TNPSC Thervupettagam

கொக்குகள் குடியிருப்பு

March 2 , 2024 143 days 105 0
  • அதிகாலையில் நூற்றுக்கணக்கான கொக்குகள் அணியணியாகப் பறந்து செல்வதையும், மாலையில் சென்ற திசையிலிருந்து எதிர்த் திசையில் பறந்து வருவதையும் பார்த்திருப்போம். சிறிய வகை வெண்கொக்குகளான இவற்றை எங்கும் பார்க்க முடிகிறதே தவிர, அவை கூடுகட்டி வசிக்கும் இடங்களை எளிதில் நம்மால் காண முடிவதில்லை. எனவே கொக்குகளின் குடியிருப்புகளை நேரில் சென்று கண்டுவருவதெனப் புறப்பட்டோம்.
  • இந்த ஆண்டு ஏரி, குளங்கள் என்று அனைத்து நீர்நிலைகளிலும் முழுவதுமாக நீர் நிரம்பி வேளாண் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி நீர் விரும்பும் உயிரினங்கள் அனைத்திற்கும் பெருத்தக் கொண்டாட்டமாக அமைந் துள்ளது. ஆனாலும் எல்லாவித நீர்நிலைகளிலும் அவை கூடுகளை அமைத்துவிடுவதில்லை. மனித நடமாட்டத்திலிருந்து விலகி மிகவும் பாதுகாப்பான இடத்தை மட்டுமே தேர்வு செய்கின்றன.

குளமும் கூடும்:

  •  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியிலிருந்து வடமேற்கில் கோதைச்சேரி என்னும் சிற்றூரின் அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குளம் ஒன்றில் பல்லாயிரக்கணக்கில் கொக்குகள் வந்தடைகின்றன. அக்குளத்தின் நீர் சில காரணங்களுக்காக வேளாண் பாசனத்திற்குப் பயன்படுத்தப் படுவதில்லை. எனவே, சூரியனைத் தவிர அக்குளத்தின் நீரை வேறெதுவாலும் வற்றவைக்க முடியாது. இதனால் இங்கு நீண்ட நாள்களுக்கு நீர் வற்றாமல் இருக்கிறது.
  • கொக்குகளுக்குக் கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் இனப்பெருக்கக் காலமாகவே இருப்பதால், நீர்நிலைகளில் உள்ள புழுப் பூச்சிகள் போன்ற உணவு வகைகளையே அதிகம் விரும்பும். நீண்ட நாள்கள் நீர் வற்றாத, உயிரினங்களால் எவ்வித அச்சுறுத்துதலும் இல்லாத பாதுகாப்பான இடங்களில் மட்டுமே இக்கொக்குகள் கூடுகட்டுகின்றன. இக்குளம் அதற்கு ஏற்ற விதத்தில் அமைந்திருக்கிறது. கூடுகட்டுவதற்கு வசதியாக கருவேல மரங்களும் அக்குளத்தில் அடர்ந்துள்ளன.
  • அவற்றின் மீது குச்சிகளாலும் இலைத்தழைகளாலும் கட்டப்படும் இவற்றின் கூடுகள் காற்றினாலோ மழையினாலோ கவிழ்ந்துவிடாமல் இருக்குமாறு, அம்மரத்தின் சிறுசிறு கிளைக்குச்சிகளை இணைத்துக் கூடுகளைக் கட்டமைத்திருக்கின்றன. அதிலுள்ள முள்களும் சிறுகிளைகளும் கூடுகளின் கட்டுமானத்திற்கு வலுசேர்ப்பதாக இருப்பதாலேயே அம்மரங்களை அவை அதிக அளவில் விரும்புகின்றன.

எச்சம் தரும் வளம்:

  • அம்மரங்களிலிருந்து கொக்குகள் இடும் எச்சம் இடைவிடாமல் அக்குளத்து நீரில் கலந்துகொண்டே இருக்கிறது. அதில் வாழும் உயிரினங்களும் தாவரங்களும் செழித்து வளர்கின்றன. கொக்குகளின் அக்குடியிருப்பைச் சுற்றி எச்சத்தால் உருவான நெடி காற்றில் கலந்திருப்பதை உணர முடிகிறது. அங்குள்ள மரங்களில் சில அவற்றின் எச்சத்தால் வெள்ளையடிக்கப்பட்ட மரங்கள்போல் பசுமையை இழந்து காணப்படுகின்றன.
  • இப்பறவைகள் அக்குளத்தை இருப்பிடத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றன.
  • மற்றபடி இரை தேடுவதற்கு அருகிலுள்ள பிற நீர்நிலைகளையே நாடிச் செல்கின்றன.
  • நீர்க்காகங்களும் அவற்றினிடையே வசிக்கின்றன. ஆனாலும், கொக்குகளே அதிகளவில் அப்பகுதியை ஆக்கிரமித் திருக்கின்றன. சில மரங்களில், அதிக எண்ணிக்கையில் மிகுந்திருக்கும் கொக்குகளிடையே ஒன்றிரண்டு நீர்க்காகங்களும் அடைந்திருக்கின்றன. ஒரு சில மரங்களில் மட்டும் முழுவதும் நீர்க் காகங்கள் வசிக்கின்றன.
  • இக்கொக்குகளின் இனப்பெருக்கக் காலம் மழைக்காலமான அக்டோபர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நீள்கிறது. ஆனாலும் அவை ஜனவரி மாதத்திற்குள் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கும் பணிகளை முடித்துவிடுகின்றன. பின்னர் குஞ்சுகளை வளர்த்து, பறக்க வைக்கும் முனைப்பில் செயல்படுகின்றன. ஒரு பருவத்தில் 4 முதல் 6 முட்டைகள் வரை இடுகின்றன. ஆணும் பெண்ணும் மாறிமாறி அடைகாத்து 21 முதல் 25 நாள்களில் குஞ்சுகளைப் பொரிக்க வைக்கின்றன. குஞ்சுகள் பிறந்து சுமார் 45 நாள்களில் பறக்கும் திறனைப் பெற்று விடுகின்றன.

