாங்குமாறு சற்றும் நியாயமில்லாத வகையில் அறிவுறுத்திக்கொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த இந்த அறிக்கை மிச்சமிருந்த நம்பிக்கையிலும் ஓட்டை போட்டுவிட்டது.

தொழிலுக்கு ஏற்ற இடம்

  • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தங்களது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒன்றிய அரசே கடன் பெற வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அதை மறுப்பதற்குக் காரணம், வெளிநாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் திரும்பவும் மீட்டெடுப்பது சிக்கலாகிவிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
  • நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் கடன் பெற்றுக்கொள்வதற்கான வரம்பை ஒன்றிய அரசு மே மாதத்தில் உயர்த்தியது. இந்த ஏற்பாட்டில், ஒன்றிய அரசு விதித்த கட்டுப்பாடுகள் இரண்டு விதமான நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தின: விரிந்து பரந்த பன்மைத்துவம் கொண்ட நாட்டில் ஒரே விதமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது ஒன்று. ‘தொழில் செய்ய ஏற்ற’ நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடத்தை முன்னிலைப்படுத்துவது மற்றொன்று.
  • மாநிலங்கள் அவற்றின் நிகர உற்பத்தியளவில் பாதியளவுக்குக் கடன் பெற்றுக்கொள்ளக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. ஆனால், அதன் நான்கில் ஒரு பங்கு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இந்த நாட்டை தொழில்செய்ய ஏற்ற நாடாக உயர்த்தவும் செலவிடப்பட வேண்டும்.
  • உலக வங்கியின் ‘தொழில் செய்வதற்கு ஏற்ற இடம்’ என்ற அளவுகோல், நாட்டின் பொருளாதார வாய்ப்புகளுக்கான குறியீடாகக் கருதப்படுகிறது. எனினும், பாகுபாடற்ற நிலை, சமூக நலம், சூழலியல் நிலைத்தன்மை ஆகிய விஷயங்களில் இந்தக் குறியீட்டின் மீது விமர்சனங்களும் உண்டு.
  • உலக வங்கி கையாளும் தரவுகள் தொடர்பாக, திரிக்கப்பட்ட மதிப்பீடுகள் என்ற கருத்தும் உண்டு. தொழில் செய்வதற்கு ஏற்ற நாடு என்ற இலக்கே ஒன்றிய அரசை வேளாண் சந்தைகளின் உள்கட்டமைப்புகளையும் ஒழுங்குமுறைகளையும் மாற்றியமைக்கும் சட்டங்களை - அவற்றால் சில வாய்ப்புகள் இருந்தாலுமேகூட - அறிமுகப்படுத்தவும் வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தவும் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.
  • சந்தை சக்திகள் சமச்சீரற்றதன்மையில் வேரூன்றியிருப்பதன் காரணமாக வேளாண் துறை பெரும் நெருக்கடியில் இருக்கிறது என்றே பெரும்பாலான மதிப்பீடுகள் முடிவுசெய்கின்றன.

