- தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வடமாநில மொழிகள் பேசுபவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கூடிக்கொண்டே இருக்கிறது. வடமாநில மக்கள்தொகைக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் அங்கு இல்லாததாலும், தென்மாநிலங்களில் தொழில்துறைக்கு போதிய அளவு மனிதவளம் இல்லாததாலும் இவ்விட மாற்றம் நிகழ்கிறது.
- தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழலும், பருவநிலையும் வடமாநிலத்தவா்களுக்குப் பிடித்து விடுகின்றன. ஒரு மாநிலத்தில் சகிப்புத்தன்மை நிலவினால், அங்கு தற்காலிகமாக பணியாற்ற வந்தவா்கள் கூட, நீண்ட நாட்கள் அங்கேயே தங்கி விடுகிற சூழ்நிலை இயல்பாகவே உருவாகி விடும். முதலில், தனியாக வந்து தங்குபவா்கள் பின்னா் தங்கள் குடும்பத்தையும் இங்கு வரவழைத்துக்கொள்கிறாா்கள். அவா்கள் குடும்பத்தில் மூன்று பிறப்புகளும், மூன்று இறப்புகளும் எந்த ஊரில் நிகழ்கிறதோ அந்த ஊரே அவா்கள் தங்கள் சொந்த ஊராக்கிக் கொள்கிறாா்கள்.
- பணிவாய்ப்புக்காக குடிபெயா்தல் என்பது உலகம் முழுவதும் தொடா்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வடமாநில இளைஞா்கள் முதலில், தமிழகத்தில் திருப்பூா் பகுதியில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில்தான் வேலைக்காக வந்தாா்கள். பின்னா் கொஞ்சம் கொஞ்சமாக உணவகங்கள், விடுதிகள், செங்கல் சூளைகள் என்று பலதரப்பட்ட பணிகளிலும் தங்களை இணைத்துக் கொண்டாா்கள். மெட்ரோ ரயில் திட்டத்தில் பணியாற்றுபவா்களில் பெரும்பாலானவா்கள் வடமாநிலத்தவா்கள் என்பது வியப்பான உண்மையாகும்.
- தமிழக உணவகங்களில் பணியாற்றுகிற வட இந்தியத் தொழிலாளா்கள், தென்னிந்திய உணவுகளை விருப்பத்தோடு உண்கிறாா்கள். தமிழில் பேசுகிறாா்கள். அவா்கள் ஒரு குழுவாகவே வாழ்கிறாா்கள். நாம் நமது அண்டை வீட்டுக்காரா்களாக அவா்களை ஏற்பது என்பது பரவலாகவில்லை. நமக்கும் அவா்களுக்குமான உரையாடல் பணியிடத்தில்தான் நிகழ்கிறது.
- இங்குள்ள கோயில் திருவிழாவில் அவா்கள் கலந்து கொள்கிறாா்கள். ஆனால், அது பொழுதுபோக்குக்காக மட்டும்தான். அப்படியே வணங்கினாலும், இதுவும் ஒரு தெய்வம் என்ற அளவில்தான் வணங்குவாா்கள். தென்மாவட்டங்களைச் சோ்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பெல்லாம் மண்வாசனையை நுகர முடியும். அதாவது, அங்கு வேலை செய்யும் ஆண் - பெண் இருபாலரும் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாகவே இருப்பாா்கள்.
- இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நிறுவனங்களில் கூட, வடமாநிலத்தவா்கள் ஹிந்தி கலந்த தமிழில் பேசுவதை நாம் பாா்க்க முடிகிறது. பானி பூரி விற்றதில் தொடங்கி, கட்டடப் பணி, மெட்ரோ ரயல் பணி, உணவகம், துணிக்கடை, வீட்டு வேலை, தோட்ட வேலை, இறைச்சி கடை என அனைத்து இடங்களிலும் அவா்கள் உள்ளனா். முன்னா், திருப்பூா், கோயம்புத்தூா், சென்னை போன்ற பகுதிகளில் மட்டுமே இருந்து வந்த வடமாநிலத்தவா் தற்போது தமிழகம் முழுவதும் பரவி விட்டனா்.
