TNPSC Thervupettagam

கே.ஆர்.நாராயணன்: அரசமைப்பின் பாதுகாவலர்

November 6 , 2020 1536 days 772 0
  • அக்டோபர் 27 அன்று கே.ஆர்.நாராயணனுக்கு 100 வயது நிறைவுபெற்றது. தற்போதைய தருணத்தில் யாரும் அவரை நினைவு கூரவில்லை.
  • இதுவே வேறொரு காலகட்டமாக இருந்திருந்தால், அரசமைப்புச் சட்டம் எனும் சூரியனுக்குக் கீழ் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்று ‘தகுதி வாய்ந்த’ இந்தியர்கள் ஒவ்வொருவரையும் நம்பச் செய்த இந்தியாவின் வெற்றிகரமான உதாரணமாக நாராயணன் பறைசாற்றப்பட்டிருப்பார்.
  • எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவர், உயர்தட்டு ‘இந்திய அயலுறவுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் - அதற்கு முக்கியப் பங்குவகித்தவை அவரது தகுதியும் திறமையும்தான். அவரை ஆதரிக்கும் வகையிலான குருவோ, குலமோ அவருக்குக் கிடையாது.

அனைவருக்குமான இந்தியாவின் உதாரணம்

  • கே.ஆர்.நாராயணன் அரசுப் பணியை ஏற்பார், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார், இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக ஆகி மாநிலங்களவையின் அவைத் தலைவராக இருப்பார், இறுதியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்வார் என்பதெல்லாம் நேருவிய இந்தியாவின் கதையைச் சொல்கின்றன. அங்கே தேவைப்பட்டதெல்லாம் நற்பண்பும் நல்லியல்பும்தான்.
  • தான் ஒரு திறந்த அமைப்பு, ஒரு ஜனநாயக ஏற்பாடு, சமத்துவமான சமூக ஒழுங்கில் ஈடுபாடு கொண்ட ஒரு சமூகம் என்றெல்லாம் இந்தியாவால் பெருமைப்பட்டுக்கொள்ள முடிந்தது - தன்னுடைய உயர்நிலை குறித்தும் சாதனைகள் குறித்தும் அது திருப்தி கொண்டிருந்தது.
  • இதனூடாக, இந்தியா அனைவரையும் அரவணைக்கும் என்பதன் முதன்மையான உதாரணமாக ஆனார் கே.ஆர்.நாராயணன்.
  • இந்தியாவின் முதல் தலித் குடியரசுத் தலைவர் என்ற பெருமை அவருக்கு உரித்தானது. அவர் குடியரசுத் தலைவராக ஆனது அடையாள முக்கியத்துவத்தையும் தாண்டிய ஒன்று; மேலும், தற்போதைய புதிய, தீவிர அம்பேத்கரியர்கள் அவரைப் பற்றிப் பெரிதும் நினைக்காமல் இருக்கலாம் என்றாலும் அவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது புதிய சமூக நிலை ஒன்றின் வருகையை அறிவிக்கவே செய்தது.
  • அவர் ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் (United Front coalition) குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  •  அந்தக் கூட்டணியானது இந்தியா முன்னேறவும் மாபெரும் நாடாக ஆகவும் வேண்டுமென்றால், அது குறுகிய மனப்பான்மையை மீறி எல்லா இந்தியர்களுக்குமான, எல்லா சமூக அடுக்குகளுக்குமான நாடாக ஆக வேண்டுமென்று தீவிரமாக நம்பியது.
  • அரசின் கீழ் மக்கள் பணியில் நீண்ட காலம் இருந்த அவர் நவீன மனிதராகவும் அறிவியல் மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார்.
  • அவர் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தபோது, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நபரோடு கைகுலுக்கினார். பொது வாழ்க்கையில் உயரிய பதவியில் உள்ள ஒருவர் இப்படிச் செய்தது அதுவே முதன்முறை.
  • தங்களை ஆளுமைமிக்க ரட்சகர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களெல்லாம் அந்தச் செய்கையைத் தவிர்த்தனர்.
  • நாராயணன் மேம்பட்ட பண்புகளைக் கொண்டவராகவும் பன்மைக் கலாச்சார மனிதராகவும் இருந்தார்; நம் பண்பாட்டில் மிக உயர்தரமானவற்றிடமும் பிரகாசமானவற்றிடமும் அவருக்கு எந்தத் தயக்கமும் சங்கோஜமும் இருந்தது இல்லை.
  • உலக நாடுகளின் தலைவரைக் கண்டு வியந்ததும் இல்லை, அஞ்சியதும் இல்லை. ஏனெனில், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஜனநாயகப் பரிசோதனை மீது அவர் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
  • எனினும், குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்தான் குடியரசுக்கு அவர் பட்ட நன்றிக்கடனைத் திரும்பச் செலுத்தினார். அவர் வகித்த பதவியின் எல்லைகளை விரிக்கும்படி பல சூழல்கள் ஏற்பட்டன; அவர் அரசமைப்புச் சட்டத்தின் பொறுப்பான பாதுகாவலராக ஆனார்.

