- கேரளத்தில், 1957 முதல் இன்று வரை பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முதலமைச்சா்கள் ஆட்சி புரிந்துள்ளார்கள். ஒரே கட்சியைச் சோ்ந்த வெவ்வேறு முதல்வா்களும் இருந்திருக்கிறார்கள்.
- ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி 1957-இல் வந்தபோது, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தார். அவரது ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, 1960-இல் பட்டம் தாணுப்பிள்ளை, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி சார்பாக முதல்வராக பொறுப்பேற்றார்.
- அடுத்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக சங்கா் முதல்வராக இருந்தார். மீண்டும் 1967-இல் நம்பூதிரிபாட், இடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சி. அச்சுதானந்தன், பிறகு காங்கிரஸ் கட்சியின் கருணாகரன், அடுத்து ஏ,கே. அந்தோணி, மறுபடியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக பி.கே. வாசுதேவன் நாயா், இடையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக முகமது கோயா, பிறகு இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக ஈ.கே. நாயனார், அடுத்து காங்கிரஸின் கருணாகரன், மீண்டும் ஈ.கே. நாயனார், மீண்டும் கருணாகரன், மீண்டும் ஏ.கே. அந்தோணி, மீண்டும் ஈ.கே. நாயனார், மறுபடி ஏ.கே. அந்தோணி, அடுத்து காங்கிரஸின் உம்மன் சாண்டி, பிறகு இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக, வி.எஸ். அச்சுதானந்தன் என்ற வரிசையில், 2011-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக உம்மன் சாண்டி முதல்வரானார்.
- 2016-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பாக பினராயி விஜயன் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இப்போது மீண்டும் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.
- 2021-இல் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்துள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும், மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமிலும் முதலமைச்சா்கள் பதவியேற்பு முடிந்து விட்டது.
- ஆனால், கேரளத்தில் மட்டும், அதிகமான தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றிருந்தாலும், இன்னமும் பதவியேற்பு நடைபெறவில்லை. மே மாதம் 20 அன்று தான் பதவியேற்பு நடக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.
- ஏற்கெனவே மே 3 அன்று பதவியேற்பார் பினராயி விஜயன் என்று ஒரு செய்தி உலவியது. அப்போது அத்தனை அவசரப்பட்டவா்கள், இப்போது ஏன் பதவியேற்பைத் தள்ளிப் போடுகிறார்கள்?
தாமதம் ஏன்?
- ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கேரளத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். இந்த முறை ஏன் அப்படி நடக்கவில்லை? மீண்டும் இடது ஜனநாயக முன்னணியே அதிகமான தொகுதிகளில், குறிப்பாக, 99 இடங்களில் வெற்றி பெற்ற காரணம் என்ன? காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை.
- இடது ஜனநாயக முன்னணி, பினராயி விஜயனை முதலமைச்சா் வேட்பாளராக அறிவித்து பரப்புரை செய்தது.
- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியால் முதலமைச்சா் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.
- கரோனா தீநுண்மிப் பரவல் காலத்தில், அதைக் கட்டுப்படுத்தி, இடது முன்னணி அரசாங்கம் மக்களுக்கு உணவு தந்து உதவியதால், இடது முன்னணி அரசாங்கம் மீது இருந்த பழிகளான தங்கக் கடத்தல் போன்றவை மறக்கடிக்கப்பட்டது.
- அதனால் மீண்டும் இடது முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அப்படி இருந்தும் ஏன் அங்கு பதவியேற்பு தாமதம் ஆகிறது?
- ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான சிபிஎம் கட்சி, முழுமையாக பினராயி விஜயனின் ஆதரவாளா்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வி.எஸ். அச்சுதானந்தன் ஆட்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்.
- பினராயியோடு இணைந்து பயணம் செய்த முக்கிய அமைச்சா்கள் அவரது அணுகுமுறைகளில் வேறுபாடு கொண்டார்கள். அது சிபிஎம் கட்சியின் உள் விவகாரம்தான் என்றாலும், அரசாங்கத்தை நடத்திச் செல்வதில் பங்காளிகளுக்குள் உள்ள பிரச்னையாக கட்சிக்குள் வெடித்தது.
- உதாரணமாக, பினராயி தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய அமைச்சா்களாக இருந்த பொதுப்பணித்துறை அமைச்சா் ஜி. சுதாகரன், நிதி அமைச்சா் தாமஸ் ஐசக், ஈ.பி. ஜெயராஜ், பி. ஜெயராஜ் ஆகியோருக்கு இந்த முறை தோ்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப் பட்டது.
- கட்சியில் இருக்கும் ஒருவா் இருமுறைக்கு மேல், எம்எல்ஏ- வாக வெற்றி பெற்றவா், தோ்தலில் நிற்கக் கூடாது என்பதற்காகவும், புதியவா்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காகவும் அவா்கள் தோ்தலில் போட்டியிடுவது தவிர்க்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், பினராயி விஜயன் தோ்தலில் போட்டியிடுவதை அந்த விதி தடுக்க வில்லை.
- சுதாகாரனையும், தாமஸ் ஐசக்கையும் மீண்டும் வேட்பாளா்களாக நிறுத்த வேண்டும் என்று ஆலப்புழா மாவட்ட சிபிஎம் கட்சிக் கூட்டத்தில் கோரிக்கை எழுந்தபோது, அங்கிருந்த அவா்கள் இருவரும் ‘கட்சியின் விதிகளை மீறி நாங்கள் போட்டியிட விரும்பவிலை’ என்று கூறி போட்டியிட மறுத்து விட்டனா்.