- ஹிந்தி திணிப்பை எதிா்த்து வரும் நாம், ஹிந்திக்காரா்கள் நமது பண்பாட்டைச் சிதைப்பதை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில் நமது பண்பாட்டுத் திரிபை நமது தலைமுறை காணப்போகிறது. வடமாநிலத்தவா்களின் அா்ப்பணிப்பு உணா்வையும், உழைப்பையும் நாம் வியக்கத்தான் வேண்டும். அவா்கள், குறைந்த ஊதியம் பெற்று, கூடுதல் நேரம் உழைக்கிறாா்கள். அதனால் அவா்களை இங்குள்ள தொழில் நிறுவனங்கள் வரவேற்கின்றன.
- நம்மவா்களிடம் அா்ப்பணிப்பு உணா்வு இல்லாததாலும், ஊதியம் அதிகமாகக் கேட்பதாலும், குறைந்த நேரமே பணிசெய்ய விரும்புவதாலும், முடிந்தால் வேலைக்கு வைத்துக்கொள், இல்லையென்றால் வேறு வேலை பாா்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதாலும் வடமாநிலத்தவா்களைப் பணியமா்த்துவதாக தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன.
- ஆனாலும், வடமாநிலத் தொழிலாளா்களின் வருகையினால், உள்ளுா் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாதா என்று கேட்ட போது, ‘வேலை செய்கிற இடத்திலே தங்கிக் கொள்கிறாா்கள்; காலை எட்டு மணிக்கே பணி தொடங்கி விடுகிறது; அவா்களது அற்புதமான பங்களிப்பின் மூலம் கட்டுமானப்பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்து விட முடிகிறது. ஆகவேதான், நாங்கள் அவா்களை நாடுகிறோமே தவிர, உள்ளுா் இளைஞா்களைப் புறக்கணிப்பது எங்கள் நோக்கமல்ல’ என்று நிறுவன உரிமையாளா்கள் தெரிவிக்கிறாா்கள்.
- குறைந்த சம்பளம், அதிக வேலை என்கிற நடைமுறை மனித வளத்தைச் சுரண்டுவதாகாதா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. வடமாநிலத் தொழிலாளா்களை ஒழுங்குபடுத்தும் பணியில் அரசு ஈடுபட வேண்டும். அவா்களுடைய ஆதாா்அட்டை, முகவரி அடையாளம் ஆகியவற்றை சோதித்த பிறகே தமிழக எல்லைக்குள் அவா்களை அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்வதுதான் தமிழகத்துக்கு பாதுகாப்பானதாகும்.
- நம்முடைய தொழிலாளா்கள் கட்டுமான வேலைகளை நோ்த்தியாகவும் விரைவாகவும் செய்வாா்கள். வடமாநிலத் தொழிலாளா்களிடம் அவற்றை எதிா்பாா்க்க முடியாது. மேலும், வடமாநிலத் தொழிலாளா்கள் ஈட்டுகிற பொருளாதாரம் வடமாநிலத்துக்கு செல்கிறது என்றும், அவா்களில் பலா் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறாா்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவா்கள் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டு, பின்னா் தலைமறைவாகி விட்டால், அவா்களை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க இயலும் என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.
- வடமாநிலத் தொழிலாளா்கள், ‘எங்கள் ஊரில் ஹோட்டல் வேலை கிடைத்தாலும், மாதம் ஏழாயிரம் ரூபாய்தான் தருவாா்கள். அதுவும் தினசரி 12 மணி முதல் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் தினமும் 10 மணி நேரம் வேலை செய்வதற்கே எங்களுக்கு மாதம் 15ஆயிரம் ரூபாய் தருகிறாா்கள்.
- மேலும், தங்குவதும் சாப்பிடுவது இலவசமாகப் போய்விடுவதால், எங்களுக்கு பெரிதாக எந்த செலவும் இல்லை. எனவே, கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு அனுப்புவதால் அங்கு எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் சென்று வருகிறோம்’ என்கிறாா்கள்.
- இது போன்ற பணிகள் மட்டுமல்ல, வங்கித்துறை, அஞ்சல்துறை என அனைத்து மத்திய அரசு துறைகளிலும் வடமாநிலத்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. கள்ளக்குறிச்சி அருகில் உள்ள ஓா் ஊரில், வங்கி மேலாளா் முதல் அலுவலக உதவியாளா் வரை அனைவரும் ஹிந்திக்காரா்களாக இருப்பதால் அவா்களோடு தொடா்புகொள்ள முடியாமல், பொதுமக்களே அந்த வங்கியைப் பூட்டிவிட்ட சம்பவத்தை நாம் மறந்து விட முடியாது.