ஆளுநர்களைக் கட்டுப்படுத்துதல்

  • இப்படியாக, மிகவும் போற்றப்படும் விழுமியமான அரசமைப்புச் சட்டத்தின் தார்மீகத்தின் பாதுகாவலராக அவர் ஆனார்.
  • ஒன்றிய அரசின் ஆதரவைக் கொண்டிருந்த, தவறிழைத்த ஆளுநர்களைக் கட்டுப்படுத்த அவர் இரண்டு முறை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
  • முதல் தடவை, அரசமைப்புச் சட்டத்தின் படி எது நியாயம் என்று குடியரசுத் தலைவர் நாராயணன் கருதினாரோ அதற்கு மாறாக உத்தர பிரதேச ஆளுநர் ரொமேஷ் பண்டாரி செயல்பட்டார்.
  • சட்டக்கூறு 356-ஐப் பயன்படுத்தி, உத்தர பிரதேசத்தில் கல்யாண் சிங் அரசைக் கலைப்பதென்ற ஐ.கே.குஜ்ரால் அரசின் முடிவை நாராயணன் கடுமையாக எதிர்த்து நின்றார்.
  • பொம்மை வழக்கின் தீர்ப்பையும் சர்க்காரியா குழுவின் பரிந்துரைகளையும் நாராயணன் தனக்கு நினைவூட்டியதாக ‘மேட்டர்ஸ் ஆஃப் டிஸ்கிரெஷன்: அன் ஆட்டோபயோகிராஃபி’ என்ற தன் நினைவுக் குறிப்பு நூலில் ஐ.கே.குஜ்ரால் குறிப்பிட்டிருக்கிறார்.
  • அரசமைப்பு சட்டரீதியாக உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி ஒரு குடியரசுத் தலைவர் அமைச்சரவையைக் கேட்டுக்கொண்டது அதுதான் முதல் முறை.
  • இரண்டாவது முறையாக, குடியரசுத் தலைவரின் விமர்சனத்துக்கு ஒரு ஆளுநரின் நடத்தை உள்ளானது 2001 ஜூலையில். தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதி (கூடவே அப்போது மத்திய அமைச்சராக இருந்த இருவரும்) பழிவாங்கும் குணம் மிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு காவல் துறையால் தாக்கப்பட்டபோது, தமிழ்நாடு ஆளுநர் அமைதியாக இருந்தார்.
  • இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாட்டு ஆளுநர் பாத்திமா பீவியிடமிருந்து அறிக்கை வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் நாராயணன் கேட்டுக்கொண்டார். இதன் விளைவாக ஆளுநர் திரும்பப் பெறப்பட்டார்.

