TNPSC Thervupettagam

கைவிடப்படும் எல்லாப் பெண்களுக்கும் சட்டப் பாதுகாப்பு எப்போது?

August 27 , 2019 1897 days 905 0
  • அடுத்தடுத்து மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மனைவியை மணவிலக்கு செய்யும் முறையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டாலும், அரசு பதில் தேட வேண்டிய சில கேள்விகள் எஞ்சியிருக்கின்றன.
முத்தலாக் நடைமுறையைச் சட்டம்
  • முத்தலாக் நடைமுறையைச் சட்ட விரோதம் என்று 2017-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குச் சட்ட வடிவம் கொடுக்கவே இந்தச் சட்டம் இயற்றப்படுவதாக அரசு சொன்னது. இச்சட்டத்தின் கீழ், முத்தலாக் செய்யும் கணவரைக் கைதுசெய்யவும் விவாகரத்துசெய்யப்படும் மனைவிக்கு உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச செலவுத்தொகையை வழங்கவும் முடியும். குழந்தைகள் பெற்றோரில் யாருடைய அரவணைப்பில் வளர்வது என்பதும் முடிவுசெய்யப்படும். ஆனால், முத்தலாக்கை ஏன் தண்டனையியல் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கையாகப் பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு ஏற்கும்படியான விளக்கத்தை அரசுத் தரப்பு இதுவரை அளிக்கவில்லை.
  • முன்னதாக, ‘முஸ்லிம் மகளிர் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட முன்வடிவு-2019’ முதலில் உத்தேசித்த வடிவில் இல்லாமல், வீரியத்தைக் குறைத்திருப்பது உண்மைதான். உத்தேச வரைவில், சட்டரீதியான நடவடிக்கையை யார் தொடங்குவது என்பதுபற்றி குறிப்பாகச் சொல்லப்படவில்லை. தற்போதைய சட்ட முன்வடிவின்படி, பாதிக்கப்பட்ட மனைவியோ அல்லது அவரது ரத்த உறவுள்ள சொந்தமோ காவல்நிலையத்தில் புகார் பதிவுசெய்தால் நடவடிக்கை எடுக்க முடியும். கைதுசெய்யப்படும் கணவரைப் பிணையில் விடுவிப்பதற்கு முன்பு மனைவியின் தரப்பு என்னவென்பதை நீதிமன்றம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சட்டபூர்வ நடவடிக்கை தொடரும் நிலையில், கணவனும் மனைவியும் பேசி சமரசத்துக்கு வந்துவிட்டால் இந்த வழக்கு விலக்கிக்கொள்ளப்படும்.
புதிய சட்டம்
  • முத்தலாக் நடைமுறையை இஸ்லாமியக் கோட்பாடுகள் அனுமதிப்பதில்லை. உச்ச நீதிமன்றமும் முத்தலாக் நடைமுறை செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்ட பிறகு, அதைக் குற்றச் செயலாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், கைவிடப்பட்ட பெண்கள் ஜீவனாம்சம் பெறவும் குழந்தைகளைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரவும் புதிய சட்டம் வகை செய்கிறது. இதைக் கணவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்காமலும் பெற முடியும். முத்தலாக் செய்வது சட்டவிரோதம், செல்லத்தக்கதல்ல என்றால், அந்த மணவாழ்க்கை தொடர்வதாகத்தான் அர்த்தம்; அப்படியிருக்கையில் குழந்தைகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் குடும்பப் பராமரிப்புக்குப் பணம் வேண்டும் என்றும் மனைவி எப்படிக் கேட்க முடியும்? முத்தலாக் சொன்னதற்காகக் கணவரைப் பிடித்து சிறையில் அடைத்துவிட்டால் அவரால் எப்படி மனைவி, குழந்தைகளின் பராமரிப்புக்குப் பணம் கொடுக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கும் அரசு பதில் தேட வேண்டும்.
  • பாலியல் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இச்சட்டம் இன்னொரு விஷயத்தையும் சுட்டுகிறது, அது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் வகையில் மணவிலக்கு முறிவுச் சட்டம் வேண்டும் என்பதுதான்.

நன்றி: இந்து தமிழ் திசை(27-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்