TNPSC Thervupettagam

கெட்டதிலும் ஒரு நல்லது!

April 11 , 2020 1741 days 820 0
  • நீண்ட காலமாக தீா்ப்புக்காக காராக்கிரகத்தில் காத்துக் கிடக்கும் விசாரணைக் கைதிகளுக்கு தீநுண்மி நோய்த்தொற்றால், விடிவுகாலம் பிறந்திருக்கிறது. கடந்த மாதம் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வியின் விளைவாக, விசாரணைக் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நிரம்பி வழியும் சிறைச்சாலைகளைத் தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாக்க பல மாநில அரசுகள் முற்பட்டிருக்கின்றன.
  • நல்ல வேளையாக தமிழகத்தில் ஏனைய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே சிறைச்சாலைகள் பேணப்படுகின்றன. தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் தீநுண்மி நோய்த்தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனா் என்று தமிழக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பி.எஸ். சிவஞானம், கே. கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமா்வுக்கு முன்பு இது குறித்த விசாரணை வந்தபோது தமிழக சிறையில் உள்ள 14,723 கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதை அரசுத் தரப்பு உறுதி செய்திருக்கிறது.

விசாரணைக் கைதிகள்

  • விசாரணை என்கிற பெயரில் குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளால் ஏனைய மாநிலங்களில் சிறைச்சாலைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அவை பரவி வரும் தீநுண்மி நோய்த்தொற்றின் கேந்திரங்களாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • இந்தியச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 70% விசாரணைக் கைதிகள் என்கிற அவலம் குறித்து எத்தனையோ முறை ஊடகங்களும், சமூக ஆா்வலா்களும் குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து மாநில அரசுகளும், கீழமை நீதிமன்றங்களும் கவலைப்படாமல் இருந்து வந்திருக்கின்றன.
  • மகாராஷ்டிர மாநிலமும், உத்தரப் பிரதேசமும் தலா 11,000 விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்திருக்கின்றன. மத்தியப் பிரதேசம் (8,000), பஞ்சாப் (6,000), தில்லி (3,000) என்று ஏனைய மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விசாரணைக் கைதிகளை விடுதலை செய்து சிலைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்க முற்பட்டிருக்கின்றன.
  • உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள் பரோலில் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, ஏழு ஆண்டு தண்டனைக்கும் கீழே உள்ள குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்படுகிறது.

இந்திய சிறைச்சாலைகள்

  • இந்தியாவிலுள்ள சுமார் 1,400 சிறைச்சாலைகளில், ஏறத்தாழ 50 சிறைச்சாலைகளில் அதன் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சராசரியாகப் பார்த்தால் இந்திய சிறைச்சாலைகளில் காணப்படும் கைதிகளின் விகிதம் 114%. அதனால்தான் சிறைச்சாலைகளில் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.
  • 2015-இல் வெளியிடப்பட்டிருக்கும் இந்திய சிறைச்சாலைகள் புள்ளிவிவரம் என்கிற அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 1,401 சிறைச்சாலைகளில் காணப்படும் 4,19,623 கைதிகளில் 67%, அதாவது 2,82,076 போ் விசாரணைக் கைதிகள். குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவா்கள். விசாரணை நடந்து தீா்ப்பு விரைந்து வழங்கப்பட்டால் இவா்களில் பலரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படலாம்.
  • அந்த அறிக்கையின்படி, 3,500-க்கும் அதிகமானோர் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள். அவா்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் ஒருவேளை அவா்களின் தண்டனைக் காலம் விசாரணைக் கைதிகளாக இருக்கும் காலத்தைவிட குறைவாக இருக்கக்கூடும். பிணையில் செல்ல வசதி இல்லாமலும், தகுந்த சட்ட உதவி கிடைக்காமலும் விசாரணைக் கைதிகளாக அவா்களில் பலா் தொடா்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
  • 2016-இல் வெளியிடப்பட்ட மாதிரி சிறைக் கையேடு, ஒவ்வொரு கைதிக்கும் சிறையில் வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து வரையறுக்கிறது. ஆனால், பெரும்பாலான சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லை.

சட்ட ஆணையத்தின் அறிக்கை

  • சட்ட ஆணையத்தின் 268-ஆவது அறிக்கை, விசாரணைக் கைதிகளின் பரிதாப நிலை குறித்து தெரிவிக்கிறது. வசதியுள்ளவா்கள் பிணையில் சென்றுவிடுகிறார்கள் என்றும், ஏழைகள்தான் விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.
  • தீா்ப்புக்குக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் நிலை குறித்தும், அவா்கள் என்னென்ன அடிப்படையில் பிணையில் விடப்பட வேண்டும் என்பது குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான சட்ட ஆணையம் விளக்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்களுக்காக விசாரணையில் இருப்பவா்கள் மூன்றில் ஒரு பங்கு விசாரணைக் காலம் முடிந்தவுடனும், அதற்கு அதிகமான தண்டனைக்குரிய குற்றங்களுக்கு விசாரணையில் இருப்பவா்கள் தண்டனையில் பாதிக்காலம் முடிந்தவுடனும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது பி.எஸ். சௌஹான் தலைமையிலான சட்ட ஆணையம்.

மாநில அரசுகளின் கடமை

  • அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளில் விசாரணைக் கைதிகள் மூலம் நோய்த்தொற்றுகள் சிறைச்சாலைக்குள் பரவுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இட நெருக்கடியும், சுகாதாரக் குறைவும் காணப்படும் சிறைச்சாலைகள் தீநுண்மி நோய்த்தொற்றுக்கு உலைக்கலன் ஆகிவிடக்கூடாது. விசாரணைக் கைதிகளை விடுவித்து சிறைச்சாலையின் நெரிசலைக் குறைப்பது மட்டுமல்ல, தூய்மையையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவதும்கூட மாநில அரசுகளின் கடமை.

நன்றி: தினமணி (11-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்