மனதில் பட்டதைப் பேசுதல்

  • இந்தியாவின் அரசமைப்புச் சட்டமானது குடியரசுத் தலைவரை அதிகார மையமாகப் பார்க்கவில்லை. பிரதமருக்குப் போட்டி அதிகார மையமாகவும் பார்க்கவில்லை. எனினும், ஒரு குடியரசுத் தலைவர் தனது இருப்பை உணர வைப்பதற்கான அளவுக்கு இடமும் எப்போதும் இருந்துவருகிறது.
  • வாஜ்பாய் பிரதமரானதும் குடியரசுத் தலைவர் ஒன்றும் நம் இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுக்கக் கூடியவர் அல்ல என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் அறிந்துகொண்டார்கள்.
  • அரசமைப்பைத் திருத்தி அமைப்பதற்கான குழுவொன்றும் உருவாக்கப்பட்டது. குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் கையில் அரசமைப்புச் சட்டம் சிக்கிக்கொள்வதன் அபாயத்தை நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்காகத் தனது பதவியின் கௌரவத்தை கே.ஆர்.நாராயணன் பயன்படுத்திக்கொண்டார்.
  • சில மாதங்கள் கழித்து, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தபோதும் கே.ஆர்.நாராயணன் தன் இருப்பை எல்லோருக்கும் உணர்த்தினார்.
  • பில் கிளிண்டனுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருந்தின்போது தன்னாட்சியையும் சுதந்திரத்தையும் நோக்கிய தேடலில் அணிசேராமையானது இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு கருவியாகும் என்று கூறி, ஒன்றிய அமைச்சரவைக் குழுவினரையே நாராயணன் அதிர்ச்சியடையவைத்தார்.
  • அமெரிக்காவுடன் ஒட்டி உறவாடுவதற்குத் தன்னால் முயன்றதையெல்லாம் வாஜ்பாய் அரசு செய்துகொண்டிருந்த காலம் அது. அமைச்சரவையினர் இதனால் மகிழ்ச்சியடையவில்லை; குடியரசுத் தலைவர் தனது எல்லையை மீறிவிட்டதாகக் கருதினார்கள்.
  • 1999-ல் வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் தோல்வியுற்றபோது, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • மேற்கு வங்கத்தின் அப்போதைய முதல்வர் ஜோதி பாசுவைப் பிரதமராக ஆக்கும்படி பாஜக அல்லாத கட்சியினரை நாராயணன் தூண்ட முயன்றார்
  • காங்கிரஸில் இருந்த முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஃபொட்டீடார், பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் ‘ஒரு கம்யூனிஸ்ட்’ இந்தியாவின் பிரதமராவதா என்று தடுத்துவிட்டார்கள்.
  • குடியரசுத் தலைவர் நாராயணனின் யோசனையைச் செவிசாய்த்திருந்தால் வாஜ்பாய் இரண்டாவது முறை பிரதமராக ஆகியிருக்க முடியாது, ‘குஜராத் 2002’ சம்பவம் நடந்திருக்காது, நரேந்திர மோடியும் இப்படி உருவாகியிருக்க மாட்டார்.
  • குடியரசுத் தலைவராக நாராயணன் இருந்தபோது, அவர் யாரையும் சாராதவராக இருந்தார். குடியரசுத் தலைவர் எவர் சார்பாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • ஆற்றல் மிக்க, நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று ஊடாடும் சமநிலையில் அரசமைப்புச் சட்டம் தழைத்தோங்குகிறது. இந்தக் கண்ணிகளில் ஒருவர், தனது தர்மத்தைச் செயல்படுத்தத் தவறினாலும் ஒட்டுமொத்தக் குடியரசின் நலனையும் அது பாதிக்கும்.
  • ஒரு பதவியின் கடமைகளை வழுவாது நிறைவேற்றிக்கொண்டு, அதே நேரத்தில் குடியரசின் சமநிலையையும் பாதுகாப்பது எப்படி என்ற சாத்தியத்தை நமக்குக் காட்டியவர் கே.ஆர்.நாராயணன்.

நன்றி : இந்து தமிழ் திசை (06-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்