TNPSC Thervupettagam

கேரள ரயில் பாதைத் திட்டம் குறித்த தலையங்கம்

April 2 , 2022 857 days 440 0
  • "சில்வர்லைன்' என்றழைக்கப்படும் ரயில் பாதைத் திட்டத்தால் கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
  • அண்மையில், நில அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் சென்றபோது, பல பகுதிகளில் நூற்றுக்கணக்கில் பெண்கள் உள்ளிட்டோர் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • பல்வேறு மாநிலங்களில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்காகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த விவகாரத்தில் கேரளத்தில் பொதுமக்களின் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது என்பதுதான் விசித்திரம்.
  • இந்தத் திட்டத்தால் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர நேரிடும் என்றும், பூர்விக இடத்தை விட்டு அகற்றப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் இந்த வழித்தடம் வளமான விவசாய நிலங்கள், மலைகள் வழியாகச் செல்வதால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

வளர்ச்சியும் போராட்டங்களும்!

  • மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 530 கி.மீ. தொலைவுள்ள காசர்கோடு நகருக்கு 4 மணி நேரத்துக்குள்ளாக செல்லும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் ரூ.64,000 கோடி. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்த இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாகக் குறையும் என்றும், வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், விமான நிலையங்களையும், தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தையும் இணைப்பதால் நகரங்கள் வளர்ச்சி பெறும் என்றும் மாநில அரசு கூறுகிறது.
  • தில்லி மெட்ரோ ரயில் செயல்படுத்தப்பட்ட வேகத்தில் அமைக்கப்பட்டால்கூட இந்தத் திட்டம் முடிவடைய 30 ஆண்டுகளுக்கு மேலாகி விடும் என்றும் அதனால் திட்ட மதிப்பீடு சில லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஆகிவிடும் என்பதால் அதற்குரிய நிதியை அரசால் திரட்ட முடியாது என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
  • காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் "கே-ரயில் சில்வர்லைன் விருத்த ஜனகீய சமிதி' என்ற பொதுமக்கள் அமைப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
  • இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு சுற்றுச்சூழல் நிபுணர்களின் அமைப்பான "கேரள பரிஸ்திதி ஐக்கிய வேதி' என்ற அமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • இந்தத் திட்டத்துக்கான ஆய்வுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதும், பல்வேறு கிராமங்களில் 955 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் மாநில அரசுக்கு ஆறுதல் அளிப்பவையாகும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
  • குஜராத் மாநிலத்தில், வறண்டுள்ள தெற்குப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக பர் - தாபி (தாப்தி) - நர்மதா ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அந்த மாநில அரசு முன் மொழிந்தது.
  • மக்கள்தொகையில் 12% முதல் 15% வரை உள்ள பழங்குடியினர், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று போராடத் தொடங்கினர். எதிர்க்கட்சியான காங்கிரஸும் களம் இறங்கியது.
  • இதை கவனத்தில் கொண்ட பாஜக அரசு, இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு எதிர்மறையாக இந்த விவகாரம் ஆகிவிடும் என்று கருதி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.
  • சென்னை - சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த போதும் கூட விளைநிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகளுடன் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராடியதால் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமலேயே போய்விட்டது.
  • கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்துக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
  • பிரிட்டிஷ் ஆட்சியில் ரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டபோது காணப்பட்ட கடுமையான எதிர்ப்பு, இப்போது மறக்கப்பட்டு விட்டது.
  • எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து போராடும் போக்கு புதிதொன்றுமல்ல.
  • அதனால், எல்லா திட்டப் பணிகளிலும் தாமதம் ஏற்படுவதோடு, செலவினமும் அதிகரிக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
  • சுமார் 2,700 சதுர அடி இருந்த காசி விஸ்வநாதர் ஆலய வளாகம் அண்மையில் 5.3 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • இதற்காக சுமார் 300 சொத்துகள் கையகப்படுத்தப்பட்டன. எல்லா சமூகங்களையும் சேர்ந்தவர்களின் சுமார் 1,400 கடைகள் - வீடுகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
  • இந்தத் திட்டத்துக்கு 2019 மார்ச்சில் அடிக்கல் நாட்டப்பட்டு 2020 ஜனவரியில் பணிகள் தொடங்கின. விரிவாக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி 2021 டிசம்பர் 13-ஆம் தேதி திறந்து வைத்தார்.
  • காசி விஸ்வநாதர் கோயில் போன்று திட்டமிட்டு செயல்பட்டால் போராட்டங்களையும், கூடுதல் செலவையும், தாமதத்தையும் தவிர்க்க முடியும்.
  • எந்தத் திட்டமாக இருந்தாலும், ஒரு சிலருக்கு இழப்பு இல்லாமல் நிறைவேற்ற முடி​யாது என்பது அனை​வ​ருக்​குமே தெரி​யும்.
  • எல்லா திட்டங்​க​ளி​லும் பாதிக்​கப்​ப​டு​ப​வர்​கள் விளிம்பு நிலை மக்​கள்​தான். வளர்ச்​சித் திட்டங்​க​ளைத் தீட்டும்​போதே, அவர்​கள் பாதிக்​கப்​ப​டாத வண்​ணம் மாற்று ஏற்​பா​டு​களை உரு​வாக்கி அவர்​க​ளது வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​ப​டா​மல் பாது​காப்​பதை உறு​திப்​ப​டுத்​துவதன் மூலம்​தான் மக்​கள் ஆத​ர​வு​டன் வளர்ச்​சித் திட்டங்​களை நிறை​வேற்ற முடி​யும்!

நன்றி: தினமணி (02 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்