- தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்த கே.எஸ்.எஸ். என்கிற கே.எஸ்.சுப்பிரமணியன் கடந்த 24-ம் தேதியன்று காலமானார்.
- அவரை என்று, எங்கு, எப்படி, நான் முதலில் சந்தித்தேன் என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அவர் தன் நண்பர் ஜே.கே.யின் (எழுத்தாளர் ஜெயகாந்தன்) பிறந்த நாள் ஒன்றில் அவருக்கு வாழ்த்துச் சொல்லிச் சிரித்த அந்தக் காட்சிதான் என் ஞாபகக் கண்ணிகளில் முதல் காட்சியாகப் பதிந்திருக்கிறது.
- ஜே.கே.யை மட்டுமல்ல, அவருக்குப் பிடித்த எல்லா மனிதர்களையும் கொண்டாடுபவர்தான் கே.எஸ்.எஸ். எப்போதும் அவரை நான் ஜே.கே.யுடன் சேர்த்தே நினைவில்கொள்வேன். என் செல்பேசியில்கூட அவர் பெயரை இப்படித்தான் குறித்து வைத்திருக்கிறேன்: கே.எஸ். ஜே.கே.
இளமைக் காலம்
- 1937, நவம்பர் 12-ல் பிறந்த கே.எஸ்.எஸ். தாமிரபரணி நதிக்கரைக்காரர். ஒரு அக்காவுக்கும் தம்பிக்கும் இடையில் பிறந்த நடுப்பிள்ளை. இவருக்கு நரேன் சுப்பிரமணியன் என்ற மகனும், அஜந்தா என்ற மகளும் உள்ளனர்.
- இவர் இயற்பியல், வரலாற்றுத் துறைகளில் முதுநிலைப் பட்டங்களும், வணிக நிர்வாகத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
- இந்திய அரசுப் பணியில் ஐ.ஆர்.ஏ.எஸ்.ஸாக 15 ஆண்டுகளும், ஆசிய வளர்ச்சி வங்கியில் 22 ஆண்டுகளும் பணியாற்றியவர். பணி நிமித்தமாக அயல்நாடுகளில் இருந்த அவர், 1998-க்குப் பிறகு முழு நேரமாக இலக்கியத் துறையில் செயல்பட்டார்.
- மொழிபெயர்ப்பு என்பது தமிழைப் பொறுத்தவரை பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த அளவு தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்லவில்லை என்றே சொல்ல வேண்டும்.
- அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உழைப்பை, அறிவை, நேரத்தை மட்டுமல்ல வாஞ்சையுடன் தன் சொந்த நிதியையும் செலவிட்டு அந்த இடைவெளியை இட்டு நிரப்பத் தன்னாலானவரை அயராது பாடுபட்டவர் கே.எஸ்.எஸ்.
கொடையுள்ளம்
- இறுதிவரை இயங்கிக்கொண்டே இருந்த அவர் இந்த கரோனா காலத்திலும் பல கவிஞர்களைத் தேடித் தேடி அவர்களிடம் கவிதைகளைக் கேட்டு மொழிபெயர்த்தார்.
- அது மட்டுமல்ல, எழுத்தாளர்கள் இக்காலத்தில் என்ன சிரமப்படுகிறார்களோ என யோசித்து, நாலாம் பேருக்குத் தெரியாமல் சில எழுத்தாளர்களுக்குத் தன் அன்பைப் பணமாகவும் அவர் மொழிபெயர்த்து அனுப்பிக்கொண்டிருந்தார்.
- பொதுமுடக்கத்தின்போது மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கவிஞருக்குத் தனது ஓட்டுநர் மூலம் 25 ஆயிரம் கொடுத்தனுப்பியிருக்கிறார் கே.எஸ்.எஸ்.; அந்தக் கவிஞர் ‘வேண்டாம்’ என்று எவ்வளவோ மறுத்தும்கூட கேட்காமல் அந்தப் பணத்தை அவரிடமே கொடுத்துவிட்டு வாருங்கள் என்று தனது ஓட்டுநரிடம் கூறியிருக்கிறார் கே.எஸ்.எஸ்.
- எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, கலைஞனாகக்கூட ஆகிவிடலாம்தான். ஆனால், மனதை எந்தக் கசடும் படியாமல் வைத்துக்கொண்டு மேன்மையை மட்டும் கொண்டாடி மகிழவும், துன்பப்படுபவர்களுக்கு இயன்றதை எல்லாம் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் வரும் குணமும் எத்தனை பேருக்கு வாய்க்கிறது.