இடையூறும் கைவிடுதலும்:

  •  ஓர் ஆண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், தொடர்ந்து ஒவ்வோர் இனப்பெருக்கப் பருவத்திலும் இவை அதே இடத்தில் குழுமி வசிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதியத் தலைமுறைக் கொக்குகள் உருவாகிக்கொண்டே இருப்பதால், அக்கொக்குக் கூட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால், ஏதாவது அச்சுறுத்தலினால் அவை கலைந்துவிட்டால், மறு ஆண்டிலிருந்து அந்த இடத்திற்கு வருவதே இல்லை என்று அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
  • பெரும்பாலும் திடீரென அதிகளவில் ஏற்படும் சத்தம், அடிக்கடி இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆள்நடமாட்டம் போன்றவை கொக்குகளை இடப்பெயர்விற்கு உள்ளாக்குவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
  • தொடர்ந்து பல ஆண்டுகள் கொக்குகளால் நிறைந்திருந்த மற்றொரு குளத்தில் தற்சமயம் கொக்குகளே இல்லாமல் போனதற்கான காரணமாக... அடிக்கடி சிறுவர்கள் விளையாட்டாகக் கொக்குகளின் கூடுகளில் கற்களை எறிந்தும் அவற்றின் முட்டைகளை எடுக்க முயன்றதுமே என்றும் குறிப்பிட்டனர்.

பறத்தலும் வடிவங்களும்:

  • கொக்குகள் பறத்தலின்போது ஒருவித ஒழுங்கைப் பின்பற்றுவதை இயல்பூக்கமாகப் பெற்றிருக்கின்றன. கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி கூரிய அலகால் காற்றைக் கிழித்து உயரமாக வெகுதூரம் பறக்கின்றன.
  • இவற்றின் பருமனற்ற மெல்லிய தேகமும் கூர்மையான அலகும் எளிதாகப் பறப்பதற்கு உதவுகின்றன. நீரில் நனைந்து தொங்கும் இறக்கைகளை வெயிலில் காயவைப்பதும், கலைந்த அவற்றின் சிறகுகளை அலகினால் சீர்செய்வதுமான அன்றாட பணிகள் அவற்றின் அழகிற்கு மென்மேலும் அழகு சேர்க்கின்றன.
  • அர்டெயிடே என்னும் குடும்பத்தையும் எக்ரெட்டா என்கிற பேரினத்தையும் சார்ந்த இவை பறந்து செல்லும்போது அவற்றின் வேகத்திற்கேற்ப வானில் ஒன்றிணைந்து பல்வேறு வடிவங்களை ஏற்படுத்துகின்றன. சில வேளைகளில் ஒரு கொக்கு வழிகாட்டிபோல் முன்செல்ல, மற்றவை அதன் இருபுறங்களிலும் மடிந்து V வடிவில் ஒரே வேகத்தில் பறந்து செல்கின்றன. சில நேரம் ஒரே நேர்வரிசையில் முன்பின் சற்றும் அசையாமல் பறக்கின்றன.
  • சில கூட்டங்கள் முன்பின்னாக இரண்டு அடுக்குகளாகப் பறக்கின்றன. மிகவும் நேர்த்தியான முறையில் காணப்படும் இவற்றின் பறத்தல் காண்போரை வியக்க வைக்கிறது. நீர்பரப்பின் மேல் பறக்கும்போது நீர்பரப்பிற்கு மிக அருகில் தாழ்ந்துப் பறந்து கடக்கின்றன.

புரிந்துகொள்வோமா?

  • கொக்குகளோடு சேர்ந்து வசிக்கும் நீர்க்காகங்களின் பண்புகளும் கொக்குகளின் இயல்புகளோடு ஒத்திருக்கின்றன. இவற்றின் பறக்கும் தன்மையும் கொக்குகளைப் போன்றே உள்ளது. கொக்குக் கூட்டங்களோடு இணைந்து நீர்க்காகங்களும் தனிக் கூட்டமாக, கொக்குகளைப் போன்றே V வடிவிலும் நேர்வரிசையிலும் பறந்து செல்வதைக் காணலாம்.
  • ஓர் இடத்தில் கூடி வாழும் கொக்குகளின்எண்ணிக்கை அப்பகுதியின் சுற்றுப்புறங்களில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையைவிடவும், அதிகமானதாக இருக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாமல் எளிமையான வாழ்க்கை முறையை உடைய இவ்வகையான கொக்குகளின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மனிதர்கள் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் வாழ்வதே அறிவார்ந்த தன்மை.
  • நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் சமநிலையில் பங்கெடுக்கும் இக்கொக்குகளின் வாழ்க்கைமுறை ஒழுங்கு, இயற்கைக்கு அளிக்கும் பெருங்கொடை. பறவைகளின் வாழ்க்கை முறை மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது. இதுபோன்ற பறவையினங்களை உற்றுநோக்கும் பண்பு மனித சமூகத்தில் இயல்பானதாகும் போதுதான், நம்மைச் சுற்றியுள்ள சூழலால் நமக்கு நேர்மறை பலன்கள் கிடைப்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்