கை வைத்தியம் கைகொடுக்குமா?
- கைவைத்தியம், சில சடங்குகள் வழியாக நாம் ஆரோக்கி யமாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு நம் வீடுகளில் பிறந்த குழந்தைகளின் கையில் வசம்பு கட்டியிருப்பார்கள்.
- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குச் செரிமான பிரச்சினை ஏற்பட்டால், குழந்தை கையிலுள்ள வசம்பின் வாசத்தை நுகரும் போது தானாகவே செரிமானப் பிரச்சினை சரியாகிவிடும் என்பது நம்பிக்கை. இவ்வாறாக நம்முடைய கைவைத்திய முறை நம்பிக்கை குழந்தைப் பிறப்பிலிருந்து ஆரம்பமாகிறது.
- கைவைத்திய முறையில் உள்ள, நல்ல மருத்துவ முறைகளை எடுத்துக் கொள்ளும் அதேவேளையில், அந்த மருத்துவத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் குறித்துப் பேசுவதும் மருத்துவர்களின் கடமை. அந்த வகையில் கைவைத்திய முறை, அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் சரிப்பட்டு வருமா என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.
மஞ்சள் காமாலைக்குக் கீழாநெல்லி:
- கைவைத்திய முறையில் மஞ்சள் காமாலைக்குக் கீழாநெல்லி சாப்பிட வேண்டும் எனப் பலரும் கூறுவதுண்டு. கீழாநெல்லி நல்லதுதான். ஆனால், எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்றும், மஞ்சள் காமாலை யால் எந்த அளவுக்கு உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மருத்துவரின் உதவியுடன் முதலில் அறிய வேண்டும்.
- மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் சில வைரஸ்களுக்கு மது எடுக்காமல் இருந்தாலோ கீழாநெல்லி அருந்து வதாலோ சரியாகக்கூடும். ஆனால், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த வழிமுறை ஏற்றுக்கொள்ளுமா என்றால், கண்டிப்பாக இல்லை. அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் மஞ்சள் காமாலை, வைரஸ்கள், வேறு சில காரணங்களால் ஏற்படும் மஞ்சள் காமாலையின் பாதிப்பை மருத்துவரின் உதவி யுடன் கண்டறிந்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளால் மட்டுமே அதைக் குணப்படுத்த முடியும். இல்லையென்றால், சிலநேரம் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிருக்கே பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
வயிற்றுப்போக்குக்கு பன்?
- இன்றைக்குப் பலரும் ஹோட்டல்கள் முதல் சிறிய உணவகங்கள் வரை தொடர்ச்சியாக வெளி உணவைச் சாப்பிடுகிறோம். சில நேரம் நம் வீட்டுச் சாப்பாடுகூட செரிமானம் ஆகாமல் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதற்குக் கைவைத்திய முறையாக, “பன் சாப்பிடுங்கள்.. பரோட்டா சாப்பிடுங்கள்” என்பார்கள். இதுபோன்ற உணவைச் சாப்பிடும்போது மலம் வராமல் தடுத்துவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
- மேலும், நீர் அதிகமாகக் குடித்தால், அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும் எனத் தண்ணீர் குடிப்பதையும் குறைத்துவிடுவார்கள். ஆனால், வயிற்றுப்போக்கு அதிகமாகும்போது, உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். செரிமானப் பிரச்சினையும் இருக்கும். அப்போது உங்களுக்குப் பழக்கப்படாத உணவு வகைகளை, கை வைத்தியம் என்கிற ஒரே காரணத்துக்காகச் சாப்பிடும்போது, அது வயிற்றுப்போக்கினை அதிகரிக்க வைக்கும். இல்லையென்றால் வயிற்றைப் புண்ணாக்கிவிடும். இதனால்தான் கஞ்சி,இட்லி என்று மிதமாக இருக்கும் உணவினை அந்த நேரத்தில் மருத்து வர்கள் சாப்பிடச் சொல்வார்கள்.
- சிலருக்கு ஓரிரு தடவைக்கு மேல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க எலக்ட்ரால் பவுடரைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் சொல்லலாம். அதுமட்டுமல் லாமல், எளிதில் செரிக்கக்கூடிய உணவை எடுத்துக்கொண்டு ஓய்வு எடுத்தாலே போதுமானது; வயிற்றுப் போக்கு சரியாகிவிடும். ஆனால், பலமுறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அதோடு காய்ச்சல், வயிற்றுவலி இருந்தால் உடனே மருத்துவரைப் பார்த்து, சிகிச்சை பெற வேண்டும்.
சுயசிகிச்சை கூடாது:
- வாகன விபத்துகளில் ஏற்படும் பாதிப்புகளில் முதன்மையானது எலும்பு முறிவு. எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி, சில பரிசோதனை களை எடுத்து, முறையாக மாவுக்கட்டு போட்டுக்கொண்டு ஓய்வு எடுத்தால் எலும்புமுறிவு சரியாகிவிடும்.
