- இந்திய ரிசர்வ் வங்கியானது, ‘பஞ்சாப், மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி’யில் (பிஎம்சி) நடந்த நிதி முறைகேடுகளுக்குப் பிறகு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீது சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முக்கியமான நடவடிக்கைகள்
- கூட்டுறவு வங்கிகளுக்குப் புத்துயிர் அளிப்பதற்கான முக்கியமான நடவடிக்கை இது எனலாம்.
- இதன்படி ரூ.100 கோடி அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை வைப்புத்தொகையாகத் திரட்டும் கூட்டுறவு வங்கிகள், தங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் முன்பாக அவர்களுடைய விவரங்கள் அடங்கிய பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் அளித்து ஒப்புதலைப் பெற வேண்டும். தன் உறவினர்கள், நண்பர்களுக்கு எந்தவிதப் பிணையும் இல்லாமல், முறையான பரிசீலனையும் இல்லாமல் தலைமை நிர்வாக அதிகாரிகள் கடன் வழங்குவதைத் தடுக்க இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கடன் வழங்க அனுமதி தருவது, கையிருப்பு ரொக்கத்தைத் தீர்மானிப்பது, உள்தணிக்கையை மேற்கொள்வது, நிர்வாகம் தொடர்பாக நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, வாராக் கடன்களைக் கட்டுக்குள் வைப்பது போன்றவற்றுக்கு நகர்ப்புறக் கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழுவுக்கு உதவ ‘சுயேச்சையான மேலாண்மை வாரியம்’ ஏற்படுத்தப்படுவதையும் ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியிருக்கிறது. இந்த வாரியம் வங்கி நிர்வாகத்தில் தேவையின்றி தலையிடாது. அதேசமயம், அதில் முறைகேடும் இழப்பும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கும்;
- ஆலோசனை வழங்கும். மேலும், ஒரேயொரு நபருக்கோ அல்லது ஒரேயொரு தொழில் குழுமத்துக்கோ நிதியில் பெரும் பகுதியை இனி கடனாகத் தர முடியாது. கடன் பெறுவோரில் தனிநபர்கள் அதிகம் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன், முன்னுரிமைத் துறை என்று அரசு அடையாளம் காணும் துறைகளுக்கே வங்கி அதிகம் கடன் தர வேண்டும்.
தவறுகள்
- அரசுக்குச் சொந்தமான வணிக வங்கிகளில் கடன் தருவது, கணக்குகளைப் பராமரிப்பது ஆகியவற்றில் தவறுகள் ஏற்பட்டால் தலையிட்டுத் தவறுகளைத் திருத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கிறது.
- அதே போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீதும் இனி எடுக்கப்படும் என்பது நல்ல விஷயம். நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் வாராக்கடன் அளவு, அதன் மொத்தக் கடன்தொகையில் 6%-க்கு அதிகமானாலும், இழப்பு ஏற்பட்டாலும் அல்லது முதலீட்டில் 9% அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டாலும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அமலாகத் தொடங்கிவிடும் என்பதெல்லாமும் நல்ல விஷயங்கள்தான்.
- மேற்கண்ட கட்டமைப்புக்குள் மார்ச் 31, 2023-க்குள் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் மாறிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நியதிகளின் பலன் என்பது அவற்றை வகுப்பதில் மட்டும் அல்லாமல், தொடர்ந்து நியதிகளின்படி வங்கிகளைக் கண்காணிப்பதிலும் சேர்த்தே இருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கி உணர வேண்டும்; விதிகளைத் தீவிரமாக அமலாக்கும் கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (21-01-2020)