படைப்புகள்
- சாகித்ய அகாடமியில் அவரோடு இணைந்து சில ஆண்டு ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய காலங்கள் எவ்வளவு இனிமையானவை.
- தகுதியான எத்தனை பேருக்காக அவர் அங்கு வாதாடியிருப்பார். எத்தனை அரிய புத்தகங்கள் வரக் காரணமாக இருந்தார். அதோடு நில்லாமல், தெரியாத விஷயங்களை எந்தத் தன்முனைப்புமின்றி அவர் கேட்டுக்கொள்ளும் விதம் குழந்தைமையானது.
- எத்தனை விருந்துகள், எத்தனை பகிர்தல்கள், எத்தனை பயணங்கள்! என் தனிப்பட்ட வாழ்வில் அவர் கைகாட்டிய திசைகள் எவ்வளவு!
- மணி பெளமிக்கின் நூலை ‘கடவுளின் கையெழுத்து’ என்ற பெயரில் கே.எஸ்.எஸ். தமிழுக்குத் தந்தார்.
- அது போல அசோகமித்திரன் கட்டுரைகள், உவேசா வாழ்க்கை வரலாறு போன்ற பல நூல்களை ஆங்கிலத்துக்குக் கொண்டு சென்றார். ஜெயகாந்தனின் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- கருணாநிதியின் குறளோவியத்தையும் அவர் மொழிபெயர்த்து முடித்து அது இன்னும் வெளிவராமல் உள்ளது.
- இவை தவிர, சில தனிப்பட்ட இலக்கியக் கட்டுரைகளையும் அனுபவச் சுவடுகளையும் நேரடியாகத் தமிழில் எழுதியுள்ளார்.
- கவிதைகள் அவருக்குச் செல்லம் என்றே சொல்ல வேண்டும். சிற்பி, தமிழன்பன், இளம்பிறை, உமா மகேஸ்வரி, தமிழச்சி, வெண்ணிலா போன்ற கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தனித் தனி நூல்களாக வெளியிட்டுள்ளார்.
- சங்கப் பெண் கவிகளின் கவிதைகளை ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார். மேலும், வெவ்வேறு நவீனத் தமிழ்க் கவிகளின் கவிதைகளை ஆங்கிலத்தில் நான்கு தொகுப்புகளாகத் தந்துள்ளார். இப்படி இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு செல்லும்.
- தொலைபேசியில் அழைத்ததும் ‘சுப்ரமண்யன்’ என்றபடி கம்பீரமாகப் பேசத் தொடங்கும் அவர், ‘ஆங்… ரவ்வி எப்படிப்பா இருக்க?’ என்ற கேள்வியோடு ஆரம்பித்து ஒன்றிவிடுவார்.
- சில சமயம் கேலி கிண்டல்கள்கூட இருந்ததுண்டு. ஆனால், எல்லாவற்றின் ஆதார நீர்மை அன்பு ஒன்றுதான். ஜே.கே.யின் ஆவணப் படத்தில் அவர் ஜே.கே.யுடன் இணைந்து இடம்பெற வேண்டுமென ஆசைப்பட்டார். எளிதில் செய்ய வேண்டிய - செய்திருக்கக் கூடிய காரியம்தான். ஜே.கே.யும் அதை விரும்பி என்னிடம் கேட்டார்.
- எந்தக் கோபமும் பிணக்குமில்லாமல் ஏனோ வேறு சில காரணங்களால் அதை நான் தவிர்த்து உறுதியாக இருந்துவிட்டேன். அது ஒன்றே ஒன்றுதான் என் வாழ்வில் அவர் என்னிடம் கேட்ட சிறு சகாயம். இப்படி அதை செய்யாமல் போய்விட்டோமே என்று வாழ்நாள் முழுக்க எத்தனை காரியங்கள் நம்மை வருத்திக்கொண்டிருக்கின்றன.
- கே.எஸ்.எஸ்., எந்த நாளில் எப்போது உங்களைப் பார்க்க வந்தாலும் நீங்கள் கை முறுக்கும் தட்டையும் டிக்காஷன் காப்பியுமாக உபசரித்து, பேசி முடித்துக் கிளம்புகையில், பழங்களையும், ‘For the joy of sharing’ என்று எழுதிக் கையொப்பமிட்ட புத்தகங்களையும் கையளித்து, வாசல் வரை வந்து நின்று வழியனுப்பிப் போவீர்களே, ஏன் கே.எஸ்.எஸ்., நாங்கள் உங்களை வழியனுப்ப வகை செய்யாமல் இப்படிப் போனீர்கள்?
நன்றி : இந்து தமிழ் திசை (27-10-2020)