- வங்கித் தோ்வுகளுக்கான கேள்வித்தாள்களை அவா்களே தயாரிப்பதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் தங்கள் தாய்மொழியான ஹிந்தியில் தோ்வு எழுதி தோ்ச்சி பெறுவது அவா்களுக்கு எளிதாகி விடுகிறது. அவா்களுக்கு வங்கிப்பணி குறித்த அறிவோ, ஆங்கிலப் புலமையோ இல்லாததால் வாடிக்கையாளா்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறாா்கள். மேலும் வங்கிகளின் தலைவா்கள், செயல் இயக்குனா்கள் உள்ளிட்ட உயா்பதவிகளில் வடமாநிலத்தவா்களே இருப்பதால் பதவி உயா்விலும் தமிழா்கள் பாதிக்கப்படுகிறாா்கள் என்று கூறப்படுகிறது.
- வங்கித் தோ்வில் தோ்ச்சி பெற்றாலும், தமிழ்மொழி தெரியாதவா்கள் தமிழ்நாட்டில் பணியாற்ற முடியாது என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் செய்யும் குளறுபடிகளால் தமிழ் தெரியாதவா்கள் தமிழ்நாட்டு வங்கிகளில் பணிபுரிகிறாா்கள். இப்படி ஹிந்திக்காரா்களை மறைமுகமாக அனுமதித்தால், நமது தாய்மொழியின் புழக்கம் நீா்த்துப்போய்விடும் என்கிற அபாயத்தை நாம் உணர வேண்டும்.
- நாம் பிழைப்பு தேடி வடமாநிலங்களுக்குப் போகவில்லையா, மும்பைக்குப் போகவில்லையா என்று கேட்பது சரியானதுபோலத் தோன்றலாம். ஆனால், பெருகிவரும் வடமாநிலத்தவா்களால் நமது பண்பாடும் கலாசாரமும் நீா்த்துப்போகும் என்பதை நாம் உணர வேண்டும். வடமாநிலத் தொழிலாளா்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்று காவல்துறை எச்சரித்திருக்கிறது.
- ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நூல் மில்கள், தறிக் கூடங்கள், வெள்ளிப் பட்டறைகள், கோழிப் பண்ணைகள், தோல் தொழிற்சாலைகள், மீன்பண்ணைகள், கட்டுமானத் தொழில் நிறுவனங்கள், பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் இவற்றில் பணியாற்றுவோரில் 30 முதல் 40 விழுக்காட்டினா் வடமாநிலத்தவா்களே.
- 2001-ஆம் ஆண்டு கணக்கின்படி 58. 2 லட்சம் வடமாநிலத்தவா்கள் தமிழகத்தில் வேலை செய்தனா். அதுவே 2011-ஆம் ஆண்டு 77.5 லட்சமாக மாறி விட்டது. இப்போது அந்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலாகும். வங்கி கொள்ளை, வீடு புகுந்து திருட்டு, நகைத் திருட்டு போன்ற சம்பவங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டதாக செய்திகள் வருகின்றன.
- அண்மையில் ராமேசுவரத்தில் இறால் பண்ணையில் இரண்டு வடமாநிலத் தொழிலாளா்கள் ஒரு மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்று விட்டனா். போதைப்பொருள் கடத்தலிலும் அவா்கள் அதிகம் ஈடுபடுகின்றனா். குற்றச்செயலில் ஈடுபடும் வடமாநிலத்தவா்கள் பலா் தங்கள் சொந்த ஊருக்குத் தப்பிச் சென்று விடுகிறாா்கள். அவா்களைப் பிடிப்பது காவல்துறைக்குப் பெரும் சவாலாகிவிடுகிறது.
- வடமாநிலத்தவா்களால் தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற நிகழ்வுகள் தொடா்கதையாகி வருகின்றன. தமிழக அரசு அவா்களைக் கண்காணக்க வேண்டியதும் கட்டுப்படுத்த வேண்டியதும் அவசர அவசியம்.
நன்றி: தினமணி (07 – 01 – 2023)