TNPSC Thervupettagam

கேரளர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் மாவேலி மன்னர்?

September 11 , 2019 1949 days 800 0
  • மூன்றடி மண் கேட்டான் வாமனன். சம்மதித்தான் மன்னன் மாவேலி. முதல் அடியில் ஓங்கி உலகளந்தான் வாமனனாய் வந்த திருமால். இரண்டாம் அடியில் விண்ணுமளந்தான். வாக்கு மாறாத மாவேலி மூன்றாம் அடிக்குத் தன் சிரசைத் தாழ்த்திக்கொடுத்தான். மாவேலி ஏன் வதைக்கப்பட வேண்டும்? அவன் அசுரனும் அகங்காரியுமாவான் என்றனர் தேவர்கள். மாவேலியின் பக்தியைத் திருமால் சோதித்தார் என்பார் சிலர். ஆனால், மலையாளிகளுக்கு இந்தக் காரணங்கள் பொருட்டேயில்லை. ஏனெனில், மாவேலி வழங்கியது நல்லாட்சி. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். அதனால்தான், ஆண்டுதோறும் தன் குடிகளைக் காண வேண்டும் என்ற மாவேலியின் வேண்டுகோளுக்குத் திருமால் இணங்கினார். இன்று (செப்டம்பர் 11) மாவேலி விஜயம்செய்யும், ஆவணி மாதத்துத் திருவோண தினம். மலையாளிகள் தங்கள் மன்னனைப் பூக்கோலமிட்டுப் புத்தாடை உடுத்தி வரவேற்கும் தினம்.
  • கடந்த ஆண்டு மாவேலி விஜயம் செய்தபோது, இந்தச் சின்னஞ்சிறு மாநிலத்தை வெள்ளம் சூழ்ந்திருந்தது. மாவேலி வருத்தத்துடன் திரும்பியிருப்பார். கடந்த மாதம் வயநாடு மலப்புரம் பகுதிகளைப் பெருமழை தாக்கியது. ஆனால், மலையாளிகள் அதிலிருந்து மீண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். இந்த முறை மாவேலியிடம் பெருமையுடன் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
மாஸ்டரும் டீச்சரும்
  • மலையாளிகளின் வெற்றிகளுக்கு முக்கியக் காரணம் கல்வி. மாநிலத்தில் 94% மக்கள் கல்வி அறிவு பெற்றவர்கள். எண்பதுகளின் பிற்பகுதியில் நான் எர்ணாகுளத்தில் வேலைபார்த்தேன். நான் குடியிருந்த வீடு காரைக்காமுறிக் குறுக்குத் தெருவில் இருந்தது. ஒரு ஆட்டோ ரிக்‌ஷா போய்வரக்கூடிய அகலமுடைய தெரு அது. அதே தெருவில்தான் எழுத்தாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான எம்.கே.ஸானு மாஸ்டரின் வீடும் இருந்தது. 1987-ல் எர்ணாகுளம் தொகுதியில் ‘இடதுபட்ச பின்துணையுடன் ஸ்வதந்திர ஸ்தானார்த்தி’யாகப் போட்டியிட்ட மாஸ்டர், சட்டமன்ற உறுப்பினரானார். இந்த மாஸ்டர் என்கிற பின்னொட்டு அவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்ததால் வந்தது. ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவரை என்றென்றும் மாஸ்டர் என்றோ டீச்சர் என்றோ மதிப்புடன் விளிக்கிற சம்பிரதாயம் கேரளத்தில் உண்டு.
  • குஞ்ஞுண்ணி மாஸ்டர் பள்ளி ஆசிரியர். நாடு போற்றும் குழந்தைக் கவிஞர். குஞ்ஞுண்ணி மாஸ்டர் என்றே பிள்ளைகளாலும் பெரியவர்களாலும் அழைக்கப்படுகிறார். கொச்சுண்ணி மாஸ்டர் கொச்சி நகரின் முதல் மேயர். 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது, செயற்குழுவில் தனது நிர்ணாய கரமான வாக்கை நல்கியவர் கே.சி.அபிரகாம் மாஸ்டர்.
  • 2018-ல் கோழிக்கோடு மலப்புரம் மாவட்டங்கள் நிபா வைரஸின் உருவில் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டன. வைரஸுக்கு எதிரான யுத்தத்துக்குத் தலைமை தாங்கியவர் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர். மாநில அரசின் இணையதளத்தில்கூட அமைச்சரின் பெயர் டீச்சர் என்கிற பின்னொட்டோடுதான் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் கணவனோ, மனைவியோ அல்லது இருவருமோ ஆசிரியர்களாக இருக்கக்கூடும். அப்போது ஒருவரை ஒருவர் மாஸ்டர் என்றோ டீச்சர் என்றோதான் விளித்துக்கொள்வார்கள். ஊரும் உறவும் அப்படித்தானே அழைக்கிறது. எழுத்தறிவித்தவனைப் போற்றுகிற சமூகமது.
கல்வியும் நல்லிணக்கமும்
  • இந்தக் கல்விதான் கேரளத்தின் மத நல்லிணக்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். மக்கள்தொகையில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு இணையாக சிறுபான்மையினரும் உள்ள சமூகம் அது. மூன்று மதத்தவரும் எல்லாத் துறைகளிலும் சீரிய பங்காற்றிவருவதைப் பார்க்க முடியும். கிறிஸ்து வத்துக்கும் இஸ்லாத்துக்கும் கேரளத்தில் நெடிய வரலாறு உண்டு. இந்தியாவின் முதல் தேவாலயமும் முதல் பள்ளிவாசலும் கேரளத்தில்தான் கட்டப்பட்டன. இயேசுநாதரின் பன்னிரு தூதர்களில் ஒருவரான புனித தோமையர் கேரளத்துக்கு வந்ததாக நம்பப்படுகிறது. வடஇந்தியாவுக்கு இஸ்லாம் வருவதற்கு நூற்றாண்டுகள் முன்பே மலபார் கடற்கரைக்கு அரேபிய வணிகர்கள் மூலம் இஸ்லாம் வந்துவிட்டது.
  • எழுபதுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் அபரிமிதமான வேலைவாய்ப்பு ஏற்பட்டபோது, கணிசமான மலையாளிகள் அதைக் கைப்பற்ற முடிந்ததற்கு இந்த வரலாற்றுத் தொடர்பும் ஒரு காரணமாக இருக்கலாம். 24 லட்சம் மலையாளிகள் வெளிநாடுகளில் வியர்வை சிந்தி கேரளாவுக்கு அனுப்பும் அந்நியச் செலாவணி ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். இது உலகெங்கிலுமுள்ள வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தில் ஆறில் ஒரு பங்கு.
  • நான் ஒரு வருடம் சவுதி அரேபியாவில் வேலைபார்த்தேன். சவுதி அரேபியாவிலேயே பல மலையாள செய்தித்தாள்கள் அச்சாகின்றன. ‘மாத்யமம்’ என்கிற நாளிதழ் சவுதி அரேபியாவின் நான்கு நகரங்களிலிருந்து வெளியாகிறது. ‘மனோரமா’, ‘மாத்ருபூமி’ முதலான நாளிதழ்கள் அங்காடிகளில்கூடக் கிடைக்கும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்தித்தாள் படிக்காத மலையாளியைப் பார்த்தல் அரிது. ஒவ்வொருவருக்கும் அவர்களது நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊராட்சிமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தெரிந்திருக்கும்.
  • கல்வி மலையாளிகளுக்கு வழங்கிய இன்னொரு கொடை பக்குவம். என்னைக் கவர்ந்த மலையாளப் படங்களில் ஒன்று ‘சந்தேசம்’ (1991). ஒரு சிறு நகரில் இரண்டு சகோதரர்கள், இளைஞர்கள் (ஸ்ரீனிவாசன், ஜெயராம்). முன்னவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்னவர் காங்கிரஸ் கட்சியிலும் முழு நேர ஊழியர்கள். இவ்விரண்டு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளில் ஒன்றே கேரளத்தில் மாறி மாறி ஆட்சியமைக்கிறது என்பதை இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும். இந்தப் படம் சமூக வலைதளங்களும் மீம்ஸும் ஸ்பூஃபும் இல்லாத காலத்திலேயே இரண்டு கட்சிகளையும் நையாண்டி செய்திருக்கும். விமர்சனமும்! பெரும்பாலான மலையாளிகள் அரசியல் சார்பு உள்ளவர்கள் என்ற நிலையிலும் விமர்சனங்களை நேரிடும் பக்குவம் அவர்களுக்கு இருந்தது.
கடவுளின் தேசம்
  • கடந்த மாதம் வயநாடு மலப்புரம் பகுதிகளைத் தாக்கிய பெருமழையும் நிலச்சரிவும் ஏற்படுத்திய இழப்புகள் இப்போது மாவேலி மன்னரை வருந்தச்செய்திருக்கும். வனப் பகுதிகளில் வேளாண்மையும் மலைப் பகுதிகளில் குவாரிகளும், வெள்ள வடிகால் பகுதிகளில் கட்டிடங்களும் இந்தத் துயரத்துக்குக் காரணம் என்று சூழலியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சூழலியல் சமநிலை பேணப்படுவதன் அவசியத்தை இப்பெருமழை போதித்திருக்கிறது. மலையாளிகள் நல்ல மாணவர்கள். கடவுளின் தேசம் சிதைவுறச் சம்மதிக்க மாட்டார்கள்.
  • ஆயுள், கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படும் மனித வளர்ச்சிக் குறியீட்டில், முன்பந்தியில் நிற்கிறது கேரளம். இந்தியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் வசிக்கும் ஒரே மாநிலம் கேரளம். அதேவேளையில், தொழில் துறையிலும் வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கியிருக்கிறது. இவற்றில் கேரளம் முன்னேற வேண்டும் என்பதும் மாவேலியின் விருப்பமாக இருக்கக்கூடும். திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்டிருக்கும் பத்மனாப சுவாமிதான் மலையாளிகளின் இஷ்ட தெய்வம். பெருமாளின் மீது பக்தி செலுத்திக்கொண்டே மாவேலியைக் கொண்டாடுவதில் மலையாளிகளுக்கு யாதொரு தடையும் இல்லை. மலையாளிகளின் வீடுகளுக்கு மாவேலி இன்று விஜயம் செய்வார். வீடுதோறும் கலையின் விளக்கமாகத் திகழக் காண்பார். அடுத்துவரும் ஆண்டுகளில் சூழலியலிலும் தொழில் துறையிலும்கூடச் சிறந்த மாநிலமாகக் கேரளம் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையோடு திரும்புவார்.

நன்றி: இந்து தமிழ் திசை (11-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்