TNPSC Thervupettagam

கொஞ்சம் சமைங்க பாஸ்!

January 21 , 2025 2 days 17 0

கொஞ்சம் சமைங்க பாஸ்!

  • பள்ளிக்கூடம் என்பது கட்டிடமல்ல. அது குழந்தைகளுக்கு நாம் வழங்கும் அனுபவங்களின் தொகுப்பு - அறிவியல் அறிஞர் ஜெயந்த் நர்லிக்கர். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பாடநூல்களை இழக்க நேரிட்டது.
  • இணையத்திலிருந்து பாடநூல்களைப் பதிவிறக்கம் செய்திட மாவட்ட நிர்வாகம் அவசர கதியில் ஏற்பாடு செய்தது. இந்த முன்னிடுப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் மேலும் நுட்பமாக இதனை அணுக வேண்டியுள்ளது. நான் தெபாஷிஷ் சாட்டர்ஜீயை நினைத்துக் கொண்டேன்.
  • பாடநூல் மட்டும் இல்லை என்றால் வகுப்பறைகள் என்னவாகும் என்கிற கேள்வியைத் தனது நூலில் முன்வைத்தவர் அவர். “ஜீப்ராவுக்கு உங்களால் கொஞ்சம் அல்ஜீப்ரா கற்பிக்க முடியுமா?” என்கிற அபத்தமான கேள்வியைத் தலைப்பாகக் கொண்ட அற்புத நூல் இது. நம்முடைய உயர்கல்வி நிறுவனங்களை அவர் இப்படி கேலி செய்கிறார்: ஒரு கட்டிடத்தின் 14-வது அறையில் கடவுள் இருக்கிறார். 19-வது அறையில் கடவுளைப் பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. இவ்வாறு அறிவிக்கப்பட்டால் மாணவர்கள், பேராசிரியர்கள் என்று அத்தனை பேரும் கடவுள் பற்றிய கருத்தரங்கத்துக்குத்தான் செல்வார்கள்.
  • இந்தியக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சான்றிதழ் விநியோகிக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது அவரது கருத்து. நீங்கள் கருத்தரங்கத்துக்குச் சென்றால் அங்குப் பார்வையாளராக இருக்க ஒரு சான்றிதழ், நீங்களும் ஓரு ஆய்வுக் கட்டுரை வாசிக்க ஒரு சான்றிதழ் என்று சான்றிதழ்களை மையப்படுத்தியதாகக் கல்வி மாறிவிட்டது என்பதை இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் கேலி செய்ய முடியுமா!

பாடநூல் இல்லாத வகுப்பறை:

  • பாடநூல்களை அலசும் அத்தியாயம், 21-ம் நூற்றாண்டில் அனைத்துமே இணையத்தில் கொட்டிக் கிடக்கும்போது பொதுவான பாடநூல் எதற்கு என்கிற கேள்வியோடு தொடங்குகிறது. வகுப்பறையிலிருந்து பாடநூல் என்கிற ஒன்றை அப்புறப்படுத்திவிட்டால் அங்கு கற்றல் நடைபெறுமா, அதற்குச் சாத்தியம் உள்ளதா என்று இந்திய வகுப்பறைகளை நோக்கி கேள்விக்கணைகளை வீசுகிறது.
  • உண்மையிலேயே உங்கள் வகுப்பறையிலிருந்து பாடநூலை நீக்கி விட்டால் மேற்கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுவீர்களேயானால் நீங்கள் ஆசிரியர்தானா என்று இந்நூல் கேள்வி எழுப்புகிறது. பாடநூலில் உள்ளவற்றை நடத்தி முடித்து விடுதல், பதில்களைக் குறித்துத் தருதல், அதை மனப்பாடம் செய்யப் பயிற்சி அளித்தல், அதற்குத் தேர்வு நடத்துதல் என்று பாடநூலைச் சுற்றியே கல்வி சுழன்று கொண்டிருக்கிறது.

விருந்தாளியைக் கவனியுங்கள்:

  • உண்மையில் பாடநூல் என்பது, நீங்கள் கடையிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளுக்கு ஒப்பானது. அதைக் கொண்டு என்ன மாதிரி உணவு பரிமாறப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். சில காய்கறிகளைக் கூட்டாகப் பரிமாற வேண்டிவரும். சிலவற்றை பொரியல் ஆகக் கொடுக்க வேண்டிவரும். சிலவற்றைக் குழம்பிலே போட்டுக் கொதிக்க வைத்துக் கொடுக்க வேண்டிவரும்.
  • சில காய்கறிகளை அப்படியே நறுக்கிப் போட்டு தயிர் கலந்துரைத்தாவாக தர வேண்டிவரும். இத்தனையும் தீர்மானித்து வழங்க வேண்டியது ஆசிரியரான உங்களது கடமை. ஒரே காயைக்கூட ஒரு குழந்தைக்குக் கூட்டாகவும், இன்னொரு குழந்தைக்கு பொரியலாகவும், வேறு ஒரு குழந்தைக்கு மசியலாகவும் தர வேண்டிய அவசியம் வரலாம்.
  • எந்தத் தயாரிப்பும், மாற்றமும் செய்யாமல் பாடநூலை அப்படியே நீங்கள் வகுப்பில் படிப்பவர் என்றால் நினைத்துப் பாருங்கள் உங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளியை அமரவைத்து இந்தாங்க சுரைக்காய் கூட்டு (அது சிக்கன் பிரியாணியாகவும் இருக்கலாம்) என்று முழு சுரைக்காயோடு உப்பு, புளி, மிளகாய், பருப்பு என்று மளிகை பொருள்களையும் தட்டில் தனித்தனியே வைத்துக் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும் உங்கள் வகுப்பறையும் என்று முடிகிறது இந்நூல்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்