- மாநில வரைபடத்தை முழுமைப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் முறையிலான மறு நில அளவைப் பணியை, நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியிருக்கிறது கேரள அரசு. இப்பணிக்காக, மொழிவாரி மாநிலங்கள் உருவான (1956) நவம்பர் 1ஆம் தேதியை அம்மாநிலம் தேர்ந்தெடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. இது கேரளத்துடன் முடிந்துவிடும் விஷயம் அல்ல; முடிவற்று நீளக்கூடிய எல்லைப் பிரச்சினையின் முதல் புள்ளியோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
வரையறுக்கப்படாத எல்லை
- கேரள மாநிலம் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு தம் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அதிகபட்சமாக தமிழ்நாட்டுடன் 830 கி.மீ. எல்லையைக் கேரளம் கொண்டிருக்கிறது. இதில் 203 கி.மீ. மட்டுமே தமிழ்நாடு - கேரள அரசுகளால் வரையறுக்கப்பட்ட பகுதிகயாக உள்ளன.
- எஞ்சிய 627 கி.மீ. பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளாகவும் வனப் பகுதிகளாகவும் இருப்பதால், நில அளவைப் பணிகள் இரண்டு மாநில அரசுகளாலும் இதுவரை வரையறுக்கப்படவில்லை. மொழிவாரி மாநிலம் அமைந்து 66 ஆண்டுகள் ஆனபோதிலும் நிலைமை இதுதான். இந்தச் சூழலில்தான் கேரள அரசு நில அளவை, எல்லை வரையறைப் பணியை தற்போது கையில் எடுத்திருக்கிறது.
- நில ஆவணங்களைப் பராமரிப்பதற்காக டிஜிட்டல் நில அளவை என்ற அளவில், இதுபற்றிக் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிவந்த கேரள அரசு, தற்போது செயலில் இறங்கிவிட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்தப் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ள பினராயி விஜயன் தலைமையிலான அரசு, ரூ.856.42 கோடி நிதியையும் இதற்காக ஒதுக்கியிருக்கிறது.
- இந்தப் பணியில் 1,500 நில அளவையாளர்கள், 3,200 உதவியாளர்கள் என ஒட்டுமொத்தமாக 4,700 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பிரம்மாண்டமான நில அளவைப் பணிக்காக, கேரள அரசு ‘எண்ட பூமி’ (என் பூமி) என்ற இணையதளத்தையும் தொடங்கி, இது தொடர்பான பணிகளையும் ஒருங்கிணைத்துவருகிறது.
தன்னிச்சையான நடவடிக்கை:
- இந்த டிஜிட்டல் யுகத்தில், ஒரு மாநில அரசு நில அளவைப் பணியை டிஜிட்டல் வடிவில் தொடங்கியிருப்பதைக் குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை; இதுபோன்ற டிஜிட்டல் பணிகள் அவசியம்தான். ஆனால், நீண்ட எல்லையைத் தமிழ்நாட்டுடன் கேரளம் பகிர்ந்துகொண்டிருக்கும் சூழலில், நில அளவைப் பணியைத் தன்னிச்சையாகத் தொடங்கியிருப்பது தவறான போக்கு. கேரள மாநில எல்லையை ஒட்டிதான் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.
- இந்தச் சூழலில், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கேரள மாவட்டங்களில் நில அளவைப் பணியைத் தன்னிச்சையாக எப்படிச் செய்ய முடியும்? இதுபோன்ற நியாயமான கேள்விகளைப் புறந்தள்ளியே இப்பணிகள் நடைபெறுவதாகக் குரல்கள் எழுந்திருக்கின்றன. இதன் காரணமாக கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் பதற்றம் ஏற்படுவதைச் சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது.
- மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு தமிழக - கேரள எல்லையோரக் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதேபோலத் தமிழக - கேரள எல்லையில் தமிழகத்துக்குச் சொந்தமான வனநிலங்கள், கேரளத்தால் வருவாய் நிலங்களாக மாற்றப்படும் சர்ச்சைகளும் முடிவில்லாமல் நீள்கின்றன. இச்சூழலில், கேரள அரசு புதிதாகத் தொடங்கியுள்ள டிஜிட்டல் நில அளவைப் பணிகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் தமிழக மக்களிடம் அழுத்தமாக எழுகின்றன. 1966இல் கேரள அரசு மேற்கொண்ட நில அளவை சீர்திருத்தத்துக்குப் பிறகு பெறப்பட்ட தகவல்களுக்கு மாறாகவே புதிதாக இந்த டிஜிட்டல் நில அளவை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் எதிர்மறையான ஊகங்கள் எழுகின்றன.
- அதை உணர்த்தும் வகையில், தற்போது எடுக்கப்பட்ட டிஜிட்டல் நில அளவைக்குப் பிறகு, தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள தேவாரம் கிராமத்தில் உள்ள இடம் தங்கள் மாநிலத்துக்குச் சொந்தமானது என்கிற கேரள அரசின் அறிவிப்புப் பலகை இடம்பெற்றிருப்பது அம்மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சொல்லப்போனால், கேரளத்தின் இந்த நில அளவைக்குப் பிறகு, எல்லை மாவட்டங்களில் தேனியில்தான் அதிக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
தமிழகத்தின் நிலைப்பாடு
- பிரச்சினை வெடிக்கும் நிலையிலும் தமிழக அரசு அமைதி காப்பதாகவே அரசியல் கட்சியினரும் பல அமைப்புகளும் புகார் கூறுவதைப் புறந்தள்ளிவிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 9இல் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்; கேரள அரசின் பணிகள் தொடங்கிய பிறகு நவம்பர் 10இல் தமிழக அரசு ஒரு விளக்கத்தை அளித்தது. ‘தமிழக - கேரளப் பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நில அளவைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை’ என்பது தமிழக அரசு அளித்த விளக்கத்தின் சாரம்.
- எனினும், மாநிலம் ஒன்றின் எல்லையை அளவீடு செய்யாமல் நடக்கும் நில அளவைப் பணி என்பது முழுமை பெறாது. பொது எல்லையில் அளவீட்டுப் பணி நடைபெறவில்லையென்றால், இவ்வளவு நிதியையும் மனித சக்தியையும் கேரள அரசு ஏன் செலவழிக்கப்போகிறது? எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் வருவாய்த் துறையும் வனத் துறையும் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையில் இரு மாநில அரசுகளும் இணைந்தே நில அளவைப் பணியை மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் நில அளவைப் பணியை எல்லைப் பகுதியில் தன்னிச்சையாக நடத்தக் கடுமையான ஆட்சேபத்தைத் தமிழக அரசு கேரளத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
- நில அளவை இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய விவகாரமாக இருக்கும் சூழலில், அதில் மத்திய அரசும் மூன்றாம் நபராகத் தலையிட வேண்டும். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோதே பல தமிழகப் பகுதிகள் கேரளத்துக்குச் சென்றன. அதிலிருந்து தொடங்கிய நதி நீர் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. டிஜிட்டல் நில அளவை விவகாரம், தமிழகம் - கேரளம் இடையே புதிதாகஎழுவதற்கு ஆபத்துள்ள எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்தி,எதிர்காலத்தில் தீராத தலைவலியாக மாறும் அபாயமும் உண்டு. எதையும் வரும்முன் காப்பதே நலம். அதைத் தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
நன்றி: தி இந்து (09 – 12 – 2022)