- ஆனால், சிலர் எலும்பு முறிவு ஏற்பட்டவுடன் எக்ஸ்ரே, ஸ்கேன் எதுவும் எடுக்காமல் கைவைத்தியமாக மாவுக்கட்டு போட்டுக்கொண்டு வருவார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்காமல், கட்டு போட்டால் சரியாகி விடுமா? ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். காவல்துறை பணிக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கினார்.
- காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் வீட்டில் உள்ளவர்களும் இதே போல் அவருடைய காலுக்குக் கைவைத்தியம் எனச் சொல்லி ஏதோ ஒரு கட்டு கட்டிவிட்டிருக்கிறார்கள். அந்தக் கட்டின் பாதிப்பால், அவரது கணுக்காலில் உள்ள நரம்பு பாதிப் படைந்து, அவருக்குக் கணுக்காலை எடுத்துவிடும் நிலை ஏற்பட்டது.
- சரியான முறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக அவரின் கால் நல்ல நிலையில் இருந்திருக்கும். காவல் துறையிலும் நல்ல பதவியில் வேலைக்குச் சேர்ந்திருப்பார். சிலநேரத்தில் நாம் செய்யும் சில தவறுகளால், உடலின் உறுப்புகள் வாழ்நாள் முழுவதும் சரிசெய்ய முடியாத நிலைமைக்குச் சென்றுவிடும்.
வாழைத்தண்டுச் சாறு:
- சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்றதும் வாழைத்தண்டுச் சாறு, முள்ளங்கிச் சாறு குடிக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்த முறைகள் சரியானவையா என்றால், சிறுநீரகக்கல்லின் அளவு, அதன் வடிவம், அந்தக்கல் எந்த இடத்தில் உருவாகியிருக் கிறது என்பது போன்ற பல விஷயங்களைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும்.
- சிறுநீரகக் கல் பிரச்சினைக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்கேன் எடுத்து, சிறுநீரகக்கல்லின் அளவுக்கு ஏற்றவாறும், வலிக் கேற்றவாறும் சிகிச்சையளிக்கப்படும். சிறுநீர் வெளியே செல்லும் பாதை யில் கல் சிறிதாக இருக்கும்போது, கைவைத்திய முறைப்படி முள்ளங்கிச் சாறு குடித்துச் சரிசெய்துவிடலாம். ஆனால், இந்த வழிமுறை ஒருவருக்குச் சரியானதாக இருந்தால், மற்றவருக்கும் சரியாக இருக்கும் என உறுதியாகக் கூற முடியாது.
மூட்டுச் சிதைவு:
- பெண்கள் பெரும்பாலும் ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக் கூடிய மூட்டுத் தேய்மானம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். நின்றபடியே பாத்திரம் துலக்கு வதாலும் நெடுநேரம் நின்று சமைப்பதாலும்தான் கால் மூட்டு வலிக்கிறது என அவர்களாகவே வலி நிவாரணி மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இதனால் சில நேரம் மூட்டுச் சிதைவுகூட ஏற்படும்.
- அதன்பின், மூட்டுகள் இணைந்து இருக்கும் பகுதிகளான கை, கால் பகுதிகளில் மூட்டின் உதவியால் செய்து வந்த செயல்கள் எதையும் செய்ய முடியாமல் போய்விடும். இதற்காகத் தான் மூட்டு வலி ஆரம்ப நிலையில் இருக்கும்போதே மருத்துவரைச் சந்திப்பது நல்லது. மருத்துவர் பரிந்துரைக்கும் சில பரிசோதனைகளை எடுத்து, அதற்கேற்ப மருந்துகளை உட் கொள்ளும்போது, மூட்டு வலியும் குறையும். மேலும் மூட்டுச் சிதைவு ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
- நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுப்பவர்கள் அதிக காலம் ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பார்களா அல்லது வாழ்நாளில் ஒருமுறைகூட மருத்துவரைச் சந்திக்காதவர்கள் அதிக ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பார்களா என்கிற கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்பதுண்டு. அதற்குப் பதில், நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்குத் தொடர்ந்து மருத்துவருடன் தொடர்பில் இருப்பவர்கள், அவர்களுக்கு ஏற்படும்சிறு சிறு பிரச்சினைகள் குறித்தும் மருத்துவர்களுடன் இயல்பாக உரையாடுவார்கள்.
- அதனால், சிறு உடல் உபாதைகள்கூட உடனே கவனிக்கப் பட்டு மருத்துவத்துறையில் வந்துள்ள தொடர்ச்சியான புதிய சிகிச்சைகள் அவர்களுக்கு வழங்கப்படும். அதனால், மருந்துகள் முறையாகச் சாப்பிடுபவர்களும், சரியான சிகிச்சை எடுப்பவர்களும்தான் அதிக ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பார்கள். கைவைத்தியம் என்பது முதலுதவி போன்றதுதான். நிரந்தரத் தீர்வு அல்ல. முதலுதவி முடிந்தவுடன் உடனே மருத்துவரைச் சந்தித்து விடுவதுதான், நல்லது.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2025)