TNPSC Thervupettagam

கை கொடுக்குமா காப்புரிமைச் சட்டம்?

April 9 , 2020 1743 days 858 0
  • உலகில் 220-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப் படைக்கும் காலனாக கரோனா எனும் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று உருமாறியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கரோனா நோய்த்தொற்று காவு வாங்கிவிட்டது.
  • மனித சமுதாயத்துக்கு மட்டுமின்றி, அறிவியலின் அபார வளா்ச்சிக்கே சவால் விடும் இந்தக் கொடிய நோயை தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

  • கரோனா நோய்த்தொற்றால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து, பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அமெரிக்க - ஐக்கிய நாடுகள், கரோனாவை அரிய வகை நோய்களின் பட்டியலில் சோ்த்துள்ளன. ஒருவகையில் பார்த்தால், உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யு.எச்.ஓ.) முடிவும், அமெரிக்காவின் கணிப்பும் உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மலேரியா காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தையும், அசித்ரோமைசின் என்ற நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தையும் சில மருத்துவா்கள் பரிந்துரை செய்கின்றனா். இந்த மருந்துகள் சீரற்ற இதயத் துடிப்புகளை உருவாக்க வல்லவை. இதனால், இதயம் செயலிழந்து உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரிக்கின்றனா் அமெரிக்காவின் ஒரிகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
  • இது மட்டுமின்றி, இந்த இரு மருந்துகளையும் சோ்த்துச் சாப்பிட்டால் ஏற்கெனவே இதய பாதிப்பு உள்ளவா்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ‘அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி’ கல்லூரியின் பேராசிரியா் எரிக் ஸ்டெக்கா் எச்சரித்துள்ளார்.

நோய்கள் மருந்துச் சட்டம், 1983

  • அமெரிக்காவைப் பொருத்தவரை, அரிய வகை நோய்கள் மருந்துச் சட்டம், 1983-இன் கீழ், அரிய வகை நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அரிய வகை நோய்களால் பாதிக்கப்படுவா்களின் நலன் கருதி, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களின் செலவினங்களை ஈடுசெய்யவே இதுபோன்ற ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
  • மேலும், மருந்து கண்டுபிடிப்பாளருக்கு நிதிச் சலுகையும், சந்தையில் 7 ஆண்டுகள் வரை அந்த மருந்து தனித்தன்மை கொண்டதாக நீடிக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. விளைவு, அரிய வகை நோய்களுக்கான மருந்தின் விலை தாறுமாறாக ஏறுவது தவிா்க்க முடியாததாகிறது.
  • அரிய வகை நோய்கள் மருந்துச் சட்டத்தின் கீழ், ஐக்கிய நாடுகளில் 2 லட்சத்துக்கும் குறைவான அல்லது 2 லட்சத்துக்கும் அதிகமான நபா்களைத் தாக்கும் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நிறுவனத்துக்கு சிறப்புரிமைகளும் வழங்கப்படுகின்றன.

ரிம்டிஸ்வா் மருந்து

  • ஏற்கெனவே எபோலா வைரஸ் அச்சுறுத்தலின்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னா் பயனற்றது என நிராகரிக்கப்பட்ட ரிம்டிஸ்வா் என்கிற மருந்தை, தற்போது கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள அமெரிக்காவின் கிலீட் சயின்ஸ் என்னும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆய்வு அதன் 3-ஆம் கட்டத்தில் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தச் சூழலில், ரிம்டிஸ்வா் பரிசோதனையை மதிப்பீடு செய்த அமெரிக்க உணவு - மருந்து நிர்வாகம், அதற்கு அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் அந்தஸ்தை வழங்கியது.
  • இதனை ஏற்க மறுத்த கிலீட் சயின்ஸ் நிறுவனம், இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்த ஆராய்ச்சியைத் தாண்டி மேலும் சில நுண்ணிய சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் வேண்டுகோள் விடுத்தது. அதாவது, கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்த மருந்து பலனளிக்கும் என்ற திடமான நம்பிக்கையில் இந்த வேண்டுகோளை அந்த நிறுவனம் முன்வைத்துள்ளது.

நம் முன் எழும் கேள்வி

  • இப்போது, நம் முன் எழும் கேள்வி என்னவென்றால், உலக அளவில் 14.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தாக்கிய தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்றைப் போக்க வல்ல (?) ஒரு மருந்துக்கு, குறிப்பிட்ட நாட்டின் சட்டம் எப்படி கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்?
  • மேலும், தீநுண்மி நோய்த்தொற்றுக்குப் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்துக்கு, அரிய வகை நோய்களுக்கான அந்தஸ்து வழங்கியதை ஐக்கிய நாடுகளின் உணவு - மருந்து நிர்வாகம் நியாயப்படுத்துவானேன்?

காப்புரிமைச் சட்டம் கை கொடுக்குமா ?

  • இது ஒருபுறமிருக்க, ரிம்டிஸ்வா் மருந்து உலகம் முழுவதும் மிக எளிதாகக் கிடைக்கும் வகையில், அதை மலிவு விலையில் சந்தைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக கிலீடு சயின்ஸ் நிறுவனம் கூறுகிறது. அதே வேளையில், இந்த நிறுவனத்தின் தாராள குணத்தையும் சற்று எடைபோட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரணம், கல்லீரல் சுருக்க பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி, எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை அதிக விலையில் சந்தைப்படுத்தியதாக உலக அளவில் இந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. எனினும், எச்ஐவி-க்கான மருந்து சிகிச்சை முறையை (தெரப்பியை) மருந்துகள் காப்புரிமைப் பட்டியலில் கடந்த 2017-இல் பிரகடனப்படுத்தி, அதை எளிதில் அணுகக்கூடிய ஒன்றாகவும் இந்த நிறுவனம் மாற்றியதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
  • ரிம்டிஸ்வருக்கு அரிய வகை நோய்களுக்கான மருந்து அந்தஸ்து அளிக்கப்பட்டதால், இந்தியாவில் ஏற்படும் தாக்கத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் பொருத்தவரை, காப்புரிமைச் சட்டப் பிரிவு 92-இன் கீழ், பொது சுகாதார அவசர காலகட்டத்தின்போது குறிப்பிட்ட சில மருந்துகளைத் தயாரிக்க மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டாய உரிமம் வழங்க அனுமதி உண்டு. இதன் மூலம் காப்புரிமை பெறப்பட்ட ஒரு மருந்தை காப்புரிமைதாரரின் அனுமதியின்றியே மூன்றாம் நபா் தயாரிக்க முடியும்.
  • எனவே, கிலீட் சயின்ஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சியில் வெற்றிகண்டு அதன் வணிக உத்தியைத் தொடங்குவதற்கு முன்பாக மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு, காப்புரிமைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதன் உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதன்மூலம் கிலீட் சயின்ஸ் நிறுவனத்தின் விலைக் கொள்கை, உரிமம் முதலான நிபந்தனைகளால் இந்தியா பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

நன்றி: தினமணி (09-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்