TNPSC Thervupettagam

கைம்பெண்கள் வாரியம் தாண்டிய தேவைகள்

October 13 , 2022 666 days 411 0
  • செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசு, ‘கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்’ அமைத்து அரசாணை வெளியிட்டது. தமிழகத்தில் வாழும் கைம்பெண்களும் பிற ஆதரவற்ற பெண்களும் முன்வைத்த நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் இந்த நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5.5 கோடி கைம்பெண்கள் இருக்கிறார்கள்; தமிழகத்தில் 41 லட்சம் கைம்பெண்கள் இருப்பதாகக் கணக்கு சொல்லப்படுகின்றது. இவ்வளவு எண்ணிக்கையில் இருக்கின்ற கைம்பெண்களுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான பணிகள் ஏராளமாக இருக்கின்றன.

பல்வகைப் பிரச்சினைகள்

  • கணவனை இழந்த (கைம்)பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றவர்கள், முதிர்கன்னிகள் என்று நான்கு வகைகளாக இந்தப் பெண்களைப் பிரித்துப் பார்க்கலாம். இவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. அதீதக் குடிப்பழக்கம், விபத்து, நோய் ஆகியவற்றால் ஆண்கள் இறக்கும்போது, இளம்வயதிலேயே அவர்களின் மனைவியர் கைம்பெண்கள் ஆகிவிடுகின்றனர். கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் தனித்து வாழ நேரிடுகிறது.
  • இவர்களில் பலர் வேலைக்குச் சென்றாலும் போதிய வருமானம் இல்லாமல் அத்தியாவசியச் செலவுகளுக்கும் பிள்ளைகளை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும், மருத்துவச் செலவுகளுக்கும் பல சவால்களைச் சந்திக்கின்றனர். அத்துடன் சமூகத் தளத்தில் பலரின் பழிச்சொல்லுக்கும் வசைபாடலுக்கும் ஆளாகின்றனர். கணவன் இறந்த பிறகு மத வேறுபாடின்றி எல்லா பெண்களுமே பொது நிகழ்வுகளில் சுதந்திரமாகக் கலந்துகொள்ளும் உரிமையைப் பெரும்பாலும் இழந்துவிடுகிறார்கள்.
  • அவர்கள் நல்ல உடை உடுத்துவதோ, அலங்காரங்கள் செய்துகொள்வதோ தவறாகவே பார்க்கப்படுகிறது. காலையில், அவர் முகத்தில் விழித்தால் எந்த நல்ல செயலும் நடக்காது என்கிற அதிர்ச்சிகரமான கருத்து இன்றைக்கும் பலர் மத்தியில் பரவியுள்ளது. தான் பெற்று வளர்த்த மகள், மகன் திருமணத்துக்கு அவரே முன்நின்று காரியங்களைச் செய்ய முடியாது. கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்திலிருந்து கட்டிய புது வீட்டுக்கு அவர் முன்நின்று புதுமனை புகுவிழாவை நடத்த முடியாது.
  • இப்படிப்பட்ட சூழலில் கைம்பெண்கள் ஒவ்வொரு நாளும் முள்ளில் நடப்பது போன்ற வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை எல்லா நிலைகளிலும் மேம்பட வேண்டுமென்றால், இவர்கள் மாண்புடனும் மதிப்புடனும் சமூகத்தில் வாழ வேண்டும் என்றால், அரசு அமைத்திருக்கின்ற புதிய நல வாரியமும் ஏற்கெனவே அறிவித்திருக்கின்ற பல செயல்திட்டங்களும் மட்டும் போதாது. இன்னும் பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

வேலையும் வீடும்

  • உதாரணமாக, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு மேற்பட்ட, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்குக் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு - தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்கின்ற அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும். அதேபோலக் கைம்பெண்கள் சொந்த நிலமும், வீடும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே, அரசு முன்வந்து கைம்பெண்களுக்கு நிதியுதவி வழங்கி, நிலம் வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் உதவ வேண்டும். மேலும் கோயில் நிலங்கள், பண்ணை நிலங்கள், ஓடைப் புறம்போக்கு போன்ற பகுதிகளில் வசித்துவரும் பெண்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருக்கின்றது.
  • எனவே, இப்பகுதிகளில் வாழும் பெண்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும். லட்சக்கணக்கான ஏக்கர் அரசு விளைநிலங்கள், தரிசு நிலங்களாக இருக்கின்ற சூழலில், அவற்றைக் கைம்பெண்களின் சுய உதவிக் குழுக்களுக்கு இலவசமாகக் கொடுத்துக் கூட்டு இயற்கை விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

அடையாள அட்டை

  • தமிழகத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். எந்த எண்ணிக்கையில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தரமான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அந்த அடையாள அட்டை அரசாங்கத்திலிருந்து கிடைக்கின்ற பல்வேறு உதவிகளையும் உரிமைகளையும் பெறுவதற்கு நிச்சயம் உதவும். அடையாள அட்டை இல்லாததால் பல்வேறு அரசு அலுவலகங்களில் அவர்கள் அலைக்கழிக்கப்படுவது குறையும்.

தனிச் சட்டமும் வாரியமும்

  • சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் சமத்துவ உரிமைகளை நிலைநாட்டும் பெரும் நோக்கத்துடன் ‘கைம்பெண்கள் பாகுபாடு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ புதிதாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால், பெண்களைப் பாதுகாப்பதற்காக ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்கள் கைம்பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்குச் சரியான தண்டனையைப் பெற்றுத் தருவதில்லை.
  • மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கைகளுக்கும் தனியாக நலத் துறை இருப்பதுபோல கைம்பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் ஒரு நலத் துறை உருவானால், அது இவர்களின் பிரச்சினைகளைக் கூடுதலாகக் கவனப்படுத்துவதற்கு உதவும். அதேபோன்று ‘தேசிய மகளிர் ஆணையம்’ இருப்பதுபோல ‘தேசியக் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மகளிர் ஆணையம்’ ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதன் மூலம் தேசிய அளவில் கைம்பெண்கள் - கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஒருங்கிணைக்கப்படவும், அவர்களுடைய பிரச்சினைகள் கவனப்படுத்தப்படவும் உதவியாக இருக்கும்.

மறுமணத்துக்கு ஆதரவு

  • ஒட்டுமொத்தமாகக் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் வாழ்வு மேம்பட வேண்டுமென்றால் அவர்கள் குறித்த சமூகத்தின் பார்வையும், கேடு நிறைந்த எண்ணங்களும் மாற வேண்டும். எல்லா மதங்களிலுமே கைம்பெண்களின் மறுமணத்தைஆதரிக்கும் மனநிலையைச் சமூகத்தில் பரவாலாக்கவேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் கைம்பெண்களுடைய மறுமணத்தை ஆதரிக்கின்றவகையில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
  • சுதந்திர இந்தியாவில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாண்புடனும் மதிப்புடனும் வாழ்வதற்கு உரிமையுடையவர்கள். அதை உறுதிப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை அரசு இன்னும் வேகப்படுத்த வேண்டும். இந்தியாவில் 5.5 கோடி கைம்பெண்கள் இருக்கிறார்கள்; தமிழகத்தில் 41 லட்சம் கைம்பெண்கள் இருப்பதாகக் கணக்கு சொல்லப்படுகின்றது!

நன்றி: தி இந்து (13 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்