கூட்டாட்சியின் போக்கு

  • கூட்டாட்சி என்பது இந்திய அரசியலில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவரும் ஒரு கருத்து. உள்ளடக்கங்களையும் வரையறுக்கும் சட்டப் பிரிவுகளையும் தவிர்த்து, ‘ஃபெடரல்’ என்ற வார்த்தை இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றில் ஒரே ஒரு தடவைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • அதுவும் காலனியாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட உச்சநிலை நீதிமன்றத்தைக் குறிப்பதற்கு. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து, அந்த அமைப்பு உச்ச நீதிமன்றமாகச் செயல்பட ஆரம்பித்த பிறகு, அந்த வார்த்தை தனது பயன்பாட்டு மதிப்பையும் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
  • அரசு அமைப்பின் வெவ்வேறு அடுக்குகளுக்கு இடையே அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பகிர்ந்துகொள்வதற்கான நிர்வாகமானது, கூட்டாட்சியை வழிகாட்டும் கொள்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாமலேயேதான் எட்டப்பட்டிருக்கிறது.
  • உண்மையான நடைமுறைகளின்படி பார்த்தால், ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையிலான உறவில் அரசியலின் வெவ்வேறு நிலைகளுக்கேற்ப மாறுபட்ட வகைமாதிரிகள் பின்பற்றப்படுகின்றன.
  • சுதந்திரம் பெற்றபோது இந்தியா ஒரே கட்சியால் ஆளப்படும் நாடாக இருந்தது. எனவே, ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவாதமாக மாறியது.
  • அரசியல் அறிவியலாளர் ரஜ்னி கோத்தாரி அழைத்ததுபோல் ‘காங்கிரஸ் அமைப்புமுறை’யை அப்போது பார்க்க முடிந்தது. போதுமான வகையில் உள்நெகிழ்வோடும் அனைத்துப் பிரிவுகளின் அழுத்தங்களையும் ஏற்று அவற்றுக்கு இடம்கொடுக்கிற வகையிலும் அது தேசத்தைக் கட்டியெழுப்பியது.
  • அத்தகைய மேலாதிக்கப் பார்வையானது கலாச்சாரரீதியில் தனது முதல் சவாலை எதிர்கொண்டது. விருப்பமற்ற நிலையிலும் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு அது தேசியத் தலைமையை நிர்ப்பந்தித்தது.
  • அதன் பின், விரைவான தொழில் வளர்ச்சியின் வாயிலாகத் தேசத்தைக் கட்டமைக்கும் லட்சியங்கள் இக்கட்டுகளை நோக்கி இட்டுச்சென்றது. குறிப்பாக, வேளாண்மையில் அக்கறை கொண்ட குழுக்கள் காங்கிரஸ் கட்சி இடம்பெறாத அரசியலுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக அங்கிருந்து விலகி, மற்ற அரசியல் கட்சிகளுடன் சேர்ந்தன.
  • காங்கிரஸ் 1967-ல் முக்கிய மாநிலங்கள் சிலவற்றில் ஆட்சியை இழந்து, படிப்படியாக மத்தியில் மட்டுமே தனது விடாப்பிடியைத் தக்கவைத்துக்கொண்டது.
  • பிறகு, அரசியல் அறிவியலாளர்களான சுஹாஸ் பால்ஷிகரும் யோகேந்திர யாதவும் வரையறுப்பதுபோல, அரசியல் ஒரு புதிய நிலையை நோக்கி நகர்ந்தது, தேசிய அளவில் அல்லது மாநில அளவில் காங்கிரஸுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எழும் ‘அலை’களாக அப்போதைய அரசியல் இருந்தது.
  • 1989-க்குப் பிறகு, அரசியல் மற்றொரு நிலையை அடைந்தது, மாநில அளவிலான மிகவும் தனித்த தேர்தல் முடிவுகளின் விளைவாகத் தேசிய அளவில் தேர்தல் முடிவுகள் அமைந்தன. 1970 மற்றும் 1980-களில் உருவான பிராந்தியக் கட்சிகளால் இம்மாற்றம் நிகழ்ந்தது.
  • சுழன்று கொண்டிருக்கும் அரசியலில் 2014-ல் ஒரு துருவமாக வெளிப்பட்டு, 2019-ல் தனது நிலையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் பாஜக, அனைத்து முன்மாதிரிகளையும் ஒரு கை பார்த்துவிட்டு, தற்போது கூட்டாட்சியைத் தனது உள்கட்சி விவாதமாக மாற்ற முனைந்திருக்கிறது.
  • இங்கு கவனிக்கப்பட வேண்டியது, 1950 மற்றும் 1960-களில் இருந்த ‘காங்கிரஸ் அமைப்புமுறை’க்கு இந்தியா மீண்டும் வந்தடைந்திருக்கிறது என்பதாகும். ஆனால், பாஜகவின் மறுசீரமைப்புக்கும் முந்தையதற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கின்றன.

என்னென்ன வேறுபாடுகள்?

  • முதலாவதாக, இந்தியச் சமூகத்தில் ஆழமான கலாச்சாரப் பிரிவினைகள் நிலவும் இடங்களில் தம்மைப் பொருத்திக்கொள்வதன் மூலமாக பாஜக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வளர்ச்சியடைந்திருக்கிறது.
  • இது அந்தக் கட்சியின் கருத்தியலிலேயே உள்ளடங்கியுள்ளது; காங்கிரஸ் பின்பற்றியதுபோல அது நடைமுறை தந்திரோபாயங்களின் பாணியல்ல.
  • இரண்டாவதாக, ஊரக வேளாண் துறையில் தேங்கிக்கிடக்கும் மிகையான மனித சக்தியும் உற்பத்தியும் நகர்ப்புறத் தொழில் வளர்ச்சியை வளர்த்தெடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் காங்கிரஸின் வேளாண் பார்வை உருவானது.
  • பாஜக வேளாண் துறையைப் பொருளாதாரத்தின் கடைசி வாய்ப்பாகக் கருதுகிறது.
  • காங்கிரஸ் அமைப்புமுறையிலிருந்த பிளவுபடுத்தல்களுக்கு மாற்றாகப் பிராந்தியங்களால் சிக்கலான கலவைகளைக் கொண்ட அரசியல் முன்னிறுத்தப்படுகிறது என்றால், அது இவ்வாறுதான் இருக்க வேண்டும்: வேளாண் துறையானது மாற்றங்களை உருவாக்கக் கூடியதாக விரைவில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
  • மேலும், வேளாண் துறையின் மீது அக்கறை கொண்ட குழுக்கள் மாநில அரசியலில் ஒருங்கிணைந்து நிற்பதோடு மிகப் பெரும் அமைப்புகளாக உருவெடுத்து ஒன்றிய அரசின் அதிகாரத்தை வென்றெடுக்கும் நம்பிக்கையுடன் அதற்கான போட்டியிலும் இறங்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்