TNPSC Thervupettagam

கே.ஆர்.நாராயணன்: தனித்துவர், பன்முகர்

October 27 , 2020 1545 days 707 0
  • ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்த முதலாமவர் என்பது மட்டுமே கே.ஆர்.நாராயணனின் (1920-2005) பெருமையல்ல.
  • பிரதமரின் முடிவுகளுக்கு எந்தக் கேள்வியுமின்றி ஒப்புதல் வழங்கும் முந்தைய குடியரசுத் தலைவர்களின் பாதையிலிருந்து விலகி, அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக அப்பதவிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை முறையான வகையில் கையாண்டு, முன்னுதாரணங்களை ஏற்படுத்தியவர் என்ற வகையிலும் அவருக்கு இந்திய வரலாற்றில் முக்கிய இடமுண்டு.
  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த உழவூரில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் கே.ஆர்.நாராயணன். அவரது தந்தை ஆயுர்வேத மருத்துவர்; தீண்டப்படாத சமூகமாக விலக்கிவைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவர் மட்டும்தான் மேற்கொண்ட மருத்துவப் பணிகளின் காரணமாக ஓரளவு மதிப்புடன் நடத்தப்பட்டிருக்கிறார். என்றாலும் வறுமையின் பிடியிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை.
  • அவரது ஏழு குழந்தைகளில் நான்காமவரான நாராயணனின் பிறந்தநாள் அக்டோபர் 27 அல்ல.
  • பள்ளியில் சேர்க்கும்போது எழுதப்பட்ட தேதிதான். ஆனால், நாராயணன் அதையே தன்னுடைய பிறந்தநாளாக ஏற்றுக்கொண்டார்.

இளமையில் வறுமை

  • தினமும் 15 கி.மீ. வயல்வெளிகளுக்கிடையே நடந்துசென்று பள்ளியில் படித்தவர் நாராயணன்.
  • பள்ளிக் கட்டணத்தை உரிய நாளுக்குள் செலுத்தாத காரணத்தால், பெரும்பாலும் வகுப்புக்கு வெளியே நின்றுதான் பாடங்களைக் கவனித்திருக்கிறார். பாடப் புத்தகங்கள் வாங்கவும் பணமில்லை.
  • நாராயணனின் அண்ணன் நீலகண்டன் மற்ற மாணவர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி அவற்றை எழுதி தனது தம்பிக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார்.
  • வறுமைச் சூழலுக்கு நடுவே பள்ளிப் படிப்பை முடித்த நாராயணன், திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உதவித்தொகையோடு கோட்டயத்தில் கல்லூரி புகுமுக வகுப்பை நிறைவுசெய்தார்.
  • தொடர்ந்து, திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்), எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) பட்டங்களைப் பெறுகிறார். அந்தப் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறிய முதலாவது தலித் மாணவர் என்றும் பெயரெடுக்கிறார்.
  • குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக வேலை தேடி டெல்லி சென்ற நாராயணன், அங்கு தேர்ந்தெடுத்துக்கொண்டது பத்திரிகையாளர் பணியை. ‘தி இந்து’, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ்களில் 1944-45 ஆண்டுகளில் அவர் செய்தியாளராகப் பணிபுரிந்திருக்கிறார்.
  • பின்பு, டாடா அறக்கட்டளையின் மாணவர் உதவித்தொகையோடு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் அரசறிவியல் பயிலச் சென்றார்.
  • லண்டனில் அவருடன் படித்த மற்றொரு மாணவர் பின்னாட்களில் இந்தியாவின் மிகப் பெரும் பொருளியலாளரான கே.என்.ராஜ். லண்டனில் மாணவராக இருந்தபடியே தனது பத்திரிகையாளர் பணியையும் தொடர்ந்தார் நாராயணன்.
  • கே.எம்.முன்ஷியின் ‘சோஷியல் வெல்ஃபேர் வீக்லி’ இதழுக்கு லண்டன் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.
  • 1948-ல் படிப்பை முடித்து இந்தியா திரும்பியதும், வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். பர்மாவில் பணிபுரிந்தபோது அங்கு சந்தித்த பெண்ணைக் காதலித்துக் கைப்பிடித்தார்.
  • தூதரகப் பணியாளர்கள் வெளிநாட்டுப் பெண்களை மணப்பதற்கு அனுமதியில்லை என்பதால், அவருக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
  • உஷா என்று பெயர் மாற்றம் செய்துகொண்ட அந்த இலக்கிய மொழிபெயர்ப்பாளர், பின்பு இந்தியாவின் முதல் குடிமகள் என்ற மதிப்பையும் பெற்றார்.

ஜேஎன்யு துணைவேந்தர்

  • நேருவின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து, துருக்கி, சீனா, வியட்நாம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். இந்தியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரி என்று நேருவாலேயே வர்ணிக்கப்பட்டவர்.
  • வெளியுறவுப் பணிக் காலத்தின் இடையே சிறிது காலம் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் வகுப்புகளும் எடுத்திருக்கிறார். 1974-ல் வெளியுறவுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
  • அதற்கடுத்த ஆண்டில், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போதைய கல்வி அனுபவமே தனது அரசியல் வாழ்வுக்குக் களம் அமைத்துக்கொடுத்ததாகவும் நாராயணன் குறிப்பிட்டிருக்கிறார்.
  • பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியில் இருந்தபோதே மீண்டும் வெளியுறவுத் துறைப் பணிக்கு அவர் அழைக்கப்பட்டார். ஐந்தாண்டுகள் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.
  • இந்திரா காந்தி 1982-ல் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்திலும் அதற்குப் பிந்தைய அமெரிக்க-இந்தியா நல்லுறவிலும் கே.ஆர்.நாராயணன் முக்கியப் பங்கு வகித்தார்.

காங்கிரஸா... கம்யூனிஸ்ட்டா?

  • இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று அரசியலுக்கு வந்த கே.ஆர்.நாராயணன் அடுத்தடுத்து மூன்று தடவை பாலக்காட்டின் ஒத்தப்பாலம் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் திட்டமிடல், வெளியுறவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அமைச்சராக அடுத்தடுத்து பொறுப்பு வகித்தார்.
  • 1989-91 ஆண்டுகளில் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த நாராயணனுக்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது எந்தப் பொறுப்புகளுமே கொடுக்கப்படவில்லை. காரணம், அன்றைய கேரளத்து காங்கிரஸ் தலைவர்கள், அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று சித்தரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்தக் குற்றச்சாட்டே நாராயணனுக்கு வேறு ஒரு முக்கியப் பதவி கிடைக்கவும் காரணமாக இருந்தது.
  • 1992-ல் நாராயணனை குடியரசுத் துணைத் தலைவர் போட்டிக்கு முன்மொழிந்தார் முன்னாள் பிரதமர் வி.பி. சிங். அதை இடதுசாரி அமைப்புகளும் ஏற்றுக்கொண்டார்கள். பிரதமர் நரசிம்ம ராவ் ஏகமனதாக அதை ஏற்றுக்கொண்டார்.
  • துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் அவர்தான். கம்யூனிசக் கொள்கைகளின் கண்மூடித்தனமான ஆதரவாளரும் இல்லை, எதிரியும் இல்லை என்பது நாராயணன் பின்பு அளித்த தன்னிலை விளக்கம்.
  • தொடர்ந்து, 1997-ல் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் ஏறக்குறைய 95% வாக்குகள் பெற்று அவர் வெற்றிபெற்றார்.
  • இந்தியாவில் இதுவரையில் சிறுபான்மை அரசு ஆட்சியில் இருந்தபோது நடத்தப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் தேர்தல் அதுதான்.
  • இந்தியா தனது சுதந்திரப் பொன் விழாவைக் கொண்டாடிய தருணத்தில், நாடாளுமன்ற அவையில் நள்ளிரவில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய சாதனை, ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கியதுதான் என்ற பெருமிதத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
  • ஜனநாயகத்தின் மீதான நாராயணனின் பெருமிதம் வெறும் வார்த்தையளவிலானது அல்ல. மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் அவர்.
  • 1998-ல் ராஷ்டிரபதி பவன் வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று அவர் வாக்களித்தார். அடுத்து வந்த தேர்தல்களிலும் அதைத் தொடர்ந்தார். ஜனநாயகத்தைக் காப்பதே குடியரசுத் தலைவரின் அரசமைப்புச் சட்டக் கடமை என்பதில் மிகவும் உறுதிகாட்டியவர் அவர்.
  • நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக உறுதியளிக்கும் ஒருவரைப் பதவியேற்க அழைப்பது, எந்தக் கட்சியாலுமே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில் அவையைக் கலைத்து புதிய தேர்தலை அறிவிப்பது, மாநில ஆட்சியைக் கலைக்குமாறு மத்திய அமைச்சரவை வலியுறுத்தும்போது அம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பியனுப்புவது என்று அரசமைப்புச் சட்டத்தின் வழி நின்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் வழி நின்றும் தனக்குரிய விருப்புரிமை அதிகாரங்களைப் பயன்படுத்தி புதிய வழிகாட்டும் நெறிகளை உருவாக்கியவர் நாராயணன்.
  • ஒரு குடியரசுத் தலைவராக அவர் உருவாக்கிய முன்னுதாரணங்கள் இந்திய அரசமைப்புக்கு என்றென்றும் வழிகாட்டும்.
  • அக்டோபர் 27: கே.ஆர். நாராயணன் நூற்றாண்டு நிறைவு.

நன்றி : இந்து தமிழ் திசை (27-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்