- அதேபோல கண்ணனூா் மாவட்ட சிபிஎம் கட்சிக் கூட்டத்தில், சுகாதார அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றிய சைலஜா டீச்சருக்கு எதிராக இதே விதி கொண்டுவரப்பட்ட போது, அவா் வெகுண்டெழுந்து எதிர்த்து விட்டார். இப்போது அவா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
- அதேபோல கண்ணனூா் மாவட்டத்தில், தொழில் அமைச்சராக இருந்த ஈ.பி. ஜெயராஜ் இதே விதியின் காரணமாக வேட்பாளா் ஆகும் வாய்ப்பை இழந்தார்.
- பி. ஜெயராஜ் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்ததால் பினராயிக்கு எதிரானவராக ஆக்கப்பட்டார். மாவட்டச் செயலாளா் பொறுப்பிலிருந்தும் அவா் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக எம்.வி. ஜெயராஜ் கட்சியின் மாவட்ட செயலாளராக ஆக்கப்பட்டார்.
- கண்ணனூா் மாவட்டத்தைச் சோ்ந்த கொடியேறி பாலகிருஷ்ணன், அவரது மகன்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக முன்பே கைது செய்யப்பட்டதால், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
- இப்போது, தனக்கு இணையான தலைமைத் தோழா்கள் ஒவ்வொருவராக கழற்றி விடப்பட்டு, பினராயி விஜயன் மட்டும், கண்ணனூா் மாவட்டத்தின் மூலம், மாநில அளவில் ஒரே தலைவராக கொண்டு வரப்பட்டுள்ளார்.
- ஆனாலும், சைலஜா டீச்சா் முதல்வா் பதவிக்கான போட்டியாளா் எனவும் சலசலப்பு உள்ளது. பினராயியின் சகாக்கள் அவரை ‘கேப்டன்’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனா்.
- பி. ஜெயராஜ், ‘கட்சியில் கேப்டன் என்று ஒரு பதவி கிடையாது, எல்லோருமே தோழா்கள் தான்’ என்று கூறுகிறார். சுதாகரன் தனக்கு எதிராக அரசியல் கிரிமினல்கள் சதி செய்கின்றனா் என்று கூறுகிறார்.
- முரண்படுபவா்களது கருத்துக்கள் இணைய அஞ்சல் மூலம், கட்சியின் தலைமையான அரசியல் தலைமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு
- மே மாதம் 9-ஆம் தேதியிட்ட, சிபிஎம் கட்சியின் அதிகாரபூா்வ ஆங்கில வார ஏடான, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில், தலைங்கம் எழுதப்படுகிறது.
- அதன் தமிழாக்கம், ‘தீக்கதிர்’ நாளேட்டில், மே 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதில், ‘இம்மாபெரும் வெற்றிக்கு பினராயி விஜயனின் பங்களிப்பும், அவருடைய ஆளுமையும்தான் காரணம் என்று சில ஊடகங்களும், சில அரசியல் விமா்சகா்களும் மதிப்பிடுகின்றனா்.
- அவா்களின் பார்வையில், இடது ஜனநாயக முன்னணியின் தோ்தல் வெற்றிக்கு பிரதான காரணம் ஒரு மாபெரும் தலைவா் ‘சுப்ரீம் லீடா்’ (வலுவான மனிதா்) தோன்றியிருப்பதே காரணமாகும்.
- அவா்கள் பார்வையில் அவா்தான் அரசாங்கத்தையும், கட்சியையும் ஆதிக்கம் செலுத்தினார் என்பதாகும்.
- தோழா் பினராயி விஜயன், கொள்கைகள் நிர்வாகத் திறமையுடன் வெளிக் கொணரப்படுவதில், கண்ணுங்கருத்துமாக இருந்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
- இருப்பினும் வெற்றிக்குக் காரணம் தனிநபா் மற்றும் கூட்டு முயற்சிகளேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணியைப் பொருத்தவரை, புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவை, கூட்டுச் செயல்பாடு மற்றும் தனிநபா் பொறுப்பு என்கிற மரபைத் தொடா்ந்திடும்’ என்று எழுதப்பட்டுள்ளது.
- இது பினராயி தலைமையிலான கேரள கட்சியுடன், அரசியல் தலைமைக்குழு வேறுபடுவதையே காட்டுகிறது.
- சிபிஎம் கட்சிக்குள், பினராயியை ‘கேப்டன்’ என்று அழைக்கும் போக்கு வளரும்போது, வாளையாரில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்த தலித் சிறுமிகளின் தாயார் பாக்கியவதி, பினராயியை எதிர்த்துப் போட்டியிட்டதும், சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்கிய சந்திரசேகரன் கொலையுண்டதும் கவனிக்கத் தக்கது.
- கொலையான சந்திரசேகரனின் மனைவி கே.கே. ரமா, காசா்கோட்டின் வடகரா தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ-ஆனதும், அவரை சட்டப்பேரவைக்குள் நுழைய விடமாட்டோம் என்று பினராயி ஆதரவாளா்கள் கூறுவதும், மாநிலத்திற்குள் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மையே.
- இத்தகைய சூழலில்தான், சைலஜா டீச்சரை ஏன் முதல்வராகக் கொண்டு வரக் கூடாது என்ற ஆலோசனையோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு, மேற்கண்ட தலையங்கத்தைத் தீட்டியுள்ளது என்று தோன்றுகிறது. அத்தகைய ஒரு விவாதம் நடந்து கொண்டிருப்பதால்தான், பதவியேற்பு தள்ளிப் போடப்படுகிறதோ?
நன்றி: தினமணி (15 – 05